அத்வைதப் பாலைவனம்
----------------------------------------------
உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் அறம்
பற்றிக் கூறுகின்றன; அறத்தை வலியுறுத்துகின்றன.
மதங்கள் மட்டுமன்றி உலகில் தோன்றிய பல்வேறு
தத்துவங்களும் தம்முள் அறத்தைக் கொண்டுள்ளன.
திருக்குறளின் முப்பால்களில் அறத்துப் பாலும்
அதில் அறன் வலியுறுத்தல் என்று ஒரு அதிகாரமும்
உள்ளது.
ஆனால் ஆதி சங்கரர் தம் அத்வைதத்தில் அறம்
பற்றி எதுவுமே கூறவில்லை. அறம் எதுவுமற்ற
தத்துவமாகவே அத்வைதத்தை உருவாக்கியுள்ளார்
ஆதிசங்கரர். அறம் எதுவும் இல்லாத பாலைவனமே
அத்வைதம்.
ஆதிசங்கரரின் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த
சமண பௌத்த மதங்களும் சரி, சங்கரருக்குப்
பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்ற
மதங்களும் சரி தமது நோக்குநிலையில் இருந்து
அறத்தை, தனிமனித ஒழுகலாறுகளை வலியுறுத்தின.
புத்தரின் பஞ்சசீலம் ( ஐந்து ஒழுக்கம் ) மற்றும்
அஷ்டாங்க மார்க்கம் (எட்டு வகைப்பாதை)
ஆகியவை பௌத்தம் வலியுறுத்தும் அறமாகும்.
1) கொல்லாமை 2) பொய்யாமை 3)களவு செய்யாமை
4) பிழையுறு காமம் தவிர்த்தல் 5) கள்ளுண்ணாமை
ஆகியவற்றை பஞ்சசீலமாக புத்தர் அறிவித்தார்.
நல்ல நோக்கம், நல்ல தீர்மானம், நல்ல பேச்சு,
நன்னடத்தை, நல்வாழ்க்கை, நன்முயற்சி,
நல்லுளப்பாங்கு, நற்கவனம் ஆகிய எட்டு
நன்னெறிகளே புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் ஆகும்.
சமணம் கூறிய அறம் இதனினும் கூடுதலான
கடுங்கோட்பாட்டுத் தன்மை உடையது.
புழு பூச்சிகளுக்குக்கூட ஆன்மா உண்டு என்று கருதியது
சமணம். எனவே ஒரு மூட்டைப்பூச்சியை
நசுக்குவதைக்கூட சமண அறம் அனுமதிப்பதில்லை.
சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வாழ்வதே
சைவர்களுக்கு விதிக்கப்பட்ட அறம். சைவர்கள்
சிவனடியார்க்குத் தொண்டு செய்த வரலாற்றை
விவரிப்பதே சேக்கிழாரின் பெரிய புராணம்.
இத்தகைய அறத்தையோ அல்லது இவற்றில்
இருந்து வேறுபட்ட அறத்தையோ சங்கரர்
போதிக்கவில்லை. ஒவ்வொரு ஜீவாத்மாவும்
பிரம்மத்தை உணர்ந்து, தானே பிரம்மம்
ஆகி விடுவதுதான் அத்வைதத்தின் நோக்கம்.
என்றாலும், அந்த உயர்ந்த நோக்கத்தை
அடையவல்ல வழிமுறையையோ அல்லது அந்த
நோக்கத்தை நிறைவேற்ற உதவும் அறம்
பற்றியோ சங்கரர் உபதேசிக்கவில்லை.
அதை அவரவரின் சிந்தனைக்கே விட்டு விட்டார்
சங்கரர். இதன் மூலம் சிந்தனையின் உச்சபட்ச
அந்தஸ்தை உறுதி செய்கிறார் சங்கரர்.
எந்த சட்ட திட்டத்திற்கோ விதிமுறைகளுக்கோ
அல்லது கட்டுப்பாட்டுக்கோ அத்வைதிகளை
சங்கரர் உட்படுத்தவில்லை. சாராம்சத்தில்
இதில் ஒருவகையான அராஜகவாதம் (anarchism)
இருப்பதை நாம் காண வேண்டும்.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று
சர்வ சுதந்திரமாகத் திரியும் போக்கை
குட்டி முதலாளித்துவமும், தாராளவாத
முதலாளித்துவமும் விரும்பும். அறம் எதுவுமற்ற
அராஜகத்திற்கு இடமளிக்கும் அத்வைதம் இந்த
வர்க்கங்களை ஈர்ப்பதில் வியப்பில்லை.
தாம் வாழ்ந்த காலத்தில் ஆதிசங்கரர் பிற தத்துவப்
பிரிவினருடன் வாதத்தில் ஈடுபட்டார். பக்தி
மார்க்கத்தைச் சேர்ந்த பூர்வ மீமாம்சகரான
மண்டன மிஸ்ரர் என்பவருடன் நடைபெற்ற
விவாதத்தில் ஆதிசங்கரர் வென்றார்.
அத்வைதத்தைப் பரப்ப நாடெங்கும் நான்கு
இடங்களில் மடங்களை அமைத்தார். வடக்கே
பத்ரிநாத் (உத்தரகாண்ட்), தெற்கே சிருங்கேரி (கர்நாடகம்),
கிழக்கே பூரி (ஒடிஷா), மேற்கே துவாரகை (குஜராத்).
அம்மடங்களுக்கு பீடாதிபதிகளையும் நியமித்தார்.
தாம் வாதில் வென்ற மண்டன மிஸ்ரரையே
துவாரகை மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார்.
மிக்க இளம் வயதிலேயே, தமது 32ஆம் வயதில்,
பொது சகாப்தம் 820இல் ஆதிசங்கரர் மறைந்ததாகச்
செய்திகள் கூறுகின்றன. இவரின் பிறப்பு
பொது சகாப்தம் 788 ஆகும். என்றாலும் இவை
உறுதி செய்யப்பட்ட தகவல்களாக இல்லை.
சங்கரரின் காலத்தில் இந்து மதம் ஆறு பிரிவுகளாக
இருந்தது என்றும் இந்த ஆறு பிரிவுகளையும்
சங்கரர் ஒன்றிணைத்தார் என்றும் ஒரு வரலாற்றுச்
செய்தி உள்ளது. இதனாலேயே அவர் "ஷண்மத
ஸ்தாபகர்" என்று அழைக்கப் பட்டார் என்றும்
அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. (ஷண்= ஆறு)
சைவம் (சிவன் கடவுள்),
வைணவம் ( திருமால் கடவுள்) ,
காணபத்தியம் (விநாயகர் கடவுள்),
கெளமாரம் (குமரன் அதாவது முருகன் கடவுள்),
சாக்தம் ( சக்தி அதாவது அம்மன் கடவுள்),
செளரம் (சூரியன் கடவுள்)
ஆகிய ஆறு பிரிவுகளையே சங்கரர் ஒன்றிணைத்தார்
என்பது செய்தி.
என்றாலும் இந்த ஒன்றிணைப்பு வலுவானதாக இல்லை.
சங்கரருக்குப் பின்வந்த ராமானுஜர் வைணவத்தை
அத்வைதத்தின் பிடியில் இருந்து விடுவித்துக்
கொண்டு சென்று விட்டார். ராமானுஜர் பிரித்துக்
கொண்டு சென்ற இந்தப் பிரிவு இன்றும் தென்கலை
வைணவமாக நீடிக்கிறது.
இந்தியாவில் தோன்றிய பெளத்தம் ஆசியா முழுவதும்
பரவியது. ஆனால் பௌத்தம் போன்று அத்வைதம்
வெளிநாடுகளில் பரவவில்லை. அது இந்திய
எல்லைக்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடந்தது.
ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப்
பின்னரான ஓரிரு நூற்றாண்டுகளிலும் மட்டுமே
அத்வைதம் களத்தில் இருந்தது. ராமானுஜரும்
மத்வரும் தோன்றி தங்களின் மதங்களை நிறுவிய
பின்னர், அவர்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல்
அத்வைதம் வீழ்ந்தது.
அத்வைதம் அறம் எதையும் போதிக்காமல்
இருந்ததும், வெகுமக்களால் எளிதில் புரிந்து
கொள்ளவோ பின்பற்றவோ இயலாத ஞான
மார்க்கத்தைக் கொண்டிருந்ததும் அதன்
அப்பாலைத் தன்மையும் அத்வைதத்தின்
வீழ்ச்சிக்குக் காரணங்கள் ஆகும்.
காலப்போக்கில் மக்களின் ஆதரவு குறைந்து
கொண்டே வருவதை ஆதிசங்கரர் நிறுவிய
நான்கு மடங்களின் பிற்காலப் பீடாதிபதிகள்
உணர்ந்தனர். எனவே அத்வைதத்தைத் தக்க
வைக்கும் பொருட்டு, அதில் இல்லாமல் இருந்த
பக்தி, சடங்குகள், வழிபாட்டு முறைகள்
ஆகியவற்றைப் புகுத்தினர். இந்தப்போக்கு
பல நூற்றாண்டுகளாக நீடித்தது.
இதன் விளைவாக இன்று நாம் காணும் அத்வைதம்
பெரிதும் உருமாறி சைவத்தின் ஒரு பிரிவாக உள்ளது.
ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களும் இன்றும்
உள்ளன; செயல்படுகின்றன.
ஆனால் அதன் பீடாதிபதிகள் அத்வைதத்தை அல்ல
சைவத்தையே உபதேசிக்கின்றனர். ஆதிசங்கரரால்
நிறுவப்படாத மடமான ஜெயேந்திரர் தலைமையிலான
காஞ்சி மடம் பற்றி தமிழர்கள் நன்கறிவார்கள். இது
வைணவத்துக்கு மாற்றான சைவ மடங்களில்
ஒன்றாக, அதுவும் பார்ப்பன சைவப் பிரிவாக
உள்ளதேயன்றி அத்வைத மடமாக இல்லை என்பது
அனைவரும் அறிந்ததே. இவ்வாறு சங்கரரின்
அத்வைதம் பல்வேறு காலக்கட்டங்களில்
வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி இன்று
சைவமாக அறியப் படுகிறது.
ஆதிசங்கரரைப் பின்பற்றும் அத்வைதிகள்
ஸ்மார்த்தர்கள் எனப்பட்டனர். ஸ்ருதி, ஸ்மிருதி
என்னும் இரண்டும் இந்து மதத்தின் மூல ஆதாரங்கள்.
நான்கு வேதங்களே ஸ்ருதி. வேத விளக்கங்களே ஸ்மிருதி.
ஸ்மிருதி என்னும் சொல்லில் இருந்தே ஸ்மார்த்தம்
பிறந்தது. எனினும் ஸ்மார்த்தர்கள் என்ற அடையாளம்
மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை. பார்ப்பன
சைவப் பிரிவினராகவே அத்வைதிகள் மக்களால்
அறியப் படுகின்றனர்.இதுவே அத்வைதம் சிறுத்துச்
சுருங்கிய வரலாறு.
------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக