வியாழன், 25 ஜனவரி, 2018

மார்க்சியம் ஒரு மகத்தான தத்துவம். அது தத்துவம்
மட்டுமல்ல, மாபெரும் தரிசனமும் ஆகும்.
எந்தவொரு தத்துவத்திலும் அறம் இருத்தல்
வேண்டும். அறமில்லாத தத்துவம் பயனற்றது.
ஆனால் மார்க்சியம் என்னும் மாபெரும்
தத்துவத்தில் அறம் இல்லை என்று கூறப் படுகிறது.
தன்னுள் அறத்தைக் கொண்டிராத தத்துவமாக
மார்க்சியம் இருக்கிறது என்கிறார்கள் மார்க்சியத்தை
விமர்சிப்பவர்கள். ஒரு தத்துவத்திற்கு அறம் தேவை
என்பது சரியே.

பௌத்தமும் சமணமும் மதங்கள் மட்டுமல்ல;
அவை தத்துவங்களும் ஆகும். பௌத்த சமண
மதங்களில் அறம் உண்டு.கொல்லாமை, புலால்
உண்ணாமை, எவ்வுயிர்க்கும்  தீங்கு எண்ணாமை
உள்ளிட்ட அறங்களை அவை போதிக்கின்றன.
வைணவம் எனப்படும் விசிஷ்டாத்வைத
தத்துவத்திலும் அறம் உண்டு. கைங்கரியம் என்னும்
அறத்தை வைணவம் கொண்டுள்ளது.
காந்தியத்திலும் அறம் உண்டு. காந்தியம்
கூறும் அஹிம்சையே ஒரு மகத்தான .அறம்தான்.

அறம் என்ற ஒன்றே இல்லாத ஒரு தத்துவம் இந்தியாவில்
உண்டென்றால், அது ஆதிசங்கரரின் அத்வைதமே.
ஆம், அத்வைதத்தில் அறம் எதுவுமே கிடையாது.

இத்தகைய அறம் எதுவும் மார்க்சியத்தில் உண்டா?
பரிசீலிப்போம். மார்க்சியத்தில் அறம் உண்டா
என்ற கேள்விக்குப் பதில் கூறுமுன் அறம் குறித்து
வள்ளுவர் கூறும் ஒரு முக்கியக் கோட்பாட்டை
அறிந்து கொள்ள வேண்டும்.
யாரினும் கூடுதலாக அறம் பற்றிப் பேசியவர்
வள்ளுவர். முப்பால் எனப்படும் திருக்குறளில்
முதல் பாலே அறத்துப்பால்தான்.

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை"
என்கிறார் வள்ளுவர்.

"பல்லக்கில் சுகமாக உட்கார்ந்து இருப்பவனுக்கும்,
தோள் வலிக்கப் பல்லக்கைச் சுமப்பவனுக்கும்,
இந்த இருவருக்கும்
பொதுவான அறம் என்பது கிடையாது". இதுதான்
இக்குறளின் பொருள்.
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
கிடையாது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே வள்ளுவர் சொல்லி விட்டார். இதைத்தான்
காரல் மார்க்சும் கூறுகிறார்.

மார்க்சியத்தில் அறம் உண்டு. ஆனால்
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
மார்க்சியத்தில் இல்லை. அப்படி எல்லோருக்கும்
பொதுவான அறம் என்பது பித்தலாட்டமே.
இணக்கம் காண முடியாத அளவுக்கு வர்க்கப்
பகைமை முற்றிப் போயுள்ள ஒரு சமூக அமைப்பில்
எல்லோருக்கும் பொதுவான அறம் எப்படி
இருக்க இயலும்?
பல்லக்கில் உட்கார்ந்து இருப்பவனுக்கான 
அறம் வேறு. பல்லக்கைச் சுமப்பவனுக்கான
அறம் வேறு.

மார்க்சியம் கூறுகிற அறம் பாட்டாளி
வர்க்கத்துக்கான அறம். அது அனைத்து
வர்க்கங்களுக்குமான அறம் அல்ல.
மார்க்சியம் கூறுகிற அறம் சமத்துவம் ஆகும்.
சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற, அடிமைத்தனமற்ற
ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அறம் சமத்துவமே .
அந்த அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.
அந்த அறமே சமத்துவத்தைப் படைக்கும் அறம்;
சுரண்டலை ஒழித்து விடுதலையைத் தரவல்ல அறம்.
எனவே மார்க்சியத்தின் அறம் இல்லை என்பது
நகைப்புக்கு உரிய கூற்று.
------------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக