திங்கள், 8 டிசம்பர், 2014

இந்தியாவில் ஊழலும் இல்லை ;
ஒரு  ரோமமும் இல்லை!
சீனாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால்
உண்மை தெரியும்!
---------------------------------------------------------------------------
இந்திய அரசியல்வாதிகள் முட்டாள்கள்;
ஊழல் செய்யத் தெரியாத முட்டாள்கள்!
இதுதான் உண்மை.

நம் அண்டை நாடான சீனா ஊழலில்
எவரெஸ்ட்டை எட்டி விட்டது.சீனா ஒரு
கம்யூனிஸ்ட் நாடு. ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில்
ஊழல் என்பது இருக்க முடியாது;
இருக்கக் கூடாது. ஏனெனில் கம்யூனிசம்
என்பது ஊழலை அனுமதிக்காத தத்துவம். 
அப்படி இருந்தும், கம்யூனிஸ்ட் நாடான சீனாவில்
ஊழல் என்பது ஆல்  போல் தழைத்து அருகு போல்
வளர்ந்து பூமியின் அடியாழம் வரை வேர்விட்டு
பிரும்மாண்டமாக எழுந்து நிற்கிறது.

செய்தித் தாள்களில் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களின்
ஊழல்கள் மணம் வீசுகின்றன. மாதிரிக்கு ஒன்று.
            "சீனாவின் மூத்த அரசியல் தலைவர் கைது
              ஊழல் சொத்துக்கள் ரூ.84000 கோடி பறிமுதல்"
என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழ் செய்தி
வெளியிட்டு உள்ளது.
(பார்க்க: தி இந்து  07.12.2014)

"CHINA'S EX-SECURITY CHIEF ARRESTED"
என்று ஆங்கில இந்து செய்தி வெளியிட்டு உள்ளது.
( பார்க்க:  THE HINDU 06.12.2014 INTERNATIONAL PAGE )

ரூ. 84000 கோடி ஊழல் புரிந்து சொத்துச் சேர்த்த
அந்தத் தலைவர் ஜௌ யாங்காங் ( ZHOU YANGKONG ).
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்வரிசைத்
தலைவர்களில் ஒருவர் இவர்.
(leader of the standing committee of the polit bureau).
பொலிட் பீரோ என்பது   கம்யூனிஸ்ட் கட்சிகளில்
உச்ச அளவு அதிகாரம் கொண்ட அமைப்பு என்பது
மார்க்சிய அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு
விளங்கும்.மேலும் இவர், சீனாவின் காவல் துறை,
நீதித்துறை, உளவுத்துறை உள்ளிட்ட பல
முக்கியமான துறைகளைக் கொண்ட உள்நாட்டுப்
பாதுகாப்புத்துறையின் தலைவராக விளங்கினார்.
ஆக, கட்சியிலும் பதவி!ஆட்சியிலும் பதவி!!
இரண்டிலும் சேர்த்து ஊழல் புரிந்து ரூ 84000 கோடி
 ( ரூபாய் எண்பத்தி நாலாயிரம் கோடி )
சொத்துக் குவித்துள்ளார்.

இவருக்கு இணையான பதவியில் இந்தியாவில் 
இருந்தவர்கள்: சிவராஜ் பட்டீல், ப.சிதம்பரம்,
சுஷில் குமார் ஷிண்டே போன்றோர். இவர்கள் 
யாருக்கேனும் ரூ.84000 கோடி ஊழல் புரியத் துப்பு 
இருந்ததா?  

இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு.
முதலாளித்துவம் ஊழலை அனுமதிக்கும் 
ஒரு தத்துவம்; ஊக்குவிக்கும் ஒரு தத்துவம்.
அப்படி இருந்தும் சிவராஜ் பட்டீல் 
போன்றவர்களால் ரூ.84000 கோடி அளவுக்கு 
ஊழல் புரிந்து சொத்துக் குவிக்கத் தெரியவில்லையே!

எவ்வளவு அவமானம்! போபார்ஸ் ஊழலில் 
ராஜீவ் காந்தி வாங்கியது கேவலம் ரூ.63 கோடி!
பிச்சைக்காசு! பிரசித்தி பெற்ற சொத்துக்குவிப்பு 
வழக்கில் ஜெ. புரிந்த ஊழல் வெறும் 60 கோடி!
மகா பிச்சைக்காசு!
மாட்டுக்கு உரிய பருத்திக்கொட்டை புண்ணாக்கில் 
லாலு பிரசாத் பொறுக்கித் தின்றது வெறும் ரூ.5 கோடி!

ஆனால், சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் 
ஒப்பிடும் போது, நமது அரசியல்வாதிகளின் ஊழல் 
எவ்வளவு அற்பத்தனமானது! இந்தச் சூழலில்,
அன்னா   ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் 
ஊழல் எதிர்ப்புப் போராட்டம் தேவையா?

"கம்யூனிசம் என்றால் ஊழல்! 
ஊழல் என்றால் கம்யூனிசம்!!"  என்று 
ஒரு புதிய தத்துவத்தை உலகுக்கு வழங்கிய 
சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நன்றி!

மாவோவின் சீனா, இன்று ஊழலின் சீனாவாக 
மாறி நிற்கிறது. இந்தச் சீரழிவில் மாவோவுக்குப் 
பங்கில்லை என்று அவரை யாரும் விடுவித்துவிட 
முடியாது. (Mr MAO cant be absolved.)

எந்த ஒரு விஷயத்துக்கும், ஒரு முன்வரலாறும் 
ஒரு பின்தொடர்ச்சியும் உண்டு. சீனக் கம்யூனிஸ்ட் 
தலைவர்களின் இன்றைய ஊழலுக்கும் 
ஒரு முன்வரலாறு உண்டு. அது மாவோவிடம் 
இருந்தே தொடங்குகிறது

மாவோ மட்டுமல்ல, மார்க்சையும் இந்தக் 
குற்றத்தில் இருந்து விடுவித்து விட முடியாது.

"IDEOLOGICAL CORRUPTION LEADS TO 
POLITICAL CORRUPTION. POLITICAL CORRUPTION 
LEADS TO ORGANISATIONAL CORRUPTION. 
ORGANISATIONAL CORRUPTION LEADS TO
INDIVIDUALS' CORRUPTION"
என்கிறது மார்க்சியம். எனவே, தத்துவமே 
தவறாகி விடும் போது, ஊழல் என்பது 
இயல்பாகி விடுகிறது. இதுதான் இன்று சீனாவில் 
நடக்கிறது. இதுதான் முன்பு ரஷ்யாவில் 
(சோவியத் ஒன்றியத்தில்) நடந்தது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் 
பாசிசத் தத்துவமும், இயங்கியல் (DIELECTICS )
என்னும் முட்டாள் தனமான  ஆய்வு முறையுமே 
மார்க்சியத்தை வீழ்த்திய பேய்கள்!

இந்தப் பேய்களிடம் இருந்து மார்க்சியத்தைக் 
காத்து, மானுட விடுதலைக்கான தத்துவமாக 
மார்க்சியத்தை மாற்றுவதே இன்று மெய்யான 
மர்ர்க்சியர்களின் பணி.  இந்த நூற்றாண்டின் 
ஆகப் பெரும் கடமை அதுவே.

இந்தக் கடமையை நிறைவேற்றும் நோக்கில் 
"புதிய மார்க்சியம்- முன்முயற்சி" (NEO MARXISM
INITIATIVE) தனது அடிகளை அளந்தே வைக்கிறது,
பெருமிதத்துடனும் கம்பீரத்துடனும்!

....................... தோழமையுடன்,
                          பி. இளங்கோ சுப்பிரமணியன்,
                             அமைப்பாளர்,
                                புதிய மார்க்சியம் முன்முயற்சி,
                                  சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
(இந்த அறிக்கை வெளியிட்ட நாள்: 08.12.2014)

************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக