புதன், 31 டிசம்பர், 2014

மார்க்சியத்தில் சாதியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!
-------------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------------------- 

"மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்"என்ற தலைப்பில்
"புதிய மார்க்சியம் முன்முயற்சி"க்காக ஒரு கட்டுரை
எழுதி இருந்தேன்.அக்கட்டுரை ஒரு தொடக்கம்தான்.
தொடர்ந்து மார்க்சியத்தைப் புதுப்பித்தல் என்ற
பொருளில் அடுத்தடுத்துக் கட்டுரைகள் வெளிவரும்.

தொடக்கக் கட்டுரையைப் படித்த மார்க்சியத் தோழர்கள்
சில பல வினாக்களை எழுப்பி இருந்தனர். அவற்றுக்கு விடை
அளிக்கும் முயற்சியே இக்கட்டுரை.

சாதியம், தலித்தியம், பெண்ணியம் ஆகியவை குறித்த
சிக்கல்களுக்கு மார்க்சியத்தில் தீர்வு இல்லை. இது மார்க்சியத்தின்
போதாமை ஆகும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அன்று.
இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ள மார்க்சிய அறிஞர்கள்
ஆய்ந்து கண்ட முடிவு.

மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில்
சாதி கிடையாது. எனவே மார்க்சியம் சாதியைப் பற்றி
அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒரு தத்துவமும்
பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள 
அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார் நிலையிலான தீர்வுகளை
(READYMADE SOLUTIONS) வழங்கும் என்ற எதிர்பார்ப்பே
அறிவியலற்றது (UNSCIENTIFIC).  

மார்க்ஸ் தம் கடைசிக் காலத்தில் இந்தியாவைப் பற்றி
அறிந்து கொள்ள விரும்பினார்.அதற்காக சம்ஸ்கிருத மொழியைக்
கற்கத் தொடங்கினார். ஏனெனில், இந்திய இலக்கியங்கள் யாவும்
சமஸ்கிருதத்தில்தான் இருந்தன. ஐரோப்பிய நூலகங்களில்,
குறிப்பாக பிரிட்டிஷ் நூலகங்களில் சம்ஸ்கிருத நூல்கள்தான்
இடம் பெற்று இருந்தன.ஆனால் அவற்றைக் கற்பதற்குள்
மார்க்ஸ் காலமாகி விட்டார். ( மார்க்சுக்கு தமிழ் பற்றி எதுவும் தெரியாது.
தமிழ் ஒரு செம்மொழி என்பதோ, திராவிட மொழிகளுக்கு
அதுதான் மூல மொழி என்பதோ, தென்னிந்தியாவைப் பற்றி
அறிந்துகொள்ள தமிழைத்தான் படிக்க வேண்டும் என்பதோ
மார்க்சுக்குத் தெரியாது. கால்டுவெல் வந்து சொன்ன பிறகுதான்
தமிழனுக்கே தமிழின் அருமை தெரிந்தது.)

இந்திய வரலாற்றில் பெரும்பகுதி, இந்தியாவுக்கு வந்த 
வெளிநாட்டு யாத்திரிகர்களின் பயணக் குறிப்புகளில் இருந்துதான் பெறப்பட்டது என்பது இங்கு கருதத் தக்கது. கிரேக்க யாத்திரிகர் 
மெகஸ்தனிஸ் ( கி.மு 350-290 காலக்கட்டத்தில்), சீன யாத்திரிகர்கள் 
பாஹியான் (கி.பி 399-413),யுவான் சுவாங் (கி.பி 634-645),
இஸ்லாமிய யாத்திரிகர்கள் அல் பெருனி (கி.பி 973-1048),
இபன் பதுதா (கி.பி 1304-1368) மற்றும் ஐரோப்பிய யாத்திரிகர்கள் 
ஆகியோரின் பயணக் குறிப்புகள் இந்திய வரலாற்றின் பகுதிகள்.

தமது இந்தியப் பயணத்தின்போது, சீன யாத்திரிகர் யுவான் சுவாங் 
வாரணாசி, வைஷாலி, பாடலிபுத்திரம், புத்தகயா , நாலந்தா, 
ஜலந்தர், லும்பினி, வங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் 
தங்கினார். சம்ஸ்கிருத மொழியில் இருந்த அறுநூறுக்கும் மேற்பட்ட 
புத்த மத நூல்களைச் சேகரித்தார் என்பது வரலாறு. ஆக, இந்தியாவைப் 
பற்றி அறிந்து கொள்ள உதவும் கருவியாக சமஸ்கிருதம் அன்று இருந்தது 
என்பது கண்கூடு.
  
மார்க்ஸ் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினார் என்ற செய்தி 
தமிழ் வாசகர்கள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். இச்செய்தி குறித்து 
அவர்கள் ஐயமும் கொள்ளலாம். மார்க்சை ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகச் சித்தரிக்கக் ,கட்டுரையாளர் முனைகிறார் என்றுகூட  நுனிப்புல் 
வாசகர்களும் சிந்தனைக் குள்ளர்களும் கருதலாம். அவற்றை எல்லாம்
தவிர்க்கவே முந்தைய பத்திகளில் தரப்பட்ட விளக்கம்.  

மார்க்ஸ் நீண்ட காலம் வாழ்ந்து இருப்பாரே ஆனால்,
சமஸ்கிருதத்தைக் கற்று இந்தியாவைப் பற்றி
அறிந்து இருப்பார். சாதியைப் பற்றியும் தீண்டாமையைப்
பற்றியும் அறிந்திருப்பார்; தீர்வும் சொல்லி இருப்பார்.
 ஆனால் அந்த வாய்ப்பை இயற்கை
மார்க்சுக்கும் வழங்கவில்லை; நமக்கும் வழங்கவில்லை.    

மார்க்சிய மூல ஆசான்களான மார்க்ஸ், எங்கல்ஸ்,லெனின்,
ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படைப்புகள் மலையளவு உள்ளவை.
உலகில் வேறு எந்தத் தத்துவத்துக்கும் இந்த அளவு
விளக்க நூல்கள் கிடையாது. மூல ஆசான்களின் முக்கியமான
படைப்புகள் பலவும் உலகின் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப் பட்டு உள்ளன. மூல ஆசான்கள் ஒவ்வொருவரின்
படைப்புகளும் தொகுப்பு நூல்கள் ( COLLECTED WORKS) என்றும்,
தேர்வு நூல்கள் ( SELECTED  WORKS ) என்றும் வகைவகையாகப் பிரசுரிக்கப் பட்டு உள்ளன. இவை தவிர, பிரசுரிக்கப் படாத ஆவணங்களும்
( UNPUBLISHED DOCUMENTS ) ஆவணக் காப்பகங்களில்
பாதுகாக்கப் பட்டு மக்களின் பார்வைக்குக் கிடைக்கின்றன.

என்றாலும், மலையாகக் குவிந்து கிடக்கும் இந்த நூல்களில்,
ஏதேனும் ஒன்றில் சாதியைப் பற்றி (ON CASTE ) ஏதேனும்
ஒரு சிறு குறிப்பாவது உள்ளதா என்றால் இல்லை என்பது
கண்கூடு.

"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்பது
எங்கல்சின் புகழ் பெற்ற நூல். ( THE ORIGIN OR FAMILY, PRIVATE
PROPERTY AND STATE BY FREDERICK ENGELS ). மகத்தான
சமூகவியல் ஆய்வு நூல். இந்த மகத்தான நூலை  எழுதிய
எங்கல்ஸ், சாதியின் தோற்றம் (  ORIGIN OF CASTE ) என்று
ஏதேனும் ஒரு நூலை எழுதி இருக்கிறாரா? இல்லையே!

ஆஸ்திரேலியப் பழங்குடிகள், ஐரோப்பியப் பழங்குடிகள்,
அவர்களின் சமூகப் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை
குறித்து விரிவாக ஆராய்ந்து சமூகவியல் நூல்களைப் படைத்த
எங்கல்ஸ், இந்தியா பக்கம் கீழ்த்திசை நாடுகளின் பக்கம்
தம் பார்வையைத் திருப்பி இருக்கிறாரா என்றால், இல்லை என்பது
தெளிவு.

என்றாலும், இவை மார்க்ஸ் எங்கல்சின் குறைகள் அல்ல.
வேண்டுமென்றே திட்டமிட்டே இந்த மூல ஆசான்கள்
இந்தியாவை, கீழ்த்திசை நாடுகளைப் புறக்கணித்தனர் என்று
எவரேனும் கூறினால், அது அபத்தத்தின் உச்சம்.

மார்க்சும் எங்கல்சும் மனிதர்கள்; மாமனிதர்கள். கடவுள்கள் அல்ல; மந்திரவாதிகள் அல்ல. மந்திரக் கம்பளத்தில் பறந்து உலகெங்கும்
சுற்றித் திரிந்து, மொழிகளைக் கற்று, நூல்களைக் கற்று, 
ஆராய்ச்சி செய்து, மனித குலத்தின் அனைத்துச்
சிக்கல்களுக்கும் அவர்கள் தீர்வு வழங்கி இருக்க வேண்டும்
என்பது இயலாத ஒன்று. ஏனெனில் அது தனிமனித ஆற்றலின்
குறுகிய எல்லைக்குள் அடங்கி விடக்கூடியது அல்ல.

மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில்
பிறந்த தத்துவம். மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும், பிரதானமாக,
ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கே உள்ள
கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

புத்த மத நூல்கள் பற்றியோ புத்தரின் தத்துவங்கள் பற்றியோ
மார்க்சும் எங்கல்சும் அறிந்து இருக்கவில்லை. கீழ்த்திசை நாடுகளின்
அறிவுச் செல்வங்கள் ( TREASURE HOUSE OF KNOWLEDGE )
பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. கிரேக்கத்தின் தொன்மையான
அறிவுச் செல்வங்கள் பற்றி அறிந்து, அவற்றில் ஆழ்ந்த புலமை
பெற்ற அவர்கள் இருவருக்கும், கிரேக்கத்தையும் விடத்
தொன்மையான கீழ்த்திசை உலகின் தத்துவ ஞானம் மற்றும் மரபு
பற்றி எதுவும் தெரியாது.

லூத்விக் ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய அறிஞரின்
பொருள்முதல்வாதத்தை மேம்படுத்தி, அதையே மார்க்சியத்தின் பொருள்முதல்வாதமாக ஆக்கிக் கொண்ட மார்க்சும் எங்கல்சும்
இந்தியாவின் பொருள்முதல்வாத ஞானம் பற்றி
அறிந்து இருக்கவில்லை.
          
ஃ பாயர்பாக்கின் பொருள் முதல்வாதத்தைவிடச் சிறந்த,
தொன்மையான, மூலச்சிறப்புள்ள இந்தியப் பொருள்முதல்வாதம்
பற்றியோ, இந்தியத் தத்துவஞான மரபே பொருள்முதல்வாத
மரபுதான் என்பது பற்றியோ மார்க்சும் எங்கல்சும் அறிந்து
இருக்கவில்லை.    

எனவே, மார்க்சியம் என்பது சாராம்சத்தில், ஐரோப்பியத்
தத்துவமே. அது கீழ்த்திசைத் தத்துவம் அல்ல.

MARXISM ESSENTIALLY IS A WESTERN PHILOSOPHY, AND NOT AN
EASTERN PHILOSOPHY.

எனவே இந்தியத் துணைக் கண்டத்துக்கே உரித்தான,
சாதி, சாதியம், தீண்டாமை, சாதியப் படிநிலை அமைப்பு,
சாத்திய சடங்காசாரங்கள்   ஆகிய சிக்கல்கள் குறித்து
மார்க்சியத்தில் ஒரு சிறு குறிப்பு மருந்துக்குக் கூட இல்லை.

இதுவரை, மார்க்சிய மூல ஆசான்களின் படைப்புகளில்
சாத்தியம் குறித்து எதுவும் இல்லை என்பதை விரிவாகப்
பார்த்தோம். இனி இந்திய மார்க்சியர்களின் சாதி குறித்த
புரிதல் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

**************************************************************************

செவ்வாய், 30 டிசம்பர், 2014

அதிமுகவின் கருங்காலிச் சங்கம் தனிமைப் படுகிறது!
போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் வெல்க!!
(பழைய பதிவை மீண்டும் பிரசுரிக்கிறோம்!)
------------------------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------------------------------- 
28.12.2014 அன்று தொடங்கி, இன்று மூன்றாவது நாளாகத் 
தொடர்ந்து முரசு கொட்டும், தமிழக  அரசுப்  போக்குவரத்துத் 
தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! வெல்க!!

11 சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தத்தை
நடத்துகின்றன. அதிமுக சங்கம் மட்டும் கருங்காலித்தனம் 
செய்கிறது. உலகத் தொழிற்சங்க வரலாற்றிலேயே, 
பிறந்தது முதல் கருங்காலித்தனத்தை மட்டுமே 
செய்து கொண்டு இருக்கும் அதிமுகவின் சங்கம் 
தனிமைப் பட்டு நிற்கிறது.    

தொழிலாளர்கள் மத்தியில் கருங்காலிகளை உருவாக்க வேண்டும்,
தொழிலாளர்களின் போராட்டத்தை உடைக்க வேண்டும் என்ற 
ஒரே நோக்கத்துக்காக  எம்.ஜி.ஆரால்  உருவாக்கப் பட்ட
"அண்ணா தொழிற்சங்கப் பேரவை"யை போர்க்குணம் மிக்க 
போக்குவரத்துத் தொழிலாளர்கள் முறியடிப்பார்கள் என்பது 
திண்ணம்.

********************************************************************  
தமிழ்ப் பெண்களை விபச்சாரிகள் என்று எழுதிய
பெருமாள் முருகன் தமிழ் இனத் துரோகி!
-----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------------
1) மாதொருபாகன் என்ற தமது நாவலில்,
கொங்கு நாட்டுத் தமிழ்ப் பெண்கள் அனைவரும்
கோவில் திருவிழாவின்போது விபச்சாரம்
செய்தவர்கள் என்று பெருமாள் முருகன் எழுதி உள்ளார்.

2) திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில்
திருவிழாவின்போது, சூத்திரப் பெண்கள் அனைவரும்,
திருவிழாவுக்கு வரும் வெளியூர் ஆண்களுடன்
வரைமுறையின்றி உடலுறவு கொண்டு குழந்தைகளைப்
பெற்றுக் கொள்வார்கள் என்று எழுதி உள்ளார்
பெருமாள் முருகன்.

3) யாரோ ஒருத்தி, தனி ஒரு பெண்ணாகச் சோரம்
போனது பற்றிய கதை அல்ல இது. கொங்கு நாட்டுச்
சூத்திரச் சமூகம் முழுவதுமே, இவ்வாறு சோரம் போவதை
மரபாகக் கொண்டு இருந்தது என்று எழுதி உள்ளார்
பெருமாள் முருகன்.

4) கொங்கு மண்டலத்தில் வாழும் சூத்திரச் சாதிகளான,
கவுண்டர்கள், கருணீ கர்கள் உள்ளிட்ட பல்வேறு
சூத்திரச் சாதியினருக்கு, திருச்செங்கோடு அர்த்த
நாரீஸ்வரர் கோவிலில் மண்டகப்படி உரிமை உண்டு.
இவ்வாறு மண்டகப்படி உரிமை பெற்ற அனைத்து
சூத்திரச் சாதி பெண்களுமே, திருவிழா நாட்களில்,
வேற்று ஆண்களுடன் உடலுறவு கொள்வதைக்
குல வழக்கமாகக் கொண்டு இருந்தனர் என்று
எழுதி உள்ளார் பெருமாள் முருகன்.

5) இது ஒரு கற்பனையான நாவல்தானே என்று யாரும்
புறம் தள்ளி விட முடியாது. தமது நாவல் கற்பனை அல்ல
என்றும், கள  ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு
பெறப்பட்ட உண்மை என்றும் அடித்துக் கூறுகிறார்
பெருமாள் முருகன்.

6) குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்:
     --------------------------------------------------------------
தமது ஆய்வுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் நிதியைப்
பெற்றதாக குற்றவாளி பெருமாள் முருகன் தமது
நாவலின் முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலம்
அளித்து உள்ளார்.

7) இந்த நாவலைப் பதிப்பித்தவர் காலச்சுவடு கண்ணன்.
இவர் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மகன்.
காலச்சுவடு பதிப்பகம் தமிழ் பதிப்பக உலகில்
வருவாயில் லாபத்தில் முதல் இடத்தில் இருக்கும்
மாபெரும் கார்ப்பொரேட்  நிறுவனம் என்பதைத்
தமிழ் உலகம் நன்கு அறியும்.காலச்சுவடு நிறுவனம் 
தமிழ் இலக்கிய உலகை, பதிப்பக உலகை பேரளவுக்கு
ஆக்கிரமித்துக் கொண்ட கொடிய பார்ப்பன நிறுவனம்
என்பதையும் தமிழ் உலகம் நன்கு அறியும்.

8) இந்த நாவலில் நாத்திகப் பிரச்சாரம் என்று எதுவும் கிடையாது.
பெருமாள் முருகன் நாத்திகப் பிரச்சாரத்தைப் பணியாகக்
கொண்டவர் அல்லர்.

9) 2010இல் எழுதப் பட்ட இந்த நாவல், மெது மெதுவாகத்தான்
கொங்கு மண்டலச் சூத்திரர்களிடம் பரவியது. ஒரு நாவல்
வந்த உடனேயே, அதைப் படித்துப் பார்த்து, திறனாய்வு செய்கிற
அளவுக்கு, கொங்கு மண்டலச் சூத்திரச் சமூகம், கலை இலக்கிய ஜாம்பவான்களால் நிரம்பிய சமூகம் அல்ல,

10) ஆரம்பத்தில் இந்தப் போராட்டம் சூத்திரச் சமூகத்தின்
பல்வேறு சாதியினரும் ஒன்றிணைந்த போராட்டக் குழுவினரால்
மட்டுமே தொடங்கப் பட்டது. போராட்டத்தை மோப்பம்
பிடித்த இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் கும்பல், போராட்டத்துக்குள்
நுழைந்து கொண்டனர். இந்துக் கடவுளையும் இந்து மதத்தையும்
பக்தர்களையும் இழிவு செய்யும் நாவலை எதிர்த்த போராட்டம்
என்று அறிவித்தனர்.

11) போராட்டத் தலைமையை ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏற்கும் முன்பு,
காலச்சுவடு நிறுவனத்துக்கும் இதுபற்றி அறிவித்து, கலந்து
ஆலோசித்து, காலச்சுவடின் ஆசியுடனேயே இப்போராட்டத்தை
நடத்தினர். தனக்கு நல்ல பிரபலம் (publicity) கிடைக்கும் என்று
ஆதாயம் கருதி காலச்சுவடும் இப்போராட்டத்துக்கு ஒப்புதல்
அளித்தது.

12) திரைமறைவில் நடைபெற்ற இவற்றை எல்லாம் அறியாமலும்,
நாவலைப் படித்தே பார்க்காமலும், பல சூத்திர அன்பர்கள்
பெருமாள் முருகனை ஆதரித்து, தீராத களங்கத்தைத்
தேடிக் கொண்டனர்.

13) சூத்திரப் பெண்கள் மீதான களங்கம், அப்படியே நீடிக்கிறது.
பெருமாள் முருகனின் நாவலில் உள்ள தவறான கருத்துகள்
நீக்கப் படும் வரை, போராட்டம் தொடர வேண்டும்.

14) பெருமாள் முருகன் ஒரு குட்டி முதலாளித்துவ
அற்பவாதி. பார்ப்பன அடிவருடி.சூத்திரத் துரோகி.
கார்ப்பொரேட்  கைக்கூலி.அந்நிய நிறுவனங்களின்
எச்சில் காசைப் பெற்றுக் கொண்டு சொந்த சமூகத்தையே
காட்டிக் கொடுக்கும் ஈனப் பிழைப்புவாதி.

15) கேடுகெட்ட பார்ப்பனீயத்தை புனிதமானதாகச்
 சித்தரிக்கும் "வேள்வி(!)யை மேற்கொண்டுள்ள
மோசடி நிறுவனம் காலச்சுவடு.தமிழனை, சூத்திரனை
இழிவு செய்வதையே குலத்தொழிலாகக் கொண்டது
காலச்சுவடு. இதற்கு பெருமாள் முருகன் போன்ற
கோடரிக் காம்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது காலச்சுவடு.

16) பெருமாள் முருகன் ஒன்றும் அப்பாவி அல்ல. காசுக்காக
ஆதாயத்துக்காக தெரிந்தே பார்ப்பனீயத்திடம் சோரம் போன
இழிவான நபர்தான் பெருமாள் முருகன்.

17) பெருமாள் முருகனுக்கு ஆதரவாகத் திரண்ட
சூத்திர மூடர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்
காலச்சுவடு கண்ணன்.

18) சூத்திரன் என்றால் "தேவடியாள் மகன்" என்று
கூறுகிறது பார்ப்பனீயம். அது உண்மைதான் என்று
தமது நாவலில் வழிமொழிகிறார் துரோகி பெருமாள் முருகன்.  

 19) இந்த நாவலை அனுமதிக்கலாமா? மானமுள்ள
தமிழர்கள், மானமுள்ள சூத்திரர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில், கருத்துரிமை பறிப்பு
என்பதெல்லாம் ஒரு ரோமமும் இல்லை. பார்ப்பன
காலச்சுவடுவுக்கும், பார்ப்பன அடிவருடி பெருமாள் முருகனுக்கும்
இருக்கும் கருத்துரிமை பறிக்கப்பட வேண்டிய ஒன்றே.

               நாம் உணர்த்தும் நீதியை
               மறுப்பவர்க்கு இங்கு இடம் இல்லை.
                     ------ பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதம் ----------------

***************************************************************** ​​     
  

             

திங்கள், 29 டிசம்பர், 2014

ராஜீவ் காந்தி படுகொலை:
இன்னமும் விலகாத மர்மங்கள்!
-----------------------------------------------

மேற்கண்ட பொருளில் 
தோழர் பி இளங்கோ  சுப்பிரமணியன் அவர்கள் 
       (  தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்) 
பேசுகிறார்.
உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையோர் 
அனைவரும் வரவும்.

நாள்: ஞாயிறு 03.01.2015  மாலை 6.30 மணி 
இடம்: வங்கி ஊழியர்   OBC நலச் சங்கம்,
              எண் :6, மேற்கு நிழல்சாலை, 
              கோடம்பாக்கம் சென்னை 600 024 
              LANDMARK : கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் 

கூட்ட ஏற்பாடு: 
தலையங்க  விமர்சனம் (107ஆவது நிகழ்வு)


அன்புடன் அழைக்கும்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 

************************************************
பகுத்தறிவாளர்களே, கம்யூனிஸ்ட்களே,
ஹெச்.ராஜாவைத் தாக்குவது நியாயம் அல்ல!
--------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------
தமிழக பாஜகவின் தலைவர்களுள் ஒருவர் ஹெச்.ராஜா.
இவரது செல்வாக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதைப் 
பொறுத்துத்தான் அவர் மீதான தாக்குதலும் இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி இல்லை. அவரின் மக்கள் செல்வாக்கை விடப்
பல மடங்கு அதிகமாக அவர் மீது தாக்குதல் தொடுக்கப்
படுகிறது. இது நியாயம் அல்ல. ஏனெனில் இது நமக்கு 
ஆதாயம் தருவது அல்ல . எப்படி என்பதைப் பின்வரும் 
புள்ளி விவரம் சொல்லும்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு:
------------------------------------------------------
தொகுதி: சிவகங்கை 
மொத்த வாக்குகள்:    14,10,287 
பதிவான வாக்குகள்: 10,27,058

செந்தில்நாதன் (அதிமுக):     4,60,666
துரைராசு (திமுக):                     2,39,780
ஹெச் ராஜா (பாஜக):               1,30,815
கார்த்தி சிதம்பரம் (காங்):        1,01,925
கிருஷ்ணன் (கம்யூனிஸ்ட்):    19627
தமிழ் அரிமா (ஆத்மி):                   2082
நோட்டா  (NOTA ):                           7889

இத்தொகுதியில்  அதிமுக வெற்றி பெற்றது.
ஹெச் ராஜா டெப்பாசிட் இழந்தார்.
டெப்பாசிட் பெறுவதற்கு, பதிவான வாக்குகளில் 
ஆறில் ஒரு பங்கு பெற வேண்டும்.இதன்படி, 
1,71,176 வாக்குகள் பெற்றால் மட்டுமே டெப்பாசிட் 
கிடைக்கும். ஹெச்.ராஜ மேலும் 40361 வாக்குகள் 
பெற்று இருந்தால் மட்டுமே, அவர் டெப்பாசிட் 
பெற்று இருப்பார்.பாவம், இன்னும் நாற்பதாயிரம் 
வாக்குகளுக்கு அவர் எங்கே போவார்?

ஆக, இதுதான் ஹெச் ராஜாவின் ஐவேஜு.   
இவ்வளவுதான் மக்கள் மத்தியில் அவருக்கு 
இருக்கும் "செல்வாக்கு".

இப்படிப்பட்ட ஒருவரை, ஏதோ மாபெரும் மக்கள் தலைவர் 
போலக் கருதி எதிர்ப்பதால் யாருக்கு ஆதாயம்?
அவருக்குத் தான்.

ஒரு பழைய திரைப்படத்தில், வில்லன் நடிகர் பி.எஸ். 
வீரப்பா பேசும் வசனம் ஒன்று உண்டு.
"நீ திட்டத் திட்டத் தித்திக்கிறதடி  என் கண்ணே" என்று. 
அது போல, நாம் தாக்கத் தாக்க, அவருக்கு பாப்புலாரிட்டி 
அல்லவா கூடிக் கொண்டு போகும்!

"கண்டனம் அறிமுகத்தின் அடையாளம்" என்று ஓர்
பழமொழி உண்டு. அதைப் போல, அவர் மீதான 
கண்டனங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவருக்குச் 
செல்வாக்கு பெருகிக் கொண்டு போக நாம் 
இடம் தருதல் கூடாது. 

ஹெச்.ராஜ ஒன்றும் பிரதான வில்லன் அல்ல. வெறும் 
இரண்டாம் நிலை வில்லன்தான் (SUPPORTING VILLIAN ACTOR ).    
அப்படியானால், ஹெச் ராஜ என்ன சொன்னாலும் 
பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டுமா?
அப்படி அல்ல. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல 
அவருக்குக் காட்டும் எதிர்ப்பு, அவருக்கு இருக்கும் 
செல்வாக்குக்கு நேர் விகிதப் பொருத்தத்தில் இருக்க 
வேண்டும். 

பகுத்தறிவாளர்களே, கம்யூனிஸ்ட்களே, திமுக அன்பர்களே, 
கி.பி. 3014இல் கூட சிவகங்கை  தொகுதியில் டெப்பாசிட் பெற 
முடியாத அவரை, டெப்பாசிட் பெற வைத்து விட வேண்டாம் என்று 
நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  

ஹெச் ராஜ ஒரு மண்ணுளிப் பாம்பு!
மலைப்பாம்பு அல்ல!!
எனவே, IGNORE HIM. BOYCOTT HIM.
DONT ATTACK HIM DISPROPORTIONATELY!

***********************************************************

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

நல்லகண்ணு அவர்களுக்கு ஒரு கேள்வி!
--------------------------------------------------------- 
மரியாதைக்கு உரிய ஐயா,
ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்கப் போவதாகக் 
கூறினீர்களே, எப்போது ஆக்கப் போகிறீர்கள்?
தயவு செய்து பதில்  கூறுங்கள், ஐயா.  

******************************************
பெருமாள் முருகனின் நாவலுக்கு எதிர்ப்பு!
உள்மர்மம் என்ன?
-------------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------
1) பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" என்ற நாவலுக்கு 
எதிர்ப்பு எழுந்து உள்ளது.

2) காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை  நூலை வெளியிட்டு உள்ளது.

3) ஒட்டு மொத்தத்தில் இந்த நாவலுக்கான எதிர்ப்பு என்பது வெறும் 
    PUBLICITY STUNT  தவிர வேறு ஒன்றும் இல்லை.

4) எழுத்தாளர், பதிப்பாளர், RSS அபிமானிகளின் 
புனிதமான இலக்கியச்  சந்திப்புக்குப் பிந்தைய 
"தண்ணியடிப்பின்" போது இதற்கான கரு (120B ) உருவானது.

4) காலச்சுவடு மாபெரும் பதிப்பக சாம்ராஜ்யம்.
பார்ப்பன சாம்ராஜ்யம்.

5) பெருமாள்முருகன்  ஒரு குட்டிமுதலாளித்துவ 
அற்பவாதி( PETTI BOURGEOIS PHILISTINE )

6) மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு 
உயர் நடுத்தர வாழ்க்கையை நிறைவுடன் வாழ்பவர். இவர் 
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் அல்லர்.

7) கடும் அதிர்ச்சி மதிப்பு (SHOCK VALUE ) உள்ள ஒரு  விஷயம் 
பற்றிக் கதை அல்லது நூல் எழுதுவது , பின்னர் அந்நூலின் மீது 
ஒட்டு மொத்த சமூகத்தின் கவனத்தையும் திருப்புவது,
பின்னர் காசு பார்ப்பது ..............இதுதான் காலச் சுவடின் உத்தி.

8) இந்நூலில் கடவுளைப் பற்றி (திருச்செங்கோடு உமையொருபாகர் )
எவ்வித அவதூறும் இல்லை. 

9) பெருமாள் முருகன் நாத்திகப் பிரச்சாரகர் அல்லர் .
நாத்தழும்பேற நாத்திகம் பேசுபவர் அல்லர்.  
காலச்சுவடு கண்ணன் நாத்திகர் அல்லர்.

10) கொங்கு மண்டலப் பெண்கள் விபச்சாரம் செய்யும் 
வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள் என்பதுதான் 
இந்நாவலில் முருகன் கூறி இருக்கும் செய்தி.

11) தமிழ்ப் பெண்கள் விபச்சாரிகள் என்று நிறுவுவதுதான் 
காலச் சுவடின் நோக்கம்.அதை இந்த நாவல் 
செவ்வனே செய்கிறது.

12) நாவல் என் கையில் இருக்கிறது. முதல் வாசிப்பை 
முடித்து விட்டேன். இதைத் திறனாய்வு செய்யும் 
வீண் வேலையில் நான் ஈடுபட விரும்பவில்லை.. 

13) காலச்சுவடின் நுண்ணரசியல் (MICRO POLITICS )
புரியாமல், பலரும் பெருமாள் முருகனின் "கருத்துரிமை"யை 
ஆதரித்துக் கொண்டு இருப்பது முழு மூடத்தனம்.

14) கூச்சல் எழுப்புவதில் முன்னணியில் இருப்பது 
த .மு.எ.க.ச எனப்படும் பார்ப்பன மார்க்சிஸ்ட் கட்சியின் 
எழுத்தாளர் அமைப்பு. இது நுண்ணரசியல் செய்யும் பார்ப்பன 
அமைப்பு.

15) பார்ப்பனீயத்தின் நுண்ணரசியல் புரியாமல், ஒரு நாள் 
காலை சூரியன் உதித்ததும், திடீர் என்று கிளம்பி விட்ட 
"கருத்துரிமைப் போராளி"களின்  மூடத்தனத்தை  நினைத்து
நான் வருந்துகிறேன்.

பின் குறிப்பு:    
--------------------- 
 இக்குறுங்கட்டுரை இலக்கியம், பதிப்புலகம், 
மார்க்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பரிச்சயம் 
உடைய வாசகர்களை மனத்தில் கொண்டு எழுதப் பட்டது.
பரந்துபட்ட வாசகர்களுக்காக இது எழுதப் படவில்லை.
"பிறழ்புரிதல்"ஐத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு.

*************************************************************    

சனி, 27 டிசம்பர், 2014

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலம்?????
THE FUTURE OF CPI????
------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------- 
               பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் 
               மெல்லப் போனதுவே 
                    -----பட்டினத்தடிகள்------

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொண்ணூறு 
வயது ஆகி விட்டது.(கட்சி தொடங்கப்பட்ட வருடம் 
1920ஆ 1925ஆ  என்ற சர்ச்சை இங்கு தேவையற்றது)
CPI  எனப்படும் இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தல் 
பாதையை மேற்கொண்ட கட்சி. ஆயுதப் போராட்டத்தில் 
நம்பிக்கை அற்ற கட்சி. புரட்சியைக்   கைவிட்ட கட்சி.
இக்கட்சிக்கு என்று ஆயுதப்படையோ படைக்குழுவோ 
எதுவும் கிடையாது. மாவோயிஸ்ட்டுகள் ( நக்சல்பாரிகள்) 
போல ஆயுதப் போராட்டம் நடத்தும் கட்சி அல்ல இது.
மகாத்மா காந்தியின் அஹிம்சை முறையில் நம்பிக்கை 
கொண்ட, தேர்தல் பாதையைப் பின்பற்றும் ஒரு கட்சி.
அந்த வகையில், (repeat அந்த வகையில்) காங்கிரஸ், பாஜக,
திமுக, அண்ணா  திமுக, மதிமுக  போன்ற ஒரு அப்பட்டமான 
முதலாளித்துவக் கட்சிதான் இது. (  CPM எனப்படும் மார்க்சிஸ்ட் 
கட்சியும் இக்கட்சி போன்றே தேர்தல் பாதையைப் 
பின்பற்றும் ஒரு முதலாளித்துவக் கட்சி தான் என்பது 
இங்கு   கணக்கில் கொள்ளத் தக்கது )

CPI கட்சிக்கு இன்று (AS OF NOW ) மக்கள் மத்தியில் 
என்ன செல்வாக்கு உள்ளது என்பதை ஆதாரத்துடன் 
பார்ப்போம் அதற்கு முன்னதாக, பின்வரும் விவரங்களை 
மனத்தில் பதித்துக் கொள்வது அவசியம்.

1) இந்திய மக்கள் தொகை 125 கோடி.
2) அண்மையில் ஏப்ரல்-மே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 
   தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர்களின் 
   எண்ணிக்கை 81.4 கோடி 
3)  பதிவான வாக்குகள்: 66.38 % . சிறப்பான வாக்குப் பதிவு.
4)  இந்திய நாடாளுமன்ற மக்களவையின் (லோக்சபா)
     மொத்த உறுப்பினர் எண்ணிக்கை: 543 
5) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி: மொத்த நாடாளுமன்றத் 
    தொகுதிகள்: 40 ( தமிழ்நாடு:39, புதுவை:1 )
6) தமிழ்நாடு மொத்த வாக்காளர் எண்ணிக்கை:
     5,50,42,876 அதாவது ஐந்தரைக்கோடி.

மேற்கண்ட விவரங்களை மனத்தில் இருத்திக் 
கொண்டீர்கள் அல்லவா! இப்போது தேர்தல் முடிவுகளின்படி,
CPI எனப்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கைப் பரிசீலிப்போம்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் CPI கட்சி ஒரே ஒரு இடத்தை
மட்டும் பெற்று இருக்கிறது. 543 இடங்களில் ஒரு இடம் . 
ஒரே ஒரு இடம் நூற்றுக் கணக்கான இடங்களில் போட்டி இட்டு 
ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்று இருக்கிறது..   
543இல் 1 என்பது 0.0018 சதவீதம். 
ZERO POINT ZERO ZERO ONE EIGHT PERCENT!!!
எவ்வளவு கேவலம்!எவ்வளவு கேவலம்!!
அகில இந்தியக் கட்சி என்ற அந்தஸ்தை CPI கட்சி 
இழந்து விட்டது. (அகில இந்தியக் கட்சி என்ற அந்தஸ்தைப் 
பெற 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று 
இருக்க வேண்டும். அந்த 11 இடங்களும் குறைந்தது மூன்று 
மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட இடங்களாக
இருக்க வேண்டும்.)

அகில இந்தியக் கட்சி அந்தஸ்து பறி  போய் விட்டது 
என்பதன் பொருள் என்ன? கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் 
சின்னமான கதிர் அரிவாள் சின்னம் பறி போய் விட்டது 
என்று பொருள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 8 இடங்களிலும் 
புதுவையில்  ஒரு இடத்திலும் என்று மொத்தம் 9 இடங்களில் 
போட்டி இட்டது CPI  . இந்த 9 இடங்களிலும் தோற்றது; 
டெப்பாசிட் தொகையை இழந்தது.    

புதுச்சேரியில் போட்டியிட்ட CPI வெறும் 12709 (REPEAT 12709)
வாக்குகளை மட்டும் பெற்றது. நோட்டாவுக்கு இத்தொகுதியில் 
கிடைத்த வாக்குகள்: 23598 (REPEAT 23598). நோட்டாவை விடக் 
குறைவாக வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சி இத்தொகுதியில் 
CPI தான் என்பது கூடுதல் கேவலம்!

திருவள்ளூர் தனித் தொகுதியில் போட்டி இட்ட இக்கட்சி 
13794 (REPEAT 13794 ) வாக்குகளை மட்டும் பெற்றது.இங்கும் 
நோட்டாவை விடக் குறைவாகவே வாக்குகள் பெற்றது.
இங்கு நோட்டாவுக்கு 23598 ( REPEAT 23598 ) வாக்குகள் 
கிடைத்தன. மிகக் குறைவான வாக்குகளை, 11122 
(REPEAT 11122 ) கடலூர் தொகுதியில் பெற்றது இக்கட்சி.
சற்றேறக் குறைய 13 லட்சம் வாக்குகளை உடைய 
கடலூர் தொகுதியில் இக்கட்சி பெற்ற வாக்குகள் 
11122, அதாவது 11 ஆயிரம்தான். 

இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் CPI கட்சி 
பெற்ற வாக்குகளை வைத்து , மக்கள் கம்யூனிசத்தை 
விரும்பவில்லை என்று முடிவுக்கு வந்து விடக் கூடாது. 
மக்கள் இன்னும் கம்யூனிசத்தைத்தான் விரும்புகிறார்கள்.
வேறு தத்துவத்தை அவர்கள் நாடவில்லை. ஆனால், CPI 
கட்சி என்பது போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று அவர்கள் 
புரிந்து வைத்து இருக்கிறார்கள்.

"கம்யூனிசம் வாழ்க! ஆனால், போலிக் கம்யூனிஸ்ட்டுகள் 
ஒழிக " என்பதே மக்களின் உள்ளக் கிடக்கை!

எனவே நண்பர்களே, 
CPI எனப்படும் இந்த "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி"
இன்னமும் இருக்கத்தான் வேண்டுமா?
கம்யூனிசத்தின் நலன் கருதி, இக்கட்சி 
கலைக்கப்பட வேண்டாமா? குறைந்தபட்சம் இன்னொரு 
போலி கம்யூனிஸ்ட் கட்சியான, ஒப்பீட்டு ரீதியாக 
(COMPARATIVELY ) அளவில் பெரிய CPM எனப்படும் 
"மார்க்சிஸ்ட்" கட்சியுடன் இணைக்கப் பட  வேண்டாமா?

போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான CPI கட்சியின் 
அன்பர்களே, இனிமேலும் தனியாகக் கட்சி 
நடத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? ஒன்று, உங்கள் 
கட்சியைக் கலைத்து விடுங்கள். அல்லது CPM கட்சியுடன் 
உங்கள் கட்சியை இணைத்து விடுங்கள். அப்போதுதான் 
டெப்பாசிட்டாவது மிஞ்சும்!    

****************************************************************
  

வெள்ளி, 26 டிசம்பர், 2014

தோளர் நல்லகண்ணு நீடூழி வாழ்க!
---------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------- 

இன்று (26.12.2014) 91ஆவது பிறந்த நாளைக் 
கொண்டாடும் தோளர் நல்லகண்ணு அவர்களை 
வாழ்த்துகிறோம். 

பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் 
நல்லகண்ணு போன்ற, மெய்யாகவே 
எளிமையை விரும்பும் நல்ல மனிதர்களைக் கூட 
விட்டு வைப்பதில்லை போலும்.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் நல்லகண்ணு 
அவர்களுக்குப் பலரும் சால்வை அணிவித்து
வாழ்த்துச் சொல்லும் காட்சிகள் இன்று காலையில் 
ஒளிபரப்பப் பட்டன. எளிமையாகத்தானே
பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்று 
"கம்யூனிஸ்ட  கட்சி" அன்பர்கள் கூறலாம்.
ஆனால், பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே 
ஆடம்பரம் தானே! "ஆகுல நீர" என்று வள்ளுவர் 
கூறுவதில் சேர்த்திதானே பிறந்தநாள் விழாக்கள்!    

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தீரத்துடன் எதிர்த்து 
தேச விடுதலைக்காகப் போராடிய இளம் நல்லகண்ணுவை 
நாடறியும். இளைஞன் நல்லகண்ணுவை போலிஸ் 
காடையர்கள் பிடித்து, அடித்து உதைத்துக் கீழே சாய்த்து 
அவரது கால்களின் மீது ஏறி  நின்று  லத்தியால் 
பாதங்களில் வெறிகொண்டு  அடித்தபோதும் 
உறுதி குலையாமல் நின்ற அந்த வீர இளைஞனின் வரலாறு 
போற்றுதலுக்கு உரியது. இதெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு 
முன்பு நடந்தது. 

விக்கிரமசிங்கபுரம் ஊரைச் சுற்றிக் கண்ணி வெடிகளைப் 
புதைத்து வைத்து, போலீஸ் காடையர்களின்  பிடியில் 
சிக்கி விடாமல் இளைஞன் நல்லகண்ணுவைக் கண்ணின் 
இமை போலப் பாதுகாத்த ஊர்  மக்களை நான் அறிவேன். 
இந்த வரலாற்றை எல்லாம் அவர்களிடம் இருந்துதான் 
நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

இன்றைய இளைய தலைமுறை, நல்லகண்ணு அவர்களின் 
வீரமும் தியாகமும் செறிந்த இளம் பருவதது வரலாற்றை
அறிந்து இருக்கவில்லை. நல்லகண்ணு அவர்களே 
அவற்றை எல்லாம் மறக்க முயலும்போது, இளைஞர்களைக்
குறைகூற எதுவும் இல்லை. 

புதிதாக வாக்குரிமை பெறும், பெற இருக்கும் 
இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டி 
விடும் என்று  தேர்தல் ஆணைய அதிகாரிகள் 
கூறுகின்றனர். இந்த ஒரு கோடி இளைஞர்களுக்கு 
நல்லகண்ணுவைப் பற்றித் தெரிந்தது எல்லாம் இதுதான்:
"அம்மா விசுவாசியான ஒரு வயதான பெரியவர்".

இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் 
தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி என்றுஅவரது கட்சி 
கனவு கண்டபோது  நல்லகண்ணு அவர்கள் கூறியதை
நாடு இன்னும் மறக்கவில்லை. "ஜெயலலிதாவைப் பிரதமர் 
ஆக்குவதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்"
என்றாரே நல்லகண்ணு! இதை யாரும் மறந்து விட முடியுமா?

மறக்கக் கூடிய வாசகமா அது! உலகக் கம்யூனிச வரலாற்றிலேயே 
அருவருக்கத் தக்க ஒரு கூற்று ( ASSERTIVE STATEMENT ) இதை விட 
வேறு எதுவும் உண்டா? காரல் மார்க்சின் ஆவி உங்களை 
மன்னிக்குமா நல்லகண்ணு அவர்களே?

     பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் 
     அறம்நாணத் தக்கது உடைத்து 
என்கிறாரே வள்ளுவர்! இழிவினும் இழிவான 
இந்தக் கூற்றுக்குத் தாங்கள் இன்னும் நாணவில்லையே,
நல்லகண்ணு அவர்களே!

"ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் இந்தியப் 
பிரதமர் ஆகும் அருகதை இல்லை" என்று முரசு அறைந்தாரே 
தங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்!
தமது புதல்வருக்கு ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் 
பதவியைப் பெற்றுத் தருவதற்குத் தான் தா.பாண்டியன் 
இவ்வளவு இழிவாகக் காக்காய் பிடிக்கிறார் என்று ஊடகங்களில் 
அப்போது செய்தி வந்ததே! அதைத் தொடர்ந்துதானே தாங்கள் "ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவதற்காக  உடல் பொருள் 
ஆவியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பணயம் வைக்கும் "
என்று மொழிந்தீர்கள்! இழிவின் உச்சத்தைத் தொடுவதில் 
தா பாண்டியனுடன் போட்டி இட்டீர்களே, நல்லகண்ணு 
அவர்களே!

   தோளர் தா பாண்டியன்,
   தோளர்  நல்லகண்ணு 
இவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் 
தவிர்க்க இயலாமல் எனக்கு ஒரு பல்லக்கும் கூடவே 
ஞாபகம் வரும். தோள்கள் காய்ப்பு ஏறிப் போய் மூச்சு இறைக்க 
பல்லக்குத் தூக்கும் பல்லக்குத் தூக்கிகளின் நினைவு வரும்.
கூடவே சரோஜினி நாயுடுவின் "PALANQUIN BEARERS" என்ற 
கவிதையும் நினைவுக்கு வரும். 
   "LIGHTLY,O,LIGHTLY,WE BEAR HER ALONG
   WE BEAR HER ALONG LIKE A PEARL ON A STRING"   .   

நல்லகண்ணு அவர்கள் மீது எனக்கு, எங்களுக்கு (அதாவது
எங்கள் ஊர்க்காரகளுக்கு ) இன்னும் ஒரு வருத்தமும் உண்டு.
இதே வருத்தம் மறைந்த தோளர் நல்லசிவம் (மார்க்சிஸ்ட் கட்சி)
அவர்கள் மீதும் உண்டு. "இடதுசாரி ஒற்றுமை" என்று 
யாராவது ஒருவர் ஒரு கழிப்பறைக்கு அருகில் கூட நின்று பேச 
வழி இல்லாமல் செய்து விட்டார்களே இந்த இருவரும்,  
தோளர்கள்  நல்லகண்ணுவும் நல்லசிவமும்  என்று நாங்கள் 
இன்னும் வருந்துகிறோம்.

1967 முதல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் 
தொகுதியில் இந்த இருவரும் போட்டியிட்டு, எம்.எல்.ஏ பதவி 
இந்த இருவருக்குமே கிடைக்காமல் போய்விட்ட சோகத்தை 
நாங்கள் இன்னமும் நினைவு  கூர்கிறோம். 1967 தேர்தலில் 
நல்லசிவன் தோற்றார்.1977 தேர்தலில் நல்லகண்ணு தோற்றார்.
1984 தேர்தலில் நல்லசிவன் தோற்றார். CPI, CPM ஆகிய இரு 
கட்சிகளும் ஒரே தொகுதியில் போட்டியிட்டு, வாக்குகளைப் 
பிரித்ததன் விளைவு, இந்த இருவருமே வெற்றி பெற 
முடியவில்லை. சங்குமுத்துத் தேவரும், ஆர்வி அனந்த
கிருஷ்ணனும் வெற்றி பெற்றதுதான் நிகழ்ந்தன .   

இதன் காரணமாக, விக்கிரமசிங்கபுரம், பாவநாசம்,
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், 
சேர்மாதேவி, பேட்டை ஆகிய ஊர்களில் CPI, CPM ஆட்கள் 
யாரும் இடதுசாரி ஒற்றுமை என்று வாயைத் திறக்கக் கூட 
முடியாமல் போய் விட்டது.  

நிற்க. ஒரு காலத்தில், ONCE UPON A TIME, LONG LONG AGO,
புரட்சியாளராக இருந்த நல்லகண்ணு அவர்கள் காலப்போக்கில் 
எதிர்ப் புரட்சியாளராக, டாங்கேயிஸ்ட் ஆக, திரிபுவாதியாக 
மாறி, இன்று போலிக் கம்யூனிஸ்டாகச் சீரழிந்து போனதற்கு 
என்ன காரணம்? யார் காரணம்? யாரெல்லாம் எவையெல்லாம் 
காரணம்?  

நிச்சயமாக நல்லகண்ணு அவர்கள் மட்டும் காரணம் இல்லை. 
அவர் சார்ந்திருந்த இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காரணம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு காரணம். இவை மட்டுமா?

     "IDEOLOGICAL CORRUPTION LEADS TO POLITICAL CORRUPTION;
     POLITICAL CORRUPTION LEADS TO ORGANISATIONAL CORRUPTION;
     ORGANISATIONAL CORRUPTION LEADS TO INDIVIDUALS'
     CORRUPTION." --- என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இதுதான் காரணம்! இங்கு "CORRUPTION " என்பது லஞ்ச ஊழலைக் 
குறிக்காது என்று ஆங்கிலம் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

பின்குறிப்பு:
------------------- 
இக்கட்டுரையில் "தோளர்" என்று குறிப்பிட்டதில் 
எழுத்துப் பிழை எதுவும் இல்லை. புரட்சியாளர்களை மட்டுமே 
"தோழர்" என்று அழைக்க வேண்டும்; ( உதாரணம்: தோழர் சாரு  
மஜும்தார்);  போலிக் கம்யூனிஸ்ட்களை "தோளர்" என்றுதான்  
அழைக்க வேண்டும். இது எங்கள் நிலைப்பாடு. 

************************************************************************** டிசம்பர் 26
சுனாமி நினைவு நாள் 
----------------------------------- 
பத்து ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்,
( 26 டிசம்பர் 2004 ) ஊழித்தாண்டவம் 
ஆடிய சுனாமியால் உயிர் உடமை 
இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது 
அன்று ( 04.01.2005 ) எழுதப்பட்ட இந்தக் கவிதை.
------------------------------------------------------------------- 

                                     மிச்சம் வை!
           ..............வீரை பி இளஞ்சேட்சென்னி .........
----------------------------------------------------------------------  

யாரும்  பொல்லாத சொப்பனம் காணாமலும்
வானத்தில் தூமகேது தோன்றி மறையாமலும் 
மார்கழி வழமையின் ஆண்டாள் பாராயணத்துடன் 
தீங்கின்றி விடிந்த அன்றையப் பொழுதின் 
அடுத்து  வந்த கணங்கள் 
பேய்களுக்கே உரியவை.

தாய்முலை நஞ்சுண்டு  
நீலம் பாரித்துக் கிடந்தனர்
ஆழியின்  பிள்ளைகள்.

உயிர் சுரக்கும் கடல் தாய் 
எங்ஙனம் பூதகி ஆனாள்?
காடழித்து 
மணல் அபகரித்து 
மக்காப் பொருளால் நீரூற் றுகளின் கண் அவித்து    
வளியடுக்கில் துளைசெய்து 
இயற்கையைச் சுட்டுத் தீய்த்த 
மானிடப் பதர்களே 
சபித்தலுக்கு உரியவர்கள்.

படிப்பினை தேரா மானிடனே 
நுனிக்கிளை அமர்ந்து
அடிக்கிளை அறுக்கும் 
பேதைமை குறித்து ஓர்மை கொள்
உன்னினும் வலிய இயற்கையுடன்    
கைகுலுக்கு முறுவலி 
தோழமை பூண் 
இயைந்து வாழ் 
அடுத்து வரும் தலைமுறைக்கு 
இயற்கையை மிச்சம் வை.

******************************************* 
 
  

வியாழன், 25 டிசம்பர், 2014

மார்க்சியம் வளர்ச்சி அடையும் தத்துவம்!
------------------------------------------------------------------
சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.
இயக்கத்தின் போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது.
காலத்துக்கு ஏற்றவாறு மார்க்சியமும் வளர்ச்சி
அடைய வேண்டும்.புதுப்பிக்கப் பட வேண்டும்.
அதற்கான முயற்சிகள் மார்க்சியர்களால் மேற்கொள்ளப்
படவேண்டும்.

அத்தகைய  முயற்சியின் வெளிப்பாடுகளை இந்த
நீண்ட கட்டுரையில் காணலாம்.

தட்டச்சு வசதி கருதியும், முகநூலின் வரம்பு கருதியும்
இக்கட்டுரை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு
வெளியிடப் படுகிறது.

மார்க்சியத்தில் பரிச்சயமும் பயிற்சியும் உடைய
வாசகர்களுக்கானது இக்கட்டுரை.

கட்டுரை ஆக்கம்:
-------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்

வெளியீடு:
-----------------
புதிய மார்க்சியம் முன்முயற்சி
NEO MARXISM INITIATIVE

******************************************************
   
எம்ஜிஆருக்கே பாரத ரத்னா கொடுத்த பின்னர் 
யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!
------------------------------------------------------------------ --------
எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி 
அந்த விருதையே கேவலப் படுத்தியவர் 
ராஜீவ் காந்தி. 1991இல் ராஜீவ் காந்தி மரணம் 
அடையாமல் இருந்து இருப்பார்   என்றால்
இந்நேரம் ஜேப்பியாருக்கும்   பாரத ரத்னா வழங்கி 
அழகு பார்த்து இருப்பார்.

எம்ஜிஆருக்கே  பாரத ரத்னா வழங்கிய பின்,
வேறு யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.
எனவே, வாஜ்பாய்க்கு வழங்கியது பற்றிப் 
புலம்ப வேண்டிய அவசியம் இல்லை.

*************************************************

கட்டுரைகளைப் படிப்பதற்கான இடம் எது?
GOOGLE SEARCHஇல் ilango arasiyal. 
----------------------------------------------------------- 
முகநூல் என்பது நீண்ட கட்டுரைகளைப் 
படிப்பதற்கு ஏற்ற இடம் அல்ல.

எனவே, எனது நீண்ட கட்டுரைகளைப் 
படித்திட, அருள்கூர்ந்து,

GOOGLE SEARCHஇல் ilango arasiyal என்று 
டைப் செய்து enter அடிக்கவும். உடனே 
தாங்கள் என்னுடைய வலைப்பூவில் ( blog )
தரையிறங்கி விடுவீர்கள்.

கட்டுரைகளைப் பெரிய எழுத்தில், பல்வேறு 
வண்ணங்களில் வாசிக்க முடியும்.
அன்புடன்,
பி. இளங்கோ சுப்பிரமணியன் 
********************************************

டிசம்பர் 25
நியூட்டன் பிறந்த நாள்.
------------------------------------
மகோன்னதங்களின் சிகரத்தில்
மானுடத்தை உயர்த்தி வைத்த 
உலகின் முன்னோடி அறிவியல் அறிஞன் 
சர் ஐசக் நியூட்டன் 
பிறந்த நாள் இன்று (டிசம்பர் 25 ).

இதே நாளில் பிறந்த இயேசுநாதர் 
கோடிக்கணக்கான மக்களால் 
வணங்கப் படுகிறார்.

எனினும், இயேசுநாதரை விட 
மானுடத்துக்கு அதிகமான நன்மைகளைத் 
தந்தவர் நியூட்டன். இதுவே உண்மை!

நியூட்டனுக்கு இரண்டு பிறந்த நாட்கள் உண்டு.
நியூட்டன் பிறந்த காலத்தில் இங்கிலாந்தில் 
ஜூலியன் காலண்டர் முறைதான் செயல்பாட்டில் 
இருந்தது.  அதன்படி,நியூட்டனின் பிறந்த நாள் 
டிசம்பர் 25.

பின்னர் உலகம் முழுவதும் கிரகோரி காலண்டர் 
முறை பின்பற்றப் பட்டது. இதன்படி, நியூட்டனின் 
பிறந்த நாள்: ஜனவரி  4.

நியூட்டன் அறிவியல் மன்றம் இவ்விரு நாட்களையும் 
நியூட்டனின் பிறந்த நாட்களாகக் கொண்டாடி வருகிறது.

நியூட்டன் 
-------------- 
பிறப்பு: டிசம்பர் 25, ( 25 Dec 1642) 

                 ஜனவரி 4, 1643

இறப்பு: 20 மார்ச்சு 1727, 
                31 மார்ச்சு 1727

நியூட்டனைப்  போற்றுவோம்!
நியூட்டனைப் போற்றுவது என்பது 
அறிவியலைக் கற்பது என்பதே ஆகும். 
அறிவியலைக் கற்காமல் கணிதத்தைக் 
கற்காமல் யாரும் நியூட்டனைப் போற்ற முடியாது.

பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம் சென்னை 
*************************************************

மதப் பண்டிகைகளுக்கு  
வாழ்த்துச் சொல்லுவது இல்லை!
-------------------------------------------------------
தீபாவளி முதலிய இந்துப் பண்டிகைகள்,
கிறிஸ்துமஸ் முதலிய கிறிஸ்துவப் பண்டிகைகள்,
ரம்ஜான் முதலிய இஸ்லாமியப் பண்டிகைகள் 
ஆகியவற்றுக்கு நாம் வாழ்த்துச் சொல்லுவது இல்லை.

மதங்களின் பிடியில் இருந்து மானுடம் விடுதலை 
அடைய வேண்டும் என்பதே எமது நிலை.

தைத் திங்கள் முதல் நாளில் வரும்
பொங்கல்  எனப்படும் உழவர்  திருநாள் 
(அதாவது தமிழர் திருநாள் ), மே முதல் நாளில் வரும் 
மே நாள் எனப்படும் தொழிலாளர் திருநாள் 
ஆகியவற்றை நாம் ஈடுபாட்டுடன் கொண்டாடுவோம்.
வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுவோம்.

தேசிய அறிவியல் நாள் (பெப்ருவரி 28 ),
தேசிய கணித நாள் (டிசம்பர் 22 )
நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் 
அறிஞர்களின் பிறந்த நாட்கள், 

பாரதியார், பாவேந்தர் ஆகிய பெருங் கவிஞர்களின் 
பிறந்த நாட்கள்,

இந்திய அரசு விழா நாட்களான சுதந்திர நாள்,
குடியரசு நாள், மகாத்மா காந்தி பிறந்த நாள் 
ஆகியவை,

அவ்வப்போது ஐ.நா மன்றம் அறிவிக்கும் நாட்கள்,

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் பிறந்த நாட்கள்-நினைவு நாட்கள்,
பெரியார், அண்ணா பிறந்த நாட்கள்-நினைவு நாட்கள் ,
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ( ஜனவரி 25 )
ஆகிய நாட்களையும் (இவை போல்வன உள்ளிட்டு )
மட்டுமே நாம் அனுசரிப்போம்.

எந்த நிலையிலும் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் 
சொல்லும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்து போய் விட மாட்டோம்.
இதுவே நியூட்டன் அறிவியல் மன்றத்தின் நிலை 
தெளிவான நிலை..

பி. இளங்கோ சுப்பிரமணியன் தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை 
*****************************************************888

புதன், 24 டிசம்பர், 2014

பெரியார் வாழ்கிறார்!
----------------------------------- 
( டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் )
------------------------------------------------------------------------------

பெரியார் மறைந்து விட்டார்; எனினும் தம் சிந்தனைகள்
மூலமாக அவர் இன்றும் வாழ்கிறார்.தமிழ்ச் சமூகத்தில் 
பெரியாரின் சிந்தனைகள் இன்னும் நீண்டகாலம் வாழும்.  

பெரியாருக்கு அழிவு இல்லை!
அவர் வாழ்கிறார்! வாழ்வார்!!

*************************************************************
மூலதன வகுப்புகளும்
பித்துக்குளி முருகதாசுகளும்!
------------------------------------------------------------------------------------------
பி. இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: 1) சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு,
                           காரல் மார்க்ஸ் ஆக்கிய
                           தாஸ் காப்பிடல் என்ற நூலே
                           மூலதனம் என்று இங்கு
                           குறிப்பிடப் படுகிறது  

முன்குறிப்பு: 2) பித்துக்குளி முருகதாஸ் என்பவர்
                           1960களில் தமிழ்நாட்டில் பிரபலமாக
                            இருந்த முருக பக்திப் பாடகர்.

சென்னை நகரில் கடந்த சில ஆண்டுகளாக
மூலதன வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டையே தலைகீழாகப்
புரட்டிப் போட்ட மூலதனம் நூலை, தமிழ் வாசகர்கள்
கற்பதற்கு உதவியாக இத்தகைய வகுப்புகள்
நடைபெற்று வருகின்றன.

கார் ஓட்டத் தெரிந்தவர்கள்,
ஓட்டத் தெரியாதவர்களுக்குக்  
கற்றுக் கொடுப்பது போல,
மூலதனத்தைக் கற்றவர்கள்
மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்
முயற்சியாகவே இவ்வகுப்புகள் அமைகின்றன.
கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பது என்ற உவமை
ஆகச் சிறந்த உவமையாகும். ஏனெனில்,
கற்றுக் கொடுப்பவர் என்னதான் சிறப்பாகக்
கற்றுக் கொடுத்தாலும், கற்றுக் கொண்டவர்தான்
காரை ஓட்ட வேண்டும்; சுயமாக ஓட்ட வேண்டும்.
அதுபோல, மூலதனத்தை வாசிப்பது எப்படி என்று
கற்றுக் கொடுக்கிறார்கள் இவ்வகுப்புகளில்.
கற்றுக்  கொள்பவர்கள்தாம் மூலதனத்தை
வாசிக்க வேண்டும்.ஒருவர் தாமே சுயமாக
மூலதனத்தை வாசிக்க, புரிந்துகொள்ள
வழி வகுப்பவை இவ்வகுப்புகள்.

கற்றலும் கற்பித்தலும்   உயர்ந்த செயல்பாடுகள்.
எனவே அந்த அடிப்படையில் (கற்றல்-கற்பித்தல் என்ற 
அடிப்படையில் ) இவ்வகுப்புகள்
வரவேற்கத் தகுந்தவை.

மூலதன வகுப்புகள் தொடக்கப் பள்ளி வகுப்புகள் அல்ல.
அவை முனைவர் பட்ட வகுப்புகள். அடிப்படை
மார்க்சியம், பொருளாதாரம் ஆகியவற்றில்
நன்கு தேர்ச்சி பெற்ற பிறகுதான் மூலதனத்தைக்
கற்க இயலும். மேலும் மூலதனம் ஒரு
இலக்கியமும் ஆகும்.மூலதனக் கல்வி 
ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களில்
ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சியைக் கோருவது ஆகும்.

மார்க்ஸ் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞர்
மட்டுமல்லர்; அவர் மிகச் சிறந்த
படைப்பிலக்கியவாதியும் ஆவார்.
மார்க்சின் மூலதனத்தில் சேக்ஸ்பியர்
வெகுவாக இடம் பெறுவார். ஜெர்மானியக் கவிஞர்
கதே, இத்தாலியக் கவிஞர் தாந்தே ஆகியோரின்
மேற்கோள்களும் மூலதனத்தில் வெகுவாக
இடம் பெற்றுள்ளன. தாந்தேயின்
"DIVINE COMEDY "யின் கவிதை வரிகள்
மூலதனத்தில் இடம் பெற்றுள்ளன.
மூலதனத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும்
அதன் வாசிப்பு இன்பத்தை ( TEXTUAL PLEASURE )
நுகரவும் இலக்கியப் பயிற்சி அவசியம், குறிப்பாக
மறுமலர்ச்சிக் கால இலக்கியங்களில்.

மூலதனமும் தொல்காப்பியமும் 
---------------------------------------------- 
மூலதனத்தைத்  தொல்காப்பியத்துடன் 
ஒப்பிட முடியும்.இந்த வரியைப் படித்தவுடன் 
நுனிப்புல் வாசகர்கள்  துள்ளிக் குதிக்கலாம்.
தமிழ் இலக்கணம் கூறும் வடிவ உவமை, 
வண்ண உவமை, தொழில் உவமை, பண்பு உவமை 
ஆகியவற்றை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி,
தற்கால நடப்புடன் பொருந்துதல் 
என்பதிலும் மூலதனத்தையும் 
தொல்காப்பியத்தையும் ஒப்பிட முடியும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் 
கூறும் நல்லுலகில் தொல்காப்பியம் கற்றவர்கள் 
வெகு சிலரே.தமிழ் அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள்,
தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்றவர்கள் 
என்று தொல்காப்பியம் பயின்ற  வட்டம் 
மிகவும் சுருங்கிய ஒன்று . தமிழ் நாட்டுப் பல்கலைக் 
கழகங்களில் முதுகலை வகுப்புகளின் 
பாடத்திட்டத்தில்தான் தொல்காப்பியம்   
இடம் பெற்றுள்ளது.இளங்கலை வகுப்பு வரை 
நன்னூல்தான்.( நன்னூல் என்பது பவணந்தி முனிவர் 
இயற்றிய இலக்கண நூல்).

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலைஞரின் 
தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டுக்கு 
நான் சென்றிருந்தேன்."ரோமாபுரிப் பாண்டியன்"
போன்றோ திருக்குறளுக்கான கலைஞர் உரை 
போன்றோ இருக்கும் என்று நம்பிப் பலரும் 
தொல்காப்பியப் பூங்கா நூலை வாங்கினர்.
அஃது ஓர் இலக்கண நூல் என்று அறிந்து 
அதை வாசிக்க இயலாமல் 
ஏமாற்றம் அடைந்தனர்.எனது தி.மு.க நண்பர்கள் 
சிலர் தாங்கள் வாங்கிய நூலை என்னிடம் 
ஒப்படைத்து விட்டனர்.ஒரு கட்டத்தில் என்னிடம்  
இப்படிப் பத்து நூல்கள் சேர்ந்து விட்டன.
    
நான் இளம்பூரணம், சேனாவரையம் 
வாயிலாகத் தொல்காப்பியம் கற்றவன்.
எனவே "கலைஞம்" எனக்குப் பெரிதாகப் 
பயன்படவில்லை. ( சேனாவரையரின் உரை   
சேனாவரையம் என்பதுபோல், கலைஞரின் 
உரை  கலைஞம் எனப்படும்.).முந்திய 
வாக்கியத்தின் மூலம் நான் எவ்விதத்திலும் 
கலைஞரின் மாண்பைக் குறைத்து விடவில்லை 
என்பதைப் பதிவு செய்கிறேன்.

"மியா இக மோ மதி இகும் சின்" என்னும் 
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்"    
   (தொல், இடையியல், நூற்பா:759)
என்கிறது தொல்காப்பியம்.

"மியா இக மோ மதி அத்தை இத்தை 
வாழிய மாள   ஈயாள  முன்னிலை அசை"
என்கிறது நன்னூல். மொழி தொடர்ந்து 
இயங்கிக் கொண்டிருப்பது.எனவேதான் 
காப்பியமும் நன்னூலும் வேறுபடுகின்றன.
எனினும் இவை இரண்டும் கூறும் முன்னிலை 
அசைகள் எவையும் இன்று வழக்கில் இல்லை.
("காமம் செப்பாது கண்டது மொழிமோ" 
என்பதில் வரும் மோ என்பது முன்னிலை அசை) 

தமிழ் கற்ற அனைவரும் ஓரளவு 
நன்னூல் கற்றிருப்பது இயற்கை.ஆனால் 
தொல்காப்பியத்தின் நிலை அவ்வாறு அன்று.

"படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி 
புடை கெடப் போகிய செலவே புடைகெட 
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் 
முற்றின் ஆகிய புரத்திறை முற்றிய" 
...........................................................................
............................................................................
     (தொல் புறம் நூற்பா: 1007) 
என்றவாறு பதினான்கு துறைகளைக் கொண்ட 
வெட்சித்திணைக்குத் தொல்காப்பியம் கூறும் 
இலக்கணம் இன்று பொருந்துவது இல்லை.
(பகைவரின் பசுக்கூட்டங்களைக் கைப்பற்றும் 
செயல் குறித்துக் கூறுவது வெட்சித் திணை)

பெயரெச்சம் என்றால் என்ன?,
வினையெச்சம் என்றால் என்ன?,
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துக்குச்  
சான்று தருக என்றெல்லாம் தமிழ்நாட்டுப் 
படிப்பாளிகளைக் கேட்டால்  99 விழுக்காட்டினர் 
கால் வழியே கழிந்து விடுவர் என்பதை 
அனைவரும் அறிவோம்.இத்தகைய சூழலில் 
தொல்காப்பியத்தைக்  கற்பிப்பது என்பது 
பகீரதப் பிரயத்தனம் ( HERCULIAN  TASK )
அன்றி வேறென்ன?

இது போன்றதுதான் மூலதனத்தைக் 
கற்பிப்பதும். மூலதனத்தைக் கற்பிப்பதற்கும் 
கற்பதற்கும் பெரு முயற்சியும்  
கடும் உழைப்பும் தேவை.

அதேபோழ்து, மூலதனம் கற்றல்-கற்பித்தல் 
என்ற நிகழ்வின் ஊடாக ஒரு கேள்வி எழுகிறது;
அது பேருருவம் (விசுவரூபம்) கொள்கிறது 
150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட 
மூலதனம் இன்றைய சூழலுக்கு எவ்வாறு 
பொருந்தும்? என்பதே அக்கேள்வி.
HOW FAR IT IS RELEVANT TODAY? என்கிற கேள்வி 
எங்கும் வியாபித்து நிற்கிறது.

மூலதனம் என்பது முதலாளித்துவ சமூக 
அமைப்பின் தோற்றம், வளர்ச்சி,இயக்கம் 
ஆகியவற்றின் விதிகளைக் கூறும் நூல். 
அவ்வளவே! (JUST THAT'S ALL!) 
மூலதனத்தில் கூறியவண்ணம் இன்று 
உலகில் எந்த நாட்டிலும் முதலாளித்துவம் 
தோன்றி வளரப் போவதில்லை. ஏனெனில் 
முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியமாக 
மாறி விட்டது, வளர்ந்து விட்டது. இதைத் தொடர்ந்து 
இந்த யுகம் ஏகாதிபத்திய யுகம் என்று 
அழைக்கப் படுகிறது. இந்த யுகத்துக்குப் 
பொருத்தமான மார்க்சியமாக லெனினியம் 
பரிந்துரைக்கப் படுகிறது (PRESCRIBED).  

இச்சூழலில்  மூலதனத்தைக் கற்பது என்பது 
வெறுமனே ஒரு கல்வியியல் ஆர்வமாகச் 
(ACADEMIC INTEREST)  சுருங்கி விடுகிறது. 
ஆகவே மூலதனத்தைக் கற்பிப்பதும் கற்பதும் 
செயலூக்கமிக்க ஒரு பெருத்த மார்க்சியச் 
செயல்பாட்டுக்கு வித்திடும் என்று கருதுவது 
பேதைமையாகவே முடியும்.

மார்க்சியக் கல்வியைப் பொறுத்த மட்டில் 
முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் 
ஆயிரம் இருக்கின்றன.முருக பக்தர்களைப் 
போல் மார்க்சியர்கள் நடந்துகொள்ள முடியாது. 
மார்க்சின் புகழ் பாடுவது மட்டுமே மார்க்சியம் அல்ல.

"கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை"
என்ற கதையாக மூலதன போதனை 
முக்கியத்துவம் பெறுவது ஏன்?   
இதற்கான சமூக அவசியம் என்ன?
அழுத்தமாக முன்வைக்கப்படும் இக்கேவிகள் 
நியாயமான பதிலைக் கோருகின்றன.

இந்நிலையில் மார்க்சியக் கல்வி குறித்து 
மூத்த மார்க்சிய அறிஞர் திரு. கோவை ஞானி 
கூறுவதைப் பார்ப்பது இங்கு .மிகவும் பொருத்தமானது.

"மார்க்சியம் கற்போம்: தேடலோடும் 
திறனாய்வோடும்"  என்ற கட்டுரையில் 
அவர் கூறுவதாவது:-
(மார்க்சியத்துக்கு  அழிவில்லை என்ற நூல்,
புதுப்புனல் வெளியீடு; டிசம்பர் 2001)

"மார்க்சியம் கற்பதற்கு எளிய வழி என 
ஒன்று இல்லை. தேடலோடும் திறனாய்வோடும்தான் 
மார்க்சியத்தைக் கற்க முடியும்; செரித்துக் 
கொள்ள முடியும்.மார்க்சியம் கற்பதற்கு 
எளிய முறையில் எழுதப்பட்ட பாடநூல்கள் 
பயன்பட முடியாது.பன்முகப் பரிமாணங்களை 
உடைய மார்க்சியத்தை ஒற்றைப் பரிமாணமாகக் 
குறைத்துச் சுருக்கித் தருகிற பாடநூல் கல்வி 
ஆபத்தாகவும் முடியும்.சுருக்கமாக வகுப்பறைகளில் 
மார்க்சியத்தைக் கற்கவும் முடியாது."

திரு ஞானி தொடர்ந்து கூறுகிறார்: 
" நமக்கான மார்க்சியத்தை நாம் தேடித் 
திறனாய்வோடு கற்பதற்கு நாம் 
சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்."

திரு ஞானி கூறுவதில் இரண்டு விஷயங்கள் 
முக்கியமானவை.

ஒன்று: தேடல்.நமக்குப் பொருத்தமான  
மார்க்சியத்தை நாம் தேடிப்  பிடித்துப் படிப்பது.
(இந்தியச் சூழலில் மாவோவை ஆழ்ந்து கற்பது 
என்பது இதன் பொருள்).

இரண்டு; திறனாய்வோடு கற்பது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் 
பற்றிப் படிக்கும்போது, பல்வேறு 
நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் 
இக்கோட்பாட்டை நிராகரிப்பது ஏன் என்ற 
கேள்விக்கான  விடையுடன் படிப்பது.
சோஷலிசம் பற்றிப் படிக்கும்போது,
ரஷ்யாவில் லெனினும் ஸ்டாலினும் 
கட்டியது சோஷலிசம் அல்ல, 
முதலாளித்துவமே என்ற கணிப்பின் 
மெய்மையை ஆராயும் நோக்குடன் படிப்பது.

"ஆராய்ந்து அமைவுடைய கற்கவே"
என்கிறது தமிழ் நீதிநூல். இதைத்தான்
திரு ஞானியும் கூறுகிறார். நானும் அதை 
வழிமொழிகிறேன்.

பின்குறிப்பு:
---------------------- 
இக்கட்டுரை பெருமுயற்சி எடுத்து     
மூலதனத்தைக் கற்பிக்கும் 
தோழர்களுக்கு எவ்விதத்திலும் 
பங்கமாக அமைந்து விடக்கூடாது 
என்ற கவனத்துடன் எழுதப் பட்டது.
போதகர்கள், ஆசிரியர்கள், கற்பிப்பவர்கள் 
ஆகியோர் மீது பெருமதிப்புக் கொண்டிருப்பது 
என்பது என்னுடைய மரபணுக்களிலேயே 
அமைந்த ஒன்று. எனவே, மூலதனம் 
கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் 
இக்கட்டுரை அவர்களுக்குப் பங்கம் 
சேர்க்கவில்லை என்று தெளிவார்கள் 
என்று நம்புகிறேன்.

******************************************************