சனி, 20 ஜனவரி, 2018

மார்க்சிய பார்வையில் அத்வைதம்
ஓர் எளிய அறிமுகம்!
பகுதி-2
--------------------------------------------------------------
அத்வைத மகா வாக்கியங்கள்
--------------------------------------------------------------
ஆதிசங்கரர் பிரம்மத்தை அவரின் சொற்களில்
வர்ணிப்பதைப் பார்ப்போம்.

1) பிரம்மம் ஒன்றே உண்டு; அது ஆதி அந்தமற்றது;
அளவு கடந்தது; சோதி மயமானது; அதுவன்றி
வேறொன்று இல்லை.

2) அறிவானந்தமாய, தனக்கென ஒரு செயலற்றதாய்
உள்ள பிரம்மம் ஒன்றே உண்டு.

3) எப்பொருட்கும் உள்ளாய, புறம்பாய, உடனாய்
உள்ள பிரம்மம் ஒன்றே உண்டு.

4) எல்லாமாய் தனக்கொரு சார்பு இல்லாததாய்
உள்ள பிரம்மம் ஒன்றே.

5) குணம் குறி கடந்ததாய், ஏகனாய், மலரகிதனாய்
உள்ள பிரம்மம் ஒன்றே.
( மலரகிதனாய்= குற்றமற்றதாய்)

6) மனத்தால் அறிய முடியாததாய், வாக்கு மன
அதீதமாய் உள்ள பிரம்மம் ஒன்றே.

7) உண்மைப் பொருளாய் சோதி ரூபமாய்
ஒப்புயர்வு அற்றதான பிரம்மம் ஒன்றே.
(பார்க்க: விவேக சூடாமணி சுலோகம் 463-469).

ஏகத்துவமான நிர்குண பிரம்மம் தவிர வேறு
எதுவுமே இப்பிரபஞ்சத்தில் உண்மையில்லை
என்னும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம்
மிகத் தீவிரமான ஓர் அப்பாலைத் தத்துவம்
(highly metaphysical). மிகவும் அரூபமானதும்
புரிந்து கொள்ளக் கடினமானதுமான தத்துவம்..
(highly abstract and overly theoretical).

அறிதல், அறிபடு பொருள், அறிபவன் ஆகிய
இம்மூன்றும் ஒன்றே என்கிறது அத்வைதம்.
அஹம் பிரம்மாஸ்மி என்பது அத்வைத மஹா
வாக்கியங்களில் ஒன்று. இது உபநிடதத்தில்
இருந்து எடுக்கப்பட்டது. நான் பிரம்மமாக
இருக்கிறேன் என்று இதற்குப் பொருள்.
அதாவது நான் கடவுளாக இருக்கிறேன் என்று
இதற்குப் பொருள் கொள்ளலாம். உலகிலுள்ள
ஒவ்வொரு உயிரும் கடவுளே என்றும் பொருள்
கொள்ளலாம்.

தத்வமஸி என்பதும் இன்னொரு அத்வைத மஹா
வாக்கியம். இதன் பொருள் "நான் அதுவாக (பிரம்மம்)
இருக்கிறேன்"  என்பது. அதாவது மனிதனாகிய
ஜீவாத்மா கடவுளாகிய பரமாத்மாவாக இருக்கிறான்
என்று பொருள். இந்த மஹா வாக்கியங்கள் அனைத்தும்
ஒருமையைத் தீவிரமாக வலியுறுத்துபவை.
ஒருமை மட்டுமே இப்பிரபஞ்சத்தில் இருக்கிறது
என்று கூறும் அத்வைதம் இருமை, மும்மை, பன்மை
ஆகிய அனைத்தையும் முரட்டடியாக நிராகரிக்கிறது.

மக்களின் லௌகீக வாழ்க்கைக்கும் ( material life)
ஆன்மிக வாழ்க்கைக்கும் (spiritual life) பெரும்
இடைவெளியை ஏற்படுத்தும் தத்துவம் இது.
எனவே இது பரந்துபட்ட மக்களுக்கானது அல்ல.
இது சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கான
(elite) தத்துவம். சராசரி மக்கள் அத்வைதம் கூறுகிற
ஞான மார்க்கத்தை புரிந்து. ஏற்றுக்கொண்டு,
பின்பற்றுவது என்பது சாத்தியமற்றது.

தத்துவம் என்பது உலகை விளக்கும் (interpreting the world).
கடமையைக் கொண்டது.எந்தவொரு தத்துவமும்
மக்களின் பார்வையில் இருந்து உலகை விளக்க
வேண்டும். அது மக்களால் எளிதில் புரிந்து
கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கணத்திற்குச்
சற்றும் பொருந்தி வராதது அத்வைதம்.

ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும்!
--------------------------------------------------------------------
அத்வைதம் பற்றிப் பேசுகையில், அயர்லாந்து
நாட்டைச் சேர்ந்த பெர்க்லி பாதிரியார் நம்
அக்கறைக்கு உரியவர் ஆகிறார். பெர்க்லி
பாதிரியார் (Bishop George Berkeley 1685-1753) பதினெட்டாம்
நூற்றாண்டின் தத்துவஞானி.

Great men think alike என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு.
இதற்கு இணங்க ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும் 
ஒரே மாதிரியாகச் சிந்தித்தார்கள். சரி சமமான 
அத்வைத சிந்தனை!

எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கரரும், அவருக்கு
ஆயிரம் ஆண்டுகள் பிந்திய பதினெட்டாம்
நூற்றாண்டின் பெர்க்லி பாதிரியாரும் ஒரே
வகையான கருத்து முதல்வாதத்தை வெவ்வேறு
காலக்கட்டத்தில் பெற்றெடுத்தார்கள்; முற்றிலும்
சுயேச்சையாக, ஒருவரை ஒருவர் சாராமல்.
மேற்கத்திய தத்துவ ஞானம் கீழ்த்திசை நாடுகளின்
தத்துவ ஞானத்திற்கு காலத்தால் பிந்தியதே
என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

மார்க்சிய மொழியில் கூறுவதானால், ஆதிசங்கரரின்
அத்வைதமும் பெர்க்லி பாதிரியாரின் தத்துவமும்
அகநிலைக் கருத்து முதல்வாதம் (subjective idealism)
என்று வகைமை பெறும். எப்படி என்று பார்ப்போம்.

புறவுலகம் (objective world) என்பது உண்மையில்
நின்று நிலவவில்லை (does not exist) என்பதைத்தான்
ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும் ஒரே குரலில்
கூறுகின்றனர். மனத்தைச் சாராத (mind independent reality)
யதார்த்தம் என்பது இல்லை என்கின்றனர்
இருவரும்.

பொருள் என்பது மனத்தைச் சார்ந்தது; மனத்தைச்
சாராமல் பொருள் இருக்க முடியாது என்று
அடித்துக் கூறுகின்றனர் இருவரும். பொருளின்
நிலைக்களன் மனமே; மனமே பொருள் நின்று
நிலவுகிற களம்; மனத்தின் எல்லைக்கு
அப்பால் பொருள் நின்று நிலவுவதில்லை.
மனத்தைத் தாண்டிய எந்த இருப்பும் பொருளுக்கு
இல்லை. ஆக மொத்தத்தில் மனமே பிரதானம்;
பொருள் என்பது இரண்டாம்பட்சமே. சகலமும்
மனமே. அதாவது அனைத்தும் கருத்தே;
அனைத்தும் சிந்தனையே.பொருள் என்பது சிந்தனைக்குக் கட்டுப்பட்டது; பொருள் என்பது சிந்தனைக்குக் கீழ்ப்பட்டது.

பொருள் என்பதற்கு எவ்விதமான பௌதிக இருப்பும்
(physical existence) கிடையாது; பொருளுக்கு மானசீக
இருப்பு மட்டுமே உண்டு. ஆதிசங்கரர் மற்றும்
பெர்க்லி பாதிரியாரின் அகநிலைக்
கருத்துமுதல்வாதம் என்பது இதுதான்.

ஆதிசங்கரர் பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை
முன்மொழிகிறார். பெர்க்லி பாதிரியார் அப்படி
எந்த ஒரு பிரம்மத்தையும் முன்மொழியவில்லை.
சிற்சில வேறுபாடுகள் இருவருக்கும் இருந்த
போதிலும், சாராம்சத்தில் இருவரின் தத்துவமும்
அகநிலைக் கருத்துமுதல்வாதமே.

ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது சிந்தனையே;
கருத்தே. அதாவது ஆன்மாவே. நீயும் பிரம்மம்,
நானும் பிரம்மம்; எல்லாமே பிரம்மம், பிரம்மத்தைத்
தவிர வேறு ஒன்றும் இல்லை என்று முழங்குகிறார்
ஆதிசங்கரர்.

சரி, ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது எங்கு
இருக்கிறது? அதன் இருப்பிடம் என்ன? பிரம்மம்
என்பது மனத்தில் இருக்கிறது. மனமே பிரம்மம்;
சிந்தனையே பிரம்மம்; கருத்தே பிரம்மம்.
இதுதான் அத்வைதம் தருகிற விடை.

கருத்தை அதன் உச்சபட்ச உயரத்தில் வைத்து
விடுகிறார் ஆதிசங்கரர். எவராலும் எப்போதும்
தொட முடியாத உயரம் அது. சிந்தனையைத் தவிர
மீதி அனைத்தின் இருப்பையும் ஒரேயடியாக
நிராகரித்து விடுகிறார் ஆதிசங்கரர். இருப்பது
ஒன்றுதான்; அதுதான் பிரம்மம், அதாவது சிந்தனை.
அதைத்தவிர வேறு எதுவும் இந்த பிரபஞ்சத்தில்
இல்லை. இதுதான் அத்வைத சாரம்.

அப்படியானால் பிரம்மம் என்பது கடவுளா?
நிச்சயமாக இல்லை. பரிபூரண சர்வ சுதந்திரமான
தூய அறிவே (pure reason) பிரம்மம். ஆக கடவுளுக்கும்
மேலாக பிரம்மத்தை சிருஷ்டித்தார் ஆதிசங்கரர்.
ஏனைய கருத்துமுதல்வாத தத்துவங்களுக்கும்
அத்வைதத்திற்குமான வேறுபாடு இதுதான்.
எனவேதான் கருத்துமுதல்வாதத்தின் அதிஉச்சமாக
அத்வைதம் திகழ்கிறது.

அத்வைதத்தின் மாயக்கவர்ச்சி இந்த பிரம்மத்தில்தான்
உள்ளது. கடவுளுக்கோ சடங்குகளுக்கோ அத்வைதம்
எந்த விதமான சிறப்பிடத்தையும் அளிக்கவில்லை.
இதன் மூலம் அத்வைதம் கடவுள் மறுப்புத் தத்துவம்
என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. ஆயின்
அத்வைதம் என்பது என்ன? அது ஒரு பொருள்மறுப்புத்
தத்துவம் (immaterialism). பெர்க்லி பாதிரியார் தமது
தத்துவத்தை பொருள்மறுப்புத் தத்துவம் என்றே
அழைத்தார்.

உலகில் எந்த தத்துவஞானியும் அளிக்காத சிறப்பை,
உச்சத்தை சிந்தனைக்கு அளித்தவர் ஆதிசங்கரர்.
இவ்வாறு செய்கையில் பொருள் என்பதையே
முற்றிலுமாக மறுத்து விட்டார்.

அ) சிந்தனைக்கும் அதன் விளைவான தூய
அறிவுக்கும் கட்டற்றதும்  சர்வ சுதந்திரத்துடன்
கூடியதுமான உச்சத்தை அத்வைதம் வழங்குவதாலும்
ஆ) கடவுள், சடங்குகள், பக்தி ஆகியவற்றை ஒரு
பொருட்டாகக் கொள்ளாமல் இருப்பதாலும்
இ) பிரம்மம் என்பதற்கு ஒரு பிரபஞ்சத் தன்மை
(universal) இருப்பதாலும் ஈ) பிரம்மத்தை அறியும் எவர்
ஒருவரும் முக்தி அடையலாம் என்று அத்வைதம்
உறுதி தருவதால் இது ஒரு கோட்பாட்டு ரீதியான
சமத்துவம் கொண்டதாக இருப்பதாலும்
அத்வைதம் முற்போக்கான தத்துவமே என்று
அத்வைதிகள் வாதிட்டனர்..

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த
சரஸ்வதி, கேரளத்தின் நாராயண குரு, பாரதியார்,
ரமண மகரிஷி, அரவிந்தர்  உள்ளிட்டோர் அத்வைதிகளாகத் திகழ்ந்தனர்.
ஆதிசங்கரரோடு கடுமையாக முரண்பட்ட
ராமானுஜரும்  அத்வைதத்தையே சிற்சில திருத்தங்களுடன் "சிறப்பிக்கப்பட்ட
அத்வைதம்" என்ற பெயரில் போதித்தார்.
ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் புறநிலைக்
கருத்துமுதல்வாதம் (objective idealism) ஆகும். ராமானுஜரின்
கருத்துமுதல்வாதம் கிரேக்கத்தின் பிளேட்டோவின்
கருத்துமுதல்வாதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தியத் தத்துவ அரங்கில் கணிசமான காலத்திற்கு
கருத்துமுதல்வாதம் குழந்தைப் பருவத்திலேயே
இருந்தது. அதுவும் சவலைப் பிள்ளையாகவே
இருந்தது. கருத்துமுதல்வாதம் அதன் வளர்ச்சியையும்
உச்சத்தையும் தொட்டது ஆதிசங்கரரின்
அத்வைதத்தில்தான். அதற்கு முன்பு
பொருள்முதல்வாதத்துடன் ஒப்பிடும்போது,
கருத்துமுதல்வாதம் பல மடங்கு பின்தங்கியே நின்றது.

2500 ஆண்டுகளுக்கு முன்பே, கெளதம புத்தரின்
பொருள்முதல்வாதம் முரசறைந்து வெற்றியைக்
கொண்டாடியது. புத்தர் ஆன்மா  என்ற ஒன்று இல்லை
என்று திட்டவட்டமாக மறுத்தார். அவரது நிராத்மவாதம்
(theory of no soul) மிகவும் புகழ் பெற்றது. ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதிசங்கரர் அத்வைதத்தை
முன்மொழிந்து ஆன்மாவே அனைத்தும் என்று
சொல்கிறவரை புத்தரின் நிராத்மாவாதமே
(நிர் ஆத்மா = ஆத்மா இல்லை) இந்தியத் தத்துவ
அரங்கில் மறுக்கப்படாமல் நிலவி வந்தது.
**********************

யாரும் பார்க்காமல் இருக்கும்போது
ஆகாசம் நீல நிறமாக இருக்குமா?
---------------------------------------------------------------------------
"காட்டில் ஒரு மரம் முறிந்து விழும்போது, யாரும்
பார்க்கவில்லை என்றால், முறிந்து விழும் ஓசை
எழுமா?" என்று கேட்டார் பாதிரியார் பெர்க்லி.
(If a tree falls in a forest and no is around to hear it, does it make
a sound?...Bishop George Berkely 1685-1753).

இதே கேள்வியை ஆதிசங்கரரும் கேட்டார் வேறு
வார்த்தைகளில். "யாரும் பார்க்காமல் இருக்கும்போது
ஆகாசம் நீல நிறமாக இருக்குமா?" என்றார் அவர்.

இருவருக்கும் எவ்வளவு அற்புதமான ஒற்றுமை
பாருங்கள்! கருத்துமுதல்வாதத்தின் உச்சம் தொட்ட
கேள்விகள் இவை. தத்துவ அரங்கில் இவ்விரண்டு
கேள்விகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை; பரவலாக
அறியப்பட்டவை. கருத்துமுதல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் மேற்கோள்கள் இவை.

புறவுலகம் இயங்குவது கருத்தின் (சிந்தனையின்)
விதிகளாலேயே என்பதை உணர்த்துவதற்கே
இக்கேள்விகளை ஆதிசங்கரரும் பெர்க்லியும் கேட்டனர்.

புறவுலகம் இயங்குவது எதன் விதிகளால்?
சிந்தனையின் விதிகளால் புறவுலகம்
இயங்குகிறதா? அல்லது பருப்பொருளின்
விதிகளால் புறவுலகம் இயங்குகிறதா?

மரம் என்பது ஒரு பருப்பொருள் (matter). அது
நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக
இருப்பது. அதாவது, அங்கு மரம் இல்லை என்று
நாம் நினைத்தாலும் மரம் இருக்கத்தான் செய்யும்.
இல்லையென்று நாம் நினைப்பதால் மரம் இல்லாமல்
போய்விடுவதில்லை. ஏனெனில் மரம் இருப்பது
நமது சிந்தனையைப் பொறுத்தது அல்ல.

மரம் அதன் உள்ளியக்கத்தால் (internal motion)
முறிந்து விழுகிறது. முறிந்து விழும்போது அதிர்வுகள்
ஏற்படுகின்றன. முறிவு  என்பதே அதிர்வுகளின்
தொகுப்புதான். இந்த அதிர்வுகள் காற்றில்
பரவுகின்றன. அதனால் காற்றில் இறுக்கமும் தளர்வும்
ஏற்பட்டு காற்றின் அழுத்தம் வேறுபடுகிறது. இந்த
அழுத்த வேறுபாடே ஓசை ஆகும்.
(The vibrations cause a variation of pressure in the air making compressions
and rarefactions and thus sound is produced) (compression = இறுக்கம்,
rarefaction = தளர்வு, vibration = அதிர்வு).

ஆக, மரம் எதன் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது? பொருளின் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது. சிந்தனையின் விதிகளுக்கு
உட்பட்டு மரம் இயங்குவதில்லை.

பொருளின் விதிகளே பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிக்கின்றன. இதுதான் உண்மை. மாறாக,
சிந்தனையின் விதிகள் பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிப்பதாக வைத்துக் கொண்டால், என்ன
நடக்க வேண்டும்?

அங்கு மரம் இல்லை என்று நீங்கள் மனதில்
நினைத்தவுடனே, அங்கு மரம் இல்லாமல் போக
வேண்டும். மரம் தீப்பிடித்து எரிகிறது என்று
நீங்கள் நினைத்தவுடன் மரம் தீப்பிடித்து
எரிய வேண்டும். இதெல்லாம் நடக்குமா?
ஒருநாளும் நடக்காது.

எனவே, காட்டில் மரம் முறிந்து விழும்போது
யாரும் பார்க்காவிட்டாலும் அங்கு மரம் முறியும்
ஓசை எழும். இது அன்றாட  வாழ்வில் நாம் அனைவரும்
ஒவ்வொரு கணமும் உணர்கிற விஷயம். இதை
ஏதோ மகத்தான தத்துவச் சிந்தனையாக, பெர்க்லி
பாதிரியார்   கேள்வி எழுப்புகிறார் என்றால், அது
எவ்வளவு பேதைமை!

காட்டில், ஆளரவமே இல்லாத இடத்தில், மிருகங்கள்
வேட்டையாடுவதை  தத்ரூபமாக படம் பிடித்து
சினிமா எடுக்கிறார்களே நேஷனல் ஜியாக்ரபி
சேனலும் டிஸ்கவரி சேனலும். எப்படி? மரத்தின்
உயரமான கிளையில்  காமிராவை வைத்துத்தானே!
யாரும் பார்க்கவில்லை என்பதற்காக, ஓசைகள்
எழாமல் இருக்கின்றனவா?

ஆக, பெர்க்லி பாதிரியாரின் தத்துவம் எவ்வளவு
அபத்தம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
அல்லவா! இது போன்ற ஒரு அபத்தத்தைத்தானே
ஆதிசங்கரரும் சொன்னார்.

யாரும் பார்க்காமல் இருந்தாலும் ஆகாயம்
நீல நிறமாகத்தான் இருக்கும்.
ஏனெனில், ஆகாயம் நீல நிறமாக இருப்பது
ஒளிச்சிதறல் (scattering of light) என்னும் நிகழ்வால்.
நீல நிறம் மிகவும் குறைவான அலைநீளம்
உடையது என்பதால், அது மற்ற நிறங்களை விட
அதிகமாகச் சிதறுகிறது. எனவேதான் ஆகாயம்
நீலமாகத் தெரிகிறது.

ஒளிச்சிதறல் என்பது பொருளின் விதி.
சிந்தனையின் விதி அல்ல. ஆகாயம் நீலமாக
இருப்பதன் காரணம் பொருளின் விதியால்தானே
தவிர, சிந்தனையின் விதியால் அல்ல.

எவர் ஒருவரின் ஆத்மாவோ (சிந்தனையோ)
அல்லது பிரம்மமோ பருப்பொருளை இயக்கவில்லை.
இயற்கை, புறவுலகம், பருப்பொருள், உயிர்கள்
என்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே
பொருளின் விதிகளால்தான் இயங்குகிறது. இந்த
இயக்கத்தில் கருத்துக்கோ, சிந்தனைக்கோ,
பிரம்மத்துக்கோ, ஆத்மாவுக்கோ தீர்மானிக்கிற
இடமே இல்லை.

கருத்து இருக்கிறது. அதை எவரும் மறுக்கவில்லை.
ஆனால் கருத்து முதன்மையானது அல்ல என்பதே
பொருள்முதல்வாதம். கருத்தின் விதிகளால் இந்தப்
பிரபஞ்சம் இயங்குவதில்லை என்பதே
பொருள்முதல்வாதம். நன்கு கவனிக்கவும்: கருத்தின்
இருப்பை பொருள்முதல்வாதம் மறுக்கவில்லை.
பொருளைப் பார்த்தபின் நம் மனதில் எழும்
பிரதிபலிப்பே கருத்து என்பதுதான் பொருள்முதல்வாதம்.

ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது பொருளா,
கருத்தா? அது கருத்துதானே தவிர பொருள் அல்ல.
பொருள் என்றால் அதற்கு ஒரு இருப்பு உண்டு.
பிரம்மம் என்பது பொருள்தான் என்றால், அதன்
இருப்பைச் சுட்ட வேண்டும் அல்லவா? ஆதிசங்கரர்
சுட்டிக் காட்டினாரா? இல்லை. ஏன்? அதற்கு
இருப்பு இல்லை. அது கருத்தே தவிர பொருள் அல்ல.

பிரம்மம் என்பது  குணமற்றது (நிர்குண பிரம்மம்);
உருவமற்றது; வரம்பற்றது என்கிறார் ஆதிசங்கரர்.
அது இருப்பும் அற்றது; அதாவது இல்லாத ஒன்று
என்பதையும் நாம் சேர்த்துக் கூற வேண்டும்.
(Brahman is a non entity).

In Advaita Vedanta, Brahman is without 
attributes and strictly impersonal.It can be 
best described as infinite Consciousness and 
infinite Bliss. It is pure knowledge itself.

பிரம்மத்திற்கு ஆதிசங்கரர் கூறும் மேற்கண்ட
வரையறையின்படி, பிரம்மம் என்பது பொருள் அல்ல;
கருத்தே. குணமற்ற, வடிவமற்ற, வரம்பற்ற உணர்வாக
(பிரக்ஞை) உள்ள , வரம்பற்ற பேரின்பமாக உள்ள, சுத்த
அறிவு என்பதுதான் பிரம்மம் என்றால் அது கருத்துதானே
தவிர பொருள் அல்ல.
***************************
பொருளின் இயக்கம்:
எங்கல்ஸ் கூறியது சரியா? ஆதிசங்கரர் கூறியது சரியா?
--------------------------------------------------------------------------------------------------
"பிரம்மம் மட்டுமே மெய்; மீதி அனைத்தும் பொய்"
என்ற ஆதிசங்கரர் தத்துவ விவாதங்களின் போது
பெரும் இடரைச் சந்தித்தார். நாம் வாழும் இந்த உலகம்
உண்மையானது என்பதை ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு ஜீவராசியும் அன்றாடம் தங்களின்
நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்து வருகின்றனர்.
இதனால் புறவுலகம் பொய்யானது என்ற ஆதிசங்கரரின்
கருத்து மக்களால் ஏற்கப்படவில்லை. மொத்த மக்கள்
சமூகமும் மெய் என்று உணர்ந்த ஒன்றை பொய் என்று
நிறுவுவது ஆதிசங்கரருக்கும்  எளிதாக இல்லை.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
என்ற குறளுக்கு ஏற்ப 'வையத்து அலகை'யாகக்
கருதப்பட்டார் ஆதிசங்கரர். (அலகை= பேய்)

இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்க ஆதிசங்கரர் "வியவகாரிக
ஸத்யம்" என்ற ஒரு கருத்தை அறிமுகம் செய்தார்.
நடைமுறை உண்மை (practical truth) என்று இதற்குப் பொருள்.
அதை பிரசித்தி பெற்ற கயிற்றரவு உதாரணத்தின்
மூலம் விளக்கினார்.

1) அரையிருட்டில் கயிற்றைப் பார்க்கும் ஒருவன், அதைப்
பாம்பாக உணர்கிறான். வெளிச்சம் வந்ததும் அது
பாம்பல்ல என்று உண்மையை உணர்கிறான். இவ்வாறு
சிறிது நேரம் கயிறானது பாம்பு என்ற உண்மையாக
இருக்கிறது. இந்த உண்மையை ஆதிசங்கரர்
"பிரதிபாஷிக சத்யம்" என்று அழைத்தார். இதன்
பொருள் பிரமையான உண்மை என்பதாகும்.

2) நல்ல வெளிச்சத்தில் ஒருவன் கயிற்றைக்
கயிறாகவே உணர்கிறான். கயிறு கயிறாகவே
உணரப்படும் இந்த உண்மை வியவகாரிக ஸத்யம்
ஆகும். அதாவது நடைமுறை உண்மை (practical truth)
ஆகும்.

3) எனினும் இவ்விரண்டும் உண்மையல்ல. மெய்யான
உண்மை என்பது பிரம்மம் மட்டுமே உண்மை
என்பதாகும். இது பரமார்த்திக ஸத்யம் ஆகும்.

இவ்வாறு வியவகாரிக ஸத்யம் என்ற கோட்பாட்டைப்
புகுத்தியதன் மூலம் தாக்குதலில் இருந்து தற்காத்துக்
கொண்டாலும், அது யதார்த்தத்தில் அத்வைதத்தை
பலவீனப் படுத்தி விட்டது.

புறவுலகம் (objective world) பொய் என்பதற்கான தமது
வாதங்களை பின்வருமாறு ஆதிசங்கரர் முன்வைத்தார்.
புறவுலகம் என்பது பருப்பொருளால் ஆனது
(material world; contains matter). பருப்பொருளானது தொடர்ந்து
இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது.
அதற்கு ஒரு சாசுவத இருப்பு இல்லை. பொருள் என்பது
நின்று நிலவவில்லை (does not exist); எனவே பொருளாலான
புறவுலகம் மெய்யல்ல; பொய்யே.

ஆதிசங்கரரின் குரு கோவிந்தர். கோவிந்தரின் குரு
கெளட பாதர். கி.பி ஏழு எட்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர்கள் இவர்கள். அறிவியலின் வளர்ச்சி
அதன் குழந்தைப் பருவத்தில் இருந்த காலம் அது.
ஆரம்ப நிலை அறிவியல்கூட பரவலாக மொத்த
சமூகத்தையும் சென்று சேராத காலம் அது.

கிரேக்கத்தில் அரிஸ்ட்டாட்டிலும் இந்தியாவில்
ஆரிய பட்டரும் நிறுவிய அறிவியலே அப்போதைய
அறிவியலின் உச்சமாக இருந்த காலம் அது.
தம் காலத்தின் தலைசிறந்த அறிஞர் ஆதிசங்கரர்
என்பதில் எவரும் ஐயம் கொள்வதற்கில்லை.
என்றாலும், நவீன அறிவியலின் தற்கால வளர்ச்சியில்,
12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு எளிய சிறுவன்,
ஆதிசங்கரின் "இயங்குகின்ற பருப்பொருள்
பொய்யானது" (matter which is in motion is unreal ) என்ற
கோட்பாட்டைஎளிதில் நொறுக்கி விடுவான்.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும்
சுற்றி வருகிறது. மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர்
(தோராயமாக) வேகத்தில் பூமியானது சூரியனைச்
சுற்றி வருகிறது. அவ்வப்போது படுத்து ஒய்வு எடுத்துக்
கொண்டும் இளைப்பாறிக் கொண்டும் மிஞ்சிய
நேரத்தில் மட்டுமே சூரியனைச் சுற்றுவதல்ல பூமி.
மாறாக, இடைவிடாத நிரந்தரமான சுழற்சி அது.
இந்த இயக்கம் நின்று விட்டால் என்ன ஆகும்? பூமி
சுற்றுவதை நிறுத்திக் கொண்டால், பூமியானது
சூரியனால்  ஈர்க்கப்பட்டு அழிந்து விடும். பூமி
மட்டுமல்ல, பிற கோள்களும் சூரியனைச் சுற்றி
வருகின்றன. எந்தக் கோளும் இயக்கத்தை மறுத்து
இயங்காநிலையில் இருப்பதில்லை. இயங்கினால்
மட்டுமே வாழ்வு, இயங்காவிட்டால் மரணம் என்ற
நிலையிலேயே எல்லாக் கோள்களும் உள்ளன.

பிரும்மாண்டமான கோள்கள் மட்டுமல்ல, நுட்பமான
அணுவில், அணுவைச் சுற்றி வரும் எலக்ட்ரான் போன்ற
மெல்லிய துகளுமே சுற்றிக் கொண்டுதான்
இருக்கிறது. சுற்றாத துகள் எதுவும் இந்தப்
பிரபஞ்சத்தில் இல்லை.

இதனால்தான் மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ்,
"பொருளின் இருத்தல் அதன் இயக்கத்தில்தான் உள்ளது"
(Motion is the mode of existence of matter) என்றார்.

Motion in the most general sense, conceived as the mode of existence, 
the inherent attribute of matter, comprehends all changes and processes 
occurring in the universe, from mere change of place right up to thinking.
(பார்க்க: எங்கல்ஸ், இயற்கையின் இயக்கவியல்,
அத்தியாயம் மூன்று, Forms of motion).

இயங்குவதால் மட்டுமே அது பொருளாக இருக்கிறது
என்கிறார் எங்கல்ஸ். இயங்குவதால் அது
பொருளே அல்ல என்கிறார் ஆதிசங்கரர். எது சரி?
விடையை நாம் யாரும் சொல்ல வேண்டாம்.
12ஆம் வகுப்பு இயற்பியல் மாணவர்கள் விடை
சொல்லட்டும்.
-*****************************
கால்களுக்குப் பதிலாக தலையின் மீது
நின்று கொண்டிருக்கும் ஆதி சங்கரர்!
--------------------------------------------------------------------
பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பொருள் என்றால் என்ன என்ற கேள்வி எழுந்தது.
கருத்துமுதல்வாதிகள் இந்தக் கேள்வியை மிகவும்
வலுவாக எழுப்பினார்கள். குறிப்பாக இருபதாம்
நூற்றாண்டின் கருத்துமுதல்வாதிகள்
பொருள்முதல்வாதிகளை நோக்கி இந்தக்
கேள்வியைத் தொடுத்தார்கள். எனவே பொருள்
என்பதை அதவாது பருப்பொருள் என்பதை
வரையறுக்க வேண்டிய தேவை எழுந்தது
(matter had to be defined).

ஆயின் அதற்கு முன்பு, அதாவது இருபதாம்
நூற்றாண்டுக்கு முன்பு, பருப்பொருள் என்பது
வரையறை செய்யப்பட வில்லையா? பண்டைக்காலம் தொட்டே பருப்பொருள் என்பது வரையறுக்கப்பட்டு
இருந்தது. பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம்,
அதாவது பருப்பொருள் என்ற கருத்தை இந்தியாவில்
பௌத்தர்கள் உள்ளிட்ட பொருள்முதல்வாதிகள்
முன்மொழிந்து இருந்தனர். கிரேக்கத்தில்
அரிஸ்ட்டாட்டில் நான்கு மூலக் கொள்கையை
(four elements theory) முன்மொழிந்து இருந்தார். நிலம், நீர்,
தீ, காற்று. ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின்
சேர்க்கையே இவ்வுலகம் என்று பௌத்தர்களும்,
ஏனைய பண்டையப் பொருள்முதல்வாதிகளும்
கூறியிருந்தனர். இந்த ஐந்து பஞ்ச பூதங்களில்,
ஆகாயம் என்பதை மட்டும் தவிர்த்து விட்டு,
நான்கு மூலக் கொள்கையை (Earth, water, fire, wind)
உருவாக்கி இருந்தார் அரிஸ்ட்டாட்டில்.

இவை அனைத்தும் அறிதல் முறை சார்ந்த அதாவது
epistemological வகைப்பட்ட வரையறைகளாகவே
இருந்தன. அறிவியலின் வரையறையாகவும் இதுவே
இருந்தது. அரிஸ்ட்டாட்டில் அவர் காலத்திய (கி.மு 384-
கிமு 322) பௌதிக விஞ்ஞானி (Physicist) மட்டுமல்ல
அவர் காலத்தின் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.
ஆக,  கெளதம புத்தர் காலத்திலும், அரிஸ்ட்டாட்டில்
காலத்திலும், இவர்களுக்கெல்லாம் வெகுவாகப்
பின்தங்கிய எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கரர்
காலத்திலும் பஞ்ச பூதக் கொள்கையே பருப்பொருள்
பற்றிய கொள்கையாக உலகம் முழுவதும் நிலவி
வந்தது.

பரிசோதனை அறிவியல் (experimental science) என்பது
அரிஸ்டாட்டில் காலத்தில் மேற்கத்திய அறிவியலில்
கிடையாது. கலிலியோ காலத்தில்தான் (1564-1642)
முதன் முதலாக பரிசோதித்து உண்மையை
அறியும் முறைமை நடைமுறைக்கு வந்தது.

நவீன அறிவியல் கணக்கற்ற பரிசோதனைகள்
மூலம் பருப்பொருள் (matter) என்பதை மிகவும்
கறார் ஆகவும் துல்லியமாகவும் வரையறுத்துள்ளது.
அது பற்றிய முழுமையான விவரங்கள் இந்நூலின்
வரம்புக்கு அப்பாற்பட்டவை.

எனினும், பருப்பொருள் என்பது, அது நுண்பொருள்
ஆயினும் பெரும்பொருள் ஆயினும் (micro or macro)

அ) அண்டவெளியில் தனக்கென ஓர் இருப்பை
உடையது; அண்டவெளியில் நின்று நிலவுவது
(matter does exist)
ஆ) அண்டவெளியில்  ஓர் இடத்தை அடைக்கும்
தன்மையது (occupies space)
இ) நிறை (mass) உள்ளிட்ட பல்வேறு பண்புகளை
உடையது.

பருப்பொருள் என்றால் என்ன என்பதற்கு அறிவியல்
தரும் சுருக்கமான வரையறை இதுவே.

தம் காலத்திய கருத்துமுதல்வாதிகளின், குறிப்பாக
மாஹ் (Mach) போன்றவர்களின் கேள்விக்கு விடையாக
பொருள் என்பதை லெனின் பின்வருமாறு
வரையறுத்தார். "பொருள் என்பது மனிதனின்
சிந்தனைக்கு அப்பால், புறநிலையில் நின்று நிலவும்
ஒரு யதார்த்தம்" என்பதே பொருள் பற்றிய லெனினின்
வரையறை.

உங்கள் வீட்டுக் கொல்லையில் ஒரு முருங்கை மரம்
நிற்கிறது. அந்த மரம் உங்கள் கொல்லையில் இல்லை
என்று நீங்கள் நினைத்தாலும், அது இருக்கத்தான்
செய்கிறது. உங்கள் தெருவில் ஒரு கோவில் இருக்கிறது.
அது அங்கே இல்லை என்று நீங்கள் நினைப்பதால்,
அது அங்கே இல்லாமல் போய்விடுவதில்லை.

உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
 என்பதைப் பொறுத்ததல்ல பொருளின்
இருப்பு. நீங்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும்
பொருள் இருப்பது இருக்கத்தான் செய்யும். அதாவது
உங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை
யதார்த்தமாக (objective reality) பொருள் இருக்கிறது.
பருப்பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு
என்ற அறிவியலின் வரையறையையே லெனினும்
கூறுகிறார். லெனினின் வரையறையின் முக்கிய
அம்சம் பொருள் என்பது ஓர் அகநிலை அம்சம் அல்ல
(matter is not subjective) என்பதுதான்.

புத்தர் உள்ளிட்ட  பண்டைய பொருள்முதல்
வாதிகளுக்கு பொருள் பற்றிய நவீன அறிவியலின்
வரையறையோ லெனினின் வரையறையோ
தெரியாது எனினும் பொருள் என்பது மனித
சிந்தனையைச் சாராத சுயேச்சையான
இருப்பு உடையது என்பது நன்கு தெரியும்.

பொருள் பற்றிய வரையறையைப் பொறுத்து
ஆதிசங்கரர் மிகவும் தனித்துவத்துடன் திகழ்கிறார்.
பருப்பொருள் என்ற ஒன்று இல்லவே இல்லை;
அது வெறும் மாயையே என்கிறார் ஆதிசங்கரர்.

மண்ணும் மரமும் செடியும் கொடியும் மலையும்
கடலும் காற்றும் நீரும் நிலவும் ஆகிய இவை யாவும்
மாயை என்கிறார் ஆதிசங்கரர். மனிதன் மட்டுமல்ல
ஐந்தறிவு நான்கறிவு உடைய குறையறிவு
உயிரினங்களும் புறவுலகம் உண்மை என்ற
கருத்தின் மீதுதான் வாழ்கின்றன. காலையில்
சூரிய உதயத்தில் கூட்டை வீட்டுக் கிளம்பும்
பறவைகள் மாலையில் சூரிய அஸ்தமனத்தின்போது
கூட்டை அடைகின்றன. கூட்டை விட்டுஇரைதேடக்  கிளம்புவதற்கும்  மீண்டும் கூடு அடைவதற்கும்
பறவைகளுக்கு வழி காட்டுவது எது? பிரம்மமா,
இல்லை சூரியனா?

வேட்டைக்குச் செல்லும் நாய்கள் தங்களின் மோப்ப
சக்தியை எங்கிருந்து பெறுகின்றன? காவல்
துறையின் நாய்கள் குற்றம் நடந்த இடத்தை முகர்ந்து
பார்த்து விட்டு குற்றவாளி எங்கு போயிருந்தாலும்
அந்த இடத்தைக் கண்டு பிடிப்பது எப்படி?
இதற்கு பொருள் பற்றிய அறிவு காரணமா அல்லது
பிரம்மம் காரணமா?

பருப்பொருளை புறவுலகை முற்றிலுமாக மூர்க்கத்
தனமாக மறுக்கும் அத்வைதம் எப்படி உலகிற்கு
வழிகாட்டும் தத்துவம் ஆகும்? பெர்க்லி பாதிரியாரின்
அகநிலைக் கருத்து முதல்வாதம் பற்றி ஏற்கனவே
பார்த்துள்ளோம். புறவுலகு என்பது மனதின்
சிருஷ்டியே என்பதுதான் பெர்க்லி பாதிரியாரின்
கருத்துமுதல்வாதம். அதைப்  போன்றதுதான்
ஆதிசங்கரரின் அத்வைதமும்.

என்றாலும் பிற கருத்து முதல்வாதத் தத்துவங்களுக்கும்
அத்வைதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு உண்டு.
பொருள், கருத்து என்ற இரண்டின் உண்மையை
(உண்மை=உள்ள தன்மை, இருப்பு) பல்வேறு கருத்து
முதல்வாதப் பிரிவுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
பொருள் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது,
இவ்விரண்டில் கருத்தே முதன்மையானது
என்பதுதான் கருத்து முதல்வாதம். ஆனால்
அத்வைதத்தைப் பொறுத்தமட்டில், பொருள் கருத்து
என்னும் இவ்விரண்டில், கருத்து மட்டுமே இருக்கிறது
பொருள் என்பது இல்லவே இல்லை. எனவே அத்வைதம் கருத்துமுதல்வாதமாக அல்ல, வெறும் அசட்டுத்தனமான கருத்துவாதமாகவே எஞ்சுகிறது..

பொருளின் உண்மையை மறுத்து, பொருளே மாயை,
(பொருளே இல்லை) என்பதன் மூலம் அத்வைதம்
பொருள்முதல்வாதத்தின் நேர் எதிர் துருவத்தில்
தன்னை இருத்திக் கொண்டுள்ளது. பொருள்முதல்
வாதத்தின் ஒரு ஒற்றை அம்சத்தோடு கூட உடன்பட
முடியாத நிலையை சிருஷ்டித்துக் கொண்டுள்ளது
அத்வைதம்.இதன் மூலம் உலகியலுக்கு நேர் எதிரான
ஒரு  பொய்மையில் குடிகொண்டுள்ளது அத்வைதம்.

சென்னை அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளை
ஒட்டிக் கொண்டு செல்லும் ஒருவருக்கு திடீரென்று
அத்வைத மனநிலை வாய்த்து விடுகிறது என்று
வைத்துக் கொள்வோம். அவரால் ஒழுங்காக வீடு
போய்ச்  சேர முடியுமா? அல்லும் பகலும் அனவரதமும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிற புறவுலகை இல்லை
என்று மறுப்பதன் மூலம் யார்தான் என்ன பயனை
அடைய முடியும்?

இந்த உலகின் பிரச்சினைகளுக்கு இந்த உலகில்
தீர்வு காண்பதே ஒரு தத்துவத்தின் பயன்.அத்வைதம்
யதார்த்த உலகின் இருப்பையே அங்கீகரிக்காத
நிலையில், யதார்த்த உலகின் பிரச்சினைகளுக்கு
அதில் எங்ஙனம் தீர்வு இருக்க இயலும்? துன்ப
துயரங்களில் சிக்குண்டு அலைக்கழிக்கப்படும்
மக்களுக்கு அத்வைதத்தில் என்ன தீர்வு உள்ளது?

புறவுலகை பருப்பொருளை மறுத்து ஆதிசங்கரர்
முன்வைக்கும் வாதங்களின் வெறுமையை
இப்போது பரிசீலிப்போம்.

பொருள் என்பது சதா சர்வ காலமும் மாறிக்கொண்டே
இருக்கிறது. அது ஒரு நிலையில் இருப்பதில்லை.
மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றுக்கு (பொருளுக்கு) சுயேச்சையான இருப்பு என்பது எப்படி இருக்க முடியும்?
எனவே பொருள் என்பது மாயை என்கிறார்
ஆதிசங்கரர்.

தண்ணீர் என்பது ஒரு பொருள். இது  இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும்
கொண்டுள்ள ஒரு மூலக்கூறு. இதை H2O என்பர்.
சென்னையில் நம் வீட்டில் குடத்தில் உள்ள நீர் அறை வெப்பநிலையில் 30 டிகிரி செல்சியசில்
இருக்கும். இதை ஒரு பாத்திரத்தில்
வைத்து சூடு படுத்தினால், 100 டிகிரி செல்ஸியசை
எட்டியதும் நீராவியாகி விடும். இதே தண்ணீரை ஒரு
குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர்வித்தால்
அது பனிக்கட்டியாக மாறிவிடும். இந்த நிகழ்வுகளை
நவீன அறிவியல் "கட்ட மாற்றம்" (change of phase)
என்கிறது. இந்தக் கட்ட மாற்றத்தால் தண்ணீர்
என்பது அழிந்து விடுவதில்லை.

ராமசாமி என்பவருக்கு 102 டிகிரி (ஃ பாரன்ஹீட்)
காய்ச்சல் வந்து விடுகிறது. பின்னர் குணமாகி
விடுகிறது. குணமாகியபின் உடலின் வெப்பநிலை
98.4 ஃபாரன்ஹீட்டுக்கு வந்து விடுகிறது. காய்ச்சல்
என்பது உடலில் ஏற்பட்ட ஒரு மாற்றம். இந்த
மாற்றம் ஏற்பட்டதால் உடல் அழிந்து விடவில்லை.

அடிக்கடி மாறிக்கொண்டு இருப்பதால் பொருள்
நிலையானதல்ல என்ற ஆதிசங்கரரின் வாதம்
பேதைமை நிறைந்த வாதமாகும். பருப்பொருளுக்கு
அழிவில்லை என்பதே அறிவியலின் விதி.
ரஷ்ய விஞ்ஞானி மிகேல் லோமனோசோவ் 1756ல்
நிறையின் அழியாமை விதியை (Law of conservation of mass)
பரிசோதனை மூலம் நிரூபித்துள்ளார் என்பது
இன்று பள்ளி மாணவர்களும் அறிந்த செய்தியே..

எலக்ட்ரான் என்பது ஒரு நுண்ணிய துகள். இது
ஒரு பருப்பொருள். இதன் அளவு (SIZE), அதாவது
எலக்ட்ரானின் ஆரம் 2.81 X 10^minus 15 ஆகும்.
இதன் நிறை 9.1 X 10^ minus 31 ஆகும். ஆக எலக்ட்ரான்
என்பது மிகவும் நுண்ணியது; மிகவும் குறைந்த
நிறை உள்ளது. என்றாலும் இந்த அண்ட வெளியில்
எலக்ட்ரான் இல்லையென்று எவராலும் கூற
இயலுமா?

இந்தக் கட்டுரையை எழுதும் நான் சென்னையில்
இருக்கிறேன். சென்னை நகரின் அட்ச ரேகை
(latitude) 13.067 439 N; தீர்க்க ரேகை (longitude) 80.237 617 E.
சென்னை நகரம் 13 மீட்டர் உயரத்தில் (elevation from MSL,
MSL = Mean Sea Level), இந்தக் கட்டுரையை மதுரையில்
இருந்து வாசிக்கும் ஒருவர் 9.939 093 அட்ச ரேகையிலும்
78.121 719 தீர்க்க ரேகையிலும் 137 மீட்டர் உயரத்திலும்
(elevation) இருப்பார். இதன் மூலம் பொருட்களுக்கு
இருப்பு உண்டு என்பது நிரூபிக்கப் படுகிறது.
இந்த நிரூபணம் அத்வைதத்தின் மாயையை
சம்மட்டியால் அடிக்கிறது.

படுபயங்கரமான அப்பாலைத் தத்துவமான
அத்வைதம் கூறும் பிரம்மம் இந்த பிரபஞ்சத்தில்
எங்கே இருக்கிறது? அதன்  இருப்பிட அச்சுகளை
(position coordinates) எவரேனும் சுட்ட இயலுமா? இயலாது.
ஏனெனில் பிரம்மம் என்பதற்கு மொத்தப் பிரபஞ்சத்திலும்
எந்த இடமும் கிடையாது. அது ஆதிசங்கரரின்
மூளையில் மட்டுமே குடிகொண்டிருந்த ஒரு
கருத்து; சிந்தனை. ஆதிசங்கரரின் பிரம்மம்
என்பது ஒரு பொருள் அல்ல. உண்மையில்
பிரம்மம் என்பதுதான் மாயை. பிரம்மம் என்பதுதான்
பொய்.பிரம்மம் என்பதுதான் எந்த பௌதிக இருப்பும்
அற்றது.உண்மையில் இல்லாதது.

ஆதிசங்கரர் தம் தலையின் மீது நின்று கொண்டு
இருக்கிறார். அவரை அவரின் கால்களின் மீது நிறுத்த
வேண்டும்.அதற்கு அவரின் அத்வைதத்தைத் திருத்த
வேண்டும். புறவுலகம் பொய், பருப்பொருள் மாயை
என்ற ஆதிசங்கரரின் கருத்தியலை, பருப்பொருள்
மெய் என்றும் புறவுலகம் மெய் என்றும் திருத்த
வேண்டும். அப்போது அது ஒரு கருத்து
முதல்வாதமாகவேனும் நிலைக்கும். இல்லையேல்
யார் எவருக்கும் பயனற்ற வெற்று அப்பாலைத்
தத்துவமாக, வீணானதாக, அகற்றப் பட வேண்டிய
கழிவாக மட்டுமே எஞ்சும்.
********************
பகுதி-2 முற்றியது.
---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக