ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வேட்டுவச் சமூகத்தின் அறமும்
வேளாண்மைச் சமூகத்தின் அறமும்!
----------------------------------------------------------------------------
அறம் என்பது அந்தரத்தில் இருந்து வருவது அல்ல.
ஆயின் அறத்தின் தோற்றுவாய் எது? அறத்தின்
தோற்றுவாய் உற்பத்தி முறையே. ஒரு குறிப்பிட்ட
காலத்தில் ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையைப்
பொறுத்தே அச்சமூகத்திற்கான அறம் தோன்றுகிறது.

தமிழ்ச் சமூகம் தொடக்கத்தில் வேட்டுவச் சமூகமாகவே
இருந்தது. வேட்டையாடி விலங்குகளைக் கொன்று
தின்று உயிர் வாழ்வதே அச்சமூக வாழ்வியல்.
வேட்டையே அச்சமூகத்தின் உற்பத்தி முறை.
விலங்குகளின் இறைச்சி உணவாகவும், விலங்குகளின்
தோல் ஆடையாகவும், விலங்குகளின் கொம்பு, பற்கள்
ஆகியவை கருவிகளாகவும் பயன்பட்டன.

"பொன்னார் மேனியனே புலித்தோலை
அரைக்கசைத்து" என்ற தேவாரப் பாடல்
இதை உணர்த்தும்.

காலம் மாறியது. குறிஞ்சி நிலத்தில் வளம்
குன்றியவுடன் மக்களில் சிலர் முல்லை நிலம்
நோக்கிப் பெயர்ந்தனர். காடு திருத்திக் கழனி
ஆக்கினர். விலங்குகளைக் கொன்று தின்பதற்குப்
பதில், அவற்றை மனித உழைப்புக்குத் துணையாகப்
பயன்படுத்தலாம் என்று அச்சமூகம் அறிந்து
கொண்டது. வேட்டுவச் சமூக வாழ்க்கை மாறி
கால்நடைச் சமூக வாழ்க்கை தோன்றியது.
வரலாற்றின் இக்காலக் கட்டத்துச் சமூகம்
மேய்ச்சல் சமூகம் (pastoral society) எனப்பட்டது. 

வேட்டுவச் சமூக அறம் என்பது
கொலை புரிதல் ஆகும். கால்நடைச் சமூக
அறம் என்பது கொல்லாமை ஆகும். சமூகம்
மாறியபின் அறமும் தலைகீழாய் மாறி விட்டது.

ஒரு பசுவைக் கொன்று தின்றால் அக்குடும்பத்திற்கு
அது ஒரு நாள்உணவு மட்டுமே. ஆனால் அப்பசுவைக்
கொல்லாமல் வளர்த்தால், ஓராண்டுக்கான
உணவாக பசுவின் பால் அக்குடும்பத்திற்குப்
பயன்படுகிறது.

"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.
"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்"
என்கிறாள் ஆண்டாள் மேலும். இங்கு "வள்ளல்
பெரும் பசுக்கள்" என்ற சொல்லாட்சியைக்
கவனிக்கவும்.

திருப்பாவை முழுவதும் மேய்ச்சல் சமூக
வாழ்வியலை தத்ரூபமாகப் படம் பிடித்துக்
காட்டும் இலக்கியமாகும். ஒரு வரலாற்றியல்
பொருள்முதல்வாதிக்கு திருப்பாவை ஒரு
மாபெரும் தரவுச் சுரங்கம் ஆகும்.

(மானுட சமூக வரலாற்றில் நாகரிகம் அடைந்த
முதல் சமூகம் மேய்ச்சல் சமூகமே. தமிழகம்
மட்டுமல்ல இந்தியாவிலும் மொத்த உலகத்திலும்
இதுவே உண்மை. "மாயோன் மேய காடுறை
உலகமும்" என்னும் தொல்காப்பிய நூற்பா
முல்லை நிலக் கடவுளாக திருமாலைக்
கூறுகிறது. இந்தியாவில், ஆட்டிடையன் என்று
கூறப்படும் கண்ணனே ( கிருஷ்ணன்) மேய்ச்சல்
சமூக மக்களின் கடவுளாக இருந்தான்.

யூதர்கள் தங்களின் கடவுளாக ஒரு மேய்ப்பனையே
வரித்துக் கொண்டனர்.
"கர்த்தர் என் மேய்ப்பனாக இருக்கிறார். அவர்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து அமர்ந்த
தண்ணீரண்டை இளைப்பாறச் செய்கிறார்"
என்கிறது விவிலியம்

புராதன பொதுவுடைமைச் சமூகம் வேட்டுவச்
சமூகமே. அங்கு சமத்துவம் நிலவியது என்ற
போதிலும், அச்சமூகம் காட்டு மிராண்டி
வாழ்க்கை முறையைத்தான் கொண்டிருந்தது;
நாகரிகம் எய்தவில்லை).

ஆக சமூகத்தின் உற்பத்தி முறையைப் பொறுத்தே
அச்சமூகத்திற்கான அறமும் அச்சமூகத்தின்
தனிமனித அறமும் அமையும் என்ற பேருண்மை
இங்கு நிறுவப்பட்டுள்ளது.

அதே நேரத்தில்.அறம் என்பது இயற்பியல்
விதிகள் போன்று துல்லியம் உடையது அல்ல.
அறம் என்பது எழுதப்படாத சட்டம் என்று புரிந்து
கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தில் அறம் இல்லை என்று கூறுவோர்
அறம் பற்றிய மார்க்சியப் புரிதலை அறியாதோரே.
எல்லாக் காலத்துக்கும் பொருந்துகின்ற, எல்லாருக்கும்
பொருந்துகின்ற அறம் என்று ஒன்று இல்லவே இல்லை.

எனவேதான் மார்க்சியம் இருவேறு சமூக
அமைப்பிற்கான இருவேறு அறம் பற்றிக் கூறுகிறது.
முதலாளிய சமூகத்திற்கான அறமும்
கம்யூனிச சமூகத்திற்கான அறமும் வேறு வேறானவை
என்று மார்க்சியம் கூறுகிறது.
---------------------------------------------------------------------------------------------
        
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக