வெள்ளி, 16 ஜனவரி, 2015

சங்கம் என்பது தமிழ்ச் சொல்லே!
ஆரியப் பொய்மையைச் சுட்டுப் பொசுக்குவோம்! 
----------------------------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------- 
பொய்மையின்  அழுக்குடனும் நெடியுடனும்
முகநூலில் ஒரு பதிவு. திரு மன்னை முத்துக்குமார் 
என்பவர்  பதிந்துள்ளார்.

சங்கம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்று 
அந்த ஒரு வரிப் பதிவில் கூறுகிறார் திரு.மன்னை 
முத்துக்குமார். எனினும், இப்பதிவை, அவர் தம் சொந்தக்
கருத்தாகச் சொல்லவில்லை. வேறு ஒருவரின் பதிவை 
அவர் சுமக்கிறார் 

மூலப் பதிவு Suresh Kathan சுரேஷ் கதன் என்பவருடையது.
அதுவும் குறும் பதிவுதான். அது பின்வருமாறு:-
 
சங்கத்தமிழில்
சங்கம் தமிழில்லை
என்பதை தெரிந்து வைத்திருந்தால்
நீங்கள் நிச்சயம் ஒரு தமிழ் ஆர்வலர்!  

இப்பதிவில் உள்ள சொற்பிழையை மன்னிப்போம்.
"என்பதை தெரிந்து" என்பதில் வல்லினம் மிக வேண்டும்.
இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
என்பது மூலப் பதிவருக்கும் சுமக்கும் பதிவருக்கும் 
தெரியவில்லை. அவர்களின் அறியாமையை மன்னித்துத் 
தொலைப்போம்.

ஆனால், மேற்குறித்த பதிவில் உள்ள கருத்துப் பிழை, 
மன்னிக்கத் தக்கது அன்று.  சங்கம் என்பது தமிழ்ச் சொல்லே.

சங்கம் என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லை என்ற 
ஆரியப் பொய்மை இன்று புதிதாய்ப் பிறந்தது அன்று.
1970களில் நான் பள்ளி கல்லூரி மாணவனாக இருந்தபோதே,
இக்கீழ்மையை நான் அறிவேன். எனக்குத் தமிழ் கற்பித்த 
பேராசிரியர்கள் இப்பொய்மையைச் சுட்டுப் பொசுக்கி 
உள்ளார்கள். பார் போற்றும் பைந்தமிழ் அறிஞர் முனைவர் 
மு வரதராசனாரின் மாணவன் நான். எனது பட்டச் 
சான்றிதழில் (DEGREE CERTIFICATE) கையெழுத்திட்டு,
எனக்குப் பட்டம் வழங்கியவர் அவர்.

"சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே 
  அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே"
என்னும் தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டி, இப்பொய்மைக்கு
இதுவே ஆதாரம் என்பார்கள் அவர்கள்.

ஆயினும், இந்தச் சூத்திரத்துக்கு, ''பாடபேதம்" உண்டு.
மறைந்த பாவாணர், இப்பொய்யை மிகுந்த ஆவேசத்துடன் 
எதிர்கொண்டு முறியடித்தவர். அவர்  ச என்னும் எழுத்தில் 
தொடங்கும் பலப்பல சொற்களைப் பட்டியல் இடுவார்.
கானப்பேர் எயில் கடந்த தமிழன் சட்டி செய்யத்
தெரியாமல் இருந்தானா என்று வெடித்தவர் அவர்.
( சங்கம் என்பது தமிழ் இல்லை என்றால் சட்டி என்பதும் 
தமிழ் இல்லை என்று ஆகும். இது மடமை என்பதே 
பாவாணர் கருத்து.)

இன்னும் என் நிலைபாட்டுக்கு ஆதரவாக நிறையச் 
சொல்ல முடியும். வாசகர்களின் புரிதல் மட்டமும் 
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதால்,
இத்துடன் நிறுத்துகிறேன்.

எனவே, சங்கம் என்பது தமிழ்ச் சொல்லே ஆகும்.
திரு மன்னை  முத்துக்குமாரும், திரு சுரேஷ் கதனும்
தங்கள் கருத்தை நிறுவ வேண்டும். இல்லையேல் 
சங்கம் தமிழ்ச் சொல்லே என்ற சரியான கருத்தை 
ஏற்க வேண்டும்.          

எவ்வாறாயினும், தமிழைப் பழிப்பதை ஏற்க முடியாது.

          தமிழைப் பழித்தவனை என் தாய் 
          தடுத்தாலும் விடேன்.
            ----பாவேந்தர் பாரதிதாசன் 

************************************************************88    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக