செவ்வாய், 2 ஜனவரி, 2018

யார் தமிழர்?
தமிழர் என்பதற்கான வரையறை என்ன?
------------------------------------------------------------------------
1) பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில்
தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால்,
உலகெங்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பு
(feudal society) இருந்தது.

2) ஒரு அரசு, ஒரு அரசன், குடிமக்கள் என்ற
அமைப்புதான் நிலவுடைமைச் சமூக அமைப்பு.
இங்கு குடிமக்கள் என்போர் பல்வேறு மொழியினராக
பல்வேறு இனத்தவராக இருப்பர்.

3) ஒவ்வொரு மொழியினருக்கோ  அல்லது ஒவ்வொரு
இனத்தவருக்கோ தனியான உரிமைகள் எதுவும்
நிலவுடைமைச் சமூக அமைப்பில் கிடையாது.

4) அதாவது பேரரசு (அல்லது அரசு) என்ற நுகத்தடியின்
கீழ் அனைத்து மொழியினரும் அனைத்து தேசிய
இனத்தவரும் உரிமைகள் எதுவம் இன்றி நசுங்கிக்
கிடந்தனர். இதுதான் நிலவுடைமைச் சமூகத்தின்
இயல்பு.

5) தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகெங்கும்
முதலாளித்துவம் மலர்ந்தது. மனித சமுதாயம்
முதலாளித்துவ சமூகமாக மாறியது.

6) முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுத்துவத்தை விட
ஆயிரம் மடங்கு சிறந்தது. நிலப்பிரபுத்துவம்
என்பது முற்றிலுமான சர்வாதிகாரம். இதற்கு
மாறாக, முதலாளித்துவம் என்பது ஜனநாயகத்தை
வழங்கக் கூடியது. முதலாளித்துவ அமைப்பின்
கட்டுமானமே ஜனநாயகம்தான்.

7) எனவே, சகல தேசிய இனங்களுக்கும்
மொழியினருக்கும் ஜனநாயகத்தை வழங்கியது
முதலாளித்துவம். இது முதலாளித்துவத்தின் இயல்பு.

8) இதன் விளைவாக, எல்லா மொழியினரையும் எல்லா இனத்தவரையும் ஒரே நுகத்தடியின் கீழ் நசுக்கிய
நிலவுடைமைக் கட்டுமானம் தகர்ந்தது. தங்களைத்
தாங்களே ஆளும் உரிமையை எல்லா தேசிய
இனங்களுக்கும் அல்லது மொழியினருக்கும்
மானுட வரலாற்றில் முதன் முதலாக
முதலாளித்துவம் வழங்கியது.

9) தேசிய இனம் (nationality) என்பதே முதலாளித்துவக்
கருத்தாக்கம்தான்.It is a capitalist concept.

10) 1956இல் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள்
அமைக்கப் பட்டன. இது எதைக் காட்டுகிறது?
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்திய, பல்வேறு
மொழி இன மக்களை உள்ளடக்கிய மாகாண
அமைப்பு (உதாரணமாக, மதராஸ் மாகாணம்)
முதலாளித்துவ ஆட்சி முறைக்கு இடையூறாக இருந்தது.
ஒரே மாகாணத்தில் வாழும் மக்கள் தங்களுக்குள் 
முரண்பட்ட கோரிக்கைகளை எழுப்பி வந்தனர்.
பன்மொழி பல்லின மாகாண அமைப்பு என்னும்
சட்டகத்துக்குள் இத்தகைய கோரிக்கைகளைத்
தீர்க்க முடியாமல் போனதன் விளைவே
மொழிவாரி மாநிலங்கள்.

11) எனவே மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது
வரவேற்கத் தக்க முதலாளித்துவ சீர்திருத்தம் ஆகும்.

12) ஆக, இந்தப் பின்னணியில் தமிழர் யார் என்பதைத்
தீர்மானிக்க வேண்டும். தமிழருக்கான இலக்கணத்தைத்
தீர்மானிக்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்ற
தொல்காப்பியர் கால வரையறை இன்று பொருந்தாது.

13) அ) தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு
தலைமுறை தலைமுறையாக தமிழ் மண்ணில்
வாழ்ந்து வரும் அனைவரும் தமிழரே.

ஆ) தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு
அயல் மண்ணில் வாழ்ந்து வந்தாலும், அவர்களின்
முந்தைய தலைமுறையினர் தமிழ் மண்ணில்
வாழ்ந்திருக்கும் பட்சத்தில்  அவர்களும் தமிழரே.

இ) மொழிவாரிப் பிரிவினையின்போது,
தமிழ்நாட்டிலேயே தங்கி விட்ட தமிழைத்
தாய் மொழியாகக் கொள்ளாதோர், தங்களை
மொழிச்சிறுபான்மையினராகக் கருதாமல்,
தமிழராகவே கருதியும் தமிழைக் கற்றுக் கொண்டும்
தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவாரேயானால், அவர்களும்
தமிழரே.
  
ஈ) மொழிவாரி மாநில அமைப்பிற்குப் பிறகு,
பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து
வாழும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத
எவர் ஒருவரும் தமிழர் ஆகமாட்டார்.  

14) இந்த வரையறையின் படி, ரஜனி காந்த், விஷால்
ரெட்டி ஆகியோர் தமிழர் ஆகார். சென்னை
சௌகார்ப்பேட்டையிலும் பிற இடங்களிலும்
வாழும் மார்வாடிகள் தமிழர் ஆகார்.
*******************************************************      

   
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக