திங்கள், 29 ஜனவரி, 2018

நூலாசிரியர் முன்னுரை
-------------------------------------------
கணந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் உலகில்,
காலத்தின் ஊடே இடையறாது தன்னைப் புதுப்பித்துக்
கொண்டே இருக்கும் தத்துவம் மட்டுமே நிலைக்கும்.
பின்பற்றுவோர் இல்லாமல்  ஒரு புள்ளியாகச்
சுருங்கிவிட்ட ஆதரவுப் பிரதேசத்தை உடைய
தத்துவமோ வரலாற்றில் மட்டுமே வாழும்.
அவ்வாறு வரலாற்றில் வாழ்கிற தத்துவமே
ஆதிசங்கரரின் அத்வைதம்.

சிந்தனையின் மாட்சியைச் சிறப்பிக்கிற அத்வைதம்
கருத்துமுதல்வாதத்தின் உச்சமாகும். என்றாலும்
இன்று நமக்குக் காணக் கிடைக்கிற அத்வைதம்
ஆதிசங்கரரின் மூல அத்வைதம் அல்ல. பேணுவார் இன்றி
கால ஓட்டத்தில் சிதைந்தும் சிதிலம் அடைந்தும்
புதர் மண்டிக் கிடக்கும் ஒரு புராதன ஆலயம் போன்றதே
இன்றைய அத்வைதம்.

அத்வைதம் பிறந்த எட்டாம் நூற்றாண்டில் மட்டுமே
அதன் பிரகாரத்தில் ஜனத்திரள் நிறைந்து இருந்தது.
அதன் பிறகு வந்த காலமெல்லாம் அதற்குத்
தேய்பிறையே. பரந்துபட்ட மக்களால் அத்வைதம் போற்றப்படவில்லை என்பதையே  அதன் வரலாறு
காட்டுகிறது.

அத்வைதம் போதித்த அதன் ஞான மார்க்கமும்
புறவுலகை மறுக்கும் அதன் அப்பாலைத் தன்மையும்
(metaphysical nature) எளிய மக்கள் அதை நெருங்க
முடியாமல் வேலியிட்டன. எனவே தலையில்
ஒளிவட்டம் சுமந்த மேன்மக்களுக்கு மட்டுமேயான
தத்துவமாக அத்வைதம் மிளிர்ந்தது.

இன்று நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், பல்கலைக்
கழகங்களின் ஆய்வரங்கப் பாடுபொருளாக மட்டும்
அத்வைதம் திகழ்கிறதே அன்றி, தத்துவ அரங்கில்
மக்களின் நாயகனாக அத்வைதம் வலம் வரவில்லை.

மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் நெஞ்சம் கவர்ந்த
அத்வைதம் பாமர மக்களுக்கு இன்றும் நெருஞ்சியே.
அத்வைதம் பற்றி அறிந்தோர் சிலரே எனும்போது
அத்வைதம் குறித்த விமர்சனப் பார்வைக்கு
ஏது இடம்?

இந்தச் சூழலில் அத்வைதம் குறித்த அறிமுகத்தையும்
அது குறித்த மார்க்சியப் பார்வையையும் இச்சிறு
நூல் ஒருங்கிணைத்து வழங்குகிறது. கருத்தியல்
தளத்தில், அருவமான அத்வைதம் உழைக்கும்
வர்க்கத்துடன் எப்போதும் சமருக்கு வரும். எனவே
அத்வைதத்தைக் களத்தில் சந்திக்கும் தேவையைக்
கொண்ட இடதுசாரிகளுக்கு அவர்களின் கரங்களில்
இந்நூல் வாளாகச் சுழலும்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவனின்
உடலுறுப்பு வேறு ஒருவனுக்குத் தானமாக
வழங்கப் படுவது போல, அத்வைதத்தின்
கருத்துமுதல்வாதத்தை தானமாகப் பெற்ற
பிற தத்துவங்கள் பொருள்முதல்வாதத்தைப்
போருக்கு அழைக்கும். அப்போது ஒரு
கருத்தாயுதமாக இந்நூலின் தேவை விளங்கும்.

அந்த நோக்கில் 50 பக்க அளவிலான இச்சிறு நூல்
ஆக்கப் பட்டுள்ளது. அறிவுஜீவிகளிடம் செல்வாக்குப்
பெற்றுள்ள தத்துவம் அத்வைதம். எனவே அவர்களின்
அத்வைத ஆதரவு வாதங்களை இந்நூல் அறிவியலைக்
கொண்டு எதிர்கொள்கிறது.

அதே நேரத்தில் அத்வைதம் பற்றி அறிந்திராத
பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் அத்வைதத்தின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை எடுத்துக் காட்டி
எச்சரிக்கை செய்கிறது.

ஆட்டோ ஓட்டுனர் முதல் ஐஐடி மாணவர் வரை
எதிரெதிர் துருவங்களில் நிற்கும் இரு சாராரின்
எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு ஒரு நெடிய
வீச்சு (long range) கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.
எனினும் அத்வைதம் குறித்த ஓர் எளிய அறிமுகத்தைத் 
தருவது என்பதுதான் இந்நூலின் வரம்பு என்பதையும்
வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
அத்வைதம் குறித்த பழமைவாதப் பார்வையை
மறுத்து, சமகாலத்தின் நவீனப் பார்வையை
இந்நூல் முன்வைக்கிறது. வழுக்கு மரத்தில்
ஏறுகையில் தொடர்ந்து ஏற முடியாமல் சறுக்கிக்
கொண்டே கீழிறங்கிய அத்வைதத்தின் வரலாற்றை
இந்நூலில் சரியாகவே சுட்டுகிறது. உலகின்
பிற தத்துவங்களுடன் அத்வைதம் ஒப்பிடப்பட்டு
அதன் ஒப்பீட்டு மதிப்பு வெளிப்படுத்தப் படுகிறது.

சுருங்கக்கூறின் பாட்டாளிக்கும் படிப்பாளிக்கும்
ஒருங்கே பயன் தருமானால் இச்சிறுநூல் தன்
பிறவிப் பயனை எய்தும்.

பி இளங்கோ சுப்பிரமணியன்
நூலாசிரியர்.
சென்னை, நாள்: 28.01.2018
தொடர்புக்கு: ilangophysics@gmail.com
----------------------------------------------------------------------------------  



..        








 




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக