செவ்வாய், 23 ஜனவரி, 2018

ஆண்டாள் 
மூதறிஞர் #ராஜாஜி சொன்னது என்ன? ஸ்ரீ #ஆண்டாள்நாச்சியார் சம்பந்தமாக.....
இன்று #வைரமுத்துவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏன் அன்று ராஜாஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஞாநி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறார் சுபவீ. வீரமணி கூட ராஜாஜிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேட்டார்.
திரிவேணி என்கிற ஆங்கில இதழில் 1946 செப்டம்பர் இதழில் ஆண்டாள் யார்? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதாவது ஸ்ரீ ஆண்டாள் என்று யாரும் இல்லை பெரியாழ்வாரே ஸ்ரீ ஆண்டாள் என்னும் பெயரில் பெண் தன்மையில் எழுதியதாக அந்த கட்டுரை கூறுகிறது..
C.R. என்கிற பெயரில் உள்ள கட்டுரை, ராஜாஜி அவர்களுடையது என்று அறியலாம். அந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் தம்முடைய மதிப்புக்குறிய நண்பர் ஒருவரின் அபிப்ராயம் என்றும் தெரிவித்துள்ளார் C.R. அதாவது ராஜாஜியின் சொந்த கருத்து அல்ல.
#பிரதிவாதி_பயங்கரம் ஸ்ரீ.உ.வே. #அண்ணங்கராச்சார்யர்ஸ்வாமி தனது ஸ்ரீராமானுஜன் 291 இதழில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “ஒருமகள் தன்னை யுடையேன்“ என்று பெரியாழ்வார் சொல்லுவதைக்கொண்டும், நாச்சியார் திருமொழி 10-4 இல் “சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமைபொய்யன்றே” (ஒரு மஹா பாகவதரின் பெண்ணாக பிறந்துள்ளேன் இந்த பிறப்பு பொய்யாகுமே என்று கூறுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்).
பெரியாழ்வார் தான் ஆண்டாள் என்கிற புனைபெயரில் எழுதினார் என்ற கருத்து சிலருக்கு இருக்கலாம் அதனால் தானோ என்னவோ அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கண்ணதாசன் பக்திப் பெருக்கை காட்டிய மீரா வடக்கே இருப்பாள் என்றால் தெற்கே ஒரு ஆண்டாள் இருக்கக் கூடாதா? என்று கேட்டார்.
ஸ்ரீ ஆண்டாளை தேவதாசி என்று ராஜாஜி சொல்லவில்லை. அதனால்தான் ராஜாஜிக்கு எதிர்ப்பு இல்லை மறுப்பு மட்டுமே உள்ளது.
மேலும் C.R எழுதியதைப் போன்றே வேறு ஒரு தமிழ் பத்திரிகையும் சிலவருடம் முன் குறிப்பிட்டதாக ஸ்ரீ ராமானுஜம் இதழ் பதிவு செய்கிறது.
பெரியாழ்வார் திருமகள் என்ற தலைப்பில் ப்ர.அ என்று பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி தனது மறுப்பை ஸ்ரீ ராமானுஜம் இதழில் C.R . என்கிற ராஜாஜிக்கு 5 பக்கத்துக்கு எழுதியுள்ளார்.
வைரமுத்து கூறிய சொல்லின் தீவிரம் / உள்நோக்கம் வேறு, ராஜாஜி அவர் நண்பர் கூறிய கருத்தினை பதிவு செய்ததில் உள்ள பொருள் வேறு, இரண்டும் எப்படி ஒன்றாகும்?
மேலும் ராஜாஜி அதே கட்டுரையில் இதை தற்கால நாஸ்திகவாதமாக கொள்ளவேண்டாம் என்று கூறியுள்ளார். இருவரும் ஒருவர் என்று கொள்வது குறைவா? என்று கேட்டு முடித்துள்ளார்.
ஞாநிக்கு ஏன் மறுப்பு இல்லை என்றால், அவர் அது குறித்து பேசிய இரண்டு மூன்று தினங்களுக்குள் இறந்துவிட்டதால் கூட மறுக்காமல் இருக்கலாம். ஞாநி நாஸ்திகர் அவரை பிராமணர் என்பதாகவே இறந்த பின்பும் சுபவீ பார்க்கிறார். அதை வைத்தே ராஜாஜியையும் ஞாநியையும் எதிர்க்கவில்லை என்கிறார்.
மேலும் தினமணி போன்ற அனைவருக்கும் பொதுவான இதழில் இதைபோன்ற கருத்து வந்ததால் தான் வைரமுத்துவிற்கு இந்த எதிர்ப்பு பரவியது.
மேலும் ஸ்ரீ ராஜாஜியின் கருத்துக்கள் பலமுறை மறுக்கப்பட்டுள்ளது அதன் விபரம் இதோ..
கல்கி இதழில் 28/2/1960 இல் நம்மாழ்வார் பாடிய பக்திநெறி என்னும் தலைப்பில் ராஜாஜி எழுதிய கட்டுரையில் இருந்த கருத்து ஒன்றுக்கு மறுப்பு தெரிவித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம் இதழ் 148 (13-4) எட்டு பக்கங்கள் மறுப்பு எழுதியது.
இதனை படித்த ராஜாஜி ஏற்றுக்கொண்டார். அதனை கடிதமாக 3/3/1960 அன்று ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம் ஆசிரியர் புத்தூர் ஸ்வாமிக்கு எழுதினார்.
மேலும் ராஜாஜியின் மற்றொரு வைஷ்ணவ தொடர்பான கட்டுரைக்கு ஸூதர்சனம் 14-3 (159) இதழ் மறுப்பு தெரிவித்தது, அதற்கு ராஜாஜி 15/2/1961 இல் எழுதிய பதில் கடிதத்தில் எனக்குத் தோன்றியதை எழுதினேன். சமயவாதத்துக்கு வேண்டிய பதிப்பு என்னிடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம் 14-3
(159) இதழில் வெளியானது.
ராஜாஜி அவர்கள் எத்தனையோ புத்தகங்களை எழுதியவர், பாரத தேசத்தின் உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல் பதவியை அலங்கரித்தவர், தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். ஆனாலும் எந்த ஒரு நேரத்திலும் தனது பெயருக்கு முன் எந்த பட்டத்தினையும் அவர் போட்டுக்கொண்டதில்லை.
மத விஷயங்களில் தனது கருத்துக்கு ஒரு மறுப்பு வந்தபோது துணிவுடனும் ,நேர்மையுடனும் ஒப்புக்கொண்டவர். அதுதான் அவரது நாகரீகம் புரியும்படி சொன்னால் மனித நாகரீகம்.
ஸ்ரீ ஆண்டாளை உயர்த்தி பேசியதாகவும் கடைசி வரியை தவறாக புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார்கள் வைரமுத்து தரப்பினர்.
இதோ வைரமுத்து அவர்கள் அப்துல் ரகுமானின் 80 பிறந்த தின வாழ்த்து மேடையில் பேசியது இதோ அவரே சொல்லுகிறார் .. எந்த மேடையில் எதை சொல்ல வேண்டுமோ அங்கு அதை சொல்ல வேண்டும் என்கிறார்.
எதை எந்த மேடையில் சொல்ல வேண்டும் என்று அறிந்து அதை அந்த மேடையில் சொல்லுபவர் நமது திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து. ஸ்ரீ ஆண்டாளினை பற்றி அவர் புகழ்துள்ள மேடையில் தான் அவர் அவதூறு பேசுகிறார்.
அவரே சொல்லுகிறார் இதை ஆன்மீகவாதிகள் ஏற்கமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர்கள் ஏற்பார்கள் என்று. ஆகவே சர்ச்சையான கருத்து என்று தெரிந்தும் அதை சொல்லுகிறார், இது தினமணி நடத்திய விழாவில் அவரே சொன்ன கருத்து.
இவர் மேற்கோள் காட்டிய நூல் அவர் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டதல்ல. எழுதியவர் என்று அவர் கூறியவர் தொகுப்பாளர்தான்.
அந்த கட்டுரையை எழுதிய நாராயணன், கேஸவன் இருவரும் தங்கள் ஊகத்தின் அடிப்படையில் தான் அப்படி எழுதினோம், அதற்கு எந்த அகச்சான்று, புறச்சான்று இரண்டும் கிடையாது என்று தந்தி டிவி செய்தியாளரிடம் பதில் கூறி ஆதாரமற்றது என்று உறுதி படுத்திவிட்டார்.
https://www.youtube.com/watch…
அவர்கள் இருவரும் மேற்கோள் காட்டிய நூல் எதுவோ அந்த நூலில் கூட அப்படி இல்லை. https://www.youtube.com/watch?v=I5jEWY_fACw&feature=youtu.be
ஒரு தவறு, அந்த தவறை மேற்கோள்காட்டிய நூலில் தவறு அந்த நூல், மேற்கோள்காட்டிய நூலில் அப்படி ஏதும் இல்லை மொத்தத்தில் தவறு2.
ஆதரவு தெரிவித்து கையெழுத்து இட்டவர்கள் எழுதிய கடிதத்தில் திருவெம்பாவை ஸ்ரீ ஆண்டாள் எழுதியது என்று எழுதியதில் தவறு.
கற்க கசடற என்றார் வள்ளுவர், வைரமுத்து இதன் பொருள் உணர்ந்து எழுதினால் பேசினால் அவருக்கு சிறப்பு.
20 வருடத்துக்கு முன் அவர் கூறிய வார்த்தை நினைவுக்கு வருகிறது “இவ்வளவு நாள் தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறுபோடுவேன் என்றார்”
தமிழுக்கு அவர் சோறுபோடாமல் இருந்தால் கூட பரவாயில்லை , தமிழின் மீது சேறு பூசாமல் இருந்தால் சரி.
யாகாவார் ஆயினும் நாகாக்க: காவாக்கால்,
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
எவற்றைக் காக்காவிடினும் சொல்லைக் காத்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் சொற் சோர்வால் வருந்துவர்.
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகாது ஆகி விடும்.
ஒருவன் சொல்லால் ஒரு தீமை உண்டாயினும், அதனால் அவன் நன்மையெல்லாம் தீமையாகும்

1 கருத்து:

  1. எனது பிளாக் கட்டுரையை தாங்கள் பிரசுரித்துள்ளீர்கள் நன்றி https://aggraharam.blogspot.com/2018/01/blog-post_91.html

    பதிலளிநீக்கு