பிற்சேர்க்கை:
---------------------------
மார்க்சியத்தில் அறம் இல்லையா?
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------
மார்க்சியம் ஒரு மகத்தான தத்துவம். அது தத்துவம்
மட்டுமல்ல, மாபெரும் தரிசனமும் ஆகும்.
எந்தவொரு தத்துவத்திலும் அறம் இருத்தல்
வேண்டும். அறமில்லாத தத்துவம் பயனற்றது.
ஆனால் மார்க்சியம் என்னும் மாபெரும்
தத்துவத்தில் அறம் இல்லை என்று கூறப் படுகிறது.
தன்னுள் அறத்தைக் கொண்டிராத தத்துவமாக
மார்க்சியம் இருக்கிறது என்கிறார்கள் மார்க்சியத்தை
விமர்சிப்பவர்கள். ஒரு தத்துவத்திற்கு அறம் தேவை
என்பது சரியே.
பௌத்தமும் சமணமும் மதங்கள் மட்டுமல்ல;
அவை தத்துவங்களும் ஆகும். பௌத்த சமண
மதங்களில் அறம் உண்டு.கொல்லாமை, புலால்
உண்ணாமை, எவ்வுயிர்க்கும் தீங்கு எண்ணாமை
உள்ளிட்ட அறங்களை அவை போதிக்கின்றன.
வைணவம் எனப்படும் விசிஷ்டாத்வைத
தத்துவத்திலும் அறம் உண்டு. கைங்கரியம் என்னும்
அறத்தை வைணவம் கொண்டுள்ளது.
காந்தியத்திலும் அறம் உண்டு. காந்தியம்
கூறும் அஹிம்சையே ஒரு மகத்தான .அறம்தான்.
எளிமை, நுகர்வு மறுப்பு ஆகியனவும் காந்திய அறங்களே.
அறம் என்ற ஒன்றே இல்லாத ஒரு தத்துவம் இந்தியாவில்
உண்டென்றால், அது ஆதிசங்கரரின் அத்வைதமே.
ஆம், அத்வைதத்தில் அறம் எதுவுமே கிடையாது.
இத்தகைய அறம் எதுவும் மார்க்சியத்தில் உண்டா?
பரிசீலிப்போம். மார்க்சியத்தில் அறம் உண்டா
என்ற கேள்விக்குப் பதில் கூறுமுன் அறம் குறித்து
வள்ளுவர் கூறும் ஒரு முக்கியக் கோட்பாட்டை
அறிந்து கொள்ள வேண்டும்.
யாரினும் கூடுதலாக அறம் பற்றிப் பேசியவர்
வள்ளுவர். முப்பால் எனப்படும் திருக்குறளில்
முதல் பாலே அறத்துப்பால்தான்.
"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை"
என்கிறார் வள்ளுவர்.
"பல்லக்கில் சுகமாக உட்கார்ந்து இருப்பவனுக்கும்,
தோள் வலிக்கப் பல்லக்கைச் சுமப்பவனுக்கும்,
இந்த இருவருக்கும்
பொதுவான அறம் என்பது கிடையாது". இதுதான்
இக்குறளின் பொருள்.
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
கிடையாது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே வள்ளுவர் சொல்லி விட்டார். இதைத்தான்
காரல் மார்க்சும் கூறுகிறார்.
மார்க்சியத்தில் அறம் உண்டு. ஆனால்
எல்லோருக்கும் பொதுவான அறம் என்பது
மார்க்சியத்தில் இல்லை. அப்படி எல்லோருக்கும்
பொதுவான அறம் என்பது பித்தலாட்டமே.
இணக்கம் காண முடியாத அளவுக்கு வர்க்கப்
பகைமை முற்றிப் போயுள்ள ஒரு சமூக அமைப்பில்
எல்லோருக்கும் பொதுவான அறம் எப்படி
இருக்க இயலும்?
பல்லக்கில் உட்கார்ந்து இருப்பவனுக்கான
அறம் வேறு. பல்லக்கைச் சுமப்பவனுக்கான
அறம் வேறு.
மார்க்சியம் கூறுகிற அறம் பாட்டாளி
வர்க்கத்துக்கான அறம். அது அனைத்து
வர்க்கங்களுக்குமான அறம் அல்ல.
மார்க்சியம் கூறுகிற அறம் சமத்துவம் ஆகும்.
சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற, அடிமைத்தனமற்ற
ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அறம் சமத்துவமே .
அந்த அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.
அந்த அறமே சமத்துவத்தைப் படைக்கும் அறம்;
சுரண்டலை ஒழித்து விடுதலையைத் தரவல்ல அறம்.
எனவே மார்க்சியத்தின் அறம் இல்லை என்பது
நகைப்புக்கு உரிய கூற்று.
------------------------------------------------------------------------------------------
வள்ளுவரும் இயேசுவும் கூறும் அறமும்
மார்க்சியம் கூறும் அறமும்!
----------------------------------------------------------------
தமிழ்நாடு அறம் வளர்த்த பூமி. கற்கத் தொடங்கும்
ஒரு தமிழ்க் குழந்தை முதலில் அறத்தைத்தான்
கற்கிறது."அறம் செய விரும்பு" என்ற ஒளவையின்
ஆத்திசூடியுடன்தான் குழந்தையின் கல்வி
தொடங்குகிறது.
ஆத்திசூடி கொன்றைவேந்தன் மட்டுமல்ல திருக்குறள்
உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
அனைத்துமே அறநூல்கள்தாம். உலகின் வேறெந்த
பகுதியையும் விட தமிழகமே அறநூல் செழுமையிலும்
அறத்தொடு நிற்றலிலும் முதலிடத்தில் உள்ளது. எனவே
தமிழ்மண்ணில் அறம் குறித்த ஓர்மை விஞ்சி நிற்பதில்
வியப்பில்லை.
மேற்கூறிய அறநூல்கள் கூறும் அறம் அனைத்தும்
தனிமனித ஒழுக்கத்தைக் கற்பிப்பவை. ஒவ்வொரு
சூழலிலும் ஒரு தனிமனிதன் எங்ஙனம் நடந்து
கொள்ள வேண்டும் என்று இந்நூல்கள் தனிமனித
நடத்தையை வரையறுக்கின்றன.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார் வள்ளுவர். இது தனிமனிதனுக்குக்
கற்பிக்கப்படும் ஒழுக்க நெறி; தனிமனித அறம்.
வலது கன்னத்தில் அடித்தால் நீ உன் இடது
கன்னத்தையும் காட்டு என்கிறார் இயேசு.
உன்னைப் போலவே உன் அண்டை
வீட்டுக்காரனையும் நேசி என்கிறார் மேலும் இயேசு.
ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்ற வேண்டிய
அறக்கோட்பாடே இது.
இத்தகைய தனிமனித ஒழுகலாறுகள் மார்க்சியத்தில்
உள்ளனவா? தனிமனித நடத்தை குறித்த அறத்தை
மார்க்சியம் போதிக்கிறதா? மார்க்சியத்தைப் பின்பற்றுவோருக்கான அறபோதனை என்ன?
பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப்
பட்டவர்கள் என்றார் ஸ்டாலின்.
(The communists are of a special mould). இதன் பொருள் என்ன?
எந்த நிலையிலும் கட்சி நலனுக்கு, புரட்சியின்
நலனுக்கு, மக்களின் நலனுக்கு தன் சொந்த நலனைக்
கீழ்ப்படுத்துபவனே கம்யூனிஸ்ட் என்று இதற்குப்
பொருள்.மக்களின் நலனுக்குக் கீழாகவே
தன் குடும்ப நலனை தன் சொந்த நலனை எப்போதும்
வைப்பது என்பதுதான் கம்யூனிஸ்டுகளுக்குப்
போதிக்கப்பட்ட தனிமனித அறம்; ஒழுகலாறு.
உலக வரலாற்றில் இதற்கு பல்லாயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்தியாவில்
நக்சல்பாரி வரலாற்றிலேயே இதற்கு ஆயிரம்
உதாரணங்களைக் காட்ட முடியும். இந்திய
அரசு தூக்கிலிட்ட பூமையா, கிஷ்ணா கவுடா
ஆகிய தோழர்களை நினைத்துப் பாருங்கள்.
இவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக
முதன் முதலில் தூக்கிலிடப்பட்டவர்கள்
இவர்கள் இருவருமே. மார்க்சியத்தையும்
பாட்டாளி வர்க்க அறத்தையும் உயர்த்திப்
பிடித்தபடி, தூக்குமேடையில் தியாகிகளான
இவர்களின் அறம் மார்க்சியம் கற்பித்த அறம்
அல்லவா?
சிகாகோவின் மேதினத் தியாகிகள் நால்வரும்
இந்தியாவில் பகத்சிங்கும் பற்றி ஒழுகியது
மார்க்சிய அறம் அல்லவா? இவர்கள் அனைவரும்
தங்களின் சொந்த நலனை கீழேயும் மக்களின்
நலனை மேலேயும் வைத்தனரா இல்லையா?
மார்க்சியத்தில் அறம் இல்லை. மார்க்சியர்களுக்கு
என்று தனிமனித ஒழுகலாறுகள் எதையும்
மார்க்சியம் கற்பிக்கவில்லை என்று
சொல்கிறார்களே மார்க்சிய எதிரிகள். அதில்
உண்மை துளியும் இல்லை என்பதையே மேற்கூறிய
உதாரணங்கள் நிரூபிக்கின்றன.
புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, எவ்வுயிர்க்கும்
தீங்கு எண்ணாமை என்பன போன்ற நடைமுறை
சாத்தியமற்ற செயற்கையான அறம் பற்றி
மார்க்சியம் பேசவில்லைதான். ஆனால் இத்தகைய
அறம் எதனினும் உயர்ந்த அறத்தை அல்லவா
மார்க்சியம் போதித்துள்ளது! சுயநலத்தைத் துற,
பொதுநலனைப் பேண் என்று கூறும் மார்க்சிய
அறத்தை விட உயர்ந்த அறம் வேறு எதுவும் உள்ளதா?
மதங்களும் நீதிநூல்களும் கூறும் அறம் முழுவதும்
தனிமனித அறமே. சமூக அறம் பற்றி எந்த மதமோ
நீதிநூல்களோ கூறியதில்லை. சமூக அறம்
என்பது மொத்த சமூகத்துக்குமான அறமாகும்.
இது கூட்டுத்தன்மை (collective but not individualistic)
வாய்ந்த அறமேயன்றி தனிமனித நடத்தைக்கான
அறமல்ல.
ஆனால் உலகில் எந்த மதத்திலும் நீதிநூலிலும் சமூக
அறம் பற்றி எதுவுமே இல்லை. அஷ்டாங்க மார்க்கத்தை
(எட்டு ஒழுக்க நெறிகள்) கூறுகிற பெளத்தம்
சமூக அறம் பற்றி எதையும் கூறவில்லையே ஏன்?
ஆனால் மார்க்சியம் மட்டுமே சமூக அறம் பற்றிப்
பேசுகிறது. தனிமனிதனுக்கான அறத்தை மட்டுமின்றி
சமூகம் முழுமைக்குமான அறத்தைப் பற்றிப்
பேசும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே.
மனைவியை வைத்துச் சூதாடினான் தருமன்.
இது தனிமனித அறம் குன்றல் ஆகும்.
செய்யாத குற்றத்துக்காக அநீதியாக
கொலையுண்டான் கோவலன். செய்தியறிந்த
கண்ணகி "பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும்
உண்டுகொல்" என்றும் "சான்றோரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்" என்று அழுது
புலம்புகிறாள். மதுரையைத் தீவைத்து எரிக்கிறாள்.
மதுரை மாநகரில் சமூக அறம் குன்றியிருக்கிறது
என்று கருதினாள் கண்ணகி. தவறு கண்ட இடத்து
அதைத் தட்டிக் கேட்பது சமூக அறம். அவ்வாறு
தட்டிக் கேட்பதன் மூலமே தவறு நிகழாமல்
தடுக்க முடியும். ஆனால் மதுரைச் சமூகத்திடம்
அந்த அறம் இல்லை. சமூக அறம் குன்றியதன்
விளைவே கோவலன் படுகொலை என்று கருதுகிறாள்
கண்ணகி. சமூக அறம் குன்றிய மதுரையை
கண்ணகி தண்டிக்கிறாள்.
ஆக தனிமனித அறமும் வேண்டும், சமூக அறமும்
வேண்டும் என்பதை மேற்கூறிய உதாரணம்
மூலம் நன்கறியலாம். மதங்கள் அல்ல, மார்க்சியம்
மட்டுமே தனிமனித அறம், சமூக அறம் ஆகிய
இருவித அறம் பற்றிப் பேசுகிறது. மார்க்சியம் கூறும்
சமூக அறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.
உலகில் இதுவரை நிலவிய எந்தவொரு சமூக
அமைப்பையும் விட அறத்தில் சிறந்து விளங்கும்
சமூக அமைப்பு மார்க்ஸ் கனவு கண்ட கம்யூனிச
சமூக அமைப்பே.
---------------------------------------------------------------------------------------
வேட்டுவச் சமூகத்தின் அறமும்
வேளாண்மைச் சமூகத்தின் அறமும்!
----------------------------------------------------------------------------
அறம் என்பது அந்தரத்தில் இருந்து வருவது அல்ல.
ஆயின் அறத்தின் தோற்றுவாய் எது? அறத்தின்
தோற்றுவாய் உற்பத்தி முறையே. ஒரு குறிப்பிட்ட
காலத்தில் ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையைப்
பொறுத்தே அச்சமூகத்திற்கான அறம் தோன்றுகிறது.
தமிழ்ச் சமூகம் தொடக்கத்தில் வேட்டுவச் சமூகமாகவே
இருந்தது. வேட்டையாடி விலங்குகளைக் கொன்று
தின்று உயிர் வாழ்வதே அச்சமூக வாழ்வியல்.
வேட்டையே அச்சமூகத்தின் உற்பத்தி முறை.
விலங்குகளின் இறைச்சி உணவாகவும், விலங்குகளின்
தோல் ஆடையாகவும், விலங்குகளின் கொம்பு, பற்கள்
ஆகியவை கருவிகளாகவும் பயன்பட்டன.
"பொன்னார் மேனியனே புலித்தோலை
அரைக்கசைத்து" என்ற தேவாரப் பாடல்
இதை உணர்த்தும்.
காலம் மாறியது. குறிஞ்சி நிலத்தில் வளம்
குன்றியவுடன் மக்களில் சிலர் முல்லை நிலம்
நோக்கிப் பெயர்ந்தனர். காடு திருத்திக் கழனி
ஆக்கினர். விலங்குகளைக் கொன்று தின்பதற்குப்
பதில், அவற்றை மனித உழைப்புக்குத் துணையாகப்
பயன்படுத்தலாம் என்று அச்சமூகம் அறிந்து
கொண்டது. வேட்டுவச் சமூக வாழ்க்கை மாறி
கால்நடைச் சமூக வாழ்க்கை தோன்றியது.
வரலாற்றின் இக்காலக் கட்டத்துச் சமூகம்
மேய்ச்சல் சமூகம் (pastoral society) எனப்பட்டது.
வேட்டுவச் சமூக அறம் என்பது
கொலை புரிதல் ஆகும். கால்நடைச் சமூக
அறம் என்பது கொல்லாமை ஆகும். சமூகம்
மாறியபின் அறமும் தலைகீழாய் மாறி விட்டது.
ஒரு பசுவைக் கொன்று தின்றால் அக்குடும்பத்திற்கு
அது ஒரு நாள்உணவு மட்டுமே. ஆனால் அப்பசுவைக்
கொல்லாமல் வளர்த்தால், ஓராண்டுக்கான
உணவாக பசுவின் பால் அக்குடும்பத்திற்குப்
பயன்படுகிறது.
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.
"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் மேலும். இங்கு "வள்ளல்
பெரும் பசுக்கள்" என்ற சொல்லாட்சியைக்
கவனிக்கவும்.
திருப்பாவை முழுவதும் மேய்ச்சல் சமூக
வாழ்வியலை தத்ரூபமாகப் படம் பிடித்துக்
காட்டும் இலக்கியமாகும். ஒரு வரலாற்றியல்
பொருள்முதல்வாதிக்கு திருப்பாவை ஒரு
மாபெரும் தரவுச் சுரங்கம் ஆகும்.
(மானுட சமூக வரலாற்றில் நாகரிகம் அடைந்த
முதல் சமூகம் மேய்ச்சல் சமூகமே. தமிழகம்
மட்டுமல்ல இந்தியாவிலும் மொத்த உலகத்திலும்
இதுவே உண்மை. "மாயோன் மேய காடுறை
உலகமும்" என்னும் தொல்காப்பிய நூற்பா
முல்லை நிலக் கடவுளாக திருமாலைக்
கூறுகிறது. இந்தியாவில், ஆட்டிடையன் என்று
கூறப்படும் கண்ணனே ( கிருஷ்ணன்) மேய்ச்சல்
சமூக மக்களின் கடவுளாக இருந்தான்.
யூதர்கள் தங்களின் கடவுளாக ஒரு மேய்ப்பனையே
வரித்துக் கொண்டனர்.
"கர்த்தர் என் மேய்ப்பனாக இருக்கிறார். அவர்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து அமர்ந்த
தண்ணீரண்டை இளைப்பாறச் செய்கிறார்"
என்கிறது விவிலியம்
புராதன பொதுவுடைமைச் சமூகம் வேட்டுவச்
சமூகமே. அங்கு சமத்துவம் நிலவியது என்ற
போதிலும், அச்சமூகம் காட்டு மிராண்டி
வாழ்க்கை முறையைத்தான் கொண்டிருந்தது;
நாகரிகம் எய்தவில்லை).
ஆக சமூகத்தின் உற்பத்தி முறையைப் பொறுத்தே
அச்சமூகத்திற்கான அறமும் அச்சமூகத்தின்
தனிமனித அறமும் அமையும் என்ற பேருண்மை
இங்கு நிறுவப்பட்டுள்ளது.
அதே நேரத்தில்.அறம் என்பது இயற்பியல்
விதிகள் போன்று துல்லியம் உடையது அல்ல.
அறம் என்பது எழுதப்படாத சட்டம் என்று புரிந்து
கொள்ள வேண்டும்.
மார்க்சியத்தில் அறம் இல்லை என்று கூறுவோர்
அறம் பற்றிய மார்க்சியப் புரிதலை அறியாதோரே.
எல்லாக் காலத்துக்கும் பொருந்துகின்ற, எல்லாருக்கும்
பொருந்துகின்ற அறம் என்று ஒன்று இல்லவே இல்லை.
எனவேதான் மார்க்சியம் இருவேறு சமூக
அமைப்பிற்கான இருவேறு அறம் பற்றிக் கூறுகிறது.
முதலாளிய சமூகத்திற்கான அறமும்
கம்யூனிச சமூகத்திற்கான அறமும் வேறு வேறானவை
என்று மார்க்சியம் கூறுகிறது.
---------------------------------------------------------------------------------------------
வன்முறை அறம் ஆகுமா?
----------------------------------------------
அறம் என்பது இதமான உபதேசத்துக்கு உரிய
எளிய கோட்பாடுகளின் தொகுப்பு மட்டுமே
என்று கருதுவது பிழைபட்ட புரிதல்.
திருடாதே என்று அறத்தை உபதேசிப்பதால்
மட்டும் திருட்டு ஒழிந்து விடாது என்று மார்க்சியம்
கருதுகிறது. திருட்டு என்றால் என்ன என்று
எங்கல்ஸ் விளக்குகிறார்:
"சுரண்டல் சமூக அமைப்பை எதிர்த்து,
இல்லாதவர்கள் தெரிவிக்கும் கண்டனத்தின்
முதல் அடையாளம்தான் திருட்டு" என்கிறார் எங்கல்ஸ்.
(Theft is the first sign of protest of the have nots against the exploitative
society).
எனவே திருட்டுக்குக் காரணமான சொத்துடைமை
சமூக அமைப்பை மாற்றாமல் திருட்டை ஒழிக்க
முடியாது என்று மார்க்சியம் கருதுகிறது. எனவே
சொத்துடைமை ஒழிப்பு என்னும் நோக்கத்தைச்
செயல்படுத்தவல்ல அறமாக பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை அது முன்வைக்கிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வன்முறை
அல்லவா? வன்முறையானது எப்படி அறமாகும்
என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முற்றிலும்
வன்முறையை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு
முறைமை என்று கருதுவது பேதைமை ஆகும்.
ஒரு முதலாளிய சமூக அமைப்பானது
முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைக்
கொண்டிருக்கிறது. அதே போல, பாட்டாளி வர்க்கம்
ஆளும் வர்க்கமாக மாறும்போது,அது முதலாளிய
வர்க்கம் இதுவரை அனுபவித்து வந்த அனைத்து
அதிகாரங்களையும் ரத்து செய்து விடுகிறது.
சகல அதிகாரமும் பாட்டாளி வர்க்கத்துக்கே என்பதுதான்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும். எல்லார் மீதும்
வன்முறை என்று இதற்குப் பொருளல்ல.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வன்முறையை
ஆராதிக்கும் முறைமை அல்ல. எனினும் முற்றிலும்
வன்முறையைச் சாராதது என்றும் கூறி விட முடியாது.
நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் 1950களில், வட
இந்தியாவில் மத்திய அரசு அலுவலகங்களில்
தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதற்காக
தனியான பானைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மேல்சாதி ஊழியர்களுக்கான பானையில் இருந்து
தாழ்த்தப்பட்ட ஊழியர் தண்ணீர் அருந்த முடியாது.
இவ்வளவுக்கும் எல்லாமே மண்பானைகள்தான்.
உயர்சாதி ஊழியர்கள் அறத்தொடு நின்றுதான்
தாழ்த்தப் பட்டோருக்குத் தனிப்பானை வைத்தனர்.
தனிப்பானைக்கு சாஸ்திர சம்மதம் உண்டு.
தீண்டாமையைப் பேண வேண்டும் என்பதே
உயர்சாதியினரின் அறம். இந்த அறம் தாழ்த்தப்
பட்டோருக்கு நியாயம் வழங்குமா?
அன்றைய மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராமின்
கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
தாழ்த்தப் பட்டோருக்கான தனிப்பானைகளை
உடைத்தெறியுங்கள் என்று அவர் உத்தரவிட்டார்.
பானை என்பது அரசின் சொத்து. அரசின் சொத்தை
உடைத்தெறிவது வன்முறைதான். ஆயினும் இந்த
எளிய வன்முறைக்குப் பிறகுதான், ஒரே பானையில்
இருந்து அனைவரும் தண்ணீர் அருந்தும்
சமத்துவம் பிறந்தது.
கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு
வரியில் பதில் சொல்வதானால், தனிச் சொத்துடைமையை
ஒழிப்பது (abolition of private property) என்று கூறலாம்.
சோவியத் ஒன்றியத்தில் (ரஷ்யாவில்), சீனாவில்,
கியூபாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைந்ததும்
எல்லா விதமான தனிச் சொத்துடைமையையும்
ஒழித்து உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது
மார்க்சியம்..
தனிச்சொத்துடைமையை ஒழிப்பதுதான்
மார்க்சியத்தின் பிரதான இலக்கு என்று ஆகும்போது
அதற்கேற்ற அறத்தைத்தான் மார்க்சியம் கொண்டிருக்க
முடியும். அந்த அறம்தான் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம். இது மார்க்சியம் கூறும் சமூக அறம்.
ஒவ்வொருவரும் உழைத்து உண்ண வேண்டும்
என்பது மார்க்சியத்தின் தனிமனித அறம்.
இதற்கு மாறாக, வர்க்க சமரசத்தை இலக்காகக்
கொண்டுள்ள அனைத்து மதங்களும் தங்களின்
இலட்சியத்துக்கு ஏற்ற அறத்தையே கொண்டுள்ளன.
பெளத்தம், சமணம், கிறிஸ்துவம் உள்ளிட்ட
எந்தவொரு மதமும் தனிச் சொத்துடைமையை
ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல.
எனவே அவர்கள் போதிக்கும் அறம் வன்முறையற்ற
அறமாகும். பகைமை கொண்ட வர்க்கங்களை
சமரசப் படுத்துவதன் மூலமாக, சமூகக்
கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் நோக்கம்
கொண்டதே மதங்களின் அறம் ஆகும். இத்தகைய
பொருந்தா அறத்தை உச்சிமேல் சுமந்து கொண்டு,
மார்க்சியத்தின் அறம் இதுபோல மென்மையாக
இல்லையே என்று புலம்புவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை அல்லவா?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்லாயிரக் கணக்கான
முழுநேர ஊழியர்களைப் பாருங்கள். எளிய
வாழ்க்கைக்கும் கண்ணியமான நடத்தைக்கும்
அவர்கள் எடுத்துக் காட்டுகளாகத் திகழவில்லையா?
மகாத்மா காந்தி மட்டும்தான் எளிமைக்கு உதாரணமா?
கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்
மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்
என்று பாடினாரே சுப்பாராவ் பாணி கிரஹி!
காந்தியை விஞ்சிய எளிமையுடன் கம்யூனிஸ்டுகள்
வாழவில்லையா?
கீழ்த்தஞ்சையில் எளிய விவசாயக் கூலிகளுடன்
இணைந்து, அவர்களின் குடிசையிலேயே தங்கி,
அவர்கள் தரும் உணவையே உண்டு, சவுக்கடி
சாணிப்பால் கொடுமைகளை ஒழித்தாரே மகத்தான
கம்யூனிஸ்ட் தோழர் சீனிவாச ராவ்!
சீனிவாச ராவை முன்மாதிரியாகக் கொண்டு
வாழ்ந்து மடிந்த எத்தனையோ கம்யூனிஸ்ட்கள்
இன்றும் அப்பகுதி மக்களின் இதயங்களில்
வாழ்கின்றனரே!
1948 தெலுங்கானா ஆயுத எழுச்சியிலும், வசந்தத்தின்
இடிமுழக்கமாக இந்திய வானில் உதித்த நக்சல்பாரிப்
புரட்சியிலும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள்
இன்னுயிரைத் துறந்து தியாகிகள் ஆயினரே!
அறமே இல்லாத வறட்டுத் தத்துவமாக மார்க்சியம்
இருக்குமேயானால், இவ்வளவு தியாக சீலர்களை
தனது அணியில் மார்க்சியம் கொண்டிருக்க முடியுமா?
"ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக இருப்பது எப்படி?"
(How to be a good communist?) என்று புத்தகம் எழுதினாரே
சீனத்தின் லியோ சாச்சி! அந்தப் புத்தகம் மார்க்சியத்தின்
அறநூல் இல்லையா?
மக்கள் கூடி வாழ்ந்து, பொதுவான ஒரே உணவுக்
கூடத்தில் சமைத்து உண்டு, ஓரிடத்தில் கூடி வாழும்
கம்யூன்கள் சீனா முழுவதும் மாவோவின்
காலத்தில் அமைக்கப்பட்டனவே! இது மார்க்சிய
அறத்தின் வெளிப்பாடு இல்லையா? தனிச்
சொத்துடைமை ஒழிந்த பின், எத்தகைய நீதி
போதனைகளாலும் அறன் வலியுறுத்தல்களாலும்
ஒழிக்க முடியாத குற்றங்கள் சோஷலிச நாடுகளில்
வெகுவாகக் குறைந்தனவே, அது எதனால்
சாத்தியமானது?
எனவே மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது
வெற்றுக் கூச்சலே தவிர உண்மையல்ல. மார்க்சிய
அறம் செவிப்பறைகளில் தங்கிக்கொண்டு
மூளைக்குச் செல்லாமல் மடிந்து விடும் அறமல்ல.
மாறாக அது மானுடத்தைச் செயலுறுத்தும் அறம்.
அது உலகை மேன்மையுறுத்தும் அறம். அது
சமத்துவத்தின் அறம்; சமரசத்தின் அறமல்ல.
--------------------------------------------------------------------------------------
கம்யூனிச சமூகத்தின் உன்னத அறம்!
-------------------------------------------------------------------
தனிச் சொத்துடைமையை ஒழிப்பது என்ற நோக்கத்துக்கு
ஏற்ற அறத்தை ஒரு முதலாளிய சமூகத்தில்
மார்க்சியம் கொண்டிருக்கிறது. எனினும் இந்த
அறம் எல்லாக்காலத்துக்கும் பொருந்துகிற அறமல்ல
என்பதை மார்க்சியம் தெளிவுறுத்துகிறது.
சோஷலிச சமூகத்திலும் வர்க்கங்கள் இருக்கும்.
எனவே அரசு எந்திரமும் சோஷலிச சமூகத்தில்
இருந்தே தீரும். மானுடம் பக்குவம் அடைந்து
சோஷலிசக் கட்டத்தைக் கடந்து கம்யூனிச சமூக
அமைப்புக்குள் செல்லும்போது அங்கு வர்க்கங்கள்
இருக்காது. அரசும் இருக்காது. எனவே அங்கு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் இருக்காது.
கம்யூனிச சமூகத்தின் அறமே வேறு. அது மானுடத்தின்
உன்னதங்களை வசப்படுத்திக் கொண்டிருக்கும்.
கம்யூனிச சமூகத்தில் இனிய வாழ்க்கையானது
சமூகத்தின் சகல பகுதி மக்களுக்கும் உறுதி
செய்யப்பட்டு இருக்கும். கம்யூனிஸ்ட் அறிக்கையில்
மார்க்சும் எங்கல்சும் கூறிய பொன்னுலகம் அது.
அதற்கான அறத்தை அச்சமூகமே உருவாக்கும்.
****************************************************************
முற்றும்
-------------------------------------------------------------------------
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக