சனி, 20 ஜனவரி, 2018

மார்க்சிய அறிவைப் பெறுதல்!
ஒவ்வொருவருக்கும் உள்ள  அறிதலின் வரம்பு!
அறிதலின் தடைக்கல்லாக ஆங்கிலம்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1) மார்க்சியம் உள்ளூர்த் தத்துவம் அல்ல. அது
உலகளாவிய தத்துவம்.
2) உலகளாவிய தத்துவம் என்பதால், அதை அறிந்து
கொள்ள நமது தமிழ் மட்டும் போதாது.
உலகளாவிய வேறொரு மொழியின் துணை தேவை.
3) மார்க்சிய நூல்கள் யாவும் ஜெர்மன், பிரெஞ்சு,
ஆங்கிலம், ரஷ்யன், சீனம் ஆகிய மொழிகளில்
மட்டுமே முழுமையாக (அல்லது மிகப்பெருமளவு)
உள்ளன.
4) தமிழில் உள்ள மார்க்சிய இலக்கியங்கள் மிக மிகக்
குறைவு. அவற்றை மட்டும் கற்பது மார்க்சியம்
கற்பதாகாது. 
5) தமிழ் வாசகர்கள் ஆங்கிலத்தின் துணை இல்லாமல்
மார்க்சியம் கற்பது அறவே இயலாத ஒன்று.
6) மேலும் எளிய ஆங்கில அறிவு, அதாவது ஒரு குமாஸ்தா
மட்டத்தில் அமைந்த ஆங்கில அறிவைக் கொண்டு,
மார்க்சிய  இலக்கியங்களைப் புரிந்து கொள்ள
இயலாது. அதற்கு செழுமையான ஆங்கிலப்  புலமை
தேவைப்படுகிறது. இதற்குக் காரணம் மார்க்சிய
இலக்கியங்களின் கடினத் தன்மையே.
(ஐரோப்பியச் சூழல் பற்றிய அறிவும், ஐரோப்பிய
வரலாறு அறிவைப் பெற்று இருத்தலும் மார்க்சிய
அறிவைப் பெற முன்நிபந்தனை ஆகும். இதுவே 
கடினத்தன்மை என்று குறிப்பிடப்பட்டது).
7) ஆக ஆங்கில மொழியறிவின்மை மார்க்சியக் 
கல்வி பெறுவதற்கு  பெரும் தடைக்கல்லாக
இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இதுதான் யதார்த்தம்.
8) எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும்
உறுப்பினர்கள் எங்கிருந்து கிடைக்கிறார்கள்?
தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், எளிய
நடுத்தர வர்க்கம் ஆகியவற்றில் இருந்தே ஒரு
கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான உறுப்பினர்களைப்
பெறுகிறது. இதுதான் சரியானது; இயல்பானது.
இவ்வாறு அடிப்படை வர்க்கங்களில் இருந்து
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவோர் ஆங்கிலப் புலமை
பெற்றவர்களாக இருத்தல் இயலாது.
9)இச்சூழலில், கட்சிக்கு வெளியே உள்ள,
மார்க்சியத்தை எதிர்க்காத அறிவாளிப்
பகுதியின் உதவியை நாடுவது அவசியமாகிறது.
அதிக அளவில் மார்க்சிய இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கச் செய்ய வேண்டுமெனில்,
இது தேவைப்படுகிறது.

10) அம்பேத்கார் தமிழர் அல்லர். அவர் தமிழில்
எதையும் எழுதவில்லை. இருப்பினும் மஹாராஷ்டிரா
அரசு அமைத்துள்ள அம்பேத்கார் அறக்கட்டளை
(Ambedkar Foundation) வாயிலாக, அனைத்து இந்திய
மொழிகளிலும் அம்பேத்காரின் படைப்புகள்
மொழிபெயர்க்கப்பட்டு மக்களைச் சென்றடைந்து
உள்ளன. இதில் இருந்து மார்க்சியர்கள் படிப்பினை
பெற வேண்டாமா? 
********************************************************

  
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக