செவ்வாய், 27 மே, 2014

காற்றில் கரைந்த கற்பூரமாய் கம்யுனிஸ்ட்டுகள்!
-------------------------------------------------------------------- -------------------
                       இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------- 

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 
வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 543 இடங்களில் 
கம்யூனிச்ட்டுகளுக்குக் கிடைத்தது ஒரே ஒரு இடம்தான் 
என்பது குறிப்பிடத் தக்கது.கேரளத்தில் இருந்து அந்த ஒரு வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இதனால் தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைக் 
கம்யூனிஸ்ட்டுகள் இழக்கிறார்கள். 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; 
இந்த 11 தொகுதிகளும் குறைந்த பட்சம் மூன்று மாநிலங்களில் 
இருக்க வேண்டும். இதுதான் தேர்தல் ஆணையம் கூறும் வரையறைகளில் ஒன்று. 
இதன்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியக்கட்சி என்ற   
அங்கீகாரத்தை இழந்து விட்டது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்தது 
பற்றிக் கவலை இல்லை. மக்களின் அங்கீகாரத்தை  இழந்தது 
தான் சிக்கல்.

இனி அடுத்த கட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைப்பதுதான்.
அந்த நன்னாளை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஞாயிறு, 11 மே, 2014

மார்க்சிய வகுப்புகளும்
பா பா பிளாக் ஷீப்பும்!
------------------------------------------------------------------------------------------------------------
                        பி. இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன் என்னைச் சந்தித்த
சில   இளைஞர்கள் மார்க்சியம் கற்றுக் கொள்ள
விரும்புவதாகத் தெரிவித்தனர். அவர்கள்  மார்க்சியம் கற்றுக் கொண்டு வருபவர்கள் என்பதை  நான் அறிவேன். மார்க்சிய வகுப்புகள் எங்கு நடைபெறுகின்றன, யார் நடத்துகிறார்கள் என்றெல்லாம்
வினவினர். அவர்களை ஆற்றுப்படுத்திய நான்,
கம்யூனிஸ்ட் கட்சிகளில்   ஏதேனும் ஒன்றில் சேர்ந்து
மார்க்சியம் கற்றுக் கொள்வதுதான் எளிது என்று கூறினேன்.

காலம் காலமாகச்  சொல்லப்படும் பதிலைத்தான் நான் சொன்னேன்.
ஆனால் வந்த இளைஞர்களுக்கு   என் பதில் நிறைவு தரவில்லை.
இது போன்ற பத்தாம்பசலித்தனமான பதில்களைக் கேட்டுக் கேட்டு 
காதுகள் புளித்து விட்டன என்றனர்.போதிய புரிதல் இல்லாத இளைஞர்கள்   என்று கருதி, மார்க்சியம் பயில்வது எப்படி என்றும்,
நாங்களெல்லாம் எப்படிமார்க்சியம் படித்தோம் என்றும்  
அவர்களுக்கு விளக்க முற்பட்டேன்..   

படித்தல்
சிந்தித்தல்
விவாதித்தல்
என்ற இயக்கப் போக்கின் வழியாகத்தான்
மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.
இவற்றுள் படித்தலும் சிந்தித்தலும்
தனிமனித நிகழ்வுகள். ஆனால் விவாதித்தல் என்பது குழு நிகழ்வு. குறைந்தபட்சம் நாலைந்து பேர் இருந்தால்தான்
விவாதித்தல் என்பது சாத்தியப்படும்.
இதனால்தான் கட்சி சார்ந்தோ அல்லது அமைப்பு
சார்ந்தோதான் மார்க்சியத்தைக் கற்க முடியும் 
என்ற நிலை ஏற்படுகிறது என்று விளக்கினேன்.
தமிழகச் சூழலில் இதுதான் நிலைமை என்றும் தெளிவு படுத்தினேன்.
(மேலை ஐரோப்பியச் சூழலில் இந்நிலை இல்லை என்பது இதன் பெறுபேறு).

எனது  விளக்கங்களை புளிப்பேறிப் போனவையாக அவர்கள் கருதுகிறார்கள் என்பது புலப்பட்டது.  

படித்தல், சிந்தித்தல், விவாதித்தல் என்ற முறையான வழிகளைப் 
பின்பற்றினாலும் கூட, நடைமுறையோடு   இணைத்துக்
கற்கும்போதுதான் மார்க்சியத்தைக் கற்பது எளிதாகும். ஏனெனில்
மார்க்சியம் என்பது வெறும் வகுப்பறைப் பாடம் அல்ல.

மாணவர் சங்கம், இளைஞர் சங்கம், தொழிற்சங்கம், விவசாயச் சங்கம்
போன்ற  வெகுமக்கள் அமைப்புகளில் இயங்கிக் கொண்டோ
அல்லது கட்சியில் இயங்கிக்கொண்டோ மார்க்சியத்தைக் கற்பதுதான் எளிதாகும். இதுதான் நடைமுறையோடு இணைத்துக் கற்பது என்பதன் பொருளாகும்.

தொழிற்சங்கத்தில் ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு 
வேலை செய்ய வேண்டும்என்பதை விளக்கிக் கூறும் நூல் 
லெனின் எழுதிய " என்ன செய்ய வேண்டும்?"
என்ற நூல். தொழிற்சங்க அரங்குகளில் வேலை செய்வோரால்
இந்நூலை எளிதில் கற்க முடியும்.ஏனெனில் அவர்களின் நடைமுறை
கற்பதை எளிதாக்குகிறது.

உரையாடலின் போக்கில் நான் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் அவர்களை அசைக்கவில்லை என்பது தெரிந்தது.

படிப்பை முடித்த மாணவனுக்குப் பட்டத்தை வழங்குவதுடன்
பல்கலைகழகத்தின் வேலை முடிந்து விடும். ஆனால் மார்க்சியக் கல்வியை வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொள்வதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள்
பல்கலைக்கழகங்கள் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்கு
மார்க்சியக் கல்வி அளிப்பதன் நோக்கமே அவர்களை மார்க்சியர்கள் ஆக்குவதற்குத்தான்.

மார்க்சியம் பயில்வதே அதைப்  பிரயோகிப்பதற்குத்தான்.
பிரயோகிக்க விரும்பாதவன் மார்க்சியம் பயில்வதற்கான உரிமையற்றவன் ஆகிறான்.மருத்துவப் படிப்பு முடித்த ஒருவன் மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும்; மருத்துவம் செய்ய விரும்பாதவனுக்கு மருத்துவப் படிப்பு ஏன்?

மார்க்சியம் என்பது சமூகத்தை முற்றிலுமாக மாற்றி அமைப்பதற்கான தத்துவம். எனவே சமூகத்தை மாற்றி அமைக்க விரும்பும் எவர் ஒருவரும் மார்க்சியத்தைப் பயின்றாக  வேண்டும் என்பதும், அதுபோலவே மார்க்சியத்தைப் பயின்ற எவர் ஒருவரும் சமூக மாற்றத்துக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதும் தெளிவு. 
வேறு சொற்களில் கூறுவதாயின்,
வெறும் கல்வி சார்ந்த நோக்கில் மட்டும் (purely on academic interest )
மார்க்சியத்தைப் பயில்வதும் பயிற்றுவிப்பதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்புடைத்தனவாக இல்லை.

இதுதான் இந்தியச் சூழலில் மார்க்சியக் கல்வி பெறுதலின் நிலை.
ஆனால் மேலை ஐரோப்பியச் சூழலில் இத்தகைய தடைகள் எதுவும் இல்லை.
விரும்பும் எவரும் மார்க்சியத்தை எளிதில் கற்க முடியும். கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்து இராமலேயே எவர் ஒருவரும் அங்கு மார்க்சியத்தைக் கற்க முடியும். கற்பதற்கான தடைகள் ஏதுமற்ற சமூகச் சூழல் அங்கு  மார்க்ஸ் எங்கல்ஸ் காலம் தொட்டு இயல்பாகவே நிலவுகிறது . மார்க்சியம் பிறந்ததே ஐரோப்பாவில்தான்  என்பதையும் இங்கு நினைவு கூர  வேண்டும்.

தொடர்ந்து நான் அளித்த விளக்கங்கள் அவர்களை சலனப் படுத்தவில்லை.
இணைய உலகம் என்று ஒன்று இருப்பதையே நான் மறந்து விட்டுப் பேசுவதாக அவர்கள் என் மீது ஆதங்கப் பட்டனர். எனவே எனது பதிலின்  சரித்தன்மை குறித்தும், காலச் சூழலோடு என் பதில் பொருந்தி நிற்கிறதா என்பது குறித்தும் ஆராயத் தலைப் பட்டேன்.

ஆராய்ந்து பார்க்கும்போது புதிய வெளிச்சம் தெரிந்தது.
இளைஞர்களின் ஆதங்கம் நியாயமானதே என்று தெரிய வந்தது. 
வரலாற்றை கி.மு , கி.பி என்று பிரிப்பதைப்போல்,
இ.மு, இ.பி (இணையத்துக்கு முன், இணையத்துக்குப் பின்)
என்றும் பிரிக்க வேண்டும் என்பது புலனாகியது. 


சமகாலத் தமிழ்ச் சூழலும் இன்று தலைகீழாக மாறிப் போயிருக்கிறது  
என்பது வெளிப்படை.காரணம் இணையம்.  ஒரு சராசரி வாசகன் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்வதற்கு இருந்த தடைகள் யாவும் இன்று 
தகர்ந்து விட்டன.

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியின் போக்கில், இன்டர்நெட் எனப்படும் இணையத்தின் வருகை மூடப்பட்டிருந்த எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டது. வலைப்பூக்கள் ( BLOGS ),  முகநூல்கள் என்று விரியும் இணையத்தின் வளர்ச்சி எட்டாக்கனியாக இருந்த மார்க்சியக் கல்வியை
கைத்தல நிறைகனியாக ஆக்கி விட்டது.

பத்து ரூபாய் செலவில் இணையதள வசதிகள் தமிழ் வாசகனுக்கு 
இன்று கிட்டுகின்றன. 
காட்டாங்கொளத்தூரில் தன வீட்டில் இருந்தபடியே,
இணையம் மூலம் பிரான்சு நாட்டின் மார்க்சியப் பேராசிரியருடன் 
உள்ளூர் மாணவன் விவாதிக்க இயலும்.
"ஸ்கைப்" மூலம் குறைந்த செலவில் மணிக்கணக்காக வெளிநாட்டு மார்க்சியருடன் உரையாட முடியும்.
படித்தல்-சிந்தித்தல்- விவாதித்தல் என்ற முறைமையில், விவாதித்தலுக்கான வாய்ப்புகளை  இணையம் அமுதசுரபியாய் அள்ளித் தருகிறது.மார்க்சிய விவாதக் குழுக்கள் இன்று இணையம் எங்கணும் நிறைந்துள்ளன.

மார்க்சிய ஆசான்களின் மூலநூல்கள் முதல் , அனைத்து நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரிய ஆவணங்கள் வரை இணையத்தில் எளிதில் கிடைக்கின்றன.
மேலும் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் 
மார்க்சியத்தின் தத்துவஞானம் ( philosophy ) பலராலும் பயிலப்படுகிறது.
மார்க்சியர் அல்லாத நாத்திகர் பலரும் இதுவே மிகச் சிறந்த "கடவுள் மறுப்புத்தத்துவம்" என்று உணர்ந்து அதைப் பயில்கின்றனர்.
இதன் விளைவாக 
மார்க்சியருக்கு மட்டுமே மார்க்சியக் கல்வி என்ற நிலை மாறி, 
அது அனைவருக்குமானதாக விரிந்து வருகிறது.
  
ஒரு காலத்தில் கணினிகளை மூர்க்கத் தனமாக எதிர்த்த 
"இடதுசாரி" முழுமூடர்கள் அனைவரும், இன்று வேறு எவரையும் விட கணினியைப் பயன்படுத்துவதில்  முன்னணியில்  உள்ளனர்.
இணைய தளங்களில் அமைப்பு நடத்திக் கொண்டும், 
அமைப்பின் பிரச்சாரத்துக்கு இணையத்தை மட்டுமே நம்பிக் கொண்டும் 
இருக்கும் "இடதுசாரி"கள் இன்று தமிழ்நாட்டில் ஏராளம்.

"எங்கள் கட்டுரைக்கு நூறு பின்னூட்டங்கள் வருகின்றன" என்றும்
"எங்களின் இணைய தளத்தைப் பின்பற்றுவோர் ஆயிரக் கணக்கில்" என்றும் குட்டி முதலாளித்துவப் பெருமிதம் கொள்ளும் "இடதுசாரிகளை" நாளும் நாம் சந்தித்து வருகிறோம்.

புற்றீசல் போல் பெருகும் வலைப்பதிவர்கள் ( blog writers ),
எழுதப்பட்ட எந்த ஒன்றுக்கும் பின்னூட்டம் இடுவதையே குலத்தொழிலாகக் கொண்டு, 
பல்வேறு போலிப் பெயர்களிலும் போலி மின்னஞ்சல் 
முகவரிகளிலும் தங்களின் முகத்தை மறைத்து கொண்டு 
முக்காட்டுடன் திரியும் பின்னூட்டக்காரர்கள் இன்ன பிறர் 
இணையத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறார்கள். 

மாற்றம் ஒன்றே மாறாததாய், அனைத்தும் மாறி வரும் இச்சூழலில்,
          " எங்கள் அமைப்பில் முழுநேர  ஊழியர்கள் மட்டுமே 
            மார்க்சிய வகுப்பு எடுப்பார்கள்; மற்றவர்களை 
            வகுப்பெடுக்க நாங்கள் அனுமதிப்பதில்லை"
என்றார் பெருமிதம் பொங்க  ஒரு கற்கால இடதுசாரி. 


மார்க்சியம் என்பது தங்களின் முந்தியில் முடிந்து வைத்திருக்கும் 
காரச்சேவு என்று கருதுகிறார்கள் இந்தக் கோமாளிகள். ஓதப்படும் 
வேதம் சூத்திரனின் காதில் விழுந்து விடக்கூடாது என்று 
வேதத்தை மறைத்து வைத்த பார்ப்பனப் புரோகிதர்களின் வாரிசுகள் 
இவர்கள். 

முழுநேர ஊழியர்களோ மற்றவர்களோ எவர் வகுப்பு எடுத்தாலும்,
அவர்கள் சொல்லித்தரும் மார்க்சியத்தின் தரம் 
நர்சரி வகுப்புகளின் "பா பா பிளாக் ஷீப், ஹாவ் யூ எனி  உல்?"
என்பதற்கு மேல் துளியும் இல்லை என்பதே யதார்த்தம்.   
"மார்க்சியம் எங்களின் தனியுடைமை",  "அதைக் கற்றுக் கொடுப்பது 
எங்களின் பிறப்புரிமை" என்று பிதற்றித் திரியும் இந்த மார்க்சியப்  புரோகிதர்களைப்  புறந்த்தள்ளி விட்டு, மார்க்சிய ஆர்வலர்கள் நாளும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் 
மார்க்சியத்தை இணையத்தின் வழியாக!

***********************************************************************************


புதன், 7 மே, 2014

மார்க்சிய வாசகர்களுக்காக!
------------------------------------------  
"மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் !
மார்க்சியம் மதம் அல்ல, தேங்கிக் கிடப்பதற்கு!!"

என்ற கட்டுரையை மார்க்சிய வாசகர்களுக்காக 
வெளியிடுகிறோம். 
தட்டச்சு வசதி கருதி இக்கட்டுரை 
ஆறு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப் படுகிறது.

இது கட்டுரை அன்று, கருத்தாயுதம்!
எதிர்வினைகள் வரவேற்கப் படுகின்றன .

.....பதிப்பாசிரியர், தமிழ் மார்க்சியம்........

திங்கள், 5 மே, 2014

updating dielectical materialism

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் !
(பகுதி ஆறு )
----------------------------------------------------------------------  

மார்க்சியம் ஒரு முப்பரிமாண தத்துவம்.
1) இயங்கியல் பொருள்முதல்வாதம் 
2) அரசியல் பொருளாதாரம் 
3)விஞ்ஞான சோஷலிசம்
ஆகிய முப்பரிமானங்களைக் கொண்டது மார்க்சியம்.
 இவற்றுள் பொருள்முதல்வாதமே தலையாயது.
உடனடியாகப் புதுப்பிக்கப் படவேண்டியது. 

இந்தக் கட்டுரையும் இதன் தொடர்ச்சியாக வரும் கட்டுரைகளும் 

இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் புதுப்பிக்க 
வேண்டியதன் அவசியத்தையும், எவ்வாறு புதுப்பிப்பது 
என்ற விளக்கத்தையும் தெளிவு படுத்துவன  ஆகும்.

மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டமே 

இயங்கியல் பொருள் முதல்வாதம்தான்.
அரசியல் பொருளாதாரம்,விஞ்ஞான சோஷலிசம் 
ஆகியவை இயங்கியல் பொருள்முதல்வாத 
வெளிச்சத்தில்தான் படைக்கப்பட்டன. 
இயற்கை விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய கோட்பாடுகளும் மேலெழுந்த போதெல்லாம் அவற்றுக்குத் தக்கவாறு 
இயங்கியல் பொருள்முதல்வாதம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது; வளர்த்துக் கொண்டது.

மார்க்சும் எங்கல்சும் தாங்கள் வாழ்ந்த காலம் வரையிலான 
நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளை எல்லாம் உள்ளடக்கி 
இயங்கியல் பொருள்முதல்வாததைச் செழுமைப் படுத்தினர்.

எனினும் 1901 முதல் இன்று 2014 வரையிலான 

இந்த 114 ஆண்டுகளில், அறிவியல் வளர்ச்சியிடம் இருந்து 
தன்னைத் துண்டித்துக் கொண்டு நிற்கிறது 
இயங்கியல் பொருள்முதல்வாதம்.

அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாத பொருள்முதல்வாதம்  
போர்க்குணம் மிக்கதாகவோ பொருள்முதல்வாதமாகவோ 
கூட இருக்காது என்கிறார் லெனின்.

எனவே, அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, 

இயங்கியல் பொருள் முதல்வாதத்தைப் புதுப்பிப்பது  
மார்க்சியத்தின் மீது மெய்யான அக்கறை உடைய 
ஒவ்வொரு மார்க்சியரின் கடமை ஆகும். 
----------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை முற்றியது.
----------------------------------------------------------------------------------------------------- 
மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் !
  (பகுதி ஐந்து )
-------------------------------------------------  
பருண்மையாகப்  பிரயோகிக்க வேண்டியதன் அவசியம் கருதி 
மெய்யான அக்கறையுடன் மார்க்சியத்தைப் புதுப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எல்லாம் 
திரிபுவாதம் ( revisionism) என்ற சிமிழுக்குள் அடைக்க முற்படுவது வாடிக்கை. இது மார்க்சியத் தலிபான்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு துருப்பிடித்த தந்திரமே.இத்தகைய முயற்சிகள் 
மார்க்சியத்தைப் பின்னுக்கு இழுப்பவை.

எந்த ஒரு தத்துவமும் செயல்முறையில் பரிசோதிக்கப் படும்போது 
ஒரு நேர்கோட்டுப் பாதையில் பயணிக்க இயலாது .
எனவே வலது இடது விலகல்கள் தவிர்க்க இயலாதவை.திரிபுகள் தோன்றும்போதெல்லாம் அவற்றை சரி செய்து பாதையை நேராக்கும் 
தத்துவ வலிமை உடையது மார்க்சியம்.

ஆனால் திரிபுவாதம்  வேறு; புதுப்பித்தல் வேறு. திரிபுவாதம் தத்துவத்தைக் கெடுக்கும்; 
புதுப்பித்தலோ தத்துவத்தை வளர்க்கும்.

புதுப்பித்தல் என்பது வளர்ச்சிக்கான முன் நிபந்தனை. 
புதுப்பித்தல் இன்றி வளர்ச்சி இல்லை.  

( WHAT IS GROWTH? GROWTH MEANS CHANGE; 
THERE IS NO GROWTH WITHOUT CHANGE.
WHAT IS CHANGE?
CHANGE IS THE DISAPPEARANCE OF OLD AND THE APPEARANCE OF NEW.) 

எனவே மார்க்சியம் புதுப்பிக்கப் படவேண்டும் என்ற முடிவு பிறக்கிறது.இது சமகாலத் தேவையில் இருந்து எழுந்த இயற்கையான முடிவு.

இது அகநிலை விருப்பத்தின் உந்துதலால் விளைந்தது அல்ல.
மாறாக புறநிலையை மெய்மையைக்  கவனத்துடன் பரிசீலித்தான் விளைவு. இது எந்த ஒரு தனி நபரின் முடிவும் அல்ல. இதில் எவ்விதமான தனித்துவ வாதத்துக்கும்  ( individualism ) இடமில்லை.

சமூக மாறத்துக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு , மெய்யான அக்கறையுடன் மார்க்சியம் பயின்று, பயின்ற மார்க்சியத்தை சமூகத்தில் பிரயோகித்துப்  பட்டறிவு பெற்ற எவர் ஒருவரும் இயற்கையாகவே வந்து சேருகிற ஒரு முடிவு இது .

எனினும் இது குறுகிய அனுபவவாதம் (EMPIRICISM )   அன்று.
அனுபவத்தின் தொகுப்பும் அன்று. மாறாக, சரியான அறிவியல் பார்வையின் விளைவு.  
-----------பகுதி ஐந்து முற்றியது -------------------------------------------

சனி, 3 மே, 2014

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
(பகுதி நான்கு) 
------------------------------------------------------     
எனினும் காலத்தை மீறி நிற்கும் தத்துவம், நிலைபேறு உடைய தத்துவம் என்று இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. இது மார்க்சியத்துக்கும் பொருந்தும்.1848-இல் மார்க்ஸ் தமது முப்பதாவது வயதில் எங்கல்சுடன்  இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டார்.
இன்று 166 ஆண்டுகள் கடந்து விட்டன. காலம் தன சுவடுகளை 
மார்க்சியத்துக்குள்ளும் அழுத்தமாகவே பதித்துள்ளது. 

மார்க்சியத்தைப் பயில்வது, பிரயோகிப்பது என்ற இயக்கப் போக்கில் மெய்யான அக்கறையுடனும் தீவிரத்துடனும் செயல்பட்டுவரும் எவர் ஒருவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மார்க்சியம் புதுப்பிக்கப் படவேண்டும் 
என்ற இயல்பான முடிவுக்குத் தமது பட்டறிவு மூலம் வந்து சேர்வது இயற்கை.

மார்க்சியத்தைப் புதுப்பிப்பது என்ற உடனே, தீயை மிதித்தது போல் அலறுபவர்கள் மார்க்சியர்கள் அல்லர்; மதவாதிகள்!
இவர்களுக்கு மார்க்சியம் வெறும் மதமே! இவர்கள் மார்க்சியத் தலிபான்கள்!

மாறும் என்ற விதியைத் தவிர அனைத்தும் மாறும் என்ற மார்க்சின் போதனை இவர்களின் மண்டையில் ஏறுவதே இல்லை.

...............பகுதி நான்கு முற்றியது...........................
மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
பகுதி  மூன்று 
----------------------- 
இதன் விளைவாக இன்று தத்துவ அரங்கில் இரண்டே இரண்டு 
தத்துவங்கள் மட்டுமே நிலவுகின்றன.
ஒன்று: முதலாளித்துவம், 
மற்றொன்று: மார்க்சியம். 
கடந்த காலத்தில் இவை இரண்டும் கடுமையாகச் 
சமர் புரிந்தன. சமரின் இறுதியில் 
முதலாளித்துவம் தோற்றது; மார்க்சியம் வென்றது.

எனினும் முதலாளித்துவம் தோற்றதே தவிர வீழ்ந்து விடவில்லை.
புதிய ஒப்பனைகளுடனும் புதிய திருத்தங்களுடனும் சூழலுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டு , முதலாளித்துவம் மார்க்சியத்தைச் சமருக்கு அழைக்கிறது. போர்முனைகள் இன்னும் பல மிச்சம் இருக்கின்றன.

இறுதிக் கட்டப் போரில் மார்க்சியம் முதலாளித்துவத்தை வெல்லும்!
வெல்ல வேண்டும்!! ஏனெனில் முதலாளித்துவம் மக்களை அடிமைப் படுத்தும் தத்துவம். மார்க்சியமோ மக்களின் விடுதலைக்கான தத்துவம்.

உலகில் இதுவரை தோன்றி வளர்ந்து மறைந்த அல்லது வாழ்ந்து வரும் 
தத்துவங்கள் எவையும் ஒட்டுமொத்த மானுடத்தின் விடுதலைக்கான,
விடுதலையைச் சாதிக்கக்கூடிய செயல் திட்டம் கொண்ட தத்துவங்களாக  இல்லை, மார்க்சியத்தைத் தவிர. 

வரலாற்றில் மானுட விடுதலையை மெய்யாகவே நேசித்த சில தத்துவங்கள் அதை அடைவதற்கான வழி முறைகள் இன்றி வெற்றுக் கற்பனையாக அடங்கி விட்டன.

ஆனால் கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த மார்க்சியம் மட்டும்தான்,  தான் பிரகடனம் செய்த மானுட விடுதலையை 
அடைய வல்ல ஆற்றல் கொண்டதாகத் திகழ்கிறது. எனவே மார்க்சியத்தை விட்டால் மானுடத்துக்கு வேறு கதி இல்லை. 1848 முதல் இன்று வரை இதுதான் நிலைமை. 

..............பகுதி மூன்று முற்றியது.................................................
மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
பகுதி  இரண்டு 
----------------------------------------------------------  
பின்நவீனத்துவம் மார்க்சியத்துடன் சமர் புரிந்தது. எனினும் அது மார்க்சியத்தை வெற்றி கண்டுவிடவில்லை;
வென்று விடவும் முடியாது.
ஏனெனில், அமைப்பு, அமைப்பாக்கம் ஆகிய கருத்தாக்கங்கள் 
பின்நவீனத்துவத்தில் இல்லை.

"அமைப்பு கூடாது" , "மக்களை அமைப்பாக்கக் கூடாது"
என்பன பின்நவீனத்துவத்தின் அடிப்படைகள்.
மேலும் பின்நவீனத்துவம் மார்க்சியத்தை அகற்றிவிட்டு 
(REPLACE ) தான் அவ்விடத்தில் அமர வந்த தத்துவம் அல்ல. 
உலகை மாற்றி அமைப்பதுதான் தனது இலக்கு என்று மார்க்சியம் பிரகடனம் செய்கிறது. ஆனால் பின்நவீனத்துவத்துக்கு 
அப்படி எந்த இலக்கும் கிடையாது.

பின்நவீனத்துவம் மக்களைத் திரட்டி 
அமைப்பாக்கி இருக்குமேயானால் ,
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று, உலகெங்கும் 
பின்நவீனத்துவக் கட்சிகள் தோன்றி இருக்கும்.
ஆனால் அமைப்பே கூடாது என்ற கோட்பாடு காரணமாக 
பின்நவீனத்துவம் வேறு எந்தத் தத்துவத்தின் இருப்புக்கும்
அச்சுறுத்தலாக இல்லை.

கடந்த 50, 60 ஆண்டுகளாக, தத்துவ அரங்கில், 
இருத்தலியல் (EXISTENTIALSIM )முதலாக 
பின்நவீனத்துவம் ஈறாக கணக்கின்றி வந்த தத்துவங்கள் யாவும் 
மார்க்சியத்தை அகற்றி விடவில்லை.

..........பகுதி இரண்டு முற்றியது..............................................

   
 மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
மார்க்சியம் மதம் அல்ல, தேங்கிக் கிடப்பதற்கு!
-----------------------------------------------------------------------------  
       பி.இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------
(தட்டச்சு வசதியைக் கருத்தில் கொண்டு இக்கட்டுரை ஆறு பகுதிகளாக வெளியிடப் படுகிறது)

மார்க்சியத்துக்குப் பின் கணக்கற்ற தத்துவங்கள் வந்து விட்டன.
மார்க்சியம் நவீன தத்துவம் ( modernism ) எனப்படுகிறது. எனவே மார்க்சியத்துக்குப் பின்னர்  வந்த தத்துவங்கள்   பின்நவீனத்துவம் 
( post modernism ) என அறியப் படுகின்றன.

"இருத்தலியல்" (existentialism ) என்ற புதியதொரு தத்துவத்தை
பிரஞ்சு தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர் ( JEAN PAUL SARTRE )
முன்வைத்தார். 1950களில் இத்தத்துவம் பெரும் புகழுடன் விளங்கியது.

பெர்டினண்ட் சசூர் (FERDINAND SAUSSURE ) என்ற அறிஞர் 
"அமைப்பியல்" என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
ழாக் டெரிடா (JACQUES DERRIDA ) என்ற அறிஞர் "கட்டுடைத்தல்"
என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார்.
தொடர்ச்சியாகவும் வரிசையாகவும் பல கோட்பாடுகள் 
முன்மொழியப் பட்டன.

மிஷல் பூக்கோ ( MICHAEL FOUCALT ) 
ரொலான் பார்த் (ROLAND BARTHES )
ழாக் லக்கான் (JACQUES LACAN )
பெலிக்ஸ் கட்டாரி (FELIX  GUATTARI )
ஜீன் போத்ரியார் ( JEAN BAUDRILLARD )
ள்ளிட்ட பலப்பல அறிஞர்கள் புதிய புதிய கோட்பாடுகளை 
முன்மொழிந்தனர். மேற்கூறிய அனைத்துக் கோட்பாடுகளின் திரட்சி 
பின்நவீனத்துவம் என வழங்கப்படுகிறது.
(உதாரணத்துக்காக ஒரு சில அறிஞர்கள் மட்டுமே  
குறிப்பிடப் பட்டுள்ளனர்.)

பினநவீனத்துவம் மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தது;
மார்க்சியத்தின் போதாமையை அம்பலப் படுத்தியது.
இந்திய-தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம் செல்வாக்குப்  
பெற்றதைத் தொடர்ந்து, தலித்தியமும் பெண்ணியமும்
பெருத்த கவனிப்பைப் பெற்றன.
பெண்ணியம் சார்ந்த சிக்கல்களுக்கு
மார்க்சியத்தில் தீர்வு இல்லை என்ற 
கண்டுபிடிப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. 

ஐரோப்பியச் சூழலில் முகிழ்த்த மார்க்சியம் 
இந்தியத் துணைக்கண்டத்தின் சாதியத் தடைகளைக் 
கடக்க முடியாமல் மூச்சுத் திணறியது.

இவற்றின் விளைவாக, 
சமூகத்தின் அனைத்து நோய்களுக்குமான 
மாமருந்தாக (சர்வ ரோக நிவாரணி) மார்க்சியம் இல்லை 
என்பது புலப்பட்டது.
மார்க்சியத்தின் பற்றாக்குறைகளும் போதாமைகளும் 
தெளிவாக வெளிப்பட்டன.
தீர்வுக்கான தேடலின் அவசியம் உணரப் பட்டது. 

............ பகுதி  ​ ஒன்று முடிவுற்றது ........

மார்க்சியத் தத்துவம் 
புதுப்பிக்கப் படவேண்டுமா?

நல்லதொரு கட்டுரை! படியுங்கள்!!

இது கட்டுரை அல்ல!கருத்தாயுதம்!!