வியாழன், 1 ஜனவரி, 2015


பூணூலை அறுக்க வேண்டுமா?
------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------- 

முன்குறிப்பு:
--------------------- 
பார்ப்பனர்களுக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் 
இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------- 

மூடம் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளின் 
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் 
பீடொன்று இலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்து 
ஆடம்பர  நூல்சிகை அறுத்தல்  நன்றே.
   ----திருமூலர் இயற்றிய திருமந்திரம், செய்யுள்:241

மூடப் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தால் நன்மை 
விளையும் என்கிறார்இப்பாடலில்  திருமூலர்.

பதவுரை:
------------------- 
மூடம் கெடாதோர் -- மூடத்தனத்தை அகற்ற முயலாமல் 
முட்டாள்தனத்துடனே வாழும் பார்ப்பனர்கள்.   
சிகை நூல் -- உச்சிக்குடுமியும் பூணூலும் 
முதற்கொள்ளின்-- ( பூணூலும் உச்சிகுடுமியுமாக)
அப்பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்றால்.    
வாடும் புவியும் -- உலகம் துன்பம் அடையும்.
பீடு ஒன்று இலன் ஆகும்-- (மன்னன்) ஒரு பெருமையும் 
இல்லாதவனாக ஆகிவிடுவான்   
பேர்த்து உணர்ந்து -- ஆராய்ந்து அறிந்து 
நூல் சிகை அறுத்தல் -- பூணூலையும் உச்சிக் குடுமியையும் 
அறுத்தல். 
நன்றே -- நல்லது  ஆகும்.

பொழிப்புரை தேவை இல்லை என்று கருதுகிறேன்.
எனவே, நேரடியாக விளக்கவுரைக்கு வந்து விடுகிறேன்.

விளக்கவுரை:
---------------------- 
 இப்பாடலை இயற்றியவர் திருமூலர். பூணூலை அறுக்கச் 
சொல்லுபவர் திருமூலர். தந்தை பெரியாரோ, அறிஞர் 
அண்ணாவோ, கலைஞரோ பூணூலை அறுக்கச் சொல்லவில்லை.

திருமூலர் சைவ சமய அறிஞர். இவர் இயற்றிய திருமந்திரம் 
சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக அமைந்து 
உள்ளது. ( சைவ சமயப் பாடல்களின் தொகுப்பு திருமுறை 
என்று அழைக்கப் படும்).

சைவத் திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. இவை "பன்னிரு 
திருமுறைகள்" என அழைக்கப் படுகின்றன. இவற்றைத் 
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. தொகுப்பித்தவர் 
இராசராச  சோழன்.
  
திருமந்திரம் 3047 பாடல்கள் கொண்டது. பன்னிரு திருமுறைகள் 
மொத்தமும் சேர்ந்து 18326 பாடல்கள் கொண்டவை. இப்பன்னிரு 
திருமுறைகளில் மூவர் தேவாரமும் அடக்கம். ( இங்கு மூவர் 
என்பது அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரையும் குறிக்கும்.)
அப்பர் என்பது நாவுக்கரசரைக்  குறிக்கும்.

தமது பாடல்களைப் "பாட்டவி" என்று குறிப்பிடுகிறார் 
திருமூலர். பாட்டு+அவி = பாட்டவி. அவி என்பது வேள்வியில் இடப்படும் 
பொருளைக் குறிக்கும். பாட்டே அவியாக அமைகிறது.
("வேள்விப் பொருளினையே புலை நாயின்முன்
  மென்றிட வைப்பவர் போல்" என்ற பாரதியின் பாஞ்சாலி 
  சபத வரிகளில் வரும் வேள்விப் பொருளே அவி ஆகும்.)   

மந்திரம் என்பது ஆற்றல் மிகுந்த சொல் என்று பொருள்படும்.
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
  மறைமொழி காட்டி விடும்"
என்ற குறளில் வரும் மறைமொழி மந்திரத்தைக் குறிக்கும்.

இந்தக் குறளின் பொருளை அறிந்து கொள்ள,
சிலப்பதிகாரத்துக்குச் செல்ல வேண்டும்.
"முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக"  என்ற 
கவுந்தி அடிகளின் மந்திரமொழியை அறிந்திட வேண்டும்.

புகார் நகரில் இருந்து மதுரை நகருக்குச் செல்கின்றனர் 
கோவலனும் கண்ணகியும். வழியில் கவுந்தி அடிகள் 
என்ற பெண் துறவியைச் சந்திக்கின்றனர். அவரும் அவர்களுடன் வர,
பயணம் தொடர்கிறது.

வழியில், சில வம்பர்கள் கவுந்தி அடிகளிடம், கோவலன்-கண்ணகியைச் 
சுட்டிக்காட்டி அவர்கள் யார் என்று வினவுகின்றனர். "என் மக்கள்" என்று விடை அளிக்கிறார் அடிகள். "உம் மக்கள் என்றால் அண்ணன் தங்கை 
ஆகத்தானே இருக்க வேண்டும்; ஆனால் அவர்களைப் பார்த்தால் 
கணவன் மனைவியாகத்தானே தெரிகிறது"என்று வம்பு 
வளர்த்தனர் வம்ப மாக்கள். சினம் அடைந்த கவுந்தி அடிகள் 
"முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக" என்று சாபம் இடவும்,
உடனடியாக அச்சாபம் பலித்து வம்பர்கள் நரியாக மாறி 
விடுகின்றனர். இதுதான் இளங்கோ அடிகள் காட்டும் சித்திரம்.

இங்கு, கவுந்தி அடிகள் கூறிய, "முள்ளுடைக் காட்டில் 
முதுநரி ஆகுக" என்ற மொழிதான் மந்திரம் என்பது.
இதைத்தான் வள்ளுவர் மறைமொழி என்கிறார் முந்தைய 
பத்திகளில் மேற்கோள் காட்டிய குறளில்.

இவ்வாறு, குறளுக்கும் சிலம்புக்கும் முடிச்சுப் போட்டு,
வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் பாலம் அமைத்து,
இருவரின் பாடல்களையும் தெளிவுபடுத்திய இந்த 
விளக்கம் என்னுடைய சொந்தச் சிந்தனையின் 
விளைபொருள் அன்று. எனக்கு இலக்கியம் கற்பித்த 
பேராசிரியர் முனைவர் சாம்பசிவன் அவர்கள்
வகுப்பில் கூறியது ஆகும். 

சிலப்பதிகாரத்தைப் படித்து இராத, படித்துப் புரிந்து கொள்ள 
இயலாத வாசகர்கள், கலைஞர் கருணாதியின் பூம்புகார் 
திரைப்படத்தைப் பார்க்கலாம். கல்வி எதுவும் கற்றிராத 
பாமர மக்களும் சிலப்பதிகாரத்தைத் தெரிந்து கொள்ள 
வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இயற்றப்பட்ட 
படைப்பிலக்கியம் அப்படம்.

அப்படத்தில் வரும் "வாழ்க்கை என்னும் ஓடம் " என்னும் 
பாடல் காட்சியை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனும் விஜயகுமாரியும் கோவலன் 
கண்ணகியாக நடித்து இருப்பார்கள். கவுந்தி அடிகளாக 
கே.பி.சுந்தராம்பாள் நடித்து இருப்பார். மேற்படி பாடல் காட்சியில் 
இம்மூவரும் ஓடத்தில் பயணம் செய்வார்கள். 

கவுந்தி அடிகளின் சாபம் படத்தில் இடம் பெறவில்லை.
தமது பகுத்தறிவுக் கொள்கைக்கு முரணானது என்பதால் 
அக்காட்சியை அவர் படமாக்க விரும்பவில்லை. தமது 
"சிலப்பதிகார நாடக காப்பியம்" என்ற நூலிலும் 
இந்நிகழ்வை அவர் சித்தரிக்கவில்லை. கலைஞரின் 
சிலப்பதிகார நாடக காப்பியம் படித்து இருக்கிறீர்களா? 
இல்லையெனில் படிக்கவும். இரண்டாம் நூற்றாண்டில் 
எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தையும், இருபதாம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட கலைஞரின் சிலப்பதிகார நாடக காப்பியத்தையும் 
ஒப்பிட்டு வெளிவந்த ஒரு கட்டுரை, ஒப்பியல் இலக்கியம் 
( COMPARATIVE LITERATURE ) என்ற பிரிவில் எனக்குப் 
பாடமாக இருந்தது. இக்கட்டுரையை எழுதியவர் யார் 
தெரியுமா? அறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கனார். இவர் 
யார் தெரியுமா? அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் 
துணைவேந்தர். "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" அல்லவா!
       
மீண்டும் திருமூலருக்கு வருவோம். திருமந்திரம் என்பது 
தவமொழி ஆகும் என்கிறார் மீ.ப.சோமு. இவர் பார்ப்பன 
சமூகத்தின் கடைசி அறிஞரான ராஜாஜியின் நெருங்கிய 
நண்பர். சோமுவின் "நந்தவனம்"என்ற நாவலை ( முன்பு 
கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது) வாசகர்களில் 
சிலர் படித்து இருக்கக் கூடும். திருநெல்வேலி அல்வாவின் 
சுவை, மகிமைபற்றிய வர்ணனை , அதில் ஒரு அத்தியாயத்தில் 
வரும். 

திருமூலரில் தொடங்கி, வள்ளுவர், இளங்கோ, ராஜாஜி,
சோமு, கலைஞர், மாணிக்கனார்  என்று தொடர்புடைய அனைவரையும் தொட்டு விட்டோம். இதுதான்  
இலக்கிய விளக்கம் என்பது.

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டும், 
ஆமை ஓட்டுக்குள் சுருங்கி விடுவது போன்றும் 
வெறும் பொழிப்புரையை ஒப்பிக்கும் கற்பனை வறண்ட 
தமிழாசிரியர்கள் அளிப்பது இலக்கிய விளக்கம் அன்று. 

பூணூல் அறுப்பு குறித்த திருமூலரின் பாடலை 
அறிந்து இராதவர்கள் கூட, 
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
  திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" 
என்ற பாடலை அறிந்து இருக்கக் கூடும். அதையும் 
அறியாதவர்கள், "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்"
என்ற தொடரை நிச்சயம் அறிந்து இருப்பர்.

திமுகவின் கடவுள் கொள்கையாக அறிஞர் அண்ணா 
அறிவித்தது  "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் "
என்பது. இது திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து 
எடுத்தாளப் பட்டது.

மேற்கூறியவற்றால், தமிழ்ச் சமூகத்தில் திருமூலரின் 
திருமந்திரம் ஆற்றல் மிக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது 
என்பது புலனாகிறது. திருமந்திரத்தில் மேலும் பல 
செய்யுட்களிலும் பார்ப்பன எதிர்ப்பைப் பாடி உள்ளார் திருமூலர்.
அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ் மரபே பார்ப்பன எதிர்ப்பு மரபுதான் என்பதை 
இக்கட்டுரைசுட்டுகிறது. எதிர்வினைகள் 
வரவேற்கப் படுகின்றன.

*************************************************************     
   
       
          
   
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக