திங்கள், 12 ஜனவரி, 2015

கெட்ட வார்த்தை பேசுவோம்!
----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------------ 
(டிசம்பர் 1, 2015 அன்று எழுதியது: மீள்பதிவு)

ஏன் கெட்ட வார்த்தை பேசக்கூடாது?
பேசுங்கள், கெட்ட வார்த்தை பேசுங்கள்
என்கிறார் பெருமாள் முருகன்.

சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் பெருமாள் முருகன்
அண்மையில் ஓர் நூல் எழுதி உள்ளார். அந்நூலின்
பெயர் "கெட்ட வார்த்தை பேசுவோம்" என்பது.

இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் 2014இல்
வெளியிட்டு உள்ளது. புத்தகத்தின் விலை ரூபாய் 150.
சென்னை புத்தகச் சந்தையில் 10 சதம் 
தள்ளுபடியுடன் நூலை வாங்கலாம்.

"கெட்ட வார்த்தைகளில் இருந்து வீசுவதோ
மனிதத் துர்வாடை. பெருமாள் முருகனின்
இந்த நூல், இதை கவனப் படுத்தி, கெட்ட 
வார்த்தைகள்  பற்றிய ஆய்வுக்குக் கதவைத் 
திறந்து இருக்கிறது" என்கிறார் சமூகவியல்  
அறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி.
(பார்க்க: காலச்சுவடு ஜனவரி 2015, பக்கம்:  74)

கெட்ட  வார்த்தைகள் பற்றிய ஆய்வே 
தமிழகத்தில் இல்லையாம்! இந்த இல்லாமையை 
பெருமாள் முருகன் கவனப் படுத்துகிறாராம். 
இதன் மூலம், கெட்ட வார்த்தைகள் பற்றிய 
ஆய்வுக்கான கதவுகள் அகலத் திறந்து
கொண்டனவாம். புளகாங்கிதம் அடைகிறார் 
அறிஞர் வேங்கடாசலபதி!

எந்த ஒரு ஆய்வுக்கும் ஒரு சமூகத் தேவை 
இருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் 
பற்றிய ஆய்வுக்கான சமூக அவசியம்
என்ன? விளக்குவாரா பெருமாள் முருகன்? 
கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வு இல்லாமல் 
போய் விட்டதால்தான் தமிழன் முன்னேறாமல் 
போய் விட்டானா? எவ்வளவு அபத்தமான 
வாதம்!

அதிர்ச்சி மதிப்பு (SHOCK VALUE ) இல்லாத எந்த 
ஒன்றைப் பற்றியும் பெருமாள் முருகன் எழுத 
மாட்டார். எழுதினாலும் காலச்சுவடு அதை 
பிரசுரிக்காது.

காலச்சுவடு தமிழ்ப் பதிப்புலகின் மாபெரும்
சாம்ராஜ்யம். மிகப் பெரிய கார்ப்பொரேட் 
நிறுவனம். இதன் அதிபர் பார்ப்பனர் கண்ணன்.

பெருமாள் முருகன் குட்டி முதலாளித்துவ 
எழுத்தாளர். பிழைப்புவாதி. மொத்த 
சமூகத்தையும் அதிர்ச்சியில் உறைய 
வைக்கக் கூடிய விஷயங்களாகப் பார்த்துத்  
தேர்ந்து எழுதி, காலச்சுவடு கண்ணனின்
அபிமானத்தைப் பெறுவதன் மூலம், காசு 
பார்ப்பவர். இவ்வாறு காசு பார்ப்பதில் 
கருமமே கண்ணாக இருப்பவர்.

இவர் அணிந்து கொண்டிருக்கும் முற்போக்கு 
முகமூடியைப் பார்த்து ஏமாந்து போகாமல், 
முகமூடிக்குள் இருக்கும் பிழைப்புவாத முகம் 
அம்பலப் படுத்தப்பட வேண்டும்.

கெட்ட வார்த்தைகளை அவையல் கிளவி 
என்று கூறுகிறது தமிழ் இலக்கணம். 
அவை+அல்+கிளவி என்றால், அவையில் 
பேசக்கூடாத சொற்கள் என்று பொருள்.

மேலும் "இடக்கரடக்கல்" என்பது பற்றியும் 
தமிழ் இலக்கணம் கூறுகிறது. இடக்கர்+அடக்கல் 
என்றால், இடக்கரான சொற்களை அடக்கிக் 
கூறுவது என்று பொருள். (குண்டி கழுவு என்று 
சொல்வதற்குப் பதிலாக கால் கழுவு என்று 
சொல்வது இடக்கர் அடக்கல்.)

பின்நவீனத்துவம் தமிழ் இலக்கிய உலகில் 
செல்வாக்குப் பெற்றபின், புறக்கணிக்கப்பட்ட 
கெட்ட வார்த்தைகள் புத்துயிர் பெற்றன. 
பின்நவீனத்துவத்தின் கோட்பாடுகளில் 
ஒன்று "மையம் X விளிம்பு" என்பது போன்ற 
எதிர்நிலைகளை ஒழிப்பது.

அவைக்கிளவிகளை மையம் ஆகவும், 
அவையல்கிளவிகளை விளிம்பாகவும் 
பின்நவீனத்துவம் வரையறுத்தது.
மையம் X விளிம்பு என்ற இரண்டு 
எதிர்நிலைகளைக் கொண்ட கட்டமைப்பு 
ஒழிக்கப் படவேண்டும் என்பது பின்நவீனத்துவத்தின் 
லட்சியம். 

இதனால் விளிம்புநிலைச் சொற்கள் 
புறக்கணிக்கப் படக்கூடாது என்ற கோட்பாடு
செல்வாக்குப் பெற்றது. பின்நவீனத்துவத்தின் 
செல்வாக்கிற்கு உட்பட்ட பல குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் இதைத் தொடர்ந்து, கெட்ட 
வார்த்தைகளை மானாவாரியாக
எழுதத் தொடங்கினர். நல்ல வார்த்தைகளும் 
கெட்ட வார்த்தைகளும் கலந்த ஒரு புதிய 
மணிப்பிரவாள நடை தமிழில் தோன்றியது. 
இந்த நடையைச் சிற்றிதழ்கள் ஊக்குவித்தன.

இந்த நடை கேள்விக்கு உள்ளாக்கப் பட்டபோது, 
இது யதார்த்தச் சித்தரிப்பு என்று புனிதம் 
கற்பித்தனர் குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள். "பேசாப்பொருளைப் பேச யாம் துணிந்தோம்" 
என்றார்கள்.

சோவியத்  புரட்சி  எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி 
முன்வைத்த "இலக்கியத்தில் சோஷலிஸ்ட் 
யதார்த்தவாதம்" என்ற கோட்பாடு கூறும் யதார்த்தச் சித்தரிப்புக்கும், இந்தக் குட்டி முதலாளித்துவ 
எழுத்தாளர்கள் கூறும் யதார்த்தச் சித்தரிப்புக்கும் 
ஸ்நானப் பிராப்தி இல்லை
என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.

பெருமாள் முருகனும் பின்நவீனத்துவச் 
செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்தாம். இதனால்தான், கெட்ட 
வார்த்தை பேசுவோம் போன்ற நூல்களை ஈடுபாட்டுடன் அவரால் எழுத முடிகிறது.

கருத்துரிமை, கருத்துச் சுதந்திரம் இவையெல்லாம்
பாதிக்கப் படக்கூடுமே என்ற கவலை இங்கு
பொருத்தம் அற்றது. மார்க்சியம் எதிரி 
வர்க்கத்தினருக்குக் கருத்துரிமை வழங்குவதில்லை 
என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 

பெருமாள் முருகனுக்குத்  தங்குதடையற்ற 
கருத்துரிமை வழங்கப் பட்டால், நாளையே அவர் 
இன்னொரு நூலை எழுதக் கூடும். அதன் பெயர் 
"சுண்....    ஊம்...வோம் வாருங்கள்"
என்பதாக இருக்கக் கூடும். இவையெல்லாம் 
நடக்காமல் போனால்தான் அதிசயம்!
*****************************************************************

  

  
         


    

1 கருத்து: