திங்கள், 15 ஜனவரி, 2018

குளிர்கால கதிர்த் திருப்பம் (winter solstice) என்பது ஒரே
நாளில் ஏற்படுவது அல்ல. டிசம்பர் 20, 21,22, 23 ஆகிய
நான்கு தேதிகளிலும் இதுவரை ஏற்பட்டுள்ளது. 1903ல்
டிசம்பர் 23ஆம் தேதியில் ஏற்பட்டுள்ளது. எனவேதான்
கதிர்த்திருப்பத்திற்கு அடுத்த நாளை ஆண்டின்
தொடக்கமாகக் கொள்ளவில்லை.
==========================
மதத்தின் பிடியில் இருந்து விடுபட்டு
அறிவியலின் கைக்கு வந்த புத்தாண்டு!
ரோ.மு ரோ.பி என்றால் என்ன?
காலண்டரின் கதை (தொடர்ச்சி)
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலண்டர்
(காலக் கணக்கு) தற்போது முற்றிலுமாக அறிவியலின்
பிடிக்குள் வந்து விட்டது.

2) சென்ற ஆண்டுக்கு முந்திய ஆண்டான 2016ல்
ஒரு வினாடி கூடுதலாகச் சேர்க்கப் பட்டிருந்தது.
(இது குறித்து முன்பே எழுதியுள்ளேன்)

3) 1972 முதல் இவ்வாறு சிற்சில ஆண்டுகளில் ஒரு வினாடி
கூடுதலாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. அடுத்து எப்போது
சேர்க்கப்படும்? தெரியாது. ஏனெனில் அறிவியல்
அறிஞர்கள் அதை இன்னும் அறிவிக்கவில்லை.

4) பூமி சூரியனைச் சுற்றும்போது, சில சமயங்களில்
குறைவான வேகத்தில் சுற்றுகிறது. இதனால் சுற்றி
முடிக்க அதிக நேரம் (வினாடிகளில்) எடுத்துக்
கொள்கிறது. பூமி சுற்றுவதற்கு ஏற்ப நமது
கடிகாரத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
நமது கடிகாரத்திற்கு ஏற்றவாறு பூமி சுற்றாது.
இதனால்தான் லீப் வினாடிகளைச் சேர்க்க வேண்டிய
தேவை ஏற்படுகிறது. பூமி குறைவான வேகத்தில்
சுற்றுவது இயற்கையாகவும் நிகழும்; மனித
முயற்சியாலும் நிகழும். அண்மையில்
பூமி தன்னைத்தான் சுற்றும் வேகத்தை
சீனாவால் குறைக்க முடிந்தது. எப்படி?

சீனா ஒரு பிரம்மாண்டமான அணையைக் கட்டி
இருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய அணை.
முப்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்று
இதற்குப் பெயர்.
2012ல் செயல்படாத தொடங்கிய இந்த அணையைக்
கட்டியதன் மூலம், பூமி
தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தைக்
குறைத்து விட்டது சீனா. இதன்காரணமாக ஒரு நாள்
என்பது 24 மணி நேரத்தை விட சிறிது அதிகமாகி
விட்டது.

இந்த அணையின் பிரம்மாண்டங்களில் பின்வரும்
விஷயங்களில் இயற்பியல் அக்கறை கொள்கிறது.
அ) அணையின் reservoir கடல் மட்டத்திற்கு மேல்
175 மீட்டர் (அதாவது 575 அடி) உயரம் உடையது.
ஆ) நீரின் கொள்ளளவு= 39.3 கன கிலோ மீட்டர்
இ) அணையில் உள்ள நீரின் நிறை (mass)=39 ட்ரில்லியன்
கிலோகிராம். 1 trillion = 10^12. அதாவது 1 டிரில்லியன் என்பது
1 லட்சம் கோடி ஆகும். எனவே நீரின் நிறை
39.3 லட்சம் கோடி கிலோகிராம் ஆகும்.

இந்த அணை சீனாவில் உள்ளது. அதாவது
பூமியில் உள்ளது. 575 அடி உயரத்தில் உள்ள
39 ட்ரில்லியன் கிலோகிராம் நிறையை வைத்துக்
கொண்டு பூமி தன்னைத்தானே சுற்ற வேண்டும்.
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் பூமத்திய
ரேகைப் பகுதியில் மணிக்கு 1670 கி,மீ (பூமி
சூரியனைச் சுற்றும் வேகம் மணிக்கு தோராயமாக
ஒரு லட்சம் கிலோமீட்டர்). சீனாவின் இந்த
அணையையும் சுமந்து கொண்டு பூமி தன்னைத்
தானே சுற்றும்போது, சடத்துவ உந்தம் (moment of inertia)
அதிகமாகி விடுகிறது. இதனால் சுற்றுவதன் வேகம் சிறிது
குறைகிறது. வேகம் குறைவதால், நேரம் அதிகமாகிறது..
இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தையும்
விட அதிகமாகிறது. எவ்வளவு அதிகமாகி உள்ளது
என்று நாசா கணக்கிட்டுள்ளது. அதன்படி 0.06 மைக்ரோ
செகண்ட் நேரம் அதிகமாகி உள்ளது..


5) உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர்
உண்மையில் ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த
காலண்டரே. அ) 12 மாதங்கள் ஆ) 365 நாட்கள்
இ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது
பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய அனைத்து
அம்சங்களுமே கிமு 46ல் சீசரால் அறிமுகம்
செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது,
கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.

6) ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்தபோது,
இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை என்பது
கருதத் தக்கது.

7) அப்படியானால், ஜூலியன் காலண்டரில்
ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்
பயன்படுத்தினர் (what was the REFERENCE point then?)

8) அப்போது பயன்படுத்திய reference point ரோம் நகரம்
உருவான தேதி ஆகும். அதாவது ரோ.மு, ரோ.பி
என்ற கணக்கிடும் முறை இருந்தது. எனினும்
இம்முறை பரவலாக மக்களால் பின்பற்றப் படவில்லை.
ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே
இதைப் பின்பற்றினர்.
ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால்,
ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்.

9) ரோமு ரோபி என்பன பின்னாளில் கிமு கிபி
என்று மாறின. முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்
கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த
ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில்,
கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத்
தொடங்கியது.

10) கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus)
என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித
நிபுணரும்கூட) முதன் முதலில் கிமு, கிபி என்ற
கணக்கிடும்முறையை அறிமுகம் செய்தார்.
என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.

11) கிபி 1582ல் போப்பாண்டவர் பதின்மூன்றாம்
கிரெகோரி ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு
குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். ஒவ்வொரு
400 ஆண்டுக்  காலத்திலும்  மூன்று லீப் ஆண்டுகளைக்
குறைத்தார். (இது குறித்து முந்தைய கட்டுரையில்
காண்க).

12) இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர்
செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால்
பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய
காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப்
பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம்
செய்தவர் என்ற  இக்காலண்டர் கிரெகோரி
காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.

13) கிரெகொரிக்குப் பின்னரும் இக்காலண்டரில்
தொடர்ந்து தேவையான பல திருத்தங்கள்
செய்யப்பட்டு வருகின்றன. 1980களில் கிறிஸ்துவ
சகாப்தம் என்ற பெயர் மாற்றப்பட்டு பொது
சகாப்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

14) தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும்
அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே
உள்ளது.1972 முதல்  மேற்கொள்ளப்பட்டு வரும்
விநாடித் திருத்தங்கள் பற்றி முந்தைய பத்திகளில்
பார்த்தோம்.

15) அறிவியலின் அதிகாரத்தின்கீழ் காலண்டர்
வந்ததும் காலண்டரின்  துல்லியம் உறுதி செய்யப்பட்டது. அறிவியலுக்கு மதமில்லை. எனவே மதச்சார்பற்ற
காலண்டராக, உலகின் அனைத்துப் பகுதி மக்களும்
விரும்பி ஏற்கும் காலண்டராக இது மாற்றப்பட்டது.

16) ஆக, இன்றைய உலகின் காலண்டர் உலகப்
பொதுமையை உறுதி செய்கிறது. மதச்சார்பற்ற
துல்லியமான நவீனமான அறிவியல் காலண்டரை
மானுடம் அடைந்து விட்டது. இது மானுடத்தின்
வெற்றி. இது அறிவியலின் வெற்றி.

17) எனவே அறிவியல் காலண்டரை, அறிவியல்
புத்தாண்டை அறிந்து கொள்வோம்; அனைவருக்கும்
எடுத்துக் கூறுவோம். அறிவியலைக் கொண்டாடுவோம்.

18) இது கிறிஸ்து சகாப்தம் அல்ல; பொது சகாப்தம்!
இது கிரெகோரி காலண்டர் அல்ல; அறிவியல் காலண்டர்.
இனி கிமு கிபி போன்ற பதங்களைத் தவிர்த்து
விட்டு, பொமு பொயு (பொது  யுகத்திற்கு முன், பொது
யுகம்) ஆகிய பதங்களை ஏற்போம். கிரெகோரி
காலண்டர் என்ற பெயரைக் கைவிட்டு, அறிவியல்
காலண்டர் என்ற பெயரை ஏற்போம்.

19) காலண்டரின் வரலாற்றை அனைத்து மக்களிடமும்
கொண்டு செல்வோம். திருத்தங்கள் செய்த ஜூலியஸ்
சீசர், கிரெகோரி, நவீனஅறிவியல் அறிஞர்கள்
அனைவரையும் போற்றுவோம். அறிவியலுக்கு
மதமில்லை; இனமில்லை; மொழியில்லை. மானுட
மேன்மை மட்டுமே உண்டு.
******************************************************************

ஆங்கிலப் புத்தாண்டு அல்ல; உலகப் புத்தாண்டு!
கிறிஸ்து சகாப்தம் அல்ல: பொது சகாப்தம்!
கிரெகோரி காலண்டர் அல்ல; அறிவியல் காலண்டர்!

அறிவியல் காலண்டர் (scientific calendar) என்றால் பூமியின்
சுழற்சியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காலண்டர்
என்று பொருள். சென்ற ஆண்டு நின்ற அதே இடத்தில்
நிற்குமா என்பது பூமியின் சுழற்சியின் வேகத்தைப்
பொறுத்தது. பூமி ஒரே வேகத்தில் சுற்றுவதில்லை.
சமயங்களில் பூமி குறைவான வேகத்தில் சுற்றுகிறது.
அதாவது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. அதற்கு
ஏற்ப நமது காலண்டரில் மாற்றம் செய்யப் படுகிறது.
2016இல் ஒரு வினாடி கூடுதலாகச் சேர்க்கப் பட்டது
என்பதை எழுதி இருக்கிறேன். A calendar which truly and accurately
reflects the revolution of the earth around the sun is a scientific calendar.
 ==============================================
2100 லீப் ஆண்டு அல்ல. ஏனெனில், நூற்றாண்டுகள்
(2000,2100,2200......) லீப் ஆண்டாக  இருக்க வேண்டுமெனில்
4ஆல்  வகுப்பட்டால் மட்டும் போதாது; 400ஆலும்
வகுபட வேண்டும் என்ற திருத்தம் கிரெகோரி
காலண்டரில் மேற்கொள்ளப்பட்டது/ இதுவே கிரெகோரி
காலண்டரின் உயிர்நாடியான திருத்தம் ஆகும்.
இதன்படி, 2000 என்பது லீப் வருடம். 2100,2200,2300 ஆகியவை
லீப் வருடங்கள் அல்ல. 2400 லீப் வருடம் ஆகும்.
------------------
காலண்டரின் வரலாறு!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
1) காலண்டர் என்றால் நாள் வாரம் மாதம் ஆண்டு  நேரம்
என அனைத்து விதமான காலப் பகுப்புகளையும் கணித்துக்
கூறும் அமைப்பு என்று பொருள்படும்.

2) உலகில் நூற்றுக்கணக்கான காலண்டர்கள்
இருந்தன; இன்றும் இருந்து வருகின்றன.

3) பல்வேறு கலாச்சாரங்களை சார்ந்த மக்கள், தங்களின்
கலாச்சாரத்திற்கும் வானியல் அறிவுக்கும் ஏற்றவாறு
தங்களின் காலண்டர்களை உருவாக்கிக் கொண்டனர்.

4) இவற்றுள் சூரியச் சுழற்சியை  அடிப்படையாகக்
கொண்ட காலண்டர்கள் அதிகம். சில காலண்டர்கள்
சந்திரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக இஸ்லாமிய காலண்டர்கள் சந்திரக்
காலண்டர்கள் ஆகும்.

5) ஐரோப்பா உலகின் தலைமைக்கு வந்தபோது
ஐரோப்பிய காலண்டரானது உலகில் மிக அதிகமான
நாடுகளில் பின்பற்றப் பட்டது. அதில் ஒன்றுதான்
ரோமானிய காலண்டர். தொடக்கத்தில் இது பத்து
மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆண்டுத் தொடக்கமாக  மார்ச் மாதத்தைக் கொண்டிருந்தது.

6) காலந்தோறும் இதில் மாற்றங்கள் ஏற்பட்டன.
 ஜூலியஸ் சீசர் காலத்தில் இதில் மிகப்பெரிய
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுத்
தொடக்கமாக ஜனவரி ஆனது.12 மாதங்கள்
கொண்டு காலண்டர் அமைந்தது. இக்காலண்டர்
ஜூலியன் காலண்டர் என்று பெயர் பெற்றது. இது
கிமு 46ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

7) கிபி 1582 அக்டோபர் மாதத்தில் போப்பாண்டவர்
பதின்மூன்றாம் கிரெகோரி என்பவர் ஜூலியன்
காலண்டரில் மேலும் சில திருத்தங்களைச் செய்தார்.
Centuries are not leap years unless divisible by 4 என்பது கிரெகோரி
மேற்கொண்ட முக்கியமான திருத்தம். இக்காலண்டர்
கிரெகோரி காலண்டர் என்று கூறப்படுகிறது.
இதையே இன்று உலகம் பின்பற்றி வருகிறது,
சில திருத்தங்களுடன்.

8) கிரெகோரி காலண்டர் கிறிஸ்து பிறப்பை
அடிப்படையாகக் கொண்டு ஆண்டைக்
கணக்கிடுகிறது. இம்முறை கிறிஸ்து சகாப்தம் என்று
அழைக்கப் படுகிறது. கிமு கிபி என்ற சொற்கள்
மொத்தக் காலத்தையும் கிறிஸ்து பிறப்பைக்
கொண்டு இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.

9) கிரெகோரி காலண்டரின் ஆண்டு கணக்கிடும் முறை  கத்தோலிக்கச் சார்புடையது என்று கூறி பிற மதத்தவர்
அதை ஏற்க மறுத்தனர். குறிப்பாக, பிராட்டஸ்டண்டுகள்,
யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோர் கிறிஸ்து சகாப்தம்
என்ற பெயரை ஏற்கவில்லை. எனவே மதச்சார்பற்ற
ஒரு பெயரை உருவாக்க வேண்டிய தேவை
ஏற்பட்டது.

10) எனவே கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர்
கைவிடப் பட்டது. அதற்குப் பதிலாக, பொது சகாப்தம்
(Common Era) என்ற  புதிய பெயர் சூட்டப்பட்டது.
வானியல் அறிஞர் ஜோஹன்னஸ் கெப்ளர் 1615இல்
எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து பொது சகாப்தம்
(common era) என்ற சொல் எடுக்கப் பட்டது.

11) இருபதாம் நூற்ராண்டின் பிற்பகுதியில் இருந்து
பொது சகாப்தம் நடைமுறைக்கு வந்து விட்டது.
இதன்படி, கிமு, கிபி ஆகியவை கைவிடப் பட்டு,
அவற்றுக்குப் பதிலாக முறையே BCE, CE என்னும்
பெயர்கள் சூட்டப் பட்டன.
CE = Common Era பொது சகாப்தம்.
BCE = Before Common Era பொது சகாப்தத்திற்கு முன்.
  
12) ஆண்டைக் கணக்கிடும் முறை இரண்டிலும்
ஒன்றுதான். கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர்
அகற்றப்பட்டு பொது சகாப்தம் என்ற பெயர்
நடைமுறைக்கு வந்துள்ளது. மீதி அனைத்தும்
கிரெகோரி காலண்டரேதான்.

13) நடப்பாண்டான 2018ஐ பொது சகாப்தத்தில்
எப்படிக் குறிப்பிடுவது?
CE 2018. தமிழில் பொ.ச 2018.

14) அடுத்து நேரம். உலகம் முழுவதும் UTC நேரம்
(UTC = Universal Coordinated Time) பின்பற்றப் படுகிறது.

15) இதுதான் காலண்டரின் சுருக்கமான கதை.
இதை அனைவரும் அறிந்திட வேண்டும். உலகின்
அனைத்து மக்களும் ஏற்கின்ற, மதப் பிரிவுகளைக்
கடந்த எல்லோருக்கும் பொதுவான, அறிவியல் வழி
அவ்வப்போது திருத்தம் செய்யப் படுகிற ஒரு
காலண்டரை இன்று நாம் கொண்டிருக்கிறோம்
என்பதில் பெருமை அடைவோம்.
---------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 2100ஆம் ஆண்டு லீப் ஆண்டா?
வாசகர்கள் பதில் தருதல் வேண்டும்.
கிரெகோரி காலண்டரின் உயிர்நாடியே லீப் வருடம்
குறித்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம்தான். எனவே
இதை மனதில் கொண்டு, 2100 லீப் வருடமா இல்லையா
என்ற கேள்விக்கு வாசகர்கள் விடையளிக்க
வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறோம்
********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக