சனி, 20 ஜனவரி, 2018

மார்க்சியப் பார்வையில் அத்வைதம்
ஓர் எளிய அறிமுகம்! பகுதி-3.
-----------------------------------------------------------------
அத்வைதமும் சாங்கியமும்
-------------------------------------------------
இந்தியத் தத்துவஞானத்தைப் பொறுத்தமட்டில்
அதன் வரலாறு நெடுகிலும் பொருள்முதல்வாதமே
பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. கருத்து முதல்வாதம்
பிரதானமற்ற ஒரு மாற்றுத் தரப்பாகவே இருந்து
வந்தது.

இந்தியத் தத்துவஞானம் ஆறு தரிசங்களைக்
கொண்டிருந்தது. சாங்கியம், யோகம், வைசேஷிகம்
நியாயம்,  பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை
ஆகியவையே அவை. இவற்றுள் முதல் நான்கும்
பொருள்முதல்வாதப் பிரிவைச் சார்ந்தவை.பிந்திய
இரண்டு மட்டுமே கருத்து முதல்வாதப் பிரிவுகள்.

இந்தியத் தத்துவ  ஞானத்தில் முதலில் தோன்றியது
சாங்கியமே. கபிலர் சாங்கியத்தைத் தோற்றுவித்தார்
என்று கூறப்படுகிறது. பௌத்தத்திற்கும் முந்தியது
சாங்கியம் ஆகும். அது மட்டுமல்ல, இந்தியக்
கருத்து முதல்வாதத்திற்கும் முந்தியது சாங்கியம்.

வேதங்களுக்கு முந்தியது சாங்கியம் என்பதும்
தன் தத்துவ உள்ளடக்கத்துக்கு  வேதங்களிடம்
இருந்து எக்கடனும் பெறாதது சாங்கியம் என்பதும்
குறிப்பிடத் தக்கது. தீவிரமான கடவுள் மறுப்புத்
தத்துவம் சாங்கியம் என்பதையும் நாம் கணக்கில்
கொள்ள வேண்டும். நிரீஸ்வர சாங்கியம் என்று
சாங்கியம் குறிப்பிடப்பட்டது. இதன் பொருள்
கடவுளற்ற சாங்கியம் என்பதாகும்.

அத்வைதம் ஓர் ஒருமைத் தத்துவம் (monism). இதற்கு
மாறாக, சாங்கியம் இருமைத் தத்துவம் (dualism) ஆகும்.
சாங்கியம் கூறுகிறபடி, இந்தப் பிரபஞ்சம் இரண்டு யதார்த்தங்களைக் கொண்டது (two realities). 1. புருஷன்,
2. பிரகிருதி. புருஷன் என்றால் கணவன் என்று
பொருள் கொண்டு விடக்கூடாது. இங்கு புருஷன்
என்பது உணர்வு அல்லது சிந்தனை (consciousness)
என்றும், பிரகிருதி என்பது பருப்பொருள் (matter)
என்றும் பொருள்படும்.

அதாவது எங்கல்ஸ் கூறுகிற இருப்பும் உணர்வும்
(being and consciousness) என்பதே இது. மார்க்சியம் இன்று
கூறுகிற தத்துவத்தின் அன்றைய வடிவம் இது.
மேலும் ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற
முக்குணங்களையும்  கற்பித்தது சாங்கியம்.
இது ஆதிசங்கரரின் நிர்குண பிரம்மம் என்பதற்கு
எதிரானது.

ஆக இந்தியாவின் மிகவும் பழமையான பொருள்முதல்
வாதம் கபிலரின் சாங்கியமே என்பது பெறப்படுகிறது.
அடுத்து வந்த நியாயம் சாங்கியத்தை விட வலுவான
தர்க்க அடிப்படைகளைக் கொண்டிருந்தது.

யோகம் என்பதில் தத்துவச் செறிவு மிக மிகக்
குறைவு. உண்மையில் யோகம் என்பது பல்வேறு
பயிற்சி முறைகளின் தொகுப்பே. இப்பயிற்சி முறைகள்
குறைந்தது மூவாயிரம் ஆண்டுப் பழமை மிக்கவை.
கெளதம புத்தரே யோகப்பயிற்சிகளை மேற்கொண்டதாக
பல செய்திகள் கூறுகின்றன.

ஆரம்ப கால யோகத்தில் கடவுளுக்கு இடமில்லை.
பின்னாளில் ஆஸ்திகர்களைத் திருப்தி செய்யும்
பொருட்டு யோகத்தில் கடவுள் சேர்க்கப்பட்டார்.
எனினும் கடவுள் மனித அந்தஸ்துக்கு இணையான
ஒரு  அந்தஸ்துடன்தான் மேம்போக்காகச் செருகப்
பட்டார். எனவேதான் யோகம் என்பது மார்க்சிய
தத்துவ ஆசிரியர்களால் பொருள்முதல்வாதப்
பிரிவிலேயே தொடர்ந்து வைக்கப் படுகிறது

காலத்தால் பிற்பட்ட  பௌத்தமும் சமணமும்
பொருள்முதல்வாதக் கூறுகளைப் பெரிதும்
கொண்டிருந்தன. உலகத்தைப் படைத்தவர்
கடவுள் என்று பௌத்த சமண சமயங்கள்
கூறவில்லை. ஆபிரகாமிய மதங்களான
யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகியவை
படைப்புக் கோட்பாட்டைக் கொண்டவை. பௌத்தமும்
சமணமும்  படைப்புக் கோட்பாட்டை ஏற்பவை அல்ல.

ஆத்மா என்பதை அடியோடு மறுத்தவர் புத்தர்.
அவரின் "நிராத்ம வாதம்" (theory of no soul)
ஆத்மா இல்லை என்று விளக்குகிறது. அதே நேரத்தில்
சமணம் ஆத்மாவை ஏற்றுக் கொள்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் இந்தியத் தத்துவ ஞானத்தில்
பொருள்முதல்வாதம் ஆதிக்கம் செலுத்தியது
என்ற உண்மையை உணரலாம்.

இங்கு மார்க்சிய பொருள்முதல்வாதத்தை
பண்டைய பொருள்முதல்வாதப் பிரிவுகளுடன்
ஒப்பிட்டுப்  பார்க்கலாம்.மார்க்சுக்கு முந்திய பண்டையப்
பொருள்முதல்வாதப் பிரிவுகளில் முரண்பாடுகள்
இருந்தன என்பதைப் பார்த்தோம். எனவே மார்க்சியத்தின் பொருள்முதல்வாதத்தை மார்க்சும் எங்கல்சும்
முரணற்றதாக (consistent) உருவாக்கினர்
தம் காலத்தின் அறிவியல் வளர்ச்சியை முழுவதுமாக
உட்கிரகித்துக் கொண்டதே மார்க்சியப்
பொருள்முதல்வாதம் ஆகும். இதுவே அதன்
முரணற்ற தன்மைக்குக் காரணம்.

ஆக, தத்துவச் செறிவு மிக்க, தொன்மையான,
பாரம்பரியம் உடைய சாங்கியம் அத்வைதத்திற்கு
பெரும் சவாலாக விளங்கியது.பல்வேறு
பொருள்முதல்வாதப் பிரிவுகளின் தலைவனாகவும்
சாங்கியம் திகழ்ந்தது. அதாவது சங்கரரின் காலத்தில், பொருள்முதல்வாதத்தின் ஆஸ்தான மல்லராக
சாங்கியம் இருந்தது. எனவே சாங்கியத்தைக்
கண்டு அஞ்சியது அத்வைதம். அதைக் களத்தில்
சந்தித்து  முறியடிக்காமல் அத்வைதம்
வாழ முடியாது என்ற நிலை அன்று இருந்தது.

அத்வைதத்தின் மூல நூல் பிரம்ம சூத்திரம்
என்பதை ஏற்கனவே பார்த்தோம். பிரம்ம
சூத்திரத்தில், சாங்கியத்துக்கு பிரதான
முக்கியத்துவம்  அளித்து, அதை எதிர்த்து
அறுபது சூத்திங்கள் எழுதப்பட்டு உள்ளன.
ஆனால் மீதியுள்ள பிற தத்துவப் பிரிவுகள்
அனைத்தையும் எதிர்த்து எழுதப்பட்டது
கொஞ்சமே.

தத்துவ விவாதத்தில் சாங்கியத்தை எதிர்த்து
முறியடித்து விட்டதாக அத்வைதம் பெருமிதம்
கொண்டது. பொருள்முதல்வாதத்தின் ஆஸ்தான
மல்லரான சாங்கியத்தையே தாங்கள் தோற்கடித்து
விட்டதால், ஏனைய எல்லா மல்லர்களையும்
வீழ்த்தி விட்டதாகவே அர்த்தம் என்றார் ஆதிசங்கரர்.

சாங்கியத்திற்கும் அத்வைதத்திற்கும் நடந்த
இந்த முக்கியமான தத்துவப்போர் குறித்து எந்த
நூலும் தமிழில் இல்லை; எழுதப்படவும் இல்லை.
சாங்கியம் மட்டுமல்ல, பூர்வ மீமாம்சை உள்ளிட்ட
பிற தத்துவப் பிரிவுகளுடன் அத்வைதம் நடத்திய
ஆழமான எந்த விவாதம் பற்றியும் தமிழில் ஒரு
நூலும் இல்லை. எவராலும் எழுதப்படவில்லை.
********************
அத்வைதத்தை வீழ்த்திய விசிஷ்டாத்வைதமும் துவைதமும் !
----------------------------------------------------------------------------------------------------------
அத்வைதத்தை முதலில் தோற்கடித்தது
விசிஷ்டாத்வைதமே. இந்த முதல்
தோல்வியில் இருந்து அத்வைதத்தால் மீண்டெழ
முடியவில்லை. இது வரலாற்று உண்மை. தொடர்ந்து
மத்வரின் துவைதமும் தனது முதல் எதிரியாக
அத்வைதத்தை வைத்து அதைக் கடுமையாக
எதிர்த்தது. இவற்றால் அத்வைதம் தாக்குப்
பிடிக்க முடியாமல் தோற்று ஓடியது. இது
வரலாறு நிரூபித்த உண்மை.

ராமானுஜர் (1017-1137) விஷிஷ்டாத்வைதம் என்னும்
தத்துவத்தை முன்மொழிந்தார். இத்தத்துவமும் அத்வைதமே
என்ற போதிலும், இது விசேஷித்த அத்வைதம்
(சிறப்புப் பொருந்திய அத்வைதம்) என்று பெயரிடப்
பட்டது. புறவுலகம் மாயை என்ற சங்கரரின்
கருத்தை ராமானுஜர் நிராகரித்து, புறவுலகின்
உண்மையை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம்
அத்வைதத்தில் உள்ள அப்பாலைத்தன்மையை
(metaphysical) ,அகற்றினார். மேலும் சங்கரரின்
ஞான மார்க்கத்திற்குப் பதிலாக பக்தி மார்க்கத்தைப்
பரிந்துரைத்தார். ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
வேறு வேறு என்றார் ராமானுஜர். இப்படிச் சொல்வதன்
மூலம் இதில் ஒரு இருமை ஏற்படுகிறது. ஆனால்
இடைவிடாத பக்தியின் மூலம் ஜீவாத்மா முக்தி
அடைந்து பரமாத்மா என்னும் உன்னத நிலையை
எய்த இயலும் என்று ராமானுஜர் கூறுவதால்.
இதில் அத்வைதம் உருவாக்கி விடுகிறது. எனவேதான்
ராமானுஜரின் தத்துவம் சிறப்புப் பொருந்திய
அத்வைதம் எனப்படுகிறது..

அத்வைதம் ஞான மார்க்கத்தை போதித்தது.
மார்க்கம் என்றால் வழி என்று பொருள். அத்வைதம்
கூறும் உன்னத நிலையை ஒருவர் அடைய வேண்டும்
என்றால் அவர் அதற்கான ஞானத்தைப் பெற வேண்டும்.

இதற்கு மாறாக, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்
பக்தி மார்க்கத்தைப் போதித்தது. இடைவிடாத பக்தி
மூலம் விசிஷ்டாத்வைதம் கூறும் உன்னத நிலையை
ஒருவர் எய்த முடியும் என்றார் ராமானுஜர்.

ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகிய இரண்டில்
பக்தி மார்க்கமே எளிதானது; எல்லோராலும்
கடைப்பிடிக்க சுலபமானது. கோடிக்கணக்கான
மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் உழன்று
கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஞான மார்க்கத்தைப்
பின்பற்றி ஞானத்தை அடைவது எப்போது? இதற்கு
எத்தனை பேர் முன்வருவர்?

ஆனால் பக்தி மார்க்கம் சுலபமான வழி.இது மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த வழி. ஞானம் தேவையில்லை;
பக்தியே போதும்; பக்தி இருந்தாலே ஞானம் உட்பட
எல்லாவற்றையும் அடையலாம் என்று போதித்தார்
ராமானுஜர். இப்போதனை வெகுமக்களை எளிதில்
கவர்ந்தது. இதனால் அத்வைதத்தை விட
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர்கள்
பெருகினர். இவ்வாறு ராமனுஜர் அத்வைதத்தை
முறியடித்தார்.

எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய அத்வைதம்
ராமாநுஜரிடம் தன் முதல் தோல்வியைச் சந்தித்தது.
அன்று தொடங்கிய சரிவில் இருந்து இன்றுவரை
அத்வைதம் மீளவில்லை.

ராமானுஜர் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்,
13ஆம் நூற்றாண்டில் மத்வர் (1238-1317)பிறந்தார். இவர் துவைதம்
என்ற தத்துவத்தைத் தோற்றுவித்தார். ராமானுஜரை விட
சங்கரருடன் இவர் அதிகமாக முரண்பட்டவர். சங்கரின்
தத்துவம் அத்வைதம், அதாவது இரண்டல்ல ஒன்றுதான்
என்பது. மத்வரின் தத்துவம் எல்லாமே இரண்டுதான் என்பது.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு என்பதே
துவைதம் ஆகும். அதாவது கடவுளும் பக்தனும்
வேறானவர்கள் என்று பொருள். இவ்வாறு இருமையை
வலியுறுத்துவதால் மத்வரின் தத்துவம் துவைதம்
(இரண்டானது) என்று பெயர் பெற்றது.

தம் பங்குக்கு சங்கரரை அதிகமாகச்
சாடினார் மத்வர். மேலும் மத்வரும் மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த பக்தி மார்க்கத்தையே
போதித்தார். ஆக, ராமானுஜர், மத்வர் ஆகிய
இருவரின் தாக்குதலில் அத்வைதம் நிலைகுலைந்தது.
*************************
அத்வைதத்தைத் துடைத்தெறிந்த அயன் ராண்டு!
--------------------------------------------------------------------------------------------
அயன் ராண்ட் (Ayn Rand 1905-1982) என்பவர் ஒரு பெண்
எழுத்தாளர். இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
வாழ்ந்தவர். இவர் ஒரு நாவலாசிரியர். இவரின் பல
நாவல்களில் அ) The Fountainhead ஆ) Atlas shrugged ஆகிய
இரண்டு நாவல்களும் பெரும்புகழ் பெற்றவை.
இன்றளவும் உலகெங்கும்  இவ்விரண்டு நாவல்களும்
கொண்டாடப் படுகின்றன.

The Good Earth என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவரும்
இலக்கிய நோபல் பரிசு பெற்றவருமான பெர்ல் எஸ் பக்
(Pearl S Buck) போன்று அயன் ராண்ட்டை கருதக் கூடாது.
பெர்ல் எஸ் பக்கும் ஒரு பெண் எழுத்தாளரே.இவரின்
சம காலத்தவரே அயன் ராண்ட்.

மற்ற எழுத்தாளர்களுக்கும் அயன் ராண்டுக்கும்
மாபெரும் வேறுபாடு உண்டு.அயன் ராண்ட் ஒரு
தத்துவஞானியும் (philosopher) ஆவார்.இவரின் மகத்தான
தத்துவம் "புறவயவாதம்"(objectivism) ஆகும்.

இவரின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள இவரின்
Atlas shrugged மற்றும் The Fountainhead நாவல்களைப்
படிக்க வேண்டும். IIT, NITகளில் படிக்கும் ஒவ்வொரு
பொறியியல் மாணவனும் கண்டிப்பாக அன்று
முதல் இன்று வரை The Fountainhead நாவலைப்
படித்து வருகிறான். இந்நாவலின் கதாநாயகன்
ஹோவர்ட் ரோர்க் (Howard Roark) கட்டிடக்கலை
பயிலும் (B.Arch)  ஓரு கலகக்கார மாணவன்.
பழமைவாதத்தை சம்பிரதாயத்தை எதிர்த்து
உறுதியுடன் நின்று தன் சொந்த அறிவின் பலத்தில்
மகத்தான கட்டிடத்தை உருவாக்கியவன்.

புறவுலகம் என்னும் யதார்த்தமானது மனித
உணர்வுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக நிற்பது
என்கிறார் ராண்ட். இது பருப்பொருள் பற்றிய
லெனினின் வரையறையுடன் ஒத்து வருவது.

"I think therefore I am"--Rane Descartes என்ற தெ கார்த்தேவின்
கருத்துமுதல்வாதத்திற்கு மரண அடி கொடுக்கிறார்
ராண்ட்.

மனித உணர்வு என்பது புறநிலை மெய்மையை
(reality) அறிவதே தவிர அதை உருவாக்குவது அல்ல
என்கிறார் ராண்ட். மனிதனால் புறவுலகை,
மெய்மையை  அறிய முடியும் என்றும் மனித அறிவு
அதற்கான தகுதியை உடையது என்றும் கூறுகிறார்
ராண்ட். பகுத்தறிவின் மூலமே மனிதன் அறிவைப்
பெற முடியும் (Reason is man's only means of acquiring knowledge)
என்கிறார் ராண்ட்.

அறியொணாவாதத்தை நிராகரிக்கிறார் ராண்ட்.
மதங்களை, இயற்கைக்கு மீறிய ஆற்றலை,
(supernatural), கருத்துமுதல்வாதத்தின் உள்ளுணர்வு,
இமானுவேல் கான்ட் போன்ற தத்துவஞானிகள்
முன்வைத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட முற்றிலும்
அகவயமான (purely subjective) பிரக்ஞை ஆகியவற்றை
அடியோடு நிராகரிக்கிறார் ராண்ட். மதம் மனிதனுக்குத்
தேவையற்றது என்கிறார் ராண்ட்.

அயன் ராண்டின் புறவயவாதம் பற்றி முழுவதுமாக
இங்கு விவரிப்பதற்கு இல்லை. சுருங்கக் கூறின்,
புறவயவாதம் என்பது லட்சியபூர்வ
முதலாளித்துவத்தின் பொருள்முதல்வாதம் ஆகும்.
(materialism of the ideal capitalism)

ஆதிசங்கரருக்கும்  அயன் ராண்டுக்கும் என்ன
சம்பந்தம்? ஆதிசங்கரரின் அத்வைதத்தை தத்துவ
அரங்கில் முறியடித்தனர் அயன் ராண்ட் ஆவார்.
அயன் ராண்ட் அத்வைதம் பற்றி அறிந்திருக்கவில்லை
என்பது மெய்யே. ஆனால் கருத்துமுதல்வாதத்தின்
ஒவ்வொரு கூறையும் நேரில் களத்தில் முறியடித்தவர்
ராண்ட்.

ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது புலன்களாலும்
பகுத்தறிவாலும் அறிய முடியாத ஒன்று என்றால்,
அந்த பிரம்மம் பொய்யே என்கிறார் ராண்ட்.

பருப்பொருள் இயங்கும் விதிகளாலேயே
புறவுலகம் இயங்குகிறதே அன்றி எவருடைய
பிரக்ஞையாலும் அல்ல என்கிறார் ராண்ட்.

உணவின் ருசி அதைச் சாப்பிடும்போது தெரியும்
(The proof of the pudding is in eating) என்று ஒரு ஆங்கிலப்
பழமொழி உண்டு. அது போல அயன் ராண்டைப்
படித்தால்தான் அவரின் தத்துவத்தைப் புரிந்து
கொள்ள முடியும்.

ஆதிசங்கரரின் அத்வைதமும் அயன் ராண்டின்
புறவயவாதமும் வடதுருவம் தென்துருவம் போன்றவை.
தத்துவப்போரில்,சமகாலத்தில், அத்வைதம்
அயன் ராண்டால் வீழ்த்தப்பட்டு உயிர் துறந்து
விட்டது என்பதே உண்மை.

சமகாலத்தில், அத்வைதத்தை படித்தவர்களை
விட அயன் ராண்டை படித்தவர்கள் அதிகம். இன்றைய
இளைய தலைமுறையின் அறிவாளிப் பிரிவினருக்கு
அயன் ராண்ட் அறிமுகம் ஆனவரே எனவே அயன்
ராண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில்
ஆதிசங்கரருக்கு என்ன வேலை?

சமகால உற்பத்தியோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற
தத்துவம் அத்வைதம். சமகால உற்பத்திக்கு
எவ்விதத்திலும் பயன்படாத தத்துவம் அத்வைதம்.
அனால் அயன் ராண்ட் அப்படியல்ல.  உற்பத்தியோடு
நெருங்கிய தொடர்புடைய, உற்பத்தியை ஊக்குவிக்கிற
தத்துவம் ராண்டின் புறவயவாதம்.

அயன் ராண்டைக் குறிப்பிடாமல் அத்வைதம் பற்றிய
கட்டுரையோ நூலோ எழுதி விட முடியாது.
ராமன்-ராவணன், முருகன்-சூரபத்மன் என்பவை போல
ஆதிசங்கரரும் அயன் ராண்டும் பைனரிகள்.
வீழ்த்தியவர், வீழ்த்தப்பட்டவர், வீழ்த்தப்பட்ட பொருள்
மூன்றையும் ஒருசேரக் குறிப்பிடாமல் ஒரு கதை
முழுமை அடையாது.

அயன் ராண்டை குறிப்பிடுவதற்கு மேலும் ஒரு
முக்கிய காரணம் உண்டு. அத்வைத ஆதரவாளர்கள்
எந்தப் பிரிவு மக்கள் திரளிடம் (படித்த அறிவாளிப்
பிரிவினர், அறிவுஜீவி இளைஞர்கள்) அத்வைதத்தைக்
கொண்டு செல்கிறார்களோ அந்தப் பிரிவினர்
அயன் ராண்டை அறிந்தவர்களே. எனவே ஆதிசங்கரர்
(எதிர்) அயன் ராண்ட் (Advaita versus Objectivism) என்று
எதிர் எதிராக நிறுத்த வேண்டிய தேவை
பொருள்முதல்வாதிகளுக்கு இருக்கிறது.

ஆதிசங்கரரும் சரி, அயன் ராண்டும் சரி, மேட்டுக்
குடியினரால் ஆராதிக்கப் படுகிறவர்கள்.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் துலுக்காணத்துக்கும்
ஆதிசங்கரரையும் தெரியாது; அயன் ராண்டையும்
தெரியாது.  இரண்டுமே elite philosophy! என்றாலும்
அயன் ராண்டிடம் உள்ள முற்போக்குக் கூறுகளில்
ஒன்றுகூட ஆதிசங்கரிடம் கிடையாது. அதீதமான
அப்பாலைத் தத்துவம் அத்வைதம்; முதலாளித்துவத்தின்
ஒரு பிரிவினருக்கு நன்கு பயன்படும் தத்துவம்
புறவயவாதம்.

அத்வைதம்  செயலூக்கமற்ற ஒரு தத்துவம்.
மனிதனைச் செயலுறுத்த அத்வைதம் பயன்படாது.
வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்த
உப்புப்புளி மிளகாய்க்கான போராட்டமே இல்லாத
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மேட்டுக்குடியினருக்கான
தத்துவம் அத்வைதம். அத்வைதம் ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம்.
********************
அத்வைதம் பின்நவீனத்துவமா?
--------------------------------------------------------
அத்வைதம் பின்நவீனத்துவம் அல்ல. மாறாக
அது முன்புராதனத்துவம் ஆகும். இரண்டும் ஒன்றல்ல.
இரண்டுக்கும் ஓட்டோ உறவோ கிடையாது.

ஒரு தத்துவத்தை அது பிறந்த காலத்தின் சமூகச்
சூழல்களே தோற்றுவிக்கின்றன. அத்வைதம் கி.பி
எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய
கீழைத்தத்துவம் (oriental philosophy). பின்நவீனத்துவம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட
சமூகச் சூழல்களில் ஐரோப்பாவில் பிறந்த
மேலைத் தத்துவம் (western philosophy).

இளமைப் பருவத்தில் இருந்த  இந்திய நிலவுடைமைச்
சமூகம் வளர்ந்து கொண்டிருந்தபோது, அத்வைதம்
தோன்றியது. முதலாளித்துவம் உச்சகட்ட வளர்ச்சியை
அடைந்து ஏகாதிபத்தியமாக மாறியிருந்த காலத்தில்
பின்நவீனத்துவம் தோன்றியது.

முதலாளித்துவம் என்றால் என்ன என்றே
ஆதிசங்கரருக்குத் தெரியாது. தமது இந்திய சமூகம்
பின்னாளில் முதலாளித்துவ சமூகமாக மாறும் என்று
கூட அவருக்குத் தெரியாது. ஆன்மிகம் (spiritualism)
என்ற ஒரு துறையைத் தவிர வேறு எதிலும் அத்வைதம்
நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால்
பின்நவீனத்துவம் அப்படியல்ல. அது வாழ்வியலின்
அனைத்துத் துறைகளிலும் தலையிட்டது.

ஆதிசங்கரர் என்ற தனியொரு தத்துவஞானியின்
சிந்தனையும் போதனைகளும் மட்டுமே அத்வைதம்
ஆகும். ஆனால் பின்நவீனத்துவம் என்பது பல்வேறு
காலக் கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள்
முன்மொழிந்த கோட்பாடுகளின் தொகுப்பாகும்.
இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற
வேறுபாடுகள்.

தத்துவப் பரிசீலனையில், தத்துவத்தின் உள்ளமைப்பும் கட்டுமானமும் (structure and architecture) எப்படி
இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். ஒரு
தத்துவத்தைத் தீர்மானிக்கிற அம்சம் இதுதான்.

பிரம்மம் என்ற ஒற்றை மூலத்தை ஒற்றை மையத்தை
மட்டுமே கொண்டது அத்வைதம். அதில் விளிம்புக்கோ
பன்மைத்துவத்திற்கோ இடமில்லை. அது முற்றிலுமான
ஒருமைவாதம் (monism). பின்நவீனத்துவம் என்பது
மையம்-விளிம்பு போன்ற பல்வேறு இருமைகளில்,
இரண்டு இரட்டைகளுக்கும் வேறுபாடு இருக்கக்
கூடாது என்று வலியுறுத்தும் தத்துவம். மேலும் அது
பன்மைத்துவத்தை (pluralism) வலியுறுத்தும் தத்துவம்.
பின்நவீனத்துவம் வலியுறுத்துகின்ற எதற்கும்
அத்வைதத்தில் இடமில்லை.

பிரம்மம் என்பதே பிரபஞ்சத்தின் ஒரே உண்மை;
பேருண்மை என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின் இக்கருத்தை  பின்நவீனத்துவம் மூர்க்கமாகவும்
இகழ்ச்சியுடனும் நிராகரிக்கிறது. ஒரே உண்மை,
முழு உண்மை என்று மட்டுமல்ல உண்மை என்ற
ஒன்றே கிடையாது என்பதுதான் பின்நவீனத்துவத்தின்
சாரம். இந்தப் பிரபஞ்சத்தில், ஒன்றுக்கொன்று
சமமான, ஒன்றையொன்று சார்ந்த  பல்வேறு
கோட்பாடுகள் (theories) உண்டே தவிர,
உண்மை (truth) என்ற ஒன்று கிடையாது என்பதுதான்
பின்நவீனத்துவம். பொருள்முதல்வாதமும்
உண்மையல்ல; கருத்துமுதல்வாதமும் உண்மையல்ல;
இரண்டும் சம மதிப்புள்ள வெறும் கோட்பாடுகளே
என்பதுதான் பின்நவீனத்துவம். எல்லாக் கோட்பாடுகளும்
அனுமானங்களே தவிர உண்மையல்ல என்கிறது
பின்நவீனத்துவம்.  There is no truth at all என்பதுதான்
பின்நவீனத்துவம். இதை அத்வைதிகள் ஒத்துக்
கொள்வார்களா?

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் "சோஷலிசம்" விமர்சிக்கப்பட்டது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.

பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
சேதாரத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட
தத்துவம். ஆனால் மார்க்சியத்தைச் சவாலுக்கு
அழைக்கும் அளவுக்கு அத்வைதம் வலிமையானதல்ல.
***********************
அத்வைதம் ஒரு நழுவல்வாதம் (philosophy of escapism)!
--------------------------------------------------------------------------------------
மக்களின் ஆதரவு இல்லாமல் மங்கிப்போன
அத்வைதம் அறிவுஜீவிகளின் ஒரு குறுகிய வட்டத்தில்
மட்டுமே செல்வாக்குடன் இருந்தது. பரந்துபட்ட
மக்களின் ஆதரவு (following) அத்வைதத்திற்கு இல்லை.
அத்வைதம் என்பது அறிவுஜீவிகளின் தத்துவம்
(philosophy of intellectuals). அது ஒரு தந்தக் கோபுரத் தத்துவம்.
அது என்றுமே பாமர மக்களின் தத்துவமாக
இருந்ததில்லை. பாமர மக்களின் உலகியல்
பிரச்சினைகளுக்கு அத்வைதத்தில் ஒரு தீர்வும் இல்லை.

மார்க்சியம் நடைமுறையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் ஒரு தத்துவம் (It is a philosophy in practice).
ஆனால் அத்வைதமோ வரலாற்றில் மட்டுமே
வாழுகிற தத்துவம்.

எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரான அறிவியலின் வளர்ச்சியானது அத்வைதத்தில் பிரதிபலிக்கவில்லை.
அத்வைதம் ஒரு தேங்கிய குட்டை. அசுரத் தனமான
அறிவியல் வளர்ச்சியில் இருந்து தன்னை
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு, அதன்
விளைவாக வழக்கு வீழ்ந்த தத்துவம் அத்வைதம்.
இன்னும் சொல்லப் போனால், அத்வைதம் ஒரு
முன்னாள் தத்துவம். அது நவீன உலகின்
தத்துவம் அல்ல.

பொருள்முதல்வாதம் 2500 ஆண்டுத் தொன்மை
மிக்கது. மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு
முன்பே உலகெங்கும் பொருள்முதல்வாதம்
தத்துவங்களின் அரசனாக இருந்தது. காலந்தோறும்
அது வளர்ந்து கொண்டே இருந்தது. மார்க்ஸ்
முன்வைத்த பொருள்முதல்வாதம் அக்கால
அறிவியலின் சாரத்தை உட்கிரகித்துக் கொண்ட
பொருள்முதல்வாதம்.நியூட்டனின் இயற்பியலை
முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்ட, நன்கு
வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாதம். .

ஆனால் அத்வைதமோ எட்டாம் நூற்றாண்டின்
கால எல்லைக்குள் முடங்கிப்போய், காலந்தோறும்
வளர்ச்சி அடையாமல், நவீன அறிவியலை
உள்வாங்காமல், தேங்கிய குட்டையாக ஆகிப்போன
தத்துவம்

இந்தியாவின் கோடிக்கணக்கான
தொழிலாளர்கள் நடுவே, உழைக்கும் பெண்கள்
நடுவே,விவசாயிகள் நடுவே அத்வைதத்திற்கு
எவ்விதமான அறிமுகமோ செல்வாக்கோ கிடையாது.

அத்வைதம் சிறுபான்மையினரான மேட்டுக்குடிகளின்
தத்துவம் (elite philosophy). அது ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம். உயர்குடிப் பெண்களின் லேடீஸ் கிளப்
தத்துவம். பட்டுச் சேலைக்கு மேல் ஒட்டியாணம்
அணிபவர்களின் தத்துவம். அவர்கள் அதை
ஆராதிக்கட்டும்.

சமகால இந்தியாவின் பொருள் உற்பத்திக்கு
அத்வைதம் பயன்படுமா? இந்தக் கேள்விக்கான
விடையே, அத்வைதத்தால் ஆதாயமா என்ற
கேள்விக்கும் விடையாகும்.

சமகாலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும்
அத்வைதம் சமூகத்தின் பொருள் உற்பத்தியை
ஊக்குவித்தது இல்லை. ஏனெனில் அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவம் அல்ல.
It is a passive philosophy. புறவுலகை  ஒட்டுமொத்தமாக
நிராகரிக்கும் அத்வைதம் புறவுலகின் அனைத்துப்
பிரச்சினைகளையும் கூடவே நிராகரிக்கிறது.
கோடிக்கணக்கான மக்களின் லெளகீக
வ்யவஹாரங்களை (உலகியல் சிக்கல்களை)
அத்வைதம் கண்டு கொள்ளவே இல்லை
பிரச்சினைகளின் இருப்பையே அத்வைதம்
அங்கீகரிக்காதபோது, பிரச்சினைகளுக்கு
அதில் தீர்வு எப்படி இருக்க முடியும்?

இந்த விஷயத்தில் பௌத்தம் அத்வைதத்துடன்
கடுமையாக முரண்படுகிறது. மக்களின்
துன்பத்திற்கு என்ன காரணம் என்று ஆழ்ந்து
சிந்தித்தார் புத்தர். அந்தச் சிந்தனையின் விளைவே
பௌத்தம்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று
கண்டறிந்தார் புத்தர். இந்த உலகின் பிரச்சினைகளுக்கு
இந்த உலகிலேயே தீர்வு கூறினார் புத்தர்.
மறு உலகில் கிட்டப்போகும் சொர்க்கமே தீர்வு
என்ற மதங்களின் போலித் தீர்வை நிராகரித்தவர்
புத்தர். புத்தரைப் போன்று ஆதிசங்கரர் மக்களின்
துன்பத்திற்குக் காரணம் என்ன என்று
சிந்திக்கவில்லை. மிகவும் வசதியாக புறவுலகையே
நிராகரித்ததன்  மூலம், உலகியல் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் நெருக்கடியில் இருந்து  தப்பித்துக்
கொண்டவர் ஆதிசங்கரர். ஆக, அத்வைதம் ஒரு
நழுவல்வாதத் தத்துவம் (philosophy of escapism).
****************************************************************
பகுதி-3 முற்றியது.
-------------------------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக