சனி, 20 ஜனவரி, 2018

மார்க்சியப் பார்வையில் அத்வைதம்:
ஓர் எளிய அறிமுகம்!
பகுதி-1
-------------------------------------------------------------------
கி.பி  எட்டாம் நூற்றாண்டில் இன்றைய கேரளத்தில்
வாழ்ந்த, காலடி ஆதிசங்கரர் உருவாக்கி வளர்த்தெடுத்த
ஒரு தத்துவமே அத்வைதம். அத்வைதம் என்றால்
இரண்டற்றது (no dualism) என்று பொருள்.

மானுட வாழ்க்கையில் பெருமளவுக்கு இருமைகள்
வந்து போகின்றன. பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு,
நன்மை-தீமை, உண்மை-பொய், சரி-தவறு என்பவை
போன்ற இருமைகள் (binaries) மானுட  வாழ்வில் அன்றாடம்
உணரப் படுபவை.

ஆதிசங்கரரின் தத்துவம் இருமையை நிராகரித்து
ஒருமையை, மூல ஒருமையை முன்வைக்கும்
தத்துவம் ஆகும் (monoism).

இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு பகுதியாக அத்வைதம்
உள்ளது. அத்வைதம் குறித்த விளக்க நூல்கள்
யாவும் அன்று சம்ஸ்கிருத  மொழியில் இருந்தன.
ஆதிசங்கரரின் காலத்தில் தத்துவ அரங்கில் மிகப்
பெரிதும் விவாதிக்கப்பட்ட ஒரு தத்துவமாக அத்வைதம்
இருந்தது.

பிற்காலத்தில் மேனாட்டார் அத்வைதம் குறித்து
அறிய நேர்ந்ததும், அத்வைத விளக்க நூல்கள்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. இன்றைய இணைய
உலகில் அத்வைதம் குறித்து பல்வேறு விளக்கங்கள்
ஆங்கிலத்தில் எளிதில் கிடைக்கின்றன.

என்றாலும் அத்வைதம் குறித்து தமிழில் எழுதப்பட்ட
நூற்கள் மிகவும் அற்ப சொற்பமே. எனவே தமிழ் மட்டுமே
அறிந்துள்ள வாசகர்களால் அத்வைதம் குறித்து
ஒரு மிக எளிய அடிப்படைப் புரிதலைக் கூடப்
பெற வழியில்லாத சூழல் நிலவுகிறது.

ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே அத்வைதத்தை
அறிய முடியும் என்ற நிலையிலேயே தமிழ் வாசகர்கள்
இருத்தப் பட்டுள்ளார்கள். இது அத்வைதம் பற்றி
அறிவதை கடினமான ஒன்றாக ஆக்கியுள்ளது.

நமது முந்தைய தலைமுறைகளில் ஒரு குறிப்பிட்ட
விழுக்காட்டினர் சம்ஸ்கிருத அறிவு பெற்றுத்
திகழ்ந்தனர். யாரினும் கூடுதலான சமஸ்கிருதப்
புலமை பெற்றுத் திகழ்ந்தவர் மறைமலை அடிகள்.
காளிதாசனின் சாகுந்தலம் என்னும் சம்ஸ்கிருத
நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மறைமலை
அடிகள். சமகாலத் தலைமுறையில் சமஸ்கிருதம்
கற்றோர், ஒப்பீட்டளவில், நமது முந்தைய
தலைமுறைகளை விட மிகவும் குறைவு.

அத்வைதம் இந்த மண்ணில் தோன்றிய தத்துவம்.
என்றாலும் சமகாலத்தில்,இந்த மண்ணில்தான் இது
குறைவாக அறியப்பட்டு இருக்கிறது என்ற
உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

விவேகானந்தரின் சிக்காகோ பேருரையும்
(1893 செப்டம்பர்), அவரின் அமெரிக்கச் சுற்றுப்பயணமும்
அத்வைதத்திற்கு ஒரு அறிமுகத்தை தத்துவத்
தளத்தில் உலகளாவிய நிலையில் வலுவாக ஏற்படுத்தின. தொடர்ந்து மேனாட்டவரால் அத்வைதம் அலசி
ஆராயப் பட்டது. என்றாலும் இவை குறித்த நூல்கள்
மிகுதியும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.

ஒட்டு மொத்தத்தில் தமிழ் மட்டுமே அறிந்த ஒரு
தமிழ் வாசகன் அத்வைதத்திற்கு முற்றிலும்
அந்நியமானவன் என்ற நிலையே இப்போது வரை
நீடிக்கிறது. இதன் விளைவாக அத்வைதம் குறித்து
என்ன பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்
என்பதை உழைக்கும் வர்க்கம் அறிந்திருக்கவில்லை.

உழைக்கும் வர்க்கத்து மக்களுக்கானதாக, எளிய
நடையில், அத்வைத சாரத்தை எவராலும் எளிதில்
புரிந்து கொள்ளத் தக்கதாக. மார்க்சியப் பார்வையில்
அத்வைதத்தைப் பரிசீலிக்கிற ஒரு நூலாக இந்நூல்
திகழும்.
**************************************************************
கருத்துமுதல் வாதத்தின் உச்சமே அத்வைதம்!
--------------------------------------------------------------------------------------
இந்தியத் தத்துவஞானத்தில் கருத்து முதல்வாதத்தின்
உச்சகட்ட ஆக்கம் எது என்ற கேள்விக்கு அத்வைதம்
என்று விடை தரலாம்.

எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் அத்வைதத்திற்குப்
பிறவியளித்தார் என்ற போதிலும், நூற்றாண்டுகளைக்
கடந்தும் அத்வைதம் தன்னை ஒரு  தத்துவப்
பள்ளியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கான
காரணங்களில் ஒன்றாக, ஆதிசங்கரருக்கு முன்பே
அத்வைத சிந்தனை இந்திய மரபில் உருவாகி
இருந்தமையை உணர வேண்டும்.

கழிந்து போன இந்த 12 நூற்றாண்டுகளில், ஆதிசங்கரரின்
அத்வைதம் தொடர்ந்து வளர்சிதைமாற்றம்
(metabolism) அடைந்து கொண்டே வந்துள்ளது.
எனினும், தமிழகச் சூழலில் அத்வைதத்திற்கு ஒரு
எதிர்மறை முத்திரை (negative connotation) இருப்பதையும்
கவனம் கொள்ள வேண்டும். மிகவும் அழுத்தமாக
விழுந்துள்ளது இந்த எதிர்மறை முத்திரை.

"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே" என்னும்
ஆய்வு முறைமையைக் கைக்கொண்டு அத்வைதம்
குறித்து ஆய்வோம்.

உலகின் எந்த மூலையில் எந்தவொரு தத்துவம்
தோன்றினாலும், தத்துவங்களின் இருபெரும்
வகைமையில் (classification) அது ஏதேனும் ஒன்றில்
அடங்க வேண்டும். பொருள்முதல்வாதம், கருத்து
முதல்வாதம் என்னும் இரு பெரும் வகைமையில்,
அத்வைதம் கருத்துமுதல் வாதம் என்னும்
வகைமையில் அடங்குகிறது.

உலகில் இதுவரை தோன்றிய கருத்து முதல்வாதத்
தத்துவங்கள் அனைத்திலும், ஆக உயர்ந்ததும்
கருத்து முதல்வாதத்தின் சிகரமாகக் கருதத் தக்கதுமான
தத்துவம் அத்வைதம் ஆகும். இன்று இந்த 2017ஆம்
ஆண்டிலும்கூட, அத்வைதத்தை மிஞ்சுகிற ஒரு
கருத்து முதல்வாதத் தத்துவம் தோன்றவில்லை.
தோன்றவும் இயலாது. ஏனெனில், கருத்தின் முழுமுதல்
தன்மையை (absoluteness), அதன் மாண்பை infinity அளவு
உயரத்தில் வைத்து விட்டது அத்வைதம். இதற்கு மேல்
உயரம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் இல்லை.

"பிரும்மம் ஒன்றே மெய்; பிரபஞ்சம் பொய்" என்கிறது
அத்வைதம். "உயிர் என்பது பிரும்மமே; வேறு எதுவும்
இல்லை" என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின்
சொற்களில் கூறுவதானால்,
"ப்ரம்ம ஸத்ய ஜகன் மித்ய ஜீவோ ப்ரம்மைவ நா பர"
என்பதே. இந்த சுலோகம் அத்வைதத்தின் மஹா சாரம்
ஆகும்.

பிரும்ம சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யம்
(Sankara Bhasya on Brahma Sutra) மற்றும் விவேக சூடாமணி
ஆகிய ஆதிசங்கரரின் மூல நூல்களில் இருந்தே
இக்கட்டுரைத் தொடர் முழுவதிலும் இடம் பெறும்
மேற்கோள்கள் சுலோகங்கள் எடுத்தாளப் படுகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை ஆதிசங்கரர்
எழுதி உள்ளார் என்பதில் உண்மை இல்லை.
தமிழகத்தில் பிரபலமான 'சௌந்தர்ய லஹரி'
ஆதிசங்கரர் எழுதியதல்ல என்பதை
அந்நூலின் மொழிநடையைக் கொண்டு
ஆய்வறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தை, ஒட்டு மொத்த
இயற்கையை, ஒட்டு மொத்தப் பருப்பொருளை
(matter) மாயை (illusion) என்றும் பொய் என்றும்
கூறுகிறது அத்வைதம். பிரும்மம் மட்டுமே மூல
ஆதாரமானது, முழுமுதல் ஆனது, மாற்றங்களுக்கு
ஆட்படாதது, நித்தியமானது (eternal), எனவே ஆதியும்
அந்தமும் அற்றது என்று கூறுகிறது அத்வைதம்.

சதாசர்வ காலமும் இயங்கிக் கொண்டும், இயக்கத்தின்
போக்கில் மாறிக்கொண்டும் இருக்கின்ற
பருப்பொருளால் ஆன பிரபஞ்சம் ( ஜகத்) மெய்யாக
நின்று நிலவவில்லை (unreal; does not exist) என்கிறது
அத்வைதம். பிரும்மம் மட்டுமே மெய்; அது மட்டுமே
நின்று நிலவுவது என்கிறது அத்வைதம்.

ஆயின், அத்வைதம் கூறுகிற பிரும்மம் என்பது எது?
கடவுளா? இல்லை. தூய அறிவே பிரும்மம் என்கிறது
அத்வைதம். இதன் பொருள் சிந்தனையே பிரும்மம்
என்பதாகும்; கருத்தே முழுமுதலானது (absolute)
என்பதாகும். சுருங்கக் கூறின், அத்வைதம் என்ற
தத்துவம் கருத்து முதல்வாதத்தின் அதி உச்சம் ஆகும்.

அத்வைதத்தின் தோற்றுவாய் பிற்கால வேதாந்தம்
ஆகும். அதாவது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை
என்பதாக அறியப்படும் இரண்டில் உத்தர மீமாம்சையே
அத்வைதத்தின் தோற்றுவாய் ஆகும். இது தத்துவப்
பின்புலம் கொண்டது. ஞான மார்க்கத்தை வலியுறுத்துவது.

 பூர்வ மீமாம்சை என்பது பக்தி மார்க்கத் தத்துவம்.
கடவுளை, கடவுளர்களை வழிபட வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தும் தத்துவம் ஆகும். இது
பக்தி, வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றால் ஆனது.

 ஆதிசங்கரரின் அத்வைதம் வழிபாட்டையோ
பக்தியையோ சிறப்பிக்கவில்லை. முழுமுதல் அறிவையே
எதனையும் விட உயர்ந்ததாக முன்வைக்கிறது.
தூய அறிவே (pure reason) பிரம்மம்; அதுவே சாரமான
உண்மை என்றார் ஆதி சங்கரர். உண்மை என்பது
இரண்டற்றது என்பதால் பிரம்மம் தவிர மீதி
அனைத்தும் பொய், மாயை என்றார் ஆதி சங்கரர்.

சங்கரர் காலத்திய இந்தியத் தத்துவ ஞானம் ஆறு
வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது.
ஆறு பிரிவுகளும் ஆறு தரிசனங்கள் என தத்துவ
ஆசிரியர்களால் வழங்கப்பட்டன. அவற்றில்
பொருள்முதல்வாதமே மேலோங்கி இருந்தது.

1) சாங்கியம் 2) யோகம் 3) நியாயம் 4) வைசேஷிகம்
ஆகிய நான்கும் பொருள்முதல் வாத தரிசனங்கள்.
பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகிய இரண்டும்
கருத்துமுதல் வாத தரிசனங்கள். இவையே வேதாந்தம்
என்ற பெயரால் வழங்கப் பட்டன.

பூர்வ மீமாம்சை பக்தியாலும் சடங்குகளாலும்
நிரம்பி வழிந்த தரிசனம். அதில் தத்துவச் செறிவு குறைவு.
அது பக்தி மார்க்கத்தைப் போதிக்கிறது. படிப்பறிவற்ற
பாமர மக்களும் பின்பற்ற ஏதுவானது பக்தி மார்க்கம்.

உத்தர மீமாம்சையே ஒப்பீட்டளவில் தத்துவச் செறிவு
மிகுந்தது. இது ஞான மார்க்கத்தை போதிக்கும்
தரிசனம். கற்றறிந்தோரின் தத்துவ விசாரத்திற்கு
ஏற்றது உத்தர மீமாம்சை.இதுவே அத்வைதத்தின்
தோற்றுவாய்.

அத்வைதம் ஞான மார்க்கத்தைக் கொண்டது
என்பதால் ஆதிசங்கரர் சடங்குகளைத் தீவிரமாக
எதிர்த்தார். இது மத நிறுவனங்களுக்கு எதிரான
கலகக்குரலாக இருந்தது. எனவே மத நிறுவனங்கள்
அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதிசங்கரரை
எதிர்த்தன.

பொருள்முதல்வாதத்தை தீவிரமாக எதிர்த்தார்
சங்கரர். எனவே எல்லாப் பொருள்முதல்வாதிகளும்
சேர்ந்து ஆதிசங்கரரை எதிர்த்தனர். சுருங்கக் கூறின்
தம் காலத்தில் வேறெந்த தத்துவ ஞானியையும் விட
அதிகமாக எதிர்க்கப் பட்டவர் ஆதிசங்கரரே.
*******************************************************************
காலத்தால் பிந்திய கருத்துமுதல்வாதம்!
கருத்துமுதல்வாதம் தோன்றியது ஏன்?
--------------------------------------------------------------------
மனித குலம் கண்டறிந்த முதல் தத்துவம்
பொருள்முதல்வாதமே. கருத்து முதல்வாதம்
காலத்தால் பிந்திப் பிறந்த தத்துவம் ஆகும்.
இந்தியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளில்
மட்டுமின்றி, மேற்கத்திய சமூகத்திலும் இதுவே
நிகழ்ந்தது.

எந்தவொரு  தத்துவமும் தோன்றுவதற்கு உகந்த
சமூகச் சூழல் வேண்டும். அது அதற்கான தேவை
இல்லாமல் எந்தத் தத்துவமும் தோன்றி விடுவதில்லை.
உலகம் முழுவதும் உள்ள மானுட சமூகத்தின் தொடக்க
காலத்தில் கருத்து முதல்வாதம் தோன்றுவதற்கான
எத்தகைய சமூக அவசியமும் நிலவவில்லை.

சமூகத்தின் மொத்த உற்பத்தியும் அதனால் விளைந்த
உபரியும் (surplus) சமூகத்தின் அத்தனை
உறுப்பினர்களாலும் சரிசமமாக நுகரப்பட்ட  காலம்
ஒன்று இருந்தது. உபரி என்பது அனைவருக்குமானது
என்ற உணர்வுடன், எவர் ஒருவரின் பங்கையும் எவர்
ஒருவரும் அபகரிக்காமல் இருந்த ஒரு பொற்காலம் அது.
மேற்கத்திய ஐரோப்பிய சமூகத்திலும் சரி, இந்தியா
போன்ற கீழ்த்திசை சமூகத்திலும் சரி, ஆப்பிரிக்க
ஆஸ்திரேலிய பழங்குடிச் சமூகங்களிலும் சரி,
உலகெங்கும் உபரியின் மீதான சமஉரிமை நிலவிய
காலம் அது.

இத்தகைய சமூக அமைப்பை மார்க்ஸ் புராதனப்
பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கிறார்.
சமூகத்தில் வர்க்கப் பிரிவினைகள் எதுவும் ஏற்படாத
காலம் இது. இக்காலக் கட்டத்தின் மிக இயற்கையான
தத்துவமாக, பொருள்முதல்வாதம் நிலவியது.
பொருள்முதல்வாதம் சமத்துவத்தை தத்துவார்த்த
உள்ளடக்கமாகக் கொண்டுள்ள தத்துவம் ஆகும்.
சமூகத்தின் வளர்ச்சியை ஒட்டியே தத்துவமும்
வளர்ச்சி பெறும். இங்கு குறிப்பிடும் பொருள்முதல்வாதம்
கருநிலையில் இருந்த பொருள்முதல்வாதம் ஆகும்.

காலம் செல்லச் செல்ல, வளர்ச்சியின் இயக்கப்
போக்கில், மானுட சமூகத்தில் வர்க்கப் பிரிவினை
ஏற்பட்டது. அடிமைகள் என்றொரு முற்றிலும் புதிய
வர்க்கம் உண்டானது. இந்த வர்க்கத்தினருக்கு
சமூகத்தின் உபரியின் மீதான உரிமை மறுக்கப்
பட்டது. இந்த அடிமைகளைக் கட்டியாளும்
எஜமானர்களுக்கு மட்டுமே உபரியின் மீதான
முற்றுரிமை உறுதி செய்யப்பட்டது.

மானுட சமூகத்தில்  முதன்முதலில் ஏற்பட்ட
மிகப்பெரிய பாரதூரமான மாற்றம் இது. பழைய
நிலைமைகள் மாறி விட்டன. முற்றிலும் புதிய
நிலைமைகள் சமூகத்தில் தோன்றி விட்டன.
புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய சிந்தனை
சமூகத்திற்குத் தேவைப்பட்டது. எனவே புதிய
தத்துவம் பிறந்தது. அதுதான் கருத்துமுதல் வாதம்
ஆகும்.

சமூகம் மொத்தமும் உழைத்து, அதனால் கிடைத்த
உபரியை சமூகம் மொத்தமும் சமமாக  நுகர்ந்த
புராதனப் பொதுவுடைமை சமூகத்தில் அறிவு என்பது,
(அதாவது சிந்தனை என்பது) இயற்கையை
அறிவதே என்பதாக இருந்தது. இயற்கையோடு
வினைபுரியும் இயக்கப் போக்கிலேயே, அதாவது
உழைப்பின் போக்கிலேயே சமூகம் அறிவைப்
பெற்றது. அறிவைப் பெறும் வாயிலாக உழைப்பு
இருந்தது. இந்த வாயிலானது எதை முன்னிட்டும்
எவரைப்பொறுத்தும் சாத்தப்படவில்லை என்பது
புராதனப் பொதுவுடைமை சமூகத்தின் சிறப்பாகும்.

ஆண்டான் அடிமைச் சமூகத்தில் உழைப்புச் சுரண்டல்
என்ற முற்றிலும் புதிய செயல்பாடு தோன்றுகிறது.
இது சமூகத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது.
உழைப்புச் சுரண்டலை சமூகத்திற்கு விளக்கவும்,
அதை நியாயப் படுத்தவும், சமூகத்தில் புதிதாக
ஏற்பட்டு விட்ட அசமத்துவத்தை (asymmetry) விளக்கவும்
புதியதொரு சிந்தனையும் சிந்தனை முறையும்
தேவைப்படுகின்றன. இந்தத் தேவையை
நிறைவேற்றவே கருத்துமுதல்வாதம் பிறக்கிறது.

கிரேக்கத்தின் மாபெரும் தத்துவஞானியும் கி.மு
ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான
பிளேட்டோவின் கருத்துமுதல்வாதம் முன்பத்தியின்
கூற்றுக்கு ஆகச் சிறந்த உதாரணம் ஆகும். பிளேட்டோவின்
குகை உருவகம் (allegory of the cave) என்ற சித்தரிப்பைப்
படித்தால் இதை நன்கு உணரலாம்.

இந்தியச் சூழலில் கருத்து முதல்வாதத்தின் தோற்றம்!
---------------------------------------------------------------------------------------------
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நால்வகை
வேதங்களும் தொன்மைக்கால இந்தியாவைப்
படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வரலாற்று
ஆவணங்கள் ஆகும். உலகெங்கும் கிடைத்த
அத்தனை ஆவணங்களிலும் தொன்மை மிக்கதாக
நால்வகை வேதங்கள் கருதப் படுகின்றன.

இந்தியச் சமூகம் இனக்குழுச் சமூகமாக கூடி வாழ்ந்த
காலத்தில் எழுதப்பட்டவையே நால்வகை வேதங்கள்.
இவை யாவும் தனி ஒரு புலவரால் இயற்றப் பட்டவை அல்ல.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். வேதங்கள்
நான்கும் தொகை நூல்களே. சங்க இலக்கியத்தின்
எட்டுத் தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு,
குறுந்தொகை போன்ற தொகை நூல்களே வேதங்கள்.
பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால்
பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே வேதங்கள்.
வேதங்கள் யாவினும் தொன்மை மிக்கது ரிக் வேதம்
ஆகும். மொழிகள் வரி வடிவம் பெறும் முன்னரே
வேதங்கள் பாடப்பட்டன. தொடர்ந்து வாய்
மொழியாகவே பேணப்பட்டன.

நால்வகை வேதங்களிலும் தத்துவக் கருத்துக்கள்
என்பவை மிக அற்ப அளவிலேயே (trace level) உள்ளன.
அவை மக்கள் குழுவாகச் சேர்ந்து பாடிய பாடல்களே.
அவற்றில் ஒளி சிந்தும் தத்துவம் எதுவும் புதைந்து
கிடைக்கவில்லை. மனித சிந்தனையின், மனித
அறிவின் குழந்தைப் பருவ வெளிப்பாடுகளே
வேதங்கள்.

ரிக் வேத காலத்தில் சாதி வருணம் போன்ற
பாகுபாடுகள் இனக்குழுச் சமூகத்தில் தோன்றி
இருக்கவில்லை. ஏற்றத்தாழ்வற்ற சுரண்டலற்ற
ஒரு இனக்குழுச் சமூக வாழ்க்கையையே ரிக்
வேதம் படம் பிடித்துக் காட்டுகிறது என்கிறார்
மார்க்சிய வரலாற்று அறிஞர் தேவி பிரசாத்
சட்டோபாத்யாயா. (பார்க்க: இந்தியத் தத்துவம்:
ஓர் அறிமுகம் (தமிழில்: வெ கிருஷ்ணமூர்த்தி),
மூன்றாம் பதிப்பு,  படைப்பாளிகள் பதிப்பகம்,
சென்னை, பக்கம்-169).

நால்வகை வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட
உபநிடதங்களில் தத்துவக் கருத்துக்கள் சற்று
வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. உபநிடதங்களே
வேதாந்த தத்துவத்தின் தோற்றுவாய் ஆகும்.

உபநிடதங்களும்கூட ஒற்றைப்பார்வை கொண்டவை
அல்ல. அவற்றின் கருத்துக்கள் அனைத்தும்
ஒருபடித்தானவையும் அல்ல (not homogeneous).
எனவே பிற்காலத்தில் தோன்றிய தத்துவஞானிகள்
உபநிடதக் கருத்துக்களில் ஓர் ஒருபடித்தான
தன்மையை உருவாக்கும் பொருட்டு, உபநிடதங்களை
விளக்கி நூல்களை எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட
நூற்களுள் தலைசிறந்தது பாதராயணர் இயற்றிய
பிரம்ம சூத்திரம் ஆகும். இந்நூல் எழுதப்பட்ட
காலத்தை துல்லியமாகக் கணிக்க இயலவில்லை.
கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம்
நூற்றாண்டு வரையிலான 700 ஆண்டுகளுக்குள்
இது எழுதப்பட்டிருக்கக் கூடும்.

வேதாந்த தத்துவத்தின் அடிப்படை நூல் பிரம்ம
சூத்திரமே ஆகும். ஆதி சங்கரர், ராமானுஜர்,
மத்வர் ஆகிய தத்துவ ஆசான்கள் பிரம்ம
சூத்திரத்திற்கு உரை எழுதியதன் மூலமே தத்தம்
கொள்கைகளான அத்வைதம், விஷிஷ்டாத்வைதம்,
துவைதம் ஆகியவற்றை நிலைநாட்டினர்.

வேதங்களுக்குப் பின்னர் உபநிடதங்கள் பலவும்
தோன்றின. தொடர்ந்து நிலவுடைமைச்  சமூக
அமைப்பு இந்தியா முழுவதும் பரவலாகத் தோன்றியது.
தொடக்கத்தில் சிறு சிறு நிலவுடைமை அரசுகளே
(feudal kingdoms) தோன்றன.இவை பின்னாளில்
பெரும் நிலவுடைமைப் பேரரசுகளாக (feudal empires)
வளர்ந்தன.இதன் விளைவாக வர்க்க மோதல்கள்
பெரிதும் கூர்மை அடைந்தன.

இந்த வர்க்கப் பிளவுகளையும் வர்க்கச் சுரண்டலையும்
நியாயப் படுத்த புதியதொரு தத்துவம் தேவைப்பட்டது.
ஏற்கனவே இருந்துவந்த கருத்துமுதல்வாதம், புதிதாகத்
தீவிரம் அடைந்துள்ள வர்க்கச் சுரண்டலை நியாயப்
படுத்தும் வலிமை குன்றி இருந்தது. பூர்வ மீமாம்ஸையும்
உத்தர மீமாம்சையும் வளர்ந்து வந்த நிலவுடைமைப்
பேரரசுக்கான தத்துவமாக இருக்கவில்லை.
இது ஒரு புதிய தத்துவத்திற்கான தேவையை
உருவாக்கியது. இந்தத் தேவையை நிறைவேற்றவே
அத்வைதம் பிறந்தது.

ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை, ஆளப்படும்
வர்க்கங்கள் இயல்பானதாக ஏற்றுக் கொண்டு ஒழுக
வேண்டிய ஓர் சூழலைத் தோற்றுவிக்கவே அத்வைதம்
பிறந்தது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள்
கிளர்ந்து எழாமல் அத்வைதம் பார்த்துக் கொண்டது.
---------------------------------------------------------------------------------------------
பகுதி-1 முற்றியது.
***************************************************************

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக