சனி, 17 ஜனவரி, 2015

நின்றுபோன ஜனசக்தியும்
நிறுத்திவிட்ட  தா.பாண்டியனும்!
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------
ஜனசக்தி நின்றுபோய் விட்டது. மூன்று மாதங்கள்
ஆகின்றன. ஜனசக்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ் மாநிலக் குழுவின் அதிகாரபூர்வ ஏடு.

ஒரு கட்சிப் பத்திரிகை நின்று போனால், அந்தக்
கட்சிக்காரர்கள் மட்டும்தானே வருத்தப்பட வேண்டும்,
மற்றவர்கள் வருந்துவதற்கு என்ன இருக்கிறது என்ற
குறுகிய பார்வை சரியல்ல.

கட்சிப் பத்திரிகைக்கே உரிய எல்லா விதமான
பலவீனங்களும் ஜனசக்திக்கும் உண்டுதான். எனினும்,
ஜனசக்தியின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி அடைய நாம்
ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகள் அல்லவே!
முதலாளித்துவ எதிர்ப்பு முகாமைச் சேர்ந்த
ஒரு ஆயுதம் குறைகிறதே என்பதுதான் நமது ஆதங்கம்.

தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும்
தங்களுக்கென்று தொலைக்காட்சி சானல் வைத்து
இருக்கிறார்கள். ஆனால் இடதுசாரிகளுக்கு என்று
ஒன்று கூடக் கிடையாது. இதற்காக தா.பாண்டியன்
நாணாமல் இருக்கலாம். ஆனால் நான் நாணுகிறேன்.

தொலைக்காட்சி சானலும் கிடையாது. இருக்கிற
பத்திரிகையும் இழுத்து மூடப்பட்டு விட்டது என்றால்
கண்ணீர் வராதா? வரக்கூடாதா?
    
சென்னை ப்ராட்வேயில் உள்ள ஜனசக்தி அலுவலகத்துக்குச்
சென்று ஏமாற்றத்துடனும்  வருத்தத்துடனும்  திரும்பினேன்.
கட்சியில் உள்ள நண்பர்களை விசாரித்தேன். கேள்விப்பட்ட
விஷயங்கள் திடுக்கிட வைக்கின்றன.

மோசடியான நிதி நிர்வாகத்தால் குற்றுயிரும்
குலையுயிருமாகக் கிடந்த ஜனசக்தி காப்பாற்றுவார்
யாருமின்றித் தனது இறுதி மூச்சை விட்டிருக்கிறது.
ஒன்றரைக்கோடி ரூபாய் நிதி மோசடி என்கிறார்கள்
தோழர்கள். வேலியே பயிரை மேய்ந்து விட்டது என்று
குமுறுகிறார்கள் தோழர்கள்.

அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரிவது
போலத்தான், திருச்சிப் பதிப்பு இருந்தது என்பது
இப்போதுதானே புலப்படுகிறது. ஜனசக்தி திருச்சிப்
பதிப்பின் தொடக்க விழாவின் போது, சினிமா நடிகர்
சிவகுமாரை அழைத்து வந்து பேச வைத்து,
கம்யூனிசத்துக்கே இழுக்கைத் தேடினார் தா.பா.
கொங்கு மண்டலத்து லெனினாக சிவகுமாரை
வர்ணிக்காதது ஒன்றுதான் பாக்கி.

ஜெயலலிதாவைத் தவிர, வேறு யாருக்கும் இந்தியப்
பிரதமராகத் தகுதி கிடையாது என்று பிரகடனம்
செய்தவர் அல்லவா தா.பா! ஒருவேளை சிவகுமாரைத்
தமிழ்நாட்டு முதல்வர் ஆக்கவேண்டும் என்று ஏதேனும்
திட்டம் கிட்டம் வைத்திருப்பாரோ! பாவம், இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி தா.பாவிடம் மாட்டிக் கொண்டு, படாத கேவலமே
இல்லை!

ஜனசக்தி நின்று போனது குறித்தோ, 2014 தேர்தலில்
போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி
டெப்பாசிட் இழந்தது குறித்தோ  தா.பாவுக்கு எந்தக்
கவலையும் இல்லை!    

நன்று அறிவாரில் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
என்று வள்ளுவர் கூறும் கயவர்தான்  தா.பா.

இந்த முன்னாள் டாங்கேயிஸ்ட், இந்த முன்னாள்
UCP ஓடுகாலி, இந்த முன்னாள் "மறவர் முரசு "
சாதிப் பத்திரிகையின் ஆசிரியர், என்று ஏகப்பட்ட
"முன்னாள்" களுக்குச் சொந்தமான இந்த தா.பா
முன்னாள் மாநிலச் செயலர் என்றும் ஆனால்தான்
ஜனசக்தியும் உருப்படும். CPI யும் உருப்படும்!

சொந்தக் கட்சியின் AITUC தொழிற்சங்கத்தைச் சேர்ந்த
தொழிலாளர்களின் சங்கக் கட்டிடத்தை அபகரித்து
பல நூறு கோடி ரூபாய் சுருட்டினார் என்ற குற்றச்
சாட்டின்பேரில், தா.பா மீது நீதிமன்றத்தில் வழக்கு
நடந்து கொண்டு இருக்கிறது. சொந்தக் கட்சி
வழக்கறிஞரே தா.பா. வை எதிர்த்து வழக்கு
நடத்துகிறார். இத்தனை கேவலத்துக்குப் பிறகும்,
எப்படி மானமே இல்லாமல், தா.பா சிவப்புத் துண்டை
அணிந்து  கொண்டு பவனி வருகிறார்?

கட்சியில் உறுப்பினராகவே இல்லாத நீ எப்படி
எங்கள் தலைவரைக் குற்றம் சொல்லலாம் என்று
எந்தத் தோழரும் என்னைக் கேட்க மாட்டார்கள்
என்பது உறுதி. ஏனெனில்,திருத்தல்வாத CPIஇல்தான்
நான் உறுப்பினராக இல்லையே தவிர, இந்தியக்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்
என்பதைத் தோழர்கள் அறிவார்கள்.

ஜனசக்தியோடு என்னுடைய உறவு 1970களில்
இருந்து தொடங்குகிறது. அப்போதெல்லாம் ஜனசக்தி
வாரப் பத்திரிகைதான். ஒவ்வொரு வாரமும்
ஜனசக்தியில் வரும் அறந்தை நாராயணனின்
எரிமலைக் கட்டுரைகளை வாசிக்காமல் எந்த
வாரமும் எனக்குக் கழிந்தது இல்லை. அது மட்டுமல்ல,
தூத்துக்குடி தோழர் எஸ்.ஏ.முருகானந்தம் நடத்திய
சாந்தி இதழையும் நான் தவறாமல் படித்து வந்திருக்கிறேன்.

1972இல் கட்சி நடத்திய நிலமீட்சிப் போராட்டத்தின்போது
கட்சிக்கு உதவிகள் செய்தவன் நான்.அப்போது நான்
கல்லூரி மாணவன். சேரன்மாதேவி வட்டாரக் கமிட்டிச்
செயலாளர் மு ராமய்யா உள்ளிட்ட தோழர்கள்
நிலமீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று, பாளையங்கோட்டைச்
சிறையில் அடைக்கப் பட்டு இருந்தனர். சிறையில் இருந்த
அவர்களை நான் அடிக்கடி சென்று பார்ப்பது உண்டு.

அவர்களைப் பார்க்க நான் செல்லும்போது, ஓட்டலில்
தோசை பார்சல் வாங்கிக் கொண்டு, தோசையைப்
பொதிந்துள்ள தினத்தந்தி பத்திரிகைத்  தாளை அகற்றி
விட்டு, ஜனசக்தியை வாங்கி, அதில் தோசையைப்
பொட்டலம் கட்டிக் கொண்டு சென்றவன் நான். இவ்வாறு
சிறைக்குள் ஜனசக்தியைக் கடத்தியவன் நான்.

இதற்காக, அன்றைய CPI நெல்லை மாவட்டச் செயலாளர்
தோழர் வி.எஸ்.காந்தி, கட்சி அலுவலகச் செயலாளர்
காந்தராஜ், தூத்துக்குடி மாதவன்,ஆம்பூர் கசமுத்து
உள்ளிட்ட தலைவர்களின் பாராட்டைப் பெற்றவன் நான்.
வி.எஸ்.காந்தி அவர்களோடு பலகாலம் திரிந்தவன்.

எனவே, ஜனசக்தி மீது அக்கறை கொள்ளவும், அதைச்
சாகடித்துவிட்ட தா.பா மீது குற்றம் சாட்டவும் எனக்கு
முழு உரிமை உண்டு.

ஏக் தோ சீட்டுக்காக செங்கொடியை விற்றுவிட்ட
தா.பா அவர்களே, மாநிலச் செயலர் பதவியை
ராஜினாமா செய்யுங்கள். கம்யூனிசம் வாழ வேண்டும்
என்றால், தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

பின்குறிப்பு:
---------------------
தா.பா சாதி வெறியராக இருந்தார், "மறவர் முரசு"
என்ற சாதிப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்
என்ற ரகசியத்தை நான் போட்டு உடைத்து விட்டேன் 
என்று தா.பா என் மீது வெறி கொள்ளலாம். 1972இல்,
திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியில் தா.பா
சொற்பொழிவு ஆற்றியபோது, அவரின் பெயருக்குக் கீழே
ஆசிரியர், மறவர் முரசு என்று மட்டுமே குறிப்பிடப்
பட்டு இருந்தது. இவ்வாறு குறிப்பிட்டு அழைப்பிதழைத்
தயாரித்த, அக்கல்லூரியின் அன்றைய மாணவர்
சங்கத்தின் பொதுச் செயலாளர்தான் இக்கட்டுரையின்
ஆசிரியர். மாணவர் சங்கத் தலைவர் சிவகிரி
தங்கமலை இதற்குக் கூடுதல் சாட்சி.

**********************************************************     


    



  



            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக