செவ்வாய், 13 ஜனவரி, 2015


கலை மக்களுக்காகவே!
பெருமாள் முருகன் மக்களின் எதிரி!
அவரது மாதொருபாகன் நாவல் நச்சு இலக்கியமே!
------------------------------------------------------------------------------ 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------

1) கலை கலைக்காகவே ( ART FOR ART's SAKE ) என்பது ஒரு 
இலக்கியக் கோட்பாடு. இது முதலாளித்துவ இலக்கியக் 
கோட்பாடு.

2) மார்க்சியம் இதை ஏற்றுக்  கொள்வதில்லை.  இதற்குப் 
பதிலாக, "கலை மக்களுக்காகவே" ( ART FOR PEOPLE's SAKE )
என்ற கோட்பாட்டை முன்வைக்கிறது.

3) லெனினுக்கு  முற்பட்ட, ரஷ்ய நாட்டு மார்க்சிய அறிஞர்
பிளகானவ், கலை இலக்கியம் குறித்த மார்க்சியக் 
கோட்பாடுகளை பல்வேறு நூல்களில் விளக்கி உள்ளார்.
கலையும் சமுதாய வாழ்க்கையும் ( ART AND SOCIAL LIFE )
என்பது அப்படிப்பட்ட   நூல்களில் ஒன்று.

4) பிரபுத்துவ மேன்மை மிக்க குடும்பத்தில் பிறந்து 
இருந்த போதும், லியோ டால்ஸ்டாய் அழுகிக் கொண்டு 
இருக்கும் நிலப்பிரபுத்துவத்தை ஈவு இரக்கம் இன்றி 
விமர்சனம் செய்தார் என்பதற்காக,  டால்ஸ்டாயை 
ரஷ்யப் புரட்சியின் கண்ணாடி என்று வர்ணித்தார் லெனின்.

5) மாக்சிம் கார்க்கியும், மாயா காவ்ஸ்கியும் ரஷ்யப் 
பாட்டாளி வர்க்கத்தின் படைப்பாளிகள். புரட்சியின் 
ஊடாக விளைந்த விளைபொருட்கள். இந்தியாவிலும்,
வசந்தத்தின் இடிமுழக்கமாக நக்சல்பாரி ஆயுதப் புரட்சி 
வெடித்து எழுந்தபோது, செரபண்ட ராஜு போன்ற 
புரட்சிக் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் புரட்சியின் 
விளைபொருட்களாகத் தோன்றினர்.   

6) மார்க்சியம் மட்டுமின்றி, உலகில் தோன்றிய பல்வேறு 
முற்போக்கு இயக்கங்களும் "கலை மக்களுக்காகவே"
என்ற கோட்பாட்டையே நடைமுறைப் படுத்தின.

7) தமிழ்நாட்டில் 1950-60களில், திராவிட இயக்கம் பெரும் 
வீச்சுடன், வீறு கொண்டு எழுந்தபோது, அண்ணாவும்  
கலைஞரும் படைப்பாற்றல் மிக்க மக்கள் இலக்கியங்களைப் 
படைத்தனர். பல்வேறு குறை நிறைகள் இருப்பினும்,
இவர்களின் படைப்புகள், சாராம்சத்தில் "கலை மக்களுக்காகவே "
என்ற கோட்பாட்டைப் பற்றி நின்றன. இக்காரணம் பற்றியே,
வலதுசாரி எழுத்தாளர்களான, ஜெயமோகன் போன்றோர் 
அண்ணா கலைஞர் உள்ளிட்ட ஒட்டு மொத்த திராவிட இயல் 
படைப்பாளிகளின் படைப்புகளை, பிரச்சார இலக்கியம் என்று 
சிறுமைப் படுத்தினர்.

8) "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே" 
என்ற கலைஞரின் பராசக்தி திரைப்பட வசனம் காலத்தை 
வென்று நிற்கும் கலாபூர்வமான நாத்திகக் கருத்தே ஆகும்.
இது போன்ற, சமூக நிறுவனங்களுக்கு எதிரான கருத்தால் 
( ANTI ESTABLISHMENT IDEA ) பராசக்தி படம் தடை செய்யப் 
பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

9) தமிழ் ஈழத்துக்காக புலிகள் நடத்திய ஈழ விடுதலைப் போரின் 
ஊடாக, பல்வேறு புரட்சிகரக் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் 
தோன்றினர்.இவ்வாறு, புரட்சிகரப் படைப்பாளிகளை 
ஈன்று எடுக்கிற தாய் நிலமாக மக்களின் போராட்டங்கள் 
அமைகின்றன. 

10) நல்லது. தற்போது, பெருமாள் முருகனிடம் வருவோம்.
மேலே கூறப்பட்ட கருத்துக்களின் வெளிச்சத்தில் 
பெருமாள் முருகனை மதிப்பீடு செய்வோம்.

11) பெருமாள் முருகனை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது 
என்பதற்கு முன், அவரைப் பற்றிய மதிப்பீடு அவசியம்.
இந்த மதிப்பீடு, அவரை ஆதரிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு 
ஒரு முன் நிபந்தனை ஆகும்.

12) கண்மூடித்தனமாக ஒருவரை ஆதரிப்பதோ அல்லது 
எதிர்ப்பதோ, இவ்விரண்டுமே பேதைமை நிரம்பிய 
செயல்கள் ஆகும். இவை குட்டி முதலாளித்துவ 
அரை வேக்காடுகளின் செயல்கள் ஆகும்.

13) பெருமாள் முருகன் எந்த ஒரு போராட்டக் களத்தின் ஊடாகவும் 
பிறந்து படைப்பாளியாக ஆனவர் அல்லர். கொந்தளிப்புகளோ 
சூறாவளிகளோ எதுவும் இன்றி, சலசலத்துச் செல்லும் 
தெளிந்த நீரோடை போன்று, அமைதியான,  வசீகரம் மிக்க 
குட்டி முதலாளித்துவ வாழ்க்கை அவருக்கு வாய்த்து இருந்தது.
அந்த வாழ்க்கையை மிகுந்த மன நிறைவுடன் வாழ்ந்தவர் அவர்.

14) கொங்கு மண்டலத்தில் உள்ள அவரது பங்களா, பூட்டிக் 
கிடக்கும் காட்சியை ஆங்கில ஏடுகளில் புகைப்படமாகப் 
பார்த்ததில் நான் வருத்தம் அடைந்தேன். இந்த நிகழ்வுக்கு 
முன்பு வரை அவரின் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடைதான்.

15) பெருமாள் முருகனை மதிப்பீடு செய்வதற்கு, அவர் எந்த 
வர்க்கத்தின் பிரதிநிதி, எந்த வர்க்கத்துக்காக எழுதுகிறார்,
அவரது எழுத்துக்களை வழிநடத்தும் சித்தாந்தம் என்ன ஆகிய 
கேள்விகளுக்கு விடை காண்பது அவசியம்.

16) ஒரு படைப்பாளி தனது படைப்புகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பெருமாள் 
முருகனின் படைப்புகளே, அவரைப் பற்றிய நமது மதிப்பீட்டுக்கான 
உரைகல்.  

17) பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" நாவலையும், 
"கெட்ட வார்த்தை பேசுவோம்" என்ற நூலையும் கருத்தில் 
கொள்வோம். மேற்கூறிய நூல்களின் வடிவம் (FORM ) குறித்து 
நாம் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை. ஆனால், 
அவற்றின் உள்ளடக்கம் ( CONTENT ) நம் கவனிப்புக்கு உரியது. 

18) இங்கு வடிவம், உள்ளடக்கம் ஆகியவை வெற்றுச் சொற்கள் 
அல்ல என்பதும் அவை மார்க்சியம் கூறும் "தத்துவார்த்த வகைமை "
(PHILOSOPHICAL CATEGORY ) ஆகும் என்ற புரிதலுடன் வாசகர்கள் 
இவற்றைப் படிக்கவும்.

19) மாதொருபாகன் நாவலில், எளிய உழைக்கும் மக்கள் மீது, 
குட்டி முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரிய வன்மத்துடன் 
தாக்குதல் தொடுத்து உள்ளார் பெருமாள் முருகன். அவர்களின் 
பண்பாட்டைச் சிறுமைப் படுத்துகிறார் அவர். கொங்கு மண்டலத்துச் 
சூத்திரச் சாதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் விபச்சாரிகள் 
என்று தம் நாவலில் 'நிறுவுகிறார்' அவர்.

20) இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்ற செய்தியாளரின் 
கேள்விக்கு விடையளித்த முருகன் "வரலாற்று ரீதியாக 
எந்த ஆதாரமும் இல்லை " என்கிறார். (THERE IS NO HISTORICAL 
EVIDENCE ) (பார்க்க: இரு தினங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில 
ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி).

21) எவ்வித ஆதாரமும் இல்லாமல், பொய்யாகப் புனைந்து 
உழைக்கும் மக்களை, சூத்திரப் பெண்களை, தமிழ் மக்களை 
இழிவுபடுத்துகிறது பெருமாள் முருகனின் நாவல்.

22) பெருமாள் முருகனின் நாவலைப் பதிப்பித்து உள்ளது 
காலச்சுவடு என்கிற மாபெரும் பார்ப்பன  மற்றும் கார்ப்பொரேட் 
நிறுவனம். தமிழ்ச் சமூகத்தை இழிவு செய்பவர் என்கிற 
காரணத்தால்தான் அவரின் படைப்புகளைப் பதிப்பிக்கிறது 
காலச்சுவடு. தமிழ்ச் சமூகத்தின் மேன்மையைச் சித்தரிக்கும் 
நாவல்களை முருகன் எழுதினால், பார்ப்பன காலச்சுவடு
அவற்றைப் பிரசுரிக்குமா என்ன ?

23) பெருமாள் முருகனின் நாவலையும் காலச்சுவடு 
நிறுவனத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது; கூடாது.
கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற அவரின் நூலையும் 
காலச்சுவடுதான் பதிப்பித்துள்ளது.

24) இந்தப் படைப்புகளுக்கான சமூக அவசியம் என்ன?
எந்த சமூகத் தேவையின் பாற்பட்டு, மாதொருபாகனும் 
கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலும் 
எழுதப் பட்டு உள்ளன? கொங்கு மண்டலத்துச் சூத்திரப் பெண்கள் 
தேவடியாள்கள் என்று "நிறுவ"வேண்டிய அவசியம் என்ன?
கெட்ட வார்த்தை பேசுங்கள் தமிழர்களே என்று தமிழ்ச் 
சமூகத்துக்கு அறைகூவல் விடுக்க வேண்டிய அவசியம் என்ன?

25) பெருமாள் முருகன் எவ்வித சமூகப் பொறுப்பும் அற்றவர்,
காசு பார்ப்பதற்காக, தமிழ்ச் சமூகத்தின் உழைக்கும் மக்களை 
பார்ப்பன காலச்சுவடு நிறுவனத்திடம் கூட்டிக் கொடுப்பவர்
என்ற  உண்மைக்குத்தானே  அவரின் நூல்கள் சாட்சியமாக 
இருக்கின்றன!

26) பின்நவீனத்துவம் தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குப் 
பெற்றபின், கணிசமான குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் 
பின்நவீனத்துவத்தை வரித்துக் கொண்டார்கள்.  அவர்களில் 
ஒருவர்தான் பெருமாள் முருகன். 

27) இலக்கிய உலகம் புறக்கணிக்கிற பாலுணர்வு 
வக்கிரங்களை எழுத்தில் வடிப்பது, தவிர்க்க வேண்டிய 
ஆபாசமான கெட்ட வார்த்தைகளை  மேன்மைப் படுத்துவது 
ஆகியவை எல்லாம் பின்நவீனத்துவத்தின் கொடைகள். 
இவற்றைச் சுவீகரித்துக் கொண்டவர் பெருமாள் முருகன்.

28) இவரது நூல்களின் கருப்பொருள் தேர்வே இதற்கு ஆதாரம்.
படைப்பையும் படைப்புக்கான கருப்பொருள் தேர்வையும் 
அதற்கான சமூகத் தேவையையும் இணைத்தே பரிசீலிக்க வேண்டும்.                படைப்பை மட்டும் துண்டித்து, தனித்து எடுத்துக் கையில் 
வைத்துக்கொண்டு கூத்தாடுவதோ குறை காண்பதோ கூடாது.

29) கொங்கு மண்டலம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் 
பெருமாள் முருகனை எதிர்த்துப் போராடுகிறார்கள். குறிப்பாக,
திருச்செங்கோட்டில் போராட்டத்தின் தாக்கம் தீவிரமாக 
இருக்கிறது. எளிய உழைக்கும் மக்கள் தங்களின் மானம் 
காப்பதற்காகப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை 
ஆதாயம் கருதி, வாக்கு வங்கியைக் குறி வைத்து,  சங்கப்
பரிவார அமைப்புகள் வழிநடத்துகின்றன.

30) மாதொருபாகன் நாவலில் நாத்திகப் பிரச்சாரம் எதுவும் கிடையாது.
பெருமாள் முருகனும் நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்பவரும் அல்லர்.
எனினும், சங்கப் பரிவாரங்கள் கடவுளை அவமதித்து விட்டார் 
என்றும், மதத்தை இழிவு படுத்தி விட்டார் என்றும் கூறி, 
இதை மதநிந்தனைக் குற்றமாக (  BLASPHEMY ) முன்வைக்கின்றன.
உழைக்கும் மக்கள் அவமதிக்கப் பட்டதைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, 
கடவுள் 'அவமதிக்க'ப் பட்டதை முன்னுக்குக் கொண்டு வரும் 
சங்கப் பரிவாரங்களின் செயல் கண்டனத்துக்கு உரியது.

31) நியாயமாக, இந்தப் போராட்டத்தை, பாதிக்கப்பட்ட 
உழைக்கும் மக்களின் சார்பாக இடதுசாரிக் கட்சிகளும் 
முற்போக்கு அமைப்புகளும் முன்னெடுத்து இருக்க வேண்டும்.
அதை அவர்கள் செய்யத் தவறினர். காரணம், இங்குள்ள 
இடதுசாரிகள் என்பவர்கள் இங்குள்ள போலிக் கம்யூனிஸ்ட் 
கட்சியினரே! இவர்கள் மார்க்சியத்தைத் துறந்தும் 
மக்களைத் துறந்தும் பல காலம் ஆகி விட்டன.

32) இங்குள்ள முற்போக்காளர்கள் எனப் படுவோரிலும் பலர் 
போலிகளே! குட்டி முதலாளித்துவ வாதிகளான இவர்கள் 
என்றுமே உழைக்கும் மக்களுக்கு எதிர் அணியில் இருப்பவர்களே!
இதனால் ஏற்பட்ட தலைமை வெற்றிடத்தைப் பயன்படுத்திக் 
கொண்டு சங்கப் பரிவாரங்கள் உழைக்கும் மக்களின் போராட்டத் 
தலைமையைக் கைப்பற்றிக் கொண்டன.

33) சங்கப் பரிவாரங்கள் வழி நடத்துவதனாலேயே, 
கொங்கு மண்டல உழைக்கும் மக்களின்  மானம் காக்கும் 
போராட்டத்தை மெய்யான மார்க்சியவாதிகளும் 
புரட்சியாளர்களும் புறக்கணித்து விட முடியாது.

34) குட்டி முதலாளித்துவப் பிழைப்புவாதி, பார்ப்பன காலச்சுவடு 
நிறுவனத்தின் எடுபிடி,  பெருமாள் முருகன் பக்கம் நிற்கப் போகிறீர்களா? 
                      அல்லது 
கொங்கு மண்டல உழைக்கும் மக்கள் பக்கம் நிற்கப் 
போகிறீர்களா?  

முற்போக்காளர்களே, பதில் கூறுங்கள்!
நான் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்கிறேன்.
என்னால் வேறு பக்கத்தில் நிற்க முடியாது!

பின்குறிப்பு:
----------------------- 
பெருமாள் முருகன் குறித்த என்னுடைய முந்தைய 
கட்டுரைகளையும் வாசிக்குமாறு வேண்டுகிறேன்.
முகநூல் நண்பர்கள் அவற்றை முகநூலில் 
எனது டைம்லைனில் படிக்கலாம்.  

**********************************************************     
    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக