செவ்வாய், 30 ஜனவரி, 2018

காரல் மார்க்ஸ்
----------------------------
கார்ல் மார்க்ஸ் மாணவராக இருந்த போது எழுதிய கவிதை
===== * =====
இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன்,
உலகின் அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன் !.
அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்
என் மகிழ்ச்சியை நசுக்க முடியாது
அழிந்த நாட்டில் கடவுளைப் போல
வெற்றி முரசொலிக்க
நான் வருகிறேன் !.
ஒவ்வொரு சொல்லும்
செயல், நெருப்பு;
என் மார்பும் கடவுளைப்
போன்றதே !

---------------------------------------------------
பாடலின் பொருள் 
கடவுள் படைத்ததாக
சொல்லப்படும் இவ்வுலகு
அரக்கத்தனம் நிறைந்து
இன்று அறுவருப்பாக உள்ளது
அதன் அழிவிலிருந்து
புதிய உலகு படைக்க போகும்
கடவுளாக நான் வருகிறேன்
என்பதே பொருள்
இது
இளம் ஹெகலியரான மார்க்ஸ்
மக்களின் நம்பிக்கையை
அடிப்படையாக கொண்டு
தனது சமூக அக்கறையின்
போர் குணத்தில்
தன்னம்பிக்கையோடு
எழுதிய கவிதையே ஆகும்..

----------------------------------------------
திருத்தங்கள்
-----------------------
எனினும் அத்வைதம் குறித்த ஓர் எளிய அறிமுகத்தைத்
தருவது என்னும் வரம்புக்குள்தான் இந்நூல் நிற்கிறது
என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
----------------------------------------------
ஆதிசங்கரரின் பெயரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட
நூல்களை அவர்தான் எழுதினார் என்பது உண்மையல்ல.
பிரபலமாக உள்ள 'சௌந்தர்ய லஹரி'
ஆதிசங்கரர் எழுதியதல்ல என்பதை
அந்நூலின் மொழிநடையைக் கொண்டு
ஆய்வறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.
-----------------------------------------------------------------
ஆதிசங்கரரைப் பின்பற்றும் அத்வைதிகள்
ஸ்மார்த்தர்கள் எனப்பட்டனர். ஸ்ருதி, ஸ்மிருதி
என்னும் இரண்டும் இந்து மதத்தின் மூல ஆதாரங்கள்.
நான்கு வேதங்களே ஸ்ருதி. வேத விளக்கங்களே ஸ்மிருதி.
ஸ்மிருதி என்னும் சொல்லில் இருந்தே ஸ்மார்த்தம்
பிறந்தது. எனினும் ஸ்மார்த்தர்கள் என்ற அடையாளம்
மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை. பார்ப்பன
சைவப் பிரிவினராகவே அத்வைதிகள் மக்களால்
அறியப் படுகின்றனர்.இதுவே அத்வைதம் சிறுத்துச்
சுருங்கிய வரலாறு.
--------------------------------------------------------------------------
இது மார்க்சியம் கூறும் சமூக அறம்.
ஒவ்வொருவரும் உழைத்து உண்ண வேண்டும்
என்பது மார்க்சியத்தின் தனிமனித அறம்.
--------------------------------------------------------------------------------------------.


திங்கள், 29 ஜனவரி, 2018

தலைப்புகள்
-----------------------
பகுதி-1: அத்வைதம் தோன்றியது ஏன்?

பகுதி-2: சிகரத்தில் கருத்தையும் பாதாளத்தில்
பொருளையும் வைத்த அத்வைதம்!

பகுதி-3: பிற தத்துவங்களுடன் அத்வைதத்தின்
ஒப்பீட்டு மதிப்பு.

பகுதி-4: அத்வைதத்தின் தற்கால நிலை.  

--------------------------------------------------------------------------------
இரண்டாம் பகுதியின் முதல் அத்தியாயம்
தலைப்பின்றி உள்ளது. அதாவது நான் தலைப்பு
எழுதாமல் விட்டு விட்டேன். எனவே அதற்கு
பின்வரும் தலைப்பைக் கொடுக்கவும்.

பிரம்மத்தின் பிரம்மாண்டம்!
------------------------------------------------------------------------------

ஆரியம் திராவிடம்: எது மாயை எது உண்மை?
இந்து ஆங்கில ஏட்டின் கட்டுரை கூறுவது என்ன?
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
இந்தியர்கள் அனைவருமே வந்தேறிகளா?
தமிழர்களின் நிலை என்ன?
ஆரிய திராவிட  கொள்கையில் உண்மை என்ன?
இந்து ஆங்கில ஏட்டின் கட்டுரை குறித்த
எமது விளக்கக் கட்டுரை விரைவில் வெளியாகும்!
(இன்றிரவு அல்லது நாளை காலை)
தற்போது ஒரு கூட்டத்திற்குச் செல்கிறேன்.
*********************************************************
வன்முறை அறம் ஆகுமா?
----------------------------------------------
அறம் என்பது இதமான உபதேசத்துக்கு உரிய
எளிய கோட்பாடுகளின் தொகுப்பு மட்டுமே
என்று கருதுவது பிழைபட்ட புரிதல்.
திருடாதே என்று அறத்தை உபதேசிப்பதால்
மட்டும் திருட்டு ஒழிந்து விடாது என்று மார்க்சியம்
கருதுகிறது. திருட்டு என்றால் என்ன என்று
எங்கல்ஸ் விளக்குகிறார்:

"சுரண்டல் சமூக அமைப்பை எதிர்த்து,
இல்லாதவர்கள் தெரிவிக்கும் கண்டனத்தின்
முதல் அடையாளம்தான் திருட்டு"  என்கிறார் எங்கல்ஸ்.
(Theft is the first sign of protest of the have nots against the exploitative
society).

எனவே திருட்டுக்குக் காரணமான சொத்துடைமை
சமூக அமைப்பை மாற்றாமல் திருட்டை ஒழிக்க
முடியாது என்று மார்க்சியம் கருதுகிறது. எனவே
சொத்துடைமை ஒழிப்பு என்னும் நோக்கத்தைச்
செயல்படுத்தவல்ல அறமாக பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை அது முன்வைக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வன்முறை
அல்லவா? வன்முறையானது எப்படி அறமாகும்
என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முற்றிலும்
வன்முறையை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு
முறைமை என்று கருதுவது பேதைமை ஆகும்.

ஒரு முதலாளிய சமூக அமைப்பானது
முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைக்
கொண்டிருக்கிறது. அதே போல, பாட்டாளி வர்க்கம்
ஆளும் வர்க்கமாக மாறும்போது,அது முதலாளிய
வர்க்கம் இதுவரை அனுபவித்து வந்த அனைத்து
அதிகாரங்களையும் ரத்து செய்து விடுகிறது.
சகல அதிகாரமும் பாட்டாளி வர்க்கத்துக்கே  என்பதுதான்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும். எல்லார் மீதும்
வன்முறை என்று இதற்குப் பொருளல்ல.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வன்முறையை
ஆராதிக்கும் முறைமை அல்ல. எனினும் முற்றிலும்
வன்முறையைச் சாராதது என்றும் கூறி விட முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் 1950களில், வட
இந்தியாவில் மத்திய அரசு அலுவலகங்களில்
தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதற்காக
தனியான பானைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மேல்சாதி ஊழியர்களுக்கான பானையில் இருந்து
தாழ்த்தப்பட்ட ஊழியர் தண்ணீர் அருந்த முடியாது.
இவ்வளவுக்கும் எல்லாமே மண்பானைகள்தான்.

உயர்சாதி ஊழியர்கள் அறத்தொடு நின்றுதான்
தாழ்த்தப் பட்டோருக்குத் தனிப்பானை வைத்தனர்.
தனிப்பானைக்கு சாஸ்திர சம்மதம் உண்டு.
தீண்டாமையைப் பேண வேண்டும் என்பதே
உயர்சாதியினரின் அறம். இந்த அறம் தாழ்த்தப்
பட்டோருக்கு நியாயம் வழங்குமா?

அன்றைய மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராமின்
கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
தாழ்த்தப் பட்டோருக்கான தனிப்பானைகளை
உடைத்தெறியுங்கள் என்று அவர் உத்தரவிட்டார்.
பானை என்பது அரசின் சொத்து. அரசின் சொத்தை
உடைத்தெறிவது வன்முறைதான். ஆயினும் இந்த
எளிய வன்முறைக்குப் பிறகுதான், ஒரே பானையில்
இருந்து அனைவரும் தண்ணீர் அருந்தும்
சமத்துவம் பிறந்தது.

கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு
வரியில் பதில் சொல்வதானால், தனிச் சொத்துடைமையை
ஒழிப்பது (abolition of private property) என்று கூறலாம்.
சோவியத் ஒன்றியத்தில் (ரஷ்யாவில்), சீனாவில்,
கியூபாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைந்ததும்
எல்லா விதமான தனிச் சொத்துடைமையையும்
ஒழித்து உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது
மார்க்சியம்..

தனிச்சொத்துடைமையை ஒழிப்பதுதான்
மார்க்சியத்தின் பிரதான இலக்கு என்று ஆகும்போது
அதற்கேற்ற அறத்தைத்தான் மார்க்சியம் கொண்டிருக்க
முடியும்.  அந்த அறம்தான் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம்.

இதற்கு மாறாக, வர்க்க சமரசத்தை இலக்காகக்
கொண்டுள்ள அனைத்து மதங்களும் தங்களின்
இலட்சியத்துக்கு ஏற்ற அறத்தையே கொண்டுள்ளன.
பெளத்தம், சமணம், கிறிஸ்துவம் உள்ளிட்ட
எந்தவொரு மதமும் தனிச் சொத்துடைமையை
ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல.
எனவே அவர்கள் போதிக்கும் அறம் வன்முறையற்ற
அறமாகும். பகைமை  கொண்ட வர்க்கங்களை
சமரசப் படுத்துவதன் மூலமாக, சமூகக்
கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் நோக்கம்
கொண்டதே மதங்களின் அறம் ஆகும். இத்தகைய
பொருந்தா அறத்தை உச்சிமேல் சுமந்து கொண்டு,
மார்க்சியத்தின் அறம் இதுபோல மென்மையாக
இல்லையே என்று புலம்புவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை அல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்லாயிரக் கணக்கான
முழுநேர ஊழியர்களைப் பாருங்கள். எளிய
வாழ்க்கைக்கும் கண்ணியமான நடத்தைக்கும்
அவர்கள் எடுத்துக் காட்டுகளாகத் திகழவில்லையா?
மகாத்மா காந்தி மட்டும்தான் எளிமைக்கு உதாரணமா?

கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்
மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்

என்று பாடினாரே சுப்பாராவ் பாணி கிரஹி!
காந்தியை விஞ்சிய எளிமையுடன் கம்யூனிஸ்டுகள்
வாழவில்லையா?

கீழ்த்தஞ்சையில் எளிய விவசாயக் கூலிகளுடன்
இணைந்து, அவர்களின் குடிசையிலேயே தங்கி,
அவர்கள் தரும் உணவையே உண்டு, சவுக்கடி
சாணிப்பால் கொடுமைகளை ஒழித்தாரே மகத்தான
கம்யூனிஸ்ட் தோழர் சீனிவாச ராவ்!
சீனிவாச ராவை முன்மாதிரியாகக் கொண்டு
வாழ்ந்து மடிந்த எத்தனையோ கம்யூனிஸ்ட்கள்
இன்றும் அப்பகுதி மக்களின் இதயங்களில்
வாழ்கின்றனரே!

1948 தெலுங்கானா ஆயுத எழுச்சியிலும், வசந்தத்தின்
இடிமுழக்கமாக இந்திய வானில் உதித்த நக்சல்பாரிப்
புரட்சியிலும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள்
இன்னுயிரைத் துறந்து தியாகிகள் ஆயினரே!  

அறமே இல்லாத வறட்டுத் தத்துவமாக மார்க்சியம்
இருக்குமேயானால், இவ்வளவு தியாக சீலர்களை
தனது அணியில் மார்க்சியம் கொண்டிருக்க முடியுமா?
"ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக இருப்பது எப்படி?"
(How to be a good communist?) என்று புத்தகம் எழுதினாரே
சீனத்தின் லியோ சாச்சி! அந்தப் புத்தகம் மார்க்சியத்தின்
அறநூல் இல்லையா?    

மக்கள் கூடி வாழ்ந்து, பொதுவான ஒரே உணவுக்
கூடத்தில் சமைத்து உண்டு, ஓரிடத்தில் கூடி வாழும்
கம்யூன்கள் சீனா முழுவதும் மாவோவின்
காலத்தில் அமைக்கப்பட்டனவே! இது மார்க்சிய
அறத்தின் வெளிப்பாடு இல்லையா? தனிச்
சொத்துடைமை  ஒழிந்த பின், எத்தகைய நீதி
போதனைகளாலும் அறன் வலியுறுத்தல்களாலும்
ஒழிக்க முடியாத குற்றங்கள் சோஷலிச நாடுகளில்
வெகுவாகக் குறைந்தனவே, அது எதனால்
சாத்தியமானது?

எனவே மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது
வெற்றுக் கூச்சலே தவிர உண்மையல்ல. மார்க்சிய
அறம் செவிப்பறைகளில் தங்கிக்கொண்டு
மூளைக்குச் செல்லாமல் மடிந்து விடும் அறமல்ல.
மாறாக அது மானுடத்தைச் செயலுறுத்தும் அறம்.
அது உலகை மேன்மையுறுத்தும் அறம். அது
சமத்துவத்தின் அறம்; சமரசத்தின் அறமல்ல.
--------------------------------------------------------------------------------------

கம்யூனிச சமூகத்தின் உன்னத அறம்!
-------------------------------------------------------------------
தனிச் சொத்துடைமையை ஒழிப்பது என்ற நோக்கத்துக்கு
ஏற்ற அறத்தை ஒரு முதலாளிய சமூகத்தில்
மார்க்சியம் கொண்டிருக்கிறது. எனினும் இந்த
அறம் எல்லாக்காலத்துக்கும் பொருந்துகிற அறமல்ல
என்பதை மார்க்சியம் தெளிவுறுத்துகிறது.

சோஷலிச சமூகத்திலும் வர்க்கங்கள் இருக்கும்.
எனவே அரசு எந்திரமும் சோஷலிச சமூகத்தில்
இருந்தே தீரும். மானுடம் பக்குவம் அடைந்து
சோஷலிசக் கட்டத்தைக் கடந்து கம்யூனிச சமூக
அமைப்புக்குள் செல்லும்போது அங்கு வர்க்கங்கள்
இருக்காது. அரசும் இருக்காது. எனவே அங்கு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் இருக்காது.

கம்யூனிச சமூகத்தின் அறமே வேறு. அது மானுடத்தின்
உன்னதங்களை வசப்படுத்திக் கொண்டிருக்கும்.
கம்யூனிச சமூகத்தில் இனிய வாழ்க்கையானது
சமூகத்தின் சகல பகுதி மக்களுக்கும் உறுதி
செய்யப்பட்டு இருக்கும். கம்யூனிஸ்ட் அறிக்கையில்
மார்க்சும் எங்கல்சும் கூறிய பொன்னுலகம் அது.
அதற்கான அறத்தை அச்சமூகமே உருவாக்கும்.
****************************************************************
முற்றும்
-------------------------------------------------------------------------  
பிற்சேர்க்கை:
---------------------------
மார்க்சியத்தில் அறம் இல்லையா?  
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------
மார்க்சியம் ஒரு மகத்தான தத்துவம். அது தத்துவம்
மட்டுமல்ல, மாபெரும் தரிசனமும் ஆகும்.
எந்தவொரு தத்துவத்திலும் அறம் இருத்தல்
வேண்டும். அறமில்லாத தத்துவம் பயனற்றது.
ஆனால் மார்க்சியம் என்னும் மாபெரும்
தத்துவத்தில் அறம் இல்லை என்று கூறப் படுகிறது.
தன்னுள் அறத்தைக் கொண்டிராத தத்துவமாக
மார்க்சியம் இருக்கிறது என்கிறார்கள் மார்க்சியத்தை
விமர்சிப்பவர்கள். ஒரு தத்துவத்திற்கு அறம் தேவை
என்பது சரியே.

பௌத்தமும் சமணமும் மதங்கள் மட்டுமல்ல;
அவை தத்துவங்களும் ஆகும். பௌத்த சமண
மதங்களில் அறம் உண்டு.கொல்லாமை, புலால்
உண்ணாமை, எவ்வுயிர்க்கும்  தீங்கு எண்ணாமை
உள்ளிட்ட அறங்களை அவை போதிக்கின்றன.
வைணவம் எனப்படும் விசிஷ்டாத்வைத
தத்துவத்திலும் அறம் உண்டு. கைங்கரியம் என்னும்
அறத்தை வைணவம் கொண்டுள்ளது.
காந்தியத்திலும் அறம் உண்டு. காந்தியம்
கூறும் அஹிம்சையே ஒரு மகத்தான .அறம்தான்.
எளிமை, நுகர்வு மறுப்பு ஆகியனவும் காந்திய அறங்களே.

அறம் என்ற ஒன்றே இல்லாத ஒரு தத்துவம் இந்தியாவில்
உண்டென்றால், அது ஆதிசங்கரரின் அத்வைதமே.
ஆம், அத்வைதத்தில் அறம் எதுவுமே கிடையாது.

இத்தகைய அறம் எதுவும் மார்க்சியத்தில் உண்டா?
பரிசீலிப்போம். மார்க்சியத்தில் அறம் உண்டா
என்ற கேள்விக்குப் பதில் கூறுமுன் அறம் குறித்து
வள்ளுவர் கூறும் ஒரு முக்கியக் கோட்பாட்டை
அறிந்து கொள்ள வேண்டும்.
யாரினும் கூடுதலாக அறம் பற்றிப் பேசியவர்
வள்ளுவர். முப்பால் எனப்படும் திருக்குறளில்
முதல் பாலே அறத்துப்பால்தான்.

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை"
என்கிறார் வள்ளுவர்.

"பல்லக்கில் சுகமாக உட்கார்ந்து இருப்பவனுக்கும்,
தோள் வலிக்கப் பல்லக்கைச் சுமப்பவனுக்கும்,
இந்த இருவருக்கும்
பொதுவான அறம் என்பது கிடையாது". இதுதான்
இக்குறளின் பொருள்.
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
கிடையாது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே வள்ளுவர் சொல்லி விட்டார். இதைத்தான்
காரல் மார்க்சும் கூறுகிறார்.

மார்க்சியத்தில் அறம் உண்டு. ஆனால்
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
மார்க்சியத்தில் இல்லை. அப்படி எல்லோருக்கும்
பொதுவான அறம் என்பது பித்தலாட்டமே.
இணக்கம் காண முடியாத அளவுக்கு வர்க்கப்
பகைமை முற்றிப் போயுள்ள ஒரு சமூக அமைப்பில்
எல்லோருக்கும் பொதுவான அறம் எப்படி
இருக்க இயலும்?
பல்லக்கில் உட்கார்ந்து இருப்பவனுக்கான
அறம் வேறு. பல்லக்கைச் சுமப்பவனுக்கான
அறம் வேறு.

மார்க்சியம் கூறுகிற அறம் பாட்டாளி
வர்க்கத்துக்கான அறம். அது அனைத்து
வர்க்கங்களுக்குமான அறம் அல்ல.
மார்க்சியம் கூறுகிற அறம் சமத்துவம் ஆகும்.
சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற, அடிமைத்தனமற்ற
ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அறம் சமத்துவமே .
அந்த அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.
அந்த அறமே சமத்துவத்தைப் படைக்கும் அறம்;
சுரண்டலை ஒழித்து விடுதலையைத் தரவல்ல அறம்.
எனவே மார்க்சியத்தின் அறம் இல்லை என்பது
நகைப்புக்கு உரிய கூற்று.
------------------------------------------------------------------------------------------
வள்ளுவரும் இயேசுவும் கூறும் அறமும்
மார்க்சியம் கூறும் அறமும்!
----------------------------------------------------------------
தமிழ்நாடு அறம் வளர்த்த பூமி. கற்கத் தொடங்கும்
ஒரு தமிழ்க் குழந்தை முதலில் அறத்தைத்தான்
கற்கிறது."அறம் செய விரும்பு" என்ற ஒளவையின்
ஆத்திசூடியுடன்தான் குழந்தையின் கல்வி
தொடங்குகிறது.

ஆத்திசூடி கொன்றைவேந்தன் மட்டுமல்ல திருக்குறள்
உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அனைத்துமே அறநூல்கள்தாம். உலகின் வேறெந்த
பகுதியையும் விட தமிழகமே அறநூல் செழுமையிலும்
அறத்தொடு நிற்றலிலும் முதலிடத்தில் உள்ளது. எனவே
தமிழ்மண்ணில் அறம் குறித்த ஓர்மை விஞ்சி நிற்பதில்
வியப்பில்லை.

மேற்கூறிய அறநூல்கள் கூறும் அறம் அனைத்தும்
தனிமனித ஒழுக்கத்தைக் கற்பிப்பவை. ஒவ்வொரு
சூழலிலும் ஒரு தனிமனிதன் எங்ஙனம் நடந்து
கொள்ள வேண்டும் என்று இந்நூல்கள் தனிமனித
நடத்தையை வரையறுக்கின்றன.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார் வள்ளுவர். இது தனிமனிதனுக்குக்
கற்பிக்கப்படும்  ஒழுக்க நெறி; தனிமனித அறம்.

வலது கன்னத்தில் அடித்தால் நீ உன் இடது
கன்னத்தையும் காட்டு என்கிறார் இயேசு.
உன்னைப் போலவே உன் அண்டை
வீட்டுக்காரனையும் நேசி என்கிறார் மேலும் இயேசு.
ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்ற வேண்டிய
அறக்கோட்பாடே இது.

இத்தகைய தனிமனித ஒழுகலாறுகள் மார்க்சியத்தில்
உள்ளனவா? தனிமனித நடத்தை குறித்த அறத்தை
மார்க்சியம் போதிக்கிறதா? மார்க்சியத்தைப்  பின்பற்றுவோருக்கான அறபோதனை என்ன?
பரிசீலிப்போம்.

கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப்
பட்டவர்கள் என்றார் ஸ்டாலின்.
(The communists are of a special mould). இதன் பொருள் என்ன?
எந்த நிலையிலும் கட்சி நலனுக்கு, புரட்சியின்
நலனுக்கு, மக்களின் நலனுக்கு தன் சொந்த நலனைக்
கீழ்ப்படுத்துபவனே கம்யூனிஸ்ட் என்று இதற்குப்
பொருள்.மக்களின் நலனுக்குக் கீழாகவே
தன் குடும்ப நலனை தன் சொந்த நலனை எப்போதும்
வைப்பது என்பதுதான் கம்யூனிஸ்டுகளுக்குப்
போதிக்கப்பட்ட தனிமனித அறம்; ஒழுகலாறு.

உலக வரலாற்றில் இதற்கு பல்லாயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்தியாவில்
நக்சல்பாரி வரலாற்றிலேயே இதற்கு ஆயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்திய
அரசு தூக்கிலிட்ட பூமையா, கிஷ்ணா கவுடா
ஆகிய தோழர்களை நினைத்துப் பாருங்கள்.
இவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக
முதன் முதலில் தூக்கிலிடப்பட்டவர்கள்
இவர்கள் இருவருமே. மார்க்சியத்தையும்
பாட்டாளி வர்க்க அறத்தையும் உயர்த்திப்
பிடித்தபடி, தூக்குமேடையில் தியாகிகளான
இவர்களின் அறம் மார்க்சியம் கற்பித்த அறம்
அல்லவா?

சிகாகோவின் மேதினத் தியாகிகள் நால்வரும்
இந்தியாவில் பகத்சிங்கும் பற்றி ஒழுகியது
மார்க்சிய அறம் அல்லவா? இவர்கள் அனைவரும்
தங்களின் சொந்த நலனை கீழேயும் மக்களின்
நலனை மேலேயும் வைத்தனரா இல்லையா?

மார்க்சியத்தில் அறம் இல்லை. மார்க்சியர்களுக்கு
என்று தனிமனித ஒழுகலாறுகள் எதையும்
மார்க்சியம் கற்பிக்கவில்லை என்று
சொல்கிறார்களே மார்க்சிய எதிரிகள். அதில்
உண்மை துளியும் இல்லை என்பதையே மேற்கூறிய
உதாரணங்கள் நிரூபிக்கின்றன.

புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, எவ்வுயிர்க்கும்
தீங்கு எண்ணாமை என்பன போன்ற நடைமுறை
சாத்தியமற்ற செயற்கையான அறம் பற்றி
மார்க்சியம் பேசவில்லைதான். ஆனால் இத்தகைய
அறம் எதனினும் உயர்ந்த அறத்தை அல்லவா
மார்க்சியம் போதித்துள்ளது! சுயநலத்தைத் துற,
பொதுநலனைப் பேண் என்று கூறும் மார்க்சிய
அறத்தை விட உயர்ந்த அறம் வேறு எதுவும் உள்ளதா?

மதங்களும் நீதிநூல்களும் கூறும் அறம் முழுவதும்
தனிமனித அறமே. சமூக அறம் பற்றி எந்த மதமோ
நீதிநூல்களோ கூறியதில்லை. சமூக அறம்
என்பது மொத்த சமூகத்துக்குமான அறமாகும்.
இது கூட்டுத்தன்மை (collective but not individualistic)
வாய்ந்த அறமேயன்றி தனிமனித நடத்தைக்கான
அறமல்ல.

ஆனால் உலகில் எந்த மதத்திலும் நீதிநூலிலும் சமூக
அறம் பற்றி எதுவுமே இல்லை. அஷ்டாங்க மார்க்கத்தை
(எட்டு ஒழுக்க நெறிகள்) கூறுகிற பெளத்தம்
சமூக அறம் பற்றி எதையும் கூறவில்லையே ஏன்?
ஆனால் மார்க்சியம் மட்டுமே சமூக அறம் பற்றிப்
பேசுகிறது. தனிமனிதனுக்கான அறத்தை மட்டுமின்றி
சமூகம் முழுமைக்குமான அறத்தைப் பற்றிப்
பேசும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே.

மனைவியை வைத்துச் சூதாடினான் தருமன்.
இது தனிமனித அறம் குன்றல் ஆகும்.
செய்யாத குற்றத்துக்காக அநீதியாக
கொலையுண்டான் கோவலன். செய்தியறிந்த
கண்ணகி "பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும்
உண்டுகொல்"  என்றும் "சான்றோரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்" என்று அழுது
புலம்புகிறாள். மதுரையைத் தீவைத்து எரிக்கிறாள்.

மதுரை மாநகரில்  சமூக அறம் குன்றியிருக்கிறது
என்று கருதினாள் கண்ணகி. தவறு கண்ட இடத்து
அதைத் தட்டிக் கேட்பது சமூக அறம். அவ்வாறு
தட்டிக் கேட்பதன் மூலமே தவறு நிகழாமல்
தடுக்க முடியும். ஆனால் மதுரைச் சமூகத்திடம்
அந்த அறம் இல்லை. சமூக அறம் குன்றியதன்
விளைவே கோவலன் படுகொலை என்று கருதுகிறாள்
கண்ணகி. சமூக அறம் குன்றிய மதுரையை
கண்ணகி தண்டிக்கிறாள்.

ஆக தனிமனித அறமும் வேண்டும், சமூக அறமும்
வேண்டும் என்பதை மேற்கூறிய உதாரணம்
மூலம் நன்கறியலாம். மதங்கள் அல்ல, மார்க்சியம்
மட்டுமே தனிமனித அறம், சமூக அறம் ஆகிய
இருவித அறம் பற்றிப் பேசுகிறது. மார்க்சியம் கூறும்
சமூக அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.

உலகில் இதுவரை நிலவிய எந்தவொரு சமூக
அமைப்பையும் விட அறத்தில் சிறந்து விளங்கும்
சமூக அமைப்பு மார்க்ஸ் கனவு கண்ட கம்யூனிச
சமூக அமைப்பே.
---------------------------------------------------------------------------------------
வேட்டுவச் சமூகத்தின் அறமும்
வேளாண்மைச் சமூகத்தின் அறமும்!
----------------------------------------------------------------------------
அறம் என்பது அந்தரத்தில் இருந்து வருவது அல்ல.
ஆயின் அறத்தின் தோற்றுவாய் எது? அறத்தின்
தோற்றுவாய் உற்பத்தி முறையே. ஒரு குறிப்பிட்ட
காலத்தில் ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையைப்
பொறுத்தே அச்சமூகத்திற்கான அறம் தோன்றுகிறது.

தமிழ்ச் சமூகம் தொடக்கத்தில் வேட்டுவச் சமூகமாகவே
இருந்தது. வேட்டையாடி விலங்குகளைக் கொன்று
தின்று உயிர் வாழ்வதே அச்சமூக வாழ்வியல்.
வேட்டையே அச்சமூகத்தின் உற்பத்தி முறை.
விலங்குகளின் இறைச்சி உணவாகவும், விலங்குகளின்
தோல் ஆடையாகவும், விலங்குகளின் கொம்பு, பற்கள்
ஆகியவை கருவிகளாகவும் பயன்பட்டன.

"பொன்னார் மேனியனே புலித்தோலை
அரைக்கசைத்து" என்ற தேவாரப் பாடல்
இதை உணர்த்தும்.

காலம் மாறியது. குறிஞ்சி நிலத்தில் வளம்
குன்றியவுடன் மக்களில் சிலர் முல்லை நிலம்
நோக்கிப் பெயர்ந்தனர். காடு திருத்திக் கழனி
ஆக்கினர். விலங்குகளைக் கொன்று தின்பதற்குப்
பதில், அவற்றை மனித உழைப்புக்குத் துணையாகப்
பயன்படுத்தலாம் என்று அச்சமூகம் அறிந்து
கொண்டது. வேட்டுவச் சமூக வாழ்க்கை மாறி
கால்நடைச் சமூக வாழ்க்கை தோன்றியது.
வரலாற்றின் இக்காலக் கட்டத்துச் சமூகம்
மேய்ச்சல் சமூகம் (pastoral society) எனப்பட்டது.

வேட்டுவச் சமூக அறம் என்பது
கொலை புரிதல் ஆகும். கால்நடைச் சமூக
அறம் என்பது கொல்லாமை ஆகும். சமூகம்
மாறியபின் அறமும் தலைகீழாய் மாறி விட்டது.

ஒரு பசுவைக் கொன்று தின்றால் அக்குடும்பத்திற்கு
அது ஒரு நாள்உணவு மட்டுமே. ஆனால் அப்பசுவைக்
கொல்லாமல் வளர்த்தால், ஓராண்டுக்கான
உணவாக பசுவின் பால் அக்குடும்பத்திற்குப்
பயன்படுகிறது.

"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.
"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் மேலும். இங்கு "வள்ளல்
பெரும் பசுக்கள்" என்ற சொல்லாட்சியைக்
கவனிக்கவும்.

திருப்பாவை முழுவதும் மேய்ச்சல் சமூக
வாழ்வியலை தத்ரூபமாகப் படம் பிடித்துக்
காட்டும் இலக்கியமாகும். ஒரு வரலாற்றியல்
பொருள்முதல்வாதிக்கு திருப்பாவை ஒரு
மாபெரும் தரவுச் சுரங்கம் ஆகும்.

(மானுட சமூக வரலாற்றில் நாகரிகம் அடைந்த
முதல் சமூகம் மேய்ச்சல் சமூகமே. தமிழகம்
மட்டுமல்ல இந்தியாவிலும் மொத்த உலகத்திலும்
இதுவே உண்மை. "மாயோன் மேய காடுறை
உலகமும்" என்னும் தொல்காப்பிய நூற்பா
முல்லை நிலக் கடவுளாக திருமாலைக்
கூறுகிறது. இந்தியாவில், ஆட்டிடையன் என்று
கூறப்படும் கண்ணனே ( கிருஷ்ணன்) மேய்ச்சல்
சமூக மக்களின் கடவுளாக இருந்தான்.

யூதர்கள் தங்களின் கடவுளாக ஒரு மேய்ப்பனையே
வரித்துக் கொண்டனர்.
"கர்த்தர் என் மேய்ப்பனாக இருக்கிறார். அவர்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து அமர்ந்த
தண்ணீரண்டை இளைப்பாறச் செய்கிறார்"
என்கிறது விவிலியம்

புராதன பொதுவுடைமைச் சமூகம் வேட்டுவச்
சமூகமே. அங்கு சமத்துவம் நிலவியது என்ற
போதிலும், அச்சமூகம் காட்டு மிராண்டி
வாழ்க்கை முறையைத்தான் கொண்டிருந்தது;
நாகரிகம் எய்தவில்லை).

ஆக சமூகத்தின் உற்பத்தி முறையைப் பொறுத்தே
அச்சமூகத்திற்கான அறமும் அச்சமூகத்தின்
தனிமனித அறமும் அமையும் என்ற பேருண்மை
இங்கு நிறுவப்பட்டுள்ளது.

அதே நேரத்தில்.அறம் என்பது இயற்பியல்
விதிகள் போன்று துல்லியம் உடையது அல்ல.
அறம் என்பது எழுதப்படாத சட்டம் என்று புரிந்து
கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தில் அறம் இல்லை என்று கூறுவோர்
அறம் பற்றிய மார்க்சியப் புரிதலை அறியாதோரே.
எல்லாக் காலத்துக்கும் பொருந்துகின்ற, எல்லாருக்கும்
பொருந்துகின்ற அறம் என்று ஒன்று இல்லவே இல்லை.

எனவேதான் மார்க்சியம் இருவேறு சமூக
அமைப்பிற்கான இருவேறு அறம் பற்றிக் கூறுகிறது.
முதலாளிய சமூகத்திற்கான அறமும்
கம்யூனிச சமூகத்திற்கான அறமும் வேறு வேறானவை
என்று மார்க்சியம் கூறுகிறது.
---------------------------------------------------------------------------------------------
வன்முறை அறம் ஆகுமா?
----------------------------------------------
அறம் என்பது இதமான உபதேசத்துக்கு உரிய
எளிய கோட்பாடுகளின் தொகுப்பு மட்டுமே
என்று கருதுவது பிழைபட்ட புரிதல்.
திருடாதே என்று அறத்தை உபதேசிப்பதால்
மட்டும் திருட்டு ஒழிந்து விடாது என்று மார்க்சியம்
கருதுகிறது. திருட்டு என்றால் என்ன என்று
எங்கல்ஸ் விளக்குகிறார்:

"சுரண்டல் சமூக அமைப்பை எதிர்த்து,
இல்லாதவர்கள் தெரிவிக்கும் கண்டனத்தின்
முதல் அடையாளம்தான் திருட்டு"  என்கிறார் எங்கல்ஸ்.
(Theft is the first sign of protest of the have nots against the exploitative
society).

எனவே திருட்டுக்குக் காரணமான சொத்துடைமை
சமூக அமைப்பை மாற்றாமல் திருட்டை ஒழிக்க
முடியாது என்று மார்க்சியம் கருதுகிறது. எனவே
சொத்துடைமை ஒழிப்பு என்னும் நோக்கத்தைச்
செயல்படுத்தவல்ல அறமாக பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை அது முன்வைக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வன்முறை
அல்லவா? வன்முறையானது எப்படி அறமாகும்
என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முற்றிலும்
வன்முறையை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு
முறைமை என்று கருதுவது பேதைமை ஆகும்.

ஒரு முதலாளிய சமூக அமைப்பானது
முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைக்
கொண்டிருக்கிறது. அதே போல, பாட்டாளி வர்க்கம்
ஆளும் வர்க்கமாக மாறும்போது,அது முதலாளிய
வர்க்கம் இதுவரை அனுபவித்து வந்த அனைத்து
அதிகாரங்களையும் ரத்து செய்து விடுகிறது.
சகல அதிகாரமும் பாட்டாளி வர்க்கத்துக்கே  என்பதுதான்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும். எல்லார் மீதும்
வன்முறை என்று இதற்குப் பொருளல்ல.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வன்முறையை
ஆராதிக்கும் முறைமை அல்ல. எனினும் முற்றிலும்
வன்முறையைச் சாராதது என்றும் கூறி விட முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் 1950களில், வட
இந்தியாவில் மத்திய அரசு அலுவலகங்களில்
தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதற்காக
தனியான பானைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மேல்சாதி ஊழியர்களுக்கான பானையில் இருந்து
தாழ்த்தப்பட்ட ஊழியர் தண்ணீர் அருந்த முடியாது.
இவ்வளவுக்கும் எல்லாமே மண்பானைகள்தான்.

உயர்சாதி ஊழியர்கள் அறத்தொடு நின்றுதான்
தாழ்த்தப் பட்டோருக்குத் தனிப்பானை வைத்தனர்.
தனிப்பானைக்கு சாஸ்திர சம்மதம் உண்டு.
தீண்டாமையைப் பேண வேண்டும் என்பதே
உயர்சாதியினரின் அறம். இந்த அறம் தாழ்த்தப்
பட்டோருக்கு நியாயம் வழங்குமா?

அன்றைய மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராமின்
கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
தாழ்த்தப் பட்டோருக்கான தனிப்பானைகளை
உடைத்தெறியுங்கள் என்று அவர் உத்தரவிட்டார்.
பானை என்பது அரசின் சொத்து. அரசின் சொத்தை
உடைத்தெறிவது வன்முறைதான். ஆயினும் இந்த
எளிய வன்முறைக்குப் பிறகுதான், ஒரே பானையில்
இருந்து அனைவரும் தண்ணீர் அருந்தும்
சமத்துவம் பிறந்தது.

கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு
வரியில் பதில் சொல்வதானால், தனிச் சொத்துடைமையை
ஒழிப்பது (abolition of private property) என்று கூறலாம்.
சோவியத் ஒன்றியத்தில் (ரஷ்யாவில்), சீனாவில்,
கியூபாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைந்ததும்
எல்லா விதமான தனிச் சொத்துடைமையையும்
ஒழித்து உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது
மார்க்சியம்..

தனிச்சொத்துடைமையை ஒழிப்பதுதான்
மார்க்சியத்தின் பிரதான இலக்கு என்று ஆகும்போது
அதற்கேற்ற அறத்தைத்தான் மார்க்சியம் கொண்டிருக்க
முடியும்.  அந்த அறம்தான் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம். இது மார்க்சியம் கூறும் சமூக அறம்.
ஒவ்வொருவரும் உழைத்து உண்ண வேண்டும்
என்பது மார்க்சியத்தின் தனிமனித அறம்.

இதற்கு மாறாக, வர்க்க சமரசத்தை இலக்காகக்
கொண்டுள்ள அனைத்து மதங்களும் தங்களின்
இலட்சியத்துக்கு ஏற்ற அறத்தையே கொண்டுள்ளன.
பெளத்தம், சமணம், கிறிஸ்துவம் உள்ளிட்ட
எந்தவொரு மதமும் தனிச் சொத்துடைமையை
ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல.
எனவே அவர்கள் போதிக்கும் அறம் வன்முறையற்ற
அறமாகும். பகைமை  கொண்ட வர்க்கங்களை
சமரசப் படுத்துவதன் மூலமாக, சமூகக்
கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் நோக்கம்
கொண்டதே மதங்களின் அறம் ஆகும். இத்தகைய
பொருந்தா அறத்தை உச்சிமேல் சுமந்து கொண்டு,
மார்க்சியத்தின் அறம் இதுபோல மென்மையாக
இல்லையே என்று புலம்புவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை அல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்லாயிரக் கணக்கான
முழுநேர ஊழியர்களைப் பாருங்கள். எளிய
வாழ்க்கைக்கும் கண்ணியமான நடத்தைக்கும்
அவர்கள் எடுத்துக் காட்டுகளாகத் திகழவில்லையா?
மகாத்மா காந்தி மட்டும்தான் எளிமைக்கு உதாரணமா?

கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்
மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்

என்று பாடினாரே சுப்பாராவ் பாணி கிரஹி!
காந்தியை விஞ்சிய எளிமையுடன் கம்யூனிஸ்டுகள்
வாழவில்லையா?

கீழ்த்தஞ்சையில் எளிய விவசாயக் கூலிகளுடன்
இணைந்து, அவர்களின் குடிசையிலேயே தங்கி,
அவர்கள் தரும் உணவையே உண்டு, சவுக்கடி
சாணிப்பால் கொடுமைகளை ஒழித்தாரே மகத்தான
கம்யூனிஸ்ட் தோழர் சீனிவாச ராவ்!
சீனிவாச ராவை முன்மாதிரியாகக் கொண்டு
வாழ்ந்து மடிந்த எத்தனையோ கம்யூனிஸ்ட்கள்
இன்றும் அப்பகுதி மக்களின் இதயங்களில்
வாழ்கின்றனரே!

1948 தெலுங்கானா ஆயுத எழுச்சியிலும், வசந்தத்தின்
இடிமுழக்கமாக இந்திய வானில் உதித்த நக்சல்பாரிப்
புரட்சியிலும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள்
இன்னுயிரைத் துறந்து தியாகிகள் ஆயினரே!

அறமே இல்லாத வறட்டுத் தத்துவமாக மார்க்சியம்
இருக்குமேயானால், இவ்வளவு தியாக சீலர்களை
தனது அணியில் மார்க்சியம் கொண்டிருக்க முடியுமா?
"ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக இருப்பது எப்படி?"
(How to be a good communist?) என்று புத்தகம் எழுதினாரே
சீனத்தின் லியோ சாச்சி! அந்தப் புத்தகம் மார்க்சியத்தின்
அறநூல் இல்லையா?

மக்கள் கூடி வாழ்ந்து, பொதுவான ஒரே உணவுக்
கூடத்தில் சமைத்து உண்டு, ஓரிடத்தில் கூடி வாழும்
கம்யூன்கள் சீனா முழுவதும் மாவோவின்
காலத்தில் அமைக்கப்பட்டனவே! இது மார்க்சிய
அறத்தின் வெளிப்பாடு இல்லையா? தனிச்
சொத்துடைமை  ஒழிந்த பின், எத்தகைய நீதி
போதனைகளாலும் அறன் வலியுறுத்தல்களாலும்
ஒழிக்க முடியாத குற்றங்கள் சோஷலிச நாடுகளில்
வெகுவாகக் குறைந்தனவே, அது எதனால்
சாத்தியமானது?

எனவே மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது
வெற்றுக் கூச்சலே தவிர உண்மையல்ல. மார்க்சிய
அறம் செவிப்பறைகளில் தங்கிக்கொண்டு
மூளைக்குச் செல்லாமல் மடிந்து விடும் அறமல்ல.
மாறாக அது மானுடத்தைச் செயலுறுத்தும் அறம்.
அது உலகை மேன்மையுறுத்தும் அறம். அது
சமத்துவத்தின் அறம்; சமரசத்தின் அறமல்ல.
--------------------------------------------------------------------------------------

கம்யூனிச சமூகத்தின் உன்னத அறம்!
-------------------------------------------------------------------
தனிச் சொத்துடைமையை ஒழிப்பது என்ற நோக்கத்துக்கு
ஏற்ற அறத்தை ஒரு முதலாளிய சமூகத்தில்
மார்க்சியம் கொண்டிருக்கிறது. எனினும் இந்த
அறம் எல்லாக்காலத்துக்கும் பொருந்துகிற அறமல்ல
என்பதை மார்க்சியம் தெளிவுறுத்துகிறது.

சோஷலிச சமூகத்திலும் வர்க்கங்கள் இருக்கும்.
எனவே அரசு எந்திரமும் சோஷலிச சமூகத்தில்
இருந்தே தீரும். மானுடம் பக்குவம் அடைந்து
சோஷலிசக் கட்டத்தைக் கடந்து கம்யூனிச சமூக
அமைப்புக்குள் செல்லும்போது அங்கு வர்க்கங்கள்
இருக்காது. அரசும் இருக்காது. எனவே அங்கு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் இருக்காது.

கம்யூனிச சமூகத்தின் அறமே வேறு. அது மானுடத்தின்
உன்னதங்களை வசப்படுத்திக் கொண்டிருக்கும்.
கம்யூனிச சமூகத்தில் இனிய வாழ்க்கையானது
சமூகத்தின் சகல பகுதி மக்களுக்கும் உறுதி
செய்யப்பட்டு இருக்கும். கம்யூனிஸ்ட் அறிக்கையில்
மார்க்சும் எங்கல்சும் கூறிய பொன்னுலகம் அது.
அதற்கான அறத்தை அச்சமூகமே உருவாக்கும்.
****************************************************************
முற்றும்
------------------------------------------------------------------------- 
       
.
     நூலாசிரியர் முன்னுரை
-------------------------------------------
கணந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் உலகில்,
காலத்தின் ஊடே இடையறாது தன்னைப் புதுப்பித்துக்
கொண்டே இருக்கும் தத்துவம் மட்டுமே நிலைக்கும்.
பின்பற்றுவோர் இல்லாமல்  ஒரு புள்ளியாகச்
சுருங்கிவிட்ட ஆதரவுப் பிரதேசத்தை உடைய
தத்துவமோ வரலாற்றில் மட்டுமே வாழும்.
அவ்வாறு வரலாற்றில் வாழ்கிற தத்துவமே
ஆதிசங்கரரின் அத்வைதம்.

சிந்தனையின் மாட்சியைச் சிறப்பிக்கிற அத்வைதம்
கருத்துமுதல்வாதத்தின் உச்சமாகும். என்றாலும்
இன்று நமக்குக் காணக் கிடைக்கிற அத்வைதம்
ஆதிசங்கரரின் மூல அத்வைதம் அல்ல. பேணுவார் இன்றி
கால ஓட்டத்தில் சிதைந்தும் சிதிலம் அடைந்தும்
புதர் மண்டிக் கிடக்கும் ஒரு புராதன ஆலயம் போன்றதே
இன்றைய அத்வைதம்.

அத்வைதம் பிறந்த எட்டாம் நூற்றாண்டில் மட்டுமே
அதன் பிரகாரத்தில் ஜனத்திரள் நிறைந்து இருந்தது.
அதன் பிறகு வந்த காலமெல்லாம் அதற்குத்
தேய்பிறையே. பரந்துபட்ட மக்களால் அத்வைதம் போற்றப்படவில்லை என்பதையே  அதன் வரலாறு
காட்டுகிறது.

அத்வைதம் போதித்த அதன் ஞான மார்க்கமும்
புறவுலகை மறுக்கும் அதன் அப்பாலைத் தன்மையும்
(metaphysical nature) எளிய மக்கள் அதை நெருங்க
முடியாமல் வேலியிட்டன. எனவே தலையில்
ஒளிவட்டம் சுமந்த மேன்மக்களுக்கு மட்டுமேயான
தத்துவமாக அத்வைதம் மிளிர்ந்தது.

இன்று நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், பல்கலைக்
கழகங்களின் ஆய்வரங்கப் பாடுபொருளாக மட்டும்
அத்வைதம் திகழ்கிறதே அன்றி, தத்துவ அரங்கில்
மக்களின் நாயகனாக அத்வைதம் வலம் வரவில்லை.

மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் நெஞ்சம் கவர்ந்த
அத்வைதம் பாமர மக்களுக்கு இன்றும் நெருஞ்சியே.
அத்வைதம் பற்றி அறிந்தோர் சிலரே எனும்போது
அத்வைதம் குறித்த விமர்சனப் பார்வைக்கு
ஏது இடம்?

இந்தச் சூழலில் அத்வைதம் குறித்த அறிமுகத்தையும்
அது குறித்த மார்க்சியப் பார்வையையும் இச்சிறு
நூல் ஒருங்கிணைத்து வழங்குகிறது. கருத்தியல்
தளத்தில், அருவமான அத்வைதம் உழைக்கும்
வர்க்கத்துடன் எப்போதும் சமருக்கு வரும். எனவே
அத்வைதத்தைக் களத்தில் சந்திக்கும் தேவையைக்
கொண்ட இடதுசாரிகளுக்கு அவர்களின் கரங்களில்
இந்நூல் வாளாகச் சுழலும்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவனின்
உடலுறுப்பு வேறு ஒருவனுக்குத் தானமாக
வழங்கப் படுவது போல, அத்வைதத்தின்
கருத்துமுதல்வாதத்தை தானமாகப் பெற்ற
பிற தத்துவங்கள் பொருள்முதல்வாதத்தைப்
போருக்கு அழைக்கும். அப்போது ஒரு
கருத்தாயுதமாக இந்நூலின் தேவை விளங்கும்.

அந்த நோக்கில் 50 பக்க அளவிலான இச்சிறு நூல்
ஆக்கப் பட்டுள்ளது. அறிவுஜீவிகளிடம் செல்வாக்குப்
பெற்றுள்ள தத்துவம் அத்வைதம். எனவே அவர்களின்
அத்வைத ஆதரவு வாதங்களை இந்நூல் அறிவியலைக்
கொண்டு எதிர்கொள்கிறது.

அதே நேரத்தில் அத்வைதம் பற்றி அறிந்திராத
பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் அத்வைதத்தின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை எடுத்துக் காட்டி
எச்சரிக்கை செய்கிறது.

ஆட்டோ ஓட்டுனர் முதல் ஐஐடி மாணவர் வரை
எதிரெதிர் துருவங்களில் நிற்கும் இரு சாராரின்
எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு ஒரு நெடிய
வீச்சு (long range) கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.
எனினும் அத்வைதம் குறித்த ஓர் எளிய அறிமுகத்தைத் 
தருவது என்பதுதான் இந்நூலின் வரம்பு என்பதையும்
வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
அத்வைதம் குறித்த பழமைவாதப் பார்வையை
மறுத்து, சமகாலத்தின் நவீனப் பார்வையை
இந்நூல் முன்வைக்கிறது. வழுக்கு மரத்தில்
ஏறுகையில் தொடர்ந்து ஏற முடியாமல் சறுக்கிக்
கொண்டே கீழிறங்கிய அத்வைதத்தின் வரலாற்றை
இந்நூலில் சரியாகவே சுட்டுகிறது. உலகின்
பிற தத்துவங்களுடன் அத்வைதம் ஒப்பிடப்பட்டு
அதன் ஒப்பீட்டு மதிப்பு வெளிப்படுத்தப் படுகிறது.

சுருங்கக்கூறின் பாட்டாளிக்கும் படிப்பாளிக்கும்
ஒருங்கே பயன் தருமானால் இச்சிறுநூல் தன்
பிறவிப் பயனை எய்தும்.

பி இளங்கோ சுப்பிரமணியன்
நூலாசிரியர்.
சென்னை, நாள்: 28.01.2018
தொடர்புக்கு: ilangophysics@gmail.com
----------------------------------------------------------------------------------  ..        
 
   
தோழர் பிரதீப்,
அத்வைதம் நூலுக்கு புதிதாக ஒரு அத்தியாயம்
எழுதியுள்ளேன்.
இத்துடன் உள்ள அத்தியாயத்தை
( அற்பாயுசில் முடிந்துபோன அத்வைதம்)
பகுதி IVல், பக்கம் 44 முடிந்த பிறகு சேர்க்கவும்.
ஆக, பகுதி-IVல் இது முதலில் வரும்.
அன்புடன்,
இளங்கோ .

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

அத்வைதப் பாலைவனம்
----------------------------------------------
உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் அறம்
பற்றிக் கூறுகின்றன; அறத்தை வலியுறுத்துகின்றன.
மதங்கள் மட்டுமன்றி உலகில் தோன்றிய பல்வேறு
தத்துவங்களும் தம்முள் அறத்தைக் கொண்டுள்ளன.
திருக்குறளின் முப்பால்களில் அறத்துப் பாலும்
அதில் அறன் வலியுறுத்தல் என்று ஒரு அதிகாரமும்
உள்ளது.

ஆனால் ஆதி சங்கரர் தம் அத்வைதத்தில் அறம்
பற்றி எதுவுமே கூறவில்லை. அறம் எதுவுமற்ற
தத்துவமாகவே  அத்வைதத்தை உருவாக்கியுள்ளார்
ஆதிசங்கரர். அறம் எதுவும் இல்லாத பாலைவனமே 
அத்வைதம்.

ஆதிசங்கரரின் காலத்தில்  செல்வாக்குப் பெற்றிருந்த
சமண பௌத்த மதங்களும் சரி, சங்கரருக்குப்
பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்ற
மதங்களும் சரி தமது நோக்குநிலையில் இருந்து
அறத்தை, தனிமனித ஒழுகலாறுகளை வலியுறுத்தின.
புத்தரின் பஞ்சசீலம் ( ஐந்து ஒழுக்கம் ) மற்றும்
அஷ்டாங்க மார்க்கம் (எட்டு வகைப்பாதை)
ஆகியவை பௌத்தம் வலியுறுத்தும் அறமாகும்.

1) கொல்லாமை 2) பொய்யாமை  3)களவு செய்யாமை
4) பிழையுறு காமம் தவிர்த்தல் 5) கள்ளுண்ணாமை
ஆகியவற்றை பஞ்சசீலமாக புத்தர் அறிவித்தார்.
நல்ல நோக்கம், நல்ல தீர்மானம்,  நல்ல பேச்சு,
நன்னடத்தை, நல்வாழ்க்கை, நன்முயற்சி,
நல்லுளப்பாங்கு, நற்கவனம் ஆகிய எட்டு
நன்னெறிகளே புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் ஆகும்.

சமணம் கூறிய அறம் இதனினும் கூடுதலான
கடுங்கோட்பாட்டுத் தன்மை உடையது.
புழு பூச்சிகளுக்குக்கூட ஆன்மா உண்டு என்று கருதியது
சமணம். எனவே ஒரு மூட்டைப்பூச்சியை
நசுக்குவதைக்கூட சமண அறம் அனுமதிப்பதில்லை.

சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வாழ்வதே
சைவர்களுக்கு விதிக்கப்பட்ட அறம். சைவர்கள்
சிவனடியார்க்குத் தொண்டு செய்த வரலாற்றை
விவரிப்பதே சேக்கிழாரின் பெரிய புராணம்.

இத்தகைய அறத்தையோ அல்லது இவற்றில்
இருந்து வேறுபட்ட அறத்தையோ சங்கரர்
போதிக்கவில்லை. ஒவ்வொரு ஜீவாத்மாவும்
பிரம்மத்தை உணர்ந்து, தானே பிரம்மம்
ஆகி விடுவதுதான் அத்வைதத்தின் நோக்கம்.
என்றாலும், அந்த உயர்ந்த நோக்கத்தை
அடையவல்ல வழிமுறையையோ அல்லது அந்த
நோக்கத்தை நிறைவேற்ற உதவும் அறம்
பற்றியோ சங்கரர் உபதேசிக்கவில்லை.

அதை அவரவரின் சிந்தனைக்கே விட்டு விட்டார்
சங்கரர். இதன் மூலம்  சிந்தனையின் உச்சபட்ச
அந்தஸ்தை உறுதி செய்கிறார் சங்கரர்.
எந்த சட்ட திட்டத்திற்கோ விதிமுறைகளுக்கோ
அல்லது கட்டுப்பாட்டுக்கோ அத்வைதிகளை
சங்கரர் உட்படுத்தவில்லை. சாராம்சத்தில்
இதில் ஒருவகையான அராஜகவாதம் (anarchism)
இருப்பதை நாம் காண வேண்டும்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று
சர்வ சுதந்திரமாகத் திரியும் போக்கை
குட்டி முதலாளித்துவமும்,  தாராளவாத
முதலாளித்துவமும் விரும்பும். அறம் எதுவுமற்ற
அராஜகத்திற்கு இடமளிக்கும் அத்வைதம் இந்த
வர்க்கங்களை ஈர்ப்பதில் வியப்பில்லை.

தாம் வாழ்ந்த காலத்தில் ஆதிசங்கரர் பிற தத்துவப்
பிரிவினருடன் வாதத்தில் ஈடுபட்டார். பக்தி
மார்க்கத்தைச் சேர்ந்த பூர்வ மீமாம்சகரான
மண்டன மிஸ்ரர் என்பவருடன் நடைபெற்ற
விவாதத்தில் ஆதிசங்கரர் வென்றார்.

அத்வைதத்தைப் பரப்ப நாடெங்கும் நான்கு
இடங்களில் மடங்களை அமைத்தார். வடக்கே
பத்ரிநாத் (உத்தரகாண்ட்), தெற்கே சிருங்கேரி (கர்நாடகம்),
கிழக்கே பூரி (ஒடிஷா), மேற்கே துவாரகை (குஜராத்).
அம்மடங்களுக்கு பீடாதிபதிகளையும் நியமித்தார்.
தாம் வாதில் வென்ற மண்டன மிஸ்ரரையே
துவாரகை மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார்.

மிக்க இளம் வயதிலேயே, தமது 32ஆம் வயதில்,
பொது சகாப்தம் 820இல் ஆதிசங்கரர் மறைந்ததாகச்
செய்திகள் கூறுகின்றன. இவரின் பிறப்பு
பொது சகாப்தம் 788 ஆகும். என்றாலும் இவை
உறுதி செய்யப்பட்ட தகவல்களாக இல்லை.

சங்கரரின் காலத்தில் இந்து மதம் ஆறு பிரிவுகளாக
இருந்தது என்றும் இந்த ஆறு பிரிவுகளையும்
சங்கரர் ஒன்றிணைத்தார் என்றும் ஒரு வரலாற்றுச்
செய்தி உள்ளது. இதனாலேயே அவர் "ஷண்மத
ஸ்தாபகர்" என்று அழைக்கப் பட்டார் என்றும்
அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. (ஷண்= ஆறு) 

சைவம் (சிவன் கடவுள்),
வைணவம் ( திருமால்  கடவுள்) ,
காணபத்தியம் (விநாயகர் கடவுள்),
கெளமாரம் (குமரன் அதாவது முருகன் கடவுள்),
சாக்தம் ( சக்தி அதாவது அம்மன் கடவுள்),
செளரம் (சூரியன் கடவுள்)
ஆகிய ஆறு பிரிவுகளையே சங்கரர் ஒன்றிணைத்தார்
என்பது செய்தி.

என்றாலும் இந்த ஒன்றிணைப்பு வலுவானதாக இல்லை.
சங்கரருக்குப் பின்வந்த ராமானுஜர் வைணவத்தை
அத்வைதத்தின் பிடியில் இருந்து விடுவித்துக்
கொண்டு சென்று விட்டார். ராமானுஜர் பிரித்துக்
கொண்டு சென்ற இந்தப் பிரிவு இன்றும் தென்கலை
வைணவமாக நீடிக்கிறது.

இந்தியாவில் தோன்றிய பெளத்தம் ஆசியா முழுவதும்
பரவியது. ஆனால் பௌத்தம் போன்று அத்வைதம்
வெளிநாடுகளில் பரவவில்லை. அது இந்திய
எல்லைக்குள்ளேயே  சிறைப்பட்டுக் கிடந்தது.
ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப்
பின்னரான ஓரிரு நூற்றாண்டுகளிலும் மட்டுமே
அத்வைதம் களத்தில் இருந்தது. ராமானுஜரும்
மத்வரும் தோன்றி தங்களின் மதங்களை நிறுவிய
பின்னர், அவர்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல்
அத்வைதம் வீழ்ந்தது.

அத்வைதம் அறம் எதையும் போதிக்காமல்
இருந்ததும், வெகுமக்களால் எளிதில் புரிந்து
கொள்ளவோ பின்பற்றவோ இயலாத ஞான
மார்க்கத்தைக் கொண்டிருந்ததும் அதன்
அப்பாலைத் தன்மையும் அத்வைதத்தின்
வீழ்ச்சிக்குக் காரணங்கள் ஆகும்.

காலப்போக்கில் மக்களின் ஆதரவு குறைந்து
கொண்டே வருவதை  ஆதிசங்கரர் நிறுவிய
நான்கு மடங்களின் பிற்காலப் பீடாதிபதிகள்
உணர்ந்தனர். எனவே அத்வைதத்தைத் தக்க
வைக்கும் பொருட்டு, அதில் இல்லாமல் இருந்த
பக்தி, சடங்குகள், வழிபாட்டு முறைகள்
ஆகியவற்றைப் புகுத்தினர். இந்தப்போக்கு
பல நூற்றாண்டுகளாக நீடித்தது.

இதன் விளைவாக இன்று நாம் காணும் அத்வைதம்
பெரிதும் உருமாறி சைவத்தின் ஒரு பிரிவாக உள்ளது.
ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களும் இன்றும்
உள்ளன; செயல்படுகின்றன.

ஆனால் அதன் பீடாதிபதிகள் அத்வைதத்தை அல்ல
சைவத்தையே உபதேசிக்கின்றனர். ஆதிசங்கரரால்
நிறுவப்படாத மடமான ஜெயேந்திரர் தலைமையிலான
காஞ்சி மடம் பற்றி தமிழர்கள் நன்கறிவார்கள். இது
வைணவத்துக்கு மாற்றான சைவ மடங்களில்
ஒன்றாக, அதுவும் பார்ப்பன சைவப் பிரிவாக
உள்ளதேயன்றி அத்வைத மடமாக இல்லை என்பது
அனைவரும் அறிந்ததே. இவ்வாறு சங்கரரின்
அத்வைதம் பல்வேறு காலக்கட்டங்களில்
வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி இன்று
சைவமாக அறியப் படுகிறது.

ஆதிசங்கரரைப் பின்பற்றும் அத்வைதிகள்
ஸ்மார்த்தர்கள் எனப்பட்டனர். ஸ்ருதி, ஸ்மிருதி
என்னும் இரண்டும் இந்து மதத்தின் மூல ஆதாரங்கள்.
நான்கு வேதங்களே ஸ்ருதி. வேத விளக்கங்களே ஸ்மிருதி.
ஸ்மிருதி என்னும் சொல்லில் இருந்தே ஸ்மார்த்தம்
பிறந்தது. எனினும் ஸ்மார்த்தர்கள் என்ற அடையாளம்
மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை. பார்ப்பன
சைவப் பிரிவினராகவே அத்வைதிகள் மக்களால்
அறியப் படுகின்றனர்.இதுவே அத்வைதம் சிறுத்துச்
சுருங்கிய வரலாறு.
------------------------------------------------------------------------------------     
       
வேட்டுவச் சமூகத்தின் அறமும்
வேளாண்மைச் சமூகத்தின் அறமும்!
----------------------------------------------------------------------------
அறம் என்பது அந்தரத்தில் இருந்து வருவது அல்ல.
ஆயின் அறத்தின் தோற்றுவாய் எது? அறத்தின்
தோற்றுவாய் உற்பத்தி முறையே. ஒரு குறிப்பிட்ட
காலத்தில் ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையைப்
பொறுத்தே அச்சமூகத்திற்கான அறம் தோன்றுகிறது.

தமிழ்ச் சமூகம் தொடக்கத்தில் வேட்டுவச் சமூகமாகவே
இருந்தது. வேட்டையாடி விலங்குகளைக் கொன்று
தின்று உயிர் வாழ்வதே அச்சமூக வாழ்வியல்.
வேட்டையே அச்சமூகத்தின் உற்பத்தி முறை.
விலங்குகளின் இறைச்சி உணவாகவும், விலங்குகளின்
தோல் ஆடையாகவும், விலங்குகளின் கொம்பு, பற்கள்
ஆகியவை கருவிகளாகவும் பயன்பட்டன.

"பொன்னார் மேனியனே புலித்தோலை
அரைக்கசைத்து" என்ற தேவாரப் பாடல்
இதை உணர்த்தும்.

காலம் மாறியது. குறிஞ்சி நிலத்தில் வளம்
குன்றியவுடன் மக்களில் சிலர் முல்லை நிலம்
நோக்கிப் பெயர்ந்தனர். காடு திருத்திக் கழனி
ஆக்கினர். விலங்குகளைக் கொன்று தின்பதற்குப்
பதில், அவற்றை மனித உழைப்புக்குத் துணையாகப்
பயன்படுத்தலாம் என்று அச்சமூகம் அறிந்து
கொண்டது. வேட்டுவச் சமூக வாழ்க்கை மாறி
கால்நடைச் சமூக வாழ்க்கை தோன்றியது.
வரலாற்றின் இக்காலக் கட்டத்துச் சமூகம்
மேய்ச்சல் சமூகம் (pastoral society) எனப்பட்டது. 

வேட்டுவச் சமூக அறம் என்பது
கொலை புரிதல் ஆகும். கால்நடைச் சமூக
அறம் என்பது கொல்லாமை ஆகும். சமூகம்
மாறியபின் அறமும் தலைகீழாய் மாறி விட்டது.

ஒரு பசுவைக் கொன்று தின்றால் அக்குடும்பத்திற்கு
அது ஒரு நாள்உணவு மட்டுமே. ஆனால் அப்பசுவைக்
கொல்லாமல் வளர்த்தால், ஓராண்டுக்கான
உணவாக பசுவின் பால் அக்குடும்பத்திற்குப்
பயன்படுகிறது.

"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.
"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் மேலும். இங்கு "வள்ளல்
பெரும் பசுக்கள்" என்ற சொல்லாட்சியைக்
கவனிக்கவும்.

திருப்பாவை முழுவதும் மேய்ச்சல் சமூக
வாழ்வியலை தத்ரூபமாகப் படம் பிடித்துக்
காட்டும் இலக்கியமாகும். ஒரு வரலாற்றியல்
பொருள்முதல்வாதிக்கு திருப்பாவை ஒரு
மாபெரும் தரவுச் சுரங்கம் ஆகும்.

(மானுட சமூக வரலாற்றில் நாகரிகம் அடைந்த
முதல் சமூகம் மேய்ச்சல் சமூகமே. தமிழகம்
மட்டுமல்ல இந்தியாவிலும் மொத்த உலகத்திலும்
இதுவே உண்மை. "மாயோன் மேய காடுறை
உலகமும்" என்னும் தொல்காப்பிய நூற்பா
முல்லை நிலக் கடவுளாக திருமாலைக்
கூறுகிறது. இந்தியாவில், ஆட்டிடையன் என்று
கூறப்படும் கண்ணனே ( கிருஷ்ணன்) மேய்ச்சல்
சமூக மக்களின் கடவுளாக இருந்தான்.

யூதர்கள் தங்களின் கடவுளாக ஒரு மேய்ப்பனையே
வரித்துக் கொண்டனர்.
"கர்த்தர் என் மேய்ப்பனாக இருக்கிறார். அவர்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து அமர்ந்த
தண்ணீரண்டை இளைப்பாறச் செய்கிறார்"
என்கிறது விவிலியம்

புராதன பொதுவுடைமைச் சமூகம் வேட்டுவச்
சமூகமே. அங்கு சமத்துவம் நிலவியது என்ற
போதிலும், அச்சமூகம் காட்டு மிராண்டி
வாழ்க்கை முறையைத்தான் கொண்டிருந்தது;
நாகரிகம் எய்தவில்லை).

ஆக சமூகத்தின் உற்பத்தி முறையைப் பொறுத்தே
அச்சமூகத்திற்கான அறமும் அச்சமூகத்தின்
தனிமனித அறமும் அமையும் என்ற பேருண்மை
இங்கு நிறுவப்பட்டுள்ளது.

அதே நேரத்தில்.அறம் என்பது இயற்பியல்
விதிகள் போன்று துல்லியம் உடையது அல்ல.
அறம் என்பது எழுதப்படாத சட்டம் என்று புரிந்து
கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தில் அறம் இல்லை என்று கூறுவோர்
அறம் பற்றிய மார்க்சியப் புரிதலை அறியாதோரே.
எல்லாக் காலத்துக்கும் பொருந்துகின்ற, எல்லாருக்கும்
பொருந்துகின்ற அறம் என்று ஒன்று இல்லவே இல்லை.

எனவேதான் மார்க்சியம் இருவேறு சமூக
அமைப்பிற்கான இருவேறு அறம் பற்றிக் கூறுகிறது.
முதலாளிய சமூகத்திற்கான அறமும்
கம்யூனிச சமூகத்திற்கான அறமும் வேறு வேறானவை
என்று மார்க்சியம் கூறுகிறது.
---------------------------------------------------------------------------------------------
        
         
வள்ளுவரும் இயேசுவும் கூறும் அறமும்
மார்க்சியம் கூறும் அறமும்!
----------------------------------------------------------------
தமிழ்நாடு அறம் வளர்த்த பூமி. கற்கத் தொடங்கும்
ஒரு தமிழ்க் குழந்தை முதலில் அறத்தைத்தான்
கற்கிறது."அறம் செய விரும்பு" என்ற ஒளவையின்
ஆத்திசூடியுடன்தான் குழந்தையின் கல்வி
தொடங்குகிறது.

ஆத்திசூடி கொன்றைவேந்தன் மட்டுமல்ல திருக்குறள்
உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அனைத்துமே அறநூல்கள்தாம். உலகின் வேறெந்த
பகுதியையும் விட தமிழகமே அறநூல் செழுமையிலும்
அறத்தொடு நிற்றலிலும் முதலிடத்தில் உள்ளது. எனவே
தமிழ்மண்ணில் அறம் குறித்த ஓர்மை விஞ்சி நிற்பதில்
வியப்பில்லை.

மேற்கூறிய அறநூல்கள் கூறும் அறம் அனைத்தும்
தனிமனித ஒழுக்கத்தைக் கற்பிப்பவை. ஒவ்வொரு
சூழலிலும் ஒரு தனிமனிதன் எங்ஙனம் நடந்து
கொள்ள வேண்டும் என்று இந்நூல்கள் தனிமனித
நடத்தையை வரையறுக்கின்றன.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார் வள்ளுவர். இது தனிமனிதனுக்குக்
கற்பிக்கப்படும்  ஒழுக்க நெறி; தனிமனித அறம்.

வலது கன்னத்தில் அடித்தால் நீ உன் இடது
கன்னத்தையும் காட்டு என்கிறார் இயேசு.
உன்னைப் போலவே உன் அண்டை
வீட்டுக்காரனையும் நேசி என்கிறார் மேலும் இயேசு.
ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்ற வேண்டிய
அறக்கோட்பாடே இது.

இத்தகைய தனிமனித ஒழுகலாறுகள் மார்க்சியத்தில்
உள்ளனவா? தனிமனித நடத்தை குறித்த அறத்தை
மார்க்சியம் போதிக்கிறதா? மார்க்சியத்தைப்  பின்பற்றுவோருக்கான அறபோதனை என்ன?
பரிசீலிப்போம்.

கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப்
பட்டவர்கள் என்றார் ஸ்டாலின்.
(The communists are of a special mould). இதன் பொருள் என்ன?
எந்த நிலையிலும் கட்சி நலனுக்கு, புரட்சியின்
நலனுக்கு, மக்களின் நலனுக்கு தன் சொந்த நலனைக்
கீழ்ப்படுத்துபவனே கம்யூனிஸ்ட் என்று இதற்குப்
பொருள்.மக்களின் நலனுக்குக் கீழாகவே
தன் குடும்ப நலனை தன் சொந்த நலனை எப்போதும்
வைப்பது என்பதுதான் கம்யூனிஸ்டுகளுக்குப்
போதிக்கப்பட்ட தனிமனித அறம்; ஒழுகலாறு.

உலக வரலாற்றில் இதற்கு பல்லாயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்தியாவில்
நக்சல்பாரி வரலாற்றிலேயே இதற்கு ஆயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்திய
அரசு தூக்கிலிட்ட பூமையா, கிஷ்ணா கவுடா
ஆகிய தோழர்களை நினைத்துப் பாருங்கள்.
இவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக
முதன் முதலில் தூக்கிலிடப்பட்டவர்கள்
இவர்கள் இருவருமே. மார்க்சியத்தையும்
பாட்டாளி வர்க்க அறத்தையும் உயர்த்திப்
பிடித்தபடி, தூக்குமேடையில் தியாகிகளான
இவர்களின் அறம் மார்க்சியம் கற்பித்த அறம்
அல்லவா?

சிகாகோவின் மேதினத் தியாகிகள் நால்வரும்
இந்தியாவில் பகத்சிங்கும் பற்றி ஒழுகியது
மார்க்சிய அறம் அல்லவா? இவர்கள் அனைவரும்
தங்களின் சொந்த நலனை கீழேயும் மக்களின்
நலனை மேலேயும் வைத்தனரா இல்லையா?     

மார்க்சியத்தில் அறம் இல்லை. மார்க்சியர்களுக்கு
என்று தனிமனித ஒழுகலாறுகள் எதையும்
மார்க்சியம் கற்பிக்கவில்லை என்று
சொல்கிறார்களே மார்க்சிய எதிரிகள். அதில்
உண்மை துளியும் இல்லை என்பதையே மேற்கூறிய
உதாரணங்கள் நிரூபிக்கின்றன.

புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, எவ்வுயிர்க்கும்
தீங்கு எண்ணாமை என்பன போன்ற நடைமுறை
சாத்தியமற்ற செயற்கையான அறம் பற்றி
மார்க்சியம் பேசவில்லைதான். ஆனால் இத்தகைய
அறம் எதனினும் உயர்ந்த அறத்தை அல்லவா
மார்க்சியம் போதித்துள்ளது! சுயநலத்தைத் துற,
பொதுநலனைப் பேண் என்று கூறும் மார்க்சிய
அறத்தை விட உயர்ந்த அறம் வேறு எதுவும் உள்ளதா? 

மதங்களும் நீதிநூல்களும் கூறும் அறம் முழுவதும்
தனிமனித அறமே. சமூக அறம் பற்றி எந்த மதமோ
நீதிநூல்களோ கூறியதில்லை. சமூக அறம்
என்பது மொத்த சமூகத்துக்குமான அறமாகும்.
இது கூட்டுத்தன்மை (collective but not individualistic)
வாய்ந்த அறமேயன்றி தனிமனித நடத்தைக்கான
அறமல்ல.

ஆனால் உலகில் எந்த மதத்திலும் நீதிநூலிலும் சமூக
அறம் பற்றி எதுவுமே இல்லை. அஷ்டாங்க மார்க்கத்தை
(எட்டு ஒழுக்க நெறிகள்) கூறுகிற பெளத்தம்
சமூக அறம் பற்றி எதையும் கூறவில்லையே ஏன்?
ஆனால் மார்க்சியம் மட்டுமே சமூக அறம் பற்றிப்
பேசுகிறது. தனிமனிதனுக்கான அறத்தை மட்டுமின்றி
சமூகம் முழுமைக்குமான அறத்தைப் பற்றிப்
பேசும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே.

மனைவியை வைத்துச் சூதாடினான் தருமன்.
இது தனிமனித அறம் குன்றல் ஆகும்.
செய்யாத குற்றத்துக்காக அநீதியாக
கொலையுண்டான் கோவலன். செய்தியறிந்த
கண்ணகி "பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும்
உண்டுகொல்"  என்றும் "சான்றோரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்" என்று அழுது
புலம்புகிறாள். மதுரையைத் தீவைத்து எரிக்கிறாள்.

மதுரை மாநகரில்  சமூக அறம் குன்றியிருக்கிறது
என்று கருதினாள் கண்ணகி. தவறு கண்ட இடத்து
அதைத் தட்டிக் கேட்பது சமூக அறம். அவ்வாறு
தட்டிக் கேட்பதன் மூலமே தவறு நிகழாமல்
தடுக்க முடியும். ஆனால் மதுரைச் சமூகத்திடம்
அந்த அறம் இல்லை. சமூக அறம் குன்றியதன்
விளைவே கோவலன் படுகொலை என்று கருதுகிறாள்
கண்ணகி. சமூக அறம் குன்றிய மதுரையை
கண்ணகி தண்டிக்கிறாள்.

ஆக தனிமனித அறமும் வேண்டும், சமூக அறமும்
வேண்டும் என்பதை மேற்கூறிய உதாரணம்
மூலம் நன்கறியலாம். மதங்கள் அல்ல, மார்க்சியம்
மட்டுமே தனிமனித அறம், சமூக அறம் ஆகிய
இருவித அறம் பற்றிப் பேசுகிறது. மார்க்சியம் கூறும்
சமூக அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.

உலகில் இதுவரை நிலவிய எந்தவொரு சமூக
அமைப்பையும் விட அறத்தில் சிறந்து விளங்கும்
சமூக அமைப்பு மார்க்ஸ் கனவு கண்ட கம்யூனிச
சமூக அமைப்பே.
---------------------------------------------------------------------------------------

.
        

சனி, 27 ஜனவரி, 2018

மக்களுக்கான அறிவியல் இயக்கம்!
----------------------------------------------------------------
இரண்டாவது கூட்டம்
---------------------------------------
இடம்: நேஷனல் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி,
வ உ சி தெரு, அரும்பாக்கம், சென்னை
(CMBT எதிரில்)
நாள்: 27 01 2018 சனி மாலை 5 மணி முதல்
தலைமை: முஹையதீன் பிச்சை, அவைத் தலைவர்
சிறப்புரை:
----------------------
ஜி பி சாரதி
சித்து முருகானந்தம்
நாத்திகன் கேசவன்

அனைவரும் வருக!
அன்புடன் அழைக்கும்,
பி இளங்கோ சுப்பிரமணியன்
பொதுச் செயலாளர்.
**************************************************************
    

வெள்ளி, 26 ஜனவரி, 2018

நாட்காட்டியின் கதை
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகம்
முழுவதற்கும் பொதுவான ஒரு காலப்பகுப்பு
(calendar) கிடையாது. உலகின் பல நாட்டு மக்களும்
தமக்கு இசைவான தாமறிந்த காலப்பகுப்பைப்
பின்பற்றி வந்தனர். இதன் விளைவாக நாடுகள்
தமக்கிடையே தொடர்பு கொள்ளும்போது பெரும்
இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. உலகம் முழுவதற்கும்
பொதுவானதும் அனைத்து நாட்டு மக்களும்
ஏற்கத் தக்கதுமான ஒரு காலப்பகுப்பின் தேவை
உணரப்பட்டது. இன்று அந்தத் தேவை நிறைவு
அடைந்துள்ளது.

காலண்டர் என்பது நாள், வாரம், மாதம், ஆண்டு,
நேரம் என அனைத்து விதமான காலப் பகுப்புகளையும்
கணித்துக் கூறும் அமைப்பாகும்.உலகில்
நூற்றுக்கணக்கான காலண்டர்கள்
இருந்தன; இன்றும் இருந்து வருகின்றன.
பல்வேறு தேசங்களைச் சார்ந்த மக்கள், தங்களின்
கலாச்சாரத்திற்கும் வானியல் அறிவுக்கும் ஏற்றவாறு
தங்களின் காலண்டர்களை உருவாக்கிக் கொண்டனர்.

இவற்றுள் சில சூரியச் சுழற்சியை  அடிப்படையாகக்
கொண்டவை. சில சந்திரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை.உதாரணமாக இஸ்லாமிய காலண்டர்கள்
சந்திரக் காலண்டர்கள் ஆகும். சூரியன் சந்திரன்
இரண்டின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்ட
காலண்டர்களும் (lunisolar) உண்டு.

மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலப்பகுப்பு
(calendar) தற்போது, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே முற்றிலுமாக அறிவியலின்
பிடிக்குள் வந்து விட்டது. இதன் மூலம் காலக் கணிப்பில்
நூறு சதம் துல்லியத்தை அடைய முடிந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டில்
ஒரு வினாடி கூடுதலாகச் சேர்க்கப் பட்டிருந்தது.
1972 முதல் இவ்வாறு சிற்சில ஆண்டுகளில் ஒரு வினாடி
கூடுதலாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. அடுத்து எப்போது
சேர்க்கப்படும் என்று  தெரியாது. ஏனெனில் அறிவியல்
அறிஞர்கள் அதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

பூமி சூரியனைச் சுற்றும்போது, சில சமயங்களில்
குறைவான வேகத்தில் சுற்றுகிறது. இதனால் சுற்றி
முடிக்க அதிக நேரம் (வினாடிகளில்) எடுத்துக்
கொள்கிறது. பூமி சுற்றுவதற்கு ஏற்ப நமது
கடிகாரத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
நமது கடிகாரத்திற்கு ஏற்றவாறு பூமி சுற்றாது.
இதனால்தான் லீப் வினாடிகளைச் சேர்க்க வேண்டிய
தேவை ஏற்படுகிறது. பூமி குறைவான வேகத்தில்
சுற்றுவது இயற்கையாகவும் நிகழும்; மனித
முயற்சியாலும் நிகழும்.

பூமி சுற்றும் வேகத்தைக் குறைத்த சீனா!
----------------------------------------------------------------------
சீனா ஒரு பிரம்மாண்டமான அணையைக் கட்டி
இருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய அணை.
முப்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்று
இதற்குப் பெயர். 2012ல் செயல்படத் தொடங்கிய
இந்த அணையைக்கட்டியதன் மூலம், பூமி
தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தைக்
குறைத்து விட்டது சீனா.

சீனாவின் முப்பள்ளத்தாக்கு அணையின்
பிரம்மாண்டங்களில் பின்வரும்
விஷயங்களில் இயற்பியல் அக்கறை கொள்கிறது.
அ) அணையின் ரிசர்வாயர் (reservoir) கடல் மட்டத்திற்கு மேல்
175 மீட்டர் (அதாவது 575 அடி) உயரம் உடையது.
ஆ) நீரின் கொள்ளளவு= 39.3 கன கிலோ மீட்டர்
இ) அணையில் உள்ள நீரின் நிறை (mass)=39 ட்ரில்லியன்
கிலோகிராம். 1 trillion = 10^12. அதாவது 1 டிரில்லியன் என்பது
1 லட்சம் கோடி ஆகும். எனவே நீரின் நிறை
39.3 லட்சம் கோடி கிலோகிராம் ஆகும்.

இந்த அணை சீனாவில் உள்ளது. அதாவது
பூமியில் உள்ளது. 575 அடி உயரத்தில் உள்ள
39 ட்ரில்லியன் கிலோகிராம் நிறையை ஓரிடத்தில்
குவித்து வைத்துக்கொண்டு பூமி தன்னைத்தானே
சுற்ற வேண்டும்.

பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் பூமத்திய
ரேகைப் பகுதியில் மணிக்கு 1670 கி,மீ  சீனாவின் இந்த
அணையையும் சுமந்து கொண்டு பூமி தன்னைத்
தானே சுற்றும்போது, குறிப்பிட்ட இடத்தில்,
சடத்துவ உந்தம் (moment of inertia)
அதிகமாகி விடுகிறது. இதனால் சுற்றுவதன் வேகம் சிறிது
குறைகிறது. வேகம் குறைவதால், நேரம் அதிகமாகிறது..
இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தையும்
விட அதிகமாகிறது. எவ்வளவு அதிகமாகி உள்ளது
என்று நாசா கணக்கிட்டுள்ளது. அதன்படி 0.06 மைக்ரோ
செகண்ட் நேரம் அதிகமாகி உள்ளது.

காலப்பகுப்பில் இந்த அளவு துல்லியத்தை மட்டுமின்றி
இதற்கு மேலும் துல்லியத்தையும் அறிவியல்
உறுதி செய்கிறது. தொடர்ந்து காலண்டரானது
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது (constantly updated).
இதன் மூலம் புவிச்சுழற்சியின் மெய்யான
பிரதிபலிப்பாக நவீன காலண்டர் அமைந்துள்ளது.

ஜூலியஸ் சீசரின் காலண்டர்!
-------------------------------------------------------
உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர்
பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு
மாற்றங்களை உள்ளடக்கியது. இதற்கு
அடிப்படையாக ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த
காலண்டரைக் கூறலாம். ஜூலியஸ் சீசரின் காலண்டர்
(Julian calendar) கிமு 46ல் சீசரால் அறிமுகம்
செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது,
கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

அ) ஓராண்டுக்கு 365.25 நாட்கள் ஆ)12 மாதங்கள்
ஜனவரி முதல் டிசம்பர் வரை; மாதங்களின் அளவு
31,28,31,30,31,30,31,31,30,31,30,31 நாட்கள்
இ) ஆண்டின் முதல் தேதியாக ஜனவரி 1
ஈ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது
பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய தற்கால காலண்டரின்
அனைத்து அம்சங்களையுமே ஜூலியன் காலண்டர்
கொண்டிருந்தது..ஜூலியன் காலண்டருக்கு முந்திய
ரோமானிய காலண்டரிலும் ஜனவரி முதல் நாளே
ஆண்டின் தொடக்கமாக இருந்தது. அதற்கு முந்திய
புராதன ரோமானிய காலண்டரில்தான் மார்ச் மாதம்
ஆண்டின் தொடக்கமாக இருந்தது.

ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்த
கிமு 45ல் இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை.
எனவே கிமு கிபி என்னும் குறிப்பு அப்போது இல்லை.
அப்படியானால், ஜூலியன் காலண்டரில்
ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்
பயன்படுத்தினர்? (what was the REFERENCE point then?)

அப்போது பயன்படுத்திய குறிப்பு (reference point)
ரோம் நகரம்  உருவான தேதி ஆகும். அதாவது
ரோ.மு, ரோ.பி என்ற கணக்கிடும் முறை இருந்தது.
ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால்,
ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்
எனினும் இம்முறை பரவலாக மக்களால்
பின்பற்றப் படவில்லை. ரோமானிய வரலாற்று
ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பின்பற்றினர்.

முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்
கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த
ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில்,
கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத்
தொடங்கியது. இதன் விளைவாக ரோமு ரோபி என்பன
கிமு கிபி என்று பின்னாளில் மாறுவதற்கு உகந்த
சூழநிலை உருவானது..

கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus)
என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித
நிபுணரும்கூட) முதன் முதலில் கிறிஸ்து பிறப்பை
அடிப்படையாகக் கொண்டு கிமு, கிபி என்ற
ஆண்டுகளைக் குறிப்பிடும் முறையை அறிமுகம் செய்தார்.
என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.
ஆக, கிமு 45ல் செயல்பாட்டுக்கு வந்த ஜூலியன்
காலண்டரில், கிமு கிபி என்னும் குறிப்புகள்
850 ஆண்டுகள் கழிந்த பின்னரே பரவலான
நடைமுறைக்கு வந்தன..

கிரெகோரி செய்த திருத்தம்!
----------------------------------------------------
கிபி 1582 அக்டோபரில் போப்பாண்டவர் பதின்மூன்றாம்
கிரெகோரி என்பவர் ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு
குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். 4ஆல் வகுபடும்
நூற்றாண்டு மட்டுமே லீப் ஆண்டு ஆகும் என்பது
அவரின் திருத்தம்.(Centuries are not leap years unless divisible by 4 )

இதன்படி, 16ஆம் நூற்றாண்டில் உள்ள 16 நான்கால்
மீதியின்றி வகுபடுவதால், 1600 என்பது லீப் ஆண்டாகும்.
ஆனால் 1700 என்பதில் உள்ள 17 நான்கால்
வகுபடாது என்பதால் 1700 என்பது லீப் ஆண்டு ஆகாது.

அதாவது நூற்றாண்டுகள் (2000,2100,2200......)
லீப் ஆண்டாக  இருக்க வேண்டுமெனில்
4ஆல்  வகுபட்டால் மட்டும் போதாது; 400ஆலும்
வகுபட வேண்டும்

இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர்
செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால்
பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய
காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப்
பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம்
செய்தவர் என்ற  அடிப்படையில் இக்காலண்டர்
கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.

கிரெகோரி காலண்டரின் ஆண்டு கணக்கிடும் முறை  கத்தோலிக்கச் சார்புடையது என்று கூறி பிற மதத்தவர்
அதை ஏற்க மறுத்தனர். குறிப்பாக, பிராட்டஸ்டண்டுகள்,
யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோர் கிறிஸ்து சகாப்தம்
என்ற பெயரை ஏற்கவில்லை. எனவே மதச்சார்பற்ற
ஒரு பெயரை உருவாக்க வேண்டிய தேவை
ஏற்பட்டது.

பொது சகாப்தம் தோன்றியது!
------------------------------------------------------
எனவே கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர்
கைவிடப் பட்டது. அதற்குப் பதிலாக, பொது சகாப்தம்
(Common Era) என்ற  புதிய பெயர் சூட்டப்பட்டது.
வானியல் அறிஞர் ஜோஹன்னஸ் கெப்ளர் 1615இல்
எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து பொது சகாப்தம்
(common era) என்ற சொல் எடுக்கப் பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து
பொது சகாப்தம் நடைமுறைக்கு வந்து விட்டது.
இதன்படி, கிமு, கிபி (BC,AD) ஆகியவை கைவிடப் பட்டு,
அவற்றுக்குப் பதிலாக முறையே BCE, CE என்னும்
பெயர்கள் சூட்டப் பட்டன.
CE = Common Era பொது சகாப்தம்.
BCE = Before Common Era பொது சகாப்தத்திற்கு முன்.

இவ்வாறு கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ்
(Dionysius Exiguus) என்னும் ரோமானியத் துறவி முன்மொழிந்த
கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர் 1980களில் முடிவுக்கு வந்து
பொது சகாப்தம்  (Common Era) என்ற பெயர்
நடைமுறைக்கு வந்துள்ளது. ஆண்டைக் கணக்கிடும்
முறை இரண்டிலும்  ஒன்றுதான். மீதி அனைத்தும்
கிரெகோரி காலண்டரேதான்.
நடப்பாண்டான 2018ஐ பொது சகாப்தத்தில்
எப்படிக் குறிப்பிடுவது? CE 2018. தமிழில் பொ.ச 2018.

தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும்
அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே
உள்ளது.அறிவியலின் அதிகாரத்தின்கீழ் காலண்டர்
வந்ததும் காலண்டரின்  துல்லியம் உறுதி செய்யப்பட்டது. அறிவியலுக்கு மதமில்லை. எனவே மதச்சார்பற்ற
காலண்டராக, உலகின் அனைத்துப் பகுதி மக்களும்
விரும்பி ஏற்கும் காலண்டராக நவீன உலகின்
பொது சகாப்த காலண்டர் உள்ளது. இது உலகப்
பொதுமையை உறுதி செய்கிறது.

உலகம் முழுவதும் கிமு கிபி என்னும் பதங்கள்
தவிர்க்கப்பட்டு, பொமு, பொயு (பொது  யுகத்திற்கு முன்,
பொதுயுகம்) ஆகிய பதங்களே பயன்பாட்டில் உள்ளன.
கிரெகோரி காலண்டர் என்ற பெயர் கைவிடப்பட்டு
அறிவியல் காலண்டர் என்ற பெயர் ஏற்கப்பட்டுள்ளது.

உலகப் பொது நேரம்!
---------------------------------------
நேரம் என்பதைப் பொறுத்தமட்டில், உலகம் முழுதும்
ஏற்கப்பட்ட நேரமாக UTC நேரம் உள்ளது
(UTC= Universal Coordinated Time). இதுவே அறிவியல் உலகம்
வரையறுத்துள்ள தரப்படுத்தப்பட்ட நேரம் ஆகும்.
இது உலகப் பொது நேரம் ஆகும்.
1967 முதல் உலகளாவிய பயன்பாட்டுக்கு வந்துள்ள
இந்நேரத்தில், குறித்த இடைவெளிகளில் லீப் வினாடிகள்
சேர்க்கப் பட்டு வருகின்றன.வானிலை ஆய்வு
மையங்கள் வெளியிடும் புயல் எச்சரிக்கைகள்,
ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படும் நேரம்
போன்றவற்றில் எல்லா நாடுகளாலும் UTC நேரமே
கடைப்பிடிக்கப் படுகிறது. இந்தியத் திட்ட
நேரத்துக்கும் UTC நேரத்துக்குமான வேறுபாடு
ஐந்தரை மணி நேரம் அதிகம் (5.5 hours ahead) என்பதாகும்.
ஆம், இது GMT எனப்படும் கிரீன்விச் நேரமே ஆகும்.

சம இரவு நாட்களும்  கதிர்த் திருப்பமும்!
----------------------------------------------------------------------
ஒவ்வோராண்டும் வானியலில் நான்கு நாட்கள்
முக்கியமானவை. அவை சம இரவு நாள் (equinox)
இரண்டும் கதிர்த்திருப்ப நாள் (solstice) இரண்டுமே
அவை. உலகம் முழுவதும் சம இரவு நாட்களில்
இரவும் பகலும் சமமாக இருக்கும். மார்ச் 20,
செப்டம்பர் 23 ஆகிய நாட்களே சம இரவு
நாட்கள் ஆகும். எனினும் இந்தத் தேதிகள்
அவ்வப்போது சிறிது மாறுவதும் உண்டு.

சூரியன் வடதிசையின் ஓரத்திற்கோ
அல்லது தென்திசையின் ஓரத்திற்கோ சென்று
திரும்புவது போலத் தோன்றும் நிகழ்வே
கதிர்த்திருப்பம் ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 21
மற்றும் செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் இது நிகழும்.

சம இரவு நாட்கள் மற்றும் கதிர்த்திருப்ப
நாட்களை  ஒட்டியே  பருவ காலங்கள் தொடங்குகின்றன.
எனவே இந்த நான்கு நாட்களைத் துல்லியமாகக்
கணக்கிடுவதன் மூலமே பண்டைக்கால மனிதர்களால் வேளாண்மை வேலைகளைத் தொடங்க முடியும்.
மேலும் பண்டிகைகள் புத்தாண்டு ஆகியவை இந்த
நாட்களை அடிப்படையாகக் கொண்டே ஆதி
மனிதர்களால் உருவாக்கப் பட்டன. இன்றுள்ளது
போல் கடிகாரம், நாட்காட்டி ஆகிய எவையும் இல்லாத
பண்டைக் காலத்தில் காலத்தைக் கணிக்க
உறுதுணையாக இருந்தவை இந்த நான்கு நாட்களே.

அண்மைக்காலம் வரை, ஒரு காலண்டரின்
சரித்தன்மையை நிரூபிக்கும் அம்சமாக இருந்தது
இந்த நான்கு நாட்களைத் துல்லியமாகக் கணிக்கும்
திறனே ஆகும். இன்றைய நவீன அறிவியலில்
சீசியம்-133 என்னும் அணுவைக் கொண்டு அணுக்கடிகாரம்
அமைக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியில் தற்போது
பாதரச அயனிகளைக் கொண்டு இயங்கும்
அதிதுல்லிய (ultra precise)கடிகாரங்கள் ஆழ்வெளியில்
(deep space) வைக்கப்பட்டு நேரம் காட்டுகின்றன. இவ்வாறு
இந்த இரண்டாயிரம் ஆண்டு கால காலண்டரின்
வரலாறு மானுடம் அறிவியலில் அடைந்த முன்னேற்றத்தின்
வரலாறாகவே உள்ளது.
********************************************************************

.  
போக முடியாது. நாம் அனைவருமே பூமியின்
மேற்பரப்பில்தான் இருக்கிறோம். உலக
உருண்டையில் நமக்கு கீழ் உள்ள நாடு என்பதும்
பூமியின் மேற்பரப்பில்தான் உள்ளது. நீங்கள்
உங்கள் ஊரில் பூமியைத் தோண்டினால் பூமியின்
உள்ளகப் பகுதிக்குத்தான் (interior) போக முடியும்.
மேற்பரப்பில் உள்ள வேறு ஒரு நாட்டுக்குப் போக
முடியாது.தேங்காயின் மேற்பரப்பில் உள்ள ஒரு
எறும்பால் மேற்பரப்பிலேயே போய்த்தான்
வேறு ஒரு இடத்தை அடைய முடியும். அதற்கு
மாறாக, தேங்காயைத் துளைத்துக் கொண்டு
போனால் உள்ளே உள்ள இளநீரில் மூழ்கி
சாகத்தான் நேரிடும்.
**
பூமியின் மேல் துளையிட்டு எண்ணெய், எரிவாயு
இவற்றைத் தோண்டி எடுப்பவர்கள் ஒரு சில
கிலோமீட்டர் ஆழம்தான் தூண்டுவார்கள். அதற்கு
மேல் தோண்ட முடியாது. பூமியின் ஆரம் தோராயமாக
6300 கி.மீ/ இவ்வளவு ஆழத்திற்கு உலகில் யாருமே
தூண்டியது கிடையாது. பூமிக்கு கீழே ஆழம் செல்லச்
செல்ல வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.
எனவே பூமியைத் துளைத்துக் கொண்டு அடியாழம்
வரை சென்று மறுபக்கமாக வெளியே வருவது
என்பதெல்லாம் புராணக் கதையில்தான் சாத்தியம்.  

வியாழன், 25 ஜனவரி, 2018

தமிழ் மீதும், தமிழர் மீதும் வன்மத்தை விதைக்கும் பெரியாரின்  ‘தமிழும் தமிழரும்’.
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது  திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் ” உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?” (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார்.
தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் “தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?”.  பிறகு அந்த நூலின் தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப்பட்டது. 
தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில்  வெளி வந்துள்ளது. “தமிழ் நீசபாஷை” என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், “பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
அந்த நூலிலிருந்து சில பகுதிகள் பின் வருமாறு:
” தமிழ்மொழியை நான் காட்டுமிராண்டி மொழி என்று 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.
ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில்  இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும் எழுதியும் முயற்சித்தும் வந்து இருக்கிறேன். 
தமிழை தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று 1927வாக்கில் கருத்து கொடுத்தேன். வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்க வில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக்கொண்டார்கள். நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்க வில்லை. 
பிறகு தமிழ்மொழிக்கு கமால் பாட்சா செய்தது போல் ஆங்கில எழுத்துகளை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன்.
இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்?
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?
இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு, மூன்று தமிழ்ப்புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1)தொல்காப்பியன் (2)திருவள்ளுவர் (3)கம்பர் இம்மூவரில் 1. தொல்காப்பியன் ஆரியக் கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்து விட்ட மாபெரும் துரோகி.
 2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான். 3. கம்பன் தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப் பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்… உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.”
  
பெரியாரின் இந்த நூல் பார்ப்பன எதிர்ப்பு வேடங் கட்டி தமிழ் மொழி மீதும், தமிழ்ப்புலவர்கள் மீதும் தமிழுக்கு உழைத்த நம் முப்பாட்டன்களின் மீதும் கடும் நஞ்சைக் கக்குகிறது.
இந்தி எதிர்ப்புப்போரில் தமிழுக்கு சிறிது இடம் கொடுத்ததன் மூலம் தமிழ்ப்பற்றால் இந்தியை  எதிர்க்க வில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்.
தமிழ் எழுத்துகளை கைவிட்டு ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தச் சொல்வதன் மூலம் தமிழின் அடையாள வேர் அழியட்டும் என்னும் விருப்பத்தை மறைமுகமாகச் சொல்கிறார்.
ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவன் ஆரியக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவனாம். அதுவும் மத உணர்ச்சியோடு கூறியவனாம். 1948இல் திருவள்ளுவர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் “திருக்குறள் ஆரிய தர்மத்தை மனுதர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் ” என்று  பேசினார். 
1948 இல் பேசியது சரியா? 1968 இல் பேசியது சரியா? முரண்பாட்டின் தொகுப்பு மூட்டை பெரியார் என்பதற்கு திருக்குறள் ஒன்றே போதும்.
தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் இழித்துப் பேசும் பெரியார் 1924 இல் திருவண்ணாமலை காங்கிரசு மாநாட்டில் தமிழ் குறித்து பேசியுள்ளார். சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலில்  இது உள்ளது.  
“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாயப்பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்றிராதாரிடத்து தேசப்பற்றிராதென்பது நிச்சயம்.  வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு, ஆந்திரனுக்கு ஆந்திரமொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை இது பொய்யோ? தாய்மொழியில் பற்று செலுத்தாதிருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்.” 


1924 இல் தமிழர்களுக்கு மொழிப்பற்று வேண்டும் என்றார். 1968இல் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் முன்னேறுவதற்கு வழி இல்லை என்றும் மாற்றிப் பேசுகிறார். இது தான் பெரியாரின் முரண்பட்ட மொழிக் கொள்கை.
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? என்று கேட்கும் பெரியாருக்கு தமிழர்கள் திருப்பிக் கேட்போம்.
கர்நாடாகவிற்கு சென்று கன்னடத்தை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? என்று பேசிவிட்டு வீடு திரும்பியிருக்க முடியுமா? ஆந்திரத்திற்கு சென்று தெலுங்கிலிருக்கும் பெருமை என்ன? என்று கேட்டு விடும் துணிச்சல் இவருக்கு இருந்தது உண்டா?
 தமிழ்மொழியிலேயே பகுத்தறிவு பரப்புரை செய்து விட்டு பிறகு தமிழையே திட்டுவது என்பது பெரியார் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்திட்ட கொடிய செயலாகும். தமிழ் மீதும் தமிழர் மீதும் அவருக்கிருக்கும் வன்மத்தை இந்நூல் நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
வெவ்வேறு நபர்கள்! ஒரே விளக்கம்!
தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும்!
-------------------------------------------------------------------------
1)  ஒரு தனியார் நிகழ்ச்சியில் காஞ்சி மட
இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர், தமிழ்த்தாய்
வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல்
அவமரியாதை செய்தார். இது தமிழ்நாடு
முழுவதும்  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
2) இதேபோல ஒரு நிகழ்வு. அது அரசு நிகழ்ச்சி.
அது குடியரசு நாள் விழா(Republic Day, ஜனவரி 26).
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்ற நிகழ்வு.
அப்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக
இருந்த ஹமீது அன்சாரி. தேசியக் கொடி
ஏற்றும்போது, கொடிக்கு சல்யூட் அடிக்கவில்லை
என்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது.
3) தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, சங்கராச்சாரிகள்
எழுந்து நிற்பது மரபல்ல என்று சங்கர மடத்தின்
சார்பில் விளக்கம் கொடுக்கப் படுகிறது.
4) இதே போன்ற ஒரு விளக்கம், அதாவது துணை
ஜனாதிபதி சல்யூட்  அடிப்பது மரபல்ல என்ற
விளக்கம் ஹமீது அன்சாரி சார்பில் தரப்பட்டது.
5) மரபல்ல என்ற இருவரது விளக்கங்களும்
ஏற்கத் தக்கவை அல்ல. அவை சமாளிப்புகளே.
6) தாய்நாட்டையும் தாய்மொழியையும் விட,
தன் மதமே உயர்ந்தது என்று நினைப்பவர்கள்
மட்டுமே இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்தையும்
தேசிய கீதத்தையும் அவமதிக்க முடியும்.
7) இந்தப் போக்குகள் களையப் பட வேண்டும்.
தாய்நாட்டை தாய் மொழியை மதிப்போம்!
******************************************************** 

மார்க்சியம் ஒரு மகத்தான தத்துவம். அது தத்துவம்
மட்டுமல்ல, மாபெரும் தரிசனமும் ஆகும்.
எந்தவொரு தத்துவத்திலும் அறம் இருத்தல்
வேண்டும். அறமில்லாத தத்துவம் பயனற்றது.
ஆனால் மார்க்சியம் என்னும் மாபெரும்
தத்துவத்தில் அறம் இல்லை என்று கூறப் படுகிறது.
தன்னுள் அறத்தைக் கொண்டிராத தத்துவமாக
மார்க்சியம் இருக்கிறது என்கிறார்கள் மார்க்சியத்தை
விமர்சிப்பவர்கள். ஒரு தத்துவத்திற்கு அறம் தேவை
என்பது சரியே.

பௌத்தமும் சமணமும் மதங்கள் மட்டுமல்ல;
அவை தத்துவங்களும் ஆகும். பௌத்த சமண
மதங்களில் அறம் உண்டு.கொல்லாமை, புலால்
உண்ணாமை, எவ்வுயிர்க்கும்  தீங்கு எண்ணாமை
உள்ளிட்ட அறங்களை அவை போதிக்கின்றன.
வைணவம் எனப்படும் விசிஷ்டாத்வைத
தத்துவத்திலும் அறம் உண்டு. கைங்கரியம் என்னும்
அறத்தை வைணவம் கொண்டுள்ளது.
காந்தியத்திலும் அறம் உண்டு. காந்தியம்
கூறும் அஹிம்சையே ஒரு மகத்தான .அறம்தான்.

அறம் என்ற ஒன்றே இல்லாத ஒரு தத்துவம் இந்தியாவில்
உண்டென்றால், அது ஆதிசங்கரரின் அத்வைதமே.
ஆம், அத்வைதத்தில் அறம் எதுவுமே கிடையாது.

இத்தகைய அறம் எதுவும் மார்க்சியத்தில் உண்டா?
பரிசீலிப்போம். மார்க்சியத்தில் அறம் உண்டா
என்ற கேள்விக்குப் பதில் கூறுமுன் அறம் குறித்து
வள்ளுவர் கூறும் ஒரு முக்கியக் கோட்பாட்டை
அறிந்து கொள்ள வேண்டும்.
யாரினும் கூடுதலாக அறம் பற்றிப் பேசியவர்
வள்ளுவர். முப்பால் எனப்படும் திருக்குறளில்
முதல் பாலே அறத்துப்பால்தான்.

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை"
என்கிறார் வள்ளுவர்.

"பல்லக்கில் சுகமாக உட்கார்ந்து இருப்பவனுக்கும்,
தோள் வலிக்கப் பல்லக்கைச் சுமப்பவனுக்கும்,
இந்த இருவருக்கும்
பொதுவான அறம் என்பது கிடையாது". இதுதான்
இக்குறளின் பொருள்.
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
கிடையாது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே வள்ளுவர் சொல்லி விட்டார். இதைத்தான்
காரல் மார்க்சும் கூறுகிறார்.

மார்க்சியத்தில் அறம் உண்டு. ஆனால்
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
மார்க்சியத்தில் இல்லை. அப்படி எல்லோருக்கும்
பொதுவான அறம் என்பது பித்தலாட்டமே.
இணக்கம் காண முடியாத அளவுக்கு வர்க்கப்
பகைமை முற்றிப் போயுள்ள ஒரு சமூக அமைப்பில்
எல்லோருக்கும் பொதுவான அறம் எப்படி
இருக்க இயலும்?
பல்லக்கில் உட்கார்ந்து இருப்பவனுக்கான 
அறம் வேறு. பல்லக்கைச் சுமப்பவனுக்கான
அறம் வேறு.

மார்க்சியம் கூறுகிற அறம் பாட்டாளி
வர்க்கத்துக்கான அறம். அது அனைத்து
வர்க்கங்களுக்குமான அறம் அல்ல.
மார்க்சியம் கூறுகிற அறம் சமத்துவம் ஆகும்.
சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற, அடிமைத்தனமற்ற
ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அறம் சமத்துவமே .
அந்த அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.
அந்த அறமே சமத்துவத்தைப் படைக்கும் அறம்;
சுரண்டலை ஒழித்து விடுதலையைத் தரவல்ல அறம்.
எனவே மார்க்சியத்தின் அறம் இல்லை என்பது
நகைப்புக்கு உரிய கூற்று.
------------------------------------------------------------------------------------------

1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக் காலத்தில் ஆதிக்க இந்திமொழி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றவர் தந்தை பெரியார். அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்க இந்திமொழியை எதிர்த்து மறியல்கள் பல பெரியாரால் #முன்னெடுக்கப்பட்டது.
1938இல் நடந்த போராட்டத்தையும், 1948இல் நடந்த போராட்டத்தையும் பொத்தாம் பொதுவாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்ல முடியாது. இவை இரண்டும் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்தவை அல்ல. மாறாக பள்ளிகளில்
#கட்டாயப்_பாடமாக்கப்பட்டதை
எதிர்த்துத்தான் நடத்தப்பட்டவை.
பெரியார் #எதிர்த்ததெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என்பதைத் தான். இது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது.
ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது.
1965ஆம் ஆண்டு முதல் இந்திமொழியே இந்திய அரசின் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டமாகும். 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று தில்லிக்கு எதிராக முழக்கமிட்ட தந்தை பெரியார் அப்போது அறிவிக்கப்பட்ட இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து கூடுதலாக போராடியிருப்பார் என்று தான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் உண்மையான வரலாறு அதுவல்ல.
அப்போது #அவர்_தில்லி_அரசின் கங்காணியாக செயல்பட்டார் என்பது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாகும்.
1965ஆம் ஆண்டு காமராசரால் அமர்த்தப்பட்ட பக்தவச்சல அரசின் காவல்துறையும், தில்லி அரசின் இராணுவமும் போராடிய முன்னூறுக்கும் மேற்பட்ட
#தமிழர்களை காக்கை குருவியை சுடுவது போல #சுட்டுக்_கொன்றது.
1938இல் நடந்ததைக் காட்டிலும் பொது மக்கள் ஆதரவோடு, தமிழக மாணவர்கள் மற்றும் தி.மு.க.வினரால் முன்னெடுக்கப் பட்ட போராட்டம் இதுவாகும். அப்போது பெரியார் நடத்திய 'விடுதலை' ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது.
#இன்றும்_மாணவர்கள்_காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 16.1.1965
அண்ணாமலைப் பல்கலைக் கழக #மாணவர்களின்_அத்துமீறிய_வன்செயல் 28.1.1965
பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது.
#காலிகள்_மீது_சுட்டதில்
10 பேர் மாண்டனர் 13.2.1965.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தில்லி அரசின் இராணுவத்தை எதிர்த்து நடக்கும் வீரஞ்செறிந்த தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய பெரியார் தனது 'விடுதலை' ஏடு மூலம் கெடுதலைச் செய்து கொண்டிருந்தார்.
'கிளர்ச்சிக்குத் தயாராவோம்' எனும் நூலில் பெரியார் #எழுதுகிறார்:
"இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்... தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி?
யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச்
#சுட்டு_இருந்தால்
இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? #முத்தம்_கொடுக்கவா_கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்"
தந்தை பெரியார் அரசாங்க வன்முறையை ஆதரித்ததற்கு காரணம் "காமராசர் ஆட்சி முக்கியம்" என்று அவர் கருதியதாக தவறான விளக்கம் இன்றும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக மாறக் கூடாது என்பது தான்
பெரியாரின் #உள்ளக்கிடக்கையாகும்.
3.3.1965 இல் '#என்னைப்பற்றி' எனும் தலைப்பில் விடுதலை ஏட்டிலே, "இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டு விடும் என்பதால் அல்ல, தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, வரலாற்று மொழியாக, அறிவியல் மொழியாக, சட்டமொழியாக ஆக வேண்டும் #என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்" என்று எழுதினார்.
1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் உயர்நிலைக் கல்வியில்
தமிழைப் பாடமொழியாக கொண்டு வருவதாக #அறிவித்தபோது
பெரியார் அதனை எதிர்த்துப் பேசியும் எழுதினார்.
தமிழ்ப் பாடமொழி திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி., பாரதிதாசன் போன்றவர்களை
"#தாய்ப்பால்_பைத்தியங்கள்" என்று கிண்டல் செய்தார்.
இதன் தொடர்ச்சியாகவே பெரியார் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை அணுகினார் என்பது தான் உண்மையான காரணமே தவிர, காமராசர் ஆட்சி முக்கியம் என்பதெல்லாம் பொய்யான நொண்டிச் சமாதானங்களாகும்.
இன்றைய திராவிட இயக்கங்களின் ஆங்கில மொழி ஆதரவுக் கொள்கைக்கு மூல #முன்னோடியாகபெரியாரே இருந்துள்ளார் என்பதைத் தான் தமிழக மொழிப்போர் வரலாற்றை படிப்பதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.