புதன், 31 டிசம்பர், 2014

மார்க்சியத்தில் சாதியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!
-------------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------------------- 

"மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்"என்ற தலைப்பில்
"புதிய மார்க்சியம் முன்முயற்சி"க்காக ஒரு கட்டுரை
எழுதி இருந்தேன்.அக்கட்டுரை ஒரு தொடக்கம்தான்.
தொடர்ந்து மார்க்சியத்தைப் புதுப்பித்தல் என்ற
பொருளில் அடுத்தடுத்துக் கட்டுரைகள் வெளிவரும்.

தொடக்கக் கட்டுரையைப் படித்த மார்க்சியத் தோழர்கள்
சில பல வினாக்களை எழுப்பி இருந்தனர். அவற்றுக்கு விடை
அளிக்கும் முயற்சியே இக்கட்டுரை.

சாதியம், தலித்தியம், பெண்ணியம் ஆகியவை குறித்த
சிக்கல்களுக்கு மார்க்சியத்தில் தீர்வு இல்லை. இது மார்க்சியத்தின்
போதாமை ஆகும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அன்று.
இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ள மார்க்சிய அறிஞர்கள்
ஆய்ந்து கண்ட முடிவு.

மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில்
சாதி கிடையாது. எனவே மார்க்சியம் சாதியைப் பற்றி
அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒரு தத்துவமும்
பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள 
அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார் நிலையிலான தீர்வுகளை
(READYMADE SOLUTIONS) வழங்கும் என்ற எதிர்பார்ப்பே
அறிவியலற்றது (UNSCIENTIFIC).  

மார்க்ஸ் தம் கடைசிக் காலத்தில் இந்தியாவைப் பற்றி
அறிந்து கொள்ள விரும்பினார்.அதற்காக சம்ஸ்கிருத மொழியைக்
கற்கத் தொடங்கினார். ஏனெனில், இந்திய இலக்கியங்கள் யாவும்
சமஸ்கிருதத்தில்தான் இருந்தன. ஐரோப்பிய நூலகங்களில்,
குறிப்பாக பிரிட்டிஷ் நூலகங்களில் சம்ஸ்கிருத நூல்கள்தான்
இடம் பெற்று இருந்தன.ஆனால் அவற்றைக் கற்பதற்குள்
மார்க்ஸ் காலமாகி விட்டார். ( மார்க்சுக்கு தமிழ் பற்றி எதுவும் தெரியாது.
தமிழ் ஒரு செம்மொழி என்பதோ, திராவிட மொழிகளுக்கு
அதுதான் மூல மொழி என்பதோ, தென்னிந்தியாவைப் பற்றி
அறிந்துகொள்ள தமிழைத்தான் படிக்க வேண்டும் என்பதோ
மார்க்சுக்குத் தெரியாது. கால்டுவெல் வந்து சொன்ன பிறகுதான்
தமிழனுக்கே தமிழின் அருமை தெரிந்தது.)

இந்திய வரலாற்றில் பெரும்பகுதி, இந்தியாவுக்கு வந்த 
வெளிநாட்டு யாத்திரிகர்களின் பயணக் குறிப்புகளில் இருந்துதான் பெறப்பட்டது என்பது இங்கு கருதத் தக்கது. கிரேக்க யாத்திரிகர் 
மெகஸ்தனிஸ் ( கி.மு 350-290 காலக்கட்டத்தில்), சீன யாத்திரிகர்கள் 
பாஹியான் (கி.பி 399-413),யுவான் சுவாங் (கி.பி 634-645),
இஸ்லாமிய யாத்திரிகர்கள் அல் பெருனி (கி.பி 973-1048),
இபன் பதுதா (கி.பி 1304-1368) மற்றும் ஐரோப்பிய யாத்திரிகர்கள் 
ஆகியோரின் பயணக் குறிப்புகள் இந்திய வரலாற்றின் பகுதிகள்.

தமது இந்தியப் பயணத்தின்போது, சீன யாத்திரிகர் யுவான் சுவாங் 
வாரணாசி, வைஷாலி, பாடலிபுத்திரம், புத்தகயா , நாலந்தா, 
ஜலந்தர், லும்பினி, வங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் 
தங்கினார். சம்ஸ்கிருத மொழியில் இருந்த அறுநூறுக்கும் மேற்பட்ட 
புத்த மத நூல்களைச் சேகரித்தார் என்பது வரலாறு. ஆக, இந்தியாவைப் 
பற்றி அறிந்து கொள்ள உதவும் கருவியாக சமஸ்கிருதம் அன்று இருந்தது 
என்பது கண்கூடு.
  
மார்க்ஸ் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினார் என்ற செய்தி 
தமிழ் வாசகர்கள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். இச்செய்தி குறித்து 
அவர்கள் ஐயமும் கொள்ளலாம். மார்க்சை ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகச் சித்தரிக்கக் ,கட்டுரையாளர் முனைகிறார் என்றுகூட  நுனிப்புல் 
வாசகர்களும் சிந்தனைக் குள்ளர்களும் கருதலாம். அவற்றை எல்லாம்
தவிர்க்கவே முந்தைய பத்திகளில் தரப்பட்ட விளக்கம்.  

மார்க்ஸ் நீண்ட காலம் வாழ்ந்து இருப்பாரே ஆனால்,
சமஸ்கிருதத்தைக் கற்று இந்தியாவைப் பற்றி
அறிந்து இருப்பார். சாதியைப் பற்றியும் தீண்டாமையைப்
பற்றியும் அறிந்திருப்பார்; தீர்வும் சொல்லி இருப்பார்.
 ஆனால் அந்த வாய்ப்பை இயற்கை
மார்க்சுக்கும் வழங்கவில்லை; நமக்கும் வழங்கவில்லை.    

மார்க்சிய மூல ஆசான்களான மார்க்ஸ், எங்கல்ஸ்,லெனின்,
ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படைப்புகள் மலையளவு உள்ளவை.
உலகில் வேறு எந்தத் தத்துவத்துக்கும் இந்த அளவு
விளக்க நூல்கள் கிடையாது. மூல ஆசான்களின் முக்கியமான
படைப்புகள் பலவும் உலகின் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப் பட்டு உள்ளன. மூல ஆசான்கள் ஒவ்வொருவரின்
படைப்புகளும் தொகுப்பு நூல்கள் ( COLLECTED WORKS) என்றும்,
தேர்வு நூல்கள் ( SELECTED  WORKS ) என்றும் வகைவகையாகப் பிரசுரிக்கப் பட்டு உள்ளன. இவை தவிர, பிரசுரிக்கப் படாத ஆவணங்களும்
( UNPUBLISHED DOCUMENTS ) ஆவணக் காப்பகங்களில்
பாதுகாக்கப் பட்டு மக்களின் பார்வைக்குக் கிடைக்கின்றன.

என்றாலும், மலையாகக் குவிந்து கிடக்கும் இந்த நூல்களில்,
ஏதேனும் ஒன்றில் சாதியைப் பற்றி (ON CASTE ) ஏதேனும்
ஒரு சிறு குறிப்பாவது உள்ளதா என்றால் இல்லை என்பது
கண்கூடு.

"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்பது
எங்கல்சின் புகழ் பெற்ற நூல். ( THE ORIGIN OR FAMILY, PRIVATE
PROPERTY AND STATE BY FREDERICK ENGELS ). மகத்தான
சமூகவியல் ஆய்வு நூல். இந்த மகத்தான நூலை  எழுதிய
எங்கல்ஸ், சாதியின் தோற்றம் (  ORIGIN OF CASTE ) என்று
ஏதேனும் ஒரு நூலை எழுதி இருக்கிறாரா? இல்லையே!

ஆஸ்திரேலியப் பழங்குடிகள், ஐரோப்பியப் பழங்குடிகள்,
அவர்களின் சமூகப் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை
குறித்து விரிவாக ஆராய்ந்து சமூகவியல் நூல்களைப் படைத்த
எங்கல்ஸ், இந்தியா பக்கம் கீழ்த்திசை நாடுகளின் பக்கம்
தம் பார்வையைத் திருப்பி இருக்கிறாரா என்றால், இல்லை என்பது
தெளிவு.

என்றாலும், இவை மார்க்ஸ் எங்கல்சின் குறைகள் அல்ல.
வேண்டுமென்றே திட்டமிட்டே இந்த மூல ஆசான்கள்
இந்தியாவை, கீழ்த்திசை நாடுகளைப் புறக்கணித்தனர் என்று
எவரேனும் கூறினால், அது அபத்தத்தின் உச்சம்.

மார்க்சும் எங்கல்சும் மனிதர்கள்; மாமனிதர்கள். கடவுள்கள் அல்ல; மந்திரவாதிகள் அல்ல. மந்திரக் கம்பளத்தில் பறந்து உலகெங்கும்
சுற்றித் திரிந்து, மொழிகளைக் கற்று, நூல்களைக் கற்று, 
ஆராய்ச்சி செய்து, மனித குலத்தின் அனைத்துச்
சிக்கல்களுக்கும் அவர்கள் தீர்வு வழங்கி இருக்க வேண்டும்
என்பது இயலாத ஒன்று. ஏனெனில் அது தனிமனித ஆற்றலின்
குறுகிய எல்லைக்குள் அடங்கி விடக்கூடியது அல்ல.

மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில்
பிறந்த தத்துவம். மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும், பிரதானமாக,
ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கே உள்ள
கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

புத்த மத நூல்கள் பற்றியோ புத்தரின் தத்துவங்கள் பற்றியோ
மார்க்சும் எங்கல்சும் அறிந்து இருக்கவில்லை. கீழ்த்திசை நாடுகளின்
அறிவுச் செல்வங்கள் ( TREASURE HOUSE OF KNOWLEDGE )
பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. கிரேக்கத்தின் தொன்மையான
அறிவுச் செல்வங்கள் பற்றி அறிந்து, அவற்றில் ஆழ்ந்த புலமை
பெற்ற அவர்கள் இருவருக்கும், கிரேக்கத்தையும் விடத்
தொன்மையான கீழ்த்திசை உலகின் தத்துவ ஞானம் மற்றும் மரபு
பற்றி எதுவும் தெரியாது.

லூத்விக் ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய அறிஞரின்
பொருள்முதல்வாதத்தை மேம்படுத்தி, அதையே மார்க்சியத்தின் பொருள்முதல்வாதமாக ஆக்கிக் கொண்ட மார்க்சும் எங்கல்சும்
இந்தியாவின் பொருள்முதல்வாத ஞானம் பற்றி
அறிந்து இருக்கவில்லை.
          
ஃ பாயர்பாக்கின் பொருள் முதல்வாதத்தைவிடச் சிறந்த,
தொன்மையான, மூலச்சிறப்புள்ள இந்தியப் பொருள்முதல்வாதம்
பற்றியோ, இந்தியத் தத்துவஞான மரபே பொருள்முதல்வாத
மரபுதான் என்பது பற்றியோ மார்க்சும் எங்கல்சும் அறிந்து
இருக்கவில்லை.    

எனவே, மார்க்சியம் என்பது சாராம்சத்தில், ஐரோப்பியத்
தத்துவமே. அது கீழ்த்திசைத் தத்துவம் அல்ல.

MARXISM ESSENTIALLY IS A WESTERN PHILOSOPHY, AND NOT AN
EASTERN PHILOSOPHY.

எனவே இந்தியத் துணைக் கண்டத்துக்கே உரித்தான,
சாதி, சாதியம், தீண்டாமை, சாதியப் படிநிலை அமைப்பு,
சாத்திய சடங்காசாரங்கள்   ஆகிய சிக்கல்கள் குறித்து
மார்க்சியத்தில் ஒரு சிறு குறிப்பு மருந்துக்குக் கூட இல்லை.

இதுவரை, மார்க்சிய மூல ஆசான்களின் படைப்புகளில்
சாத்தியம் குறித்து எதுவும் இல்லை என்பதை விரிவாகப்
பார்த்தோம். இனி இந்திய மார்க்சியர்களின் சாதி குறித்த
புரிதல் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

**************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக