வெள்ளி, 20 ஜனவரி, 2012

வழுவமைதி

பிம்பங்கள் திரையிட்டு மறைக்கும்
என் அந்தரங்கத்துள்
உன் தொடுகை குறித்த வேட்கை
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஜலதரங்கம் வெட்க
நடத்தலின் பொற்கணங்களில்
உன் கொலுசுகள் சிந்திய மகரந்தம்
என் உயிரின்
வறண்ட பாத்திகளில்
வசந்தத்தைத் துளிர்விக்கிறது.

நிசப்தத்தை ஆராதிக்கும்
பின் ஜாமப் பொழுதுகளில்
உன்னை அடையப் பெறாத
இழப்பின் பிரும்மாண்டம்
மலையாய்க் கனக்கிறது.

தோழி
நம்மிடையே முகிழ்த்திருக்கும் உறவு
சாத்திரத்தை மீறிய தென்று
ஏன் கலங்குகிறாய்?

போஜராஜனின் கைத்தலம் பற்றிய மீரா
கண்ணனிடம் தன்னை இழந்ததில்
அத்துமீறல் எதையும்
அறிவிக்கவில்லை சாத்திரம்.

நித்திய கல்யாணியாய்
பொழுதும் புதுப்பிக்கும் சமூகத்தின்
பரிணாமத்தில் தெறிக்கும் விழுமியங்கள்
துளிர்விடும் புதுமைக்கு
வாழ்வுரிமை வழங்கும்

ஆதலினால் தோழி, தேர்ச்சிகொள்
ஊமை வெயில் விலகட்டும்.


--------------------------------------------------------------------------------------

யாப்பென மொழிப யாப்பறி புலவர்

ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளை
வாகாய் நுழைப்பதாலும்

தீய்ந்து போன சமஸ்கிருதச் சொற்களைத்
திணிப்பதாலும்

இடக்கர் அடக்கலை இகழ்ந்து
கத்தி பாய்ச்சுவதாலும்

கருப்பொருள்
மனப்பிறழ்ச்சி யுற்றவனின் தற்கூற்றாய்
எதுவாயினும்
கர மைதுனம் முதல்
ஆசனப்புழைப் புணர்ச்சி வரை

தலைப்பு
அதீதத்தினும் அதீதமாக
‘யவனப் போர் வீரனின் மதுக்குடுவையும்
முதுமக்கள் தாழியின் நாளமில்லாச் சுரப்பிகளும்’
என்பது போலும்

பாயாசத்து முந்திரியாய்
அல்குலும் நகிலும்

எனினும்
புரியாமையின் புகைமூட்டம்
கவிப்பதில்தான்
கனம் கொள்ளும் கவிதை.

--------------------------------------------------------------------------------------

அந்திமத்தின் வீழ்படிவு


இரண்டாம் ஜாமத்தின்
அமைதி கிழிபட
யாரும் வாகனம் ஒட்டவில்லை.

அகாலத்தில்
சாலையில் நடந்து செல்லும்
அந்நியனின் கரம் குலுக்கி
வோட்கா வாசனையுடன்
யாரும் நாக்குழறவில்லை.

பூட்டிய பள்ளியுள்
கம்ப ரசம் பரீட்சிக்கும்
கடவுள் தம்பதியரின்
தரிசனம் கோரி
வாசலில் யாரும்
வரிசை பூணவில்லை.

ஆங்கிலப் புத்தாண்டை
வாழவைக்கும் அபத்தங்கள்
தமிழ்ப் புத்தாண்டை அண்டவில்லை.

களத்திர ஸ்தானத்தில்
முருகனுக்கு இருவர் போல
தமிழனுக்கும் புத்தாண்டு இரண்டு.

எனினும் தமிழனின் சேவல்கள்
சித்திரையில் கூவுவதில்லை
தையிலும்

உற்பத்திப் பிரும்மாண்டத்தின்
கடிகார முள்ளாய்ச் சனவரியும்
பெருங்காயம் எஞ்சிய
அந்திமத்தின் வீழ்படிவாய்ச் சித்திரையும்

எனில்
கொள்ளுவதும் தள்ளுவதும் சரியே.

--------------------------------------------------------------------------------------

மயிலாப்பூர் மாமியின் மனோ வியாகுலங்கள்

திரட்டுப்பால் கிளறும்போது
அடி பிடித்து விடுவது

மெதுவாகவே
ஸ்கூட்டர் ஓட்டும் அத்திம்பேரால்
கல்லூரிப் பேருந்தை
அடிக்கடி மைத்ரேயி தவற விடுவது

ரங்கோலிப் போட்டியில்
மாட்டுப் பெண்ணின் கோலம்
ஒசத்தியாக இருந்தும்
நடுவராக வந்த
ஸ்டேட் வங்கி மேலாளர்
முதலிடம் தராமல் போனது

நேரலை நிகழ்ச்சியில்
பெப்சி உமாவுடன் பேசுகையில்
இணைப்பு அறுந்து விடுவது

பக்கத்து ஃபிளாட்டின்
மூடிய கதவையும் மீறிக்
கசியும் கருவாட்டு நாற்றம்
மாமாவின்
காயத்ரி உச்சாடனத்தின் மீது படர்வது

மயிலாப்பூர்க் கடைகளில்
அஜீரண மாத்திரையும் சிரப்பும்
சரிவரக் கிடைக்காமல் இருப்பது

மொத்தக் குலத்தின்
உச்சத் துயர்களாய்ப்
பட்டிய லிடுகிறாள் மாமி

ஒரு மின்னல் தெறிப்பில்
இரோம் ஷர்மிளா
என் நியூரான்களில் ஒளிர
அரிசினத்துடன் தீர்மானிக்கிறேன்
மாமியின் துயர்களுக்கு முடிவுகட்ட
மாமியை வன்புணர்வதன் மூலம்.

--------------------------------------------------------------------------------------



வெள்ளி, 6 ஜனவரி, 2012

வீரை பி. இளஞ்சேட்சென்னி கவிதைகள்

தரப்படாத முத்தங்கள்

நீதி மன்றங்களின்
இருள் கசியும் தாழ்வாரங்கள்
பதிவாளர் அலுவலகங்களின்
பரபரத்த விளிம்புகள்
இங்கெல்லாம்
பாவை விளக்குகளாய்
ஒளிரும் இவர்கள்
தட்டச்சுப் பெண்கள்.

அச்சுலகின் பிரஜைகள்
ஆவணங்களின் அரசிகள்
கலைமகளின் பணிப்பெண்கள்
கணினியின் எஜமானிகள்.

அரசுப் பணிக்கு
ஆசிர்வதிக்கப்பட்டிருந்தால்
சொகுசு இருக்கையும்
வியர்வைக் கேற்ற வெகுமதியும்
பெற்றிருப்பார்கள்.

பிரம்மனின் பிசகிய தருணத்தில் பிறப்பெய்தி
உதிரிப் பூக்களாய்
நரைத்த விலைக்கு
வியர்வையை விற்கும் இவர்கள்
காரல் மார்க்சின் காதலைப் பெற்றவர்கள்.

அடித்தலும் திருத்தலுமாய்க்
கால் இடறும் மூலப்பிரதியைப் புத்துயிர்த்து
குழந்தையைப் பெற்றுத்தருவதுபோல்
என்னிடம் தரும்
தட்டச்சுப் பெண்களை
நான் முத்தமிட விரும்புகிறேன்
இது புணர்தலும் புணர்தல் நிமித்தமும் அன்று.

அன்பின் பரிமாற்றத்தை
ஆயிரம் தடிகளால் அடிக்கும்
பிறழ்ந்த சமூகத்தில்
முத்தங்கள் என்னுடனே தங்கி விடுகின்றன.

தரப்படாத எனது முத்தங்களைத்
தம் கொழுநர்களிடம் பெறட்டும்
என் தட்டச்சு தேவதைகள்

--------------------------------------------------------------------------------------

பிருஷ்டமும் உண்டுகொல்!

தோழி!

ஒளி விலகும் அந்தியில்
புலால் நாறும்
கடற்கரையின் மணற்பரப்பில்
நீயும் நானும்
ஒரு தீவிர விவாதத்தில்.

கருமமே கண்ணாக
உனது தேற்றங்களை
நிரல்பட நீ மொழிகிறாய்.

சில நியூட்டன்கள் விசையைச் செலுத்தி
உப்பங்காற்று
உன் முந்தானையை விலக்க
அபினிக் கனிகளின் புலப்பாட்டில்
நான் கிளர்ச்சியுறுகிறேன்.

உன் கறுப்பு நிறக் கச்சின்
வார் வழியே
வாத்சாயனர் வந்திறங்க
மறைகிறார்கள்
ஐன்ஸ்டினும் ஹெய்சன்பெர்க்கும்.

உன் பிருஷ்டத்தில் கைவைத்து
ஒட்டியிருக்கும் மணல் துகளைத்
தட்டிவிட
வேட்கை கொள்கிறேன்.

என்னை
ஒரு கனவானாக அங்கீகரித்து
ஆடை திருத்தாத
உன் அமைதியின் உந்துதலால்
மனதை மடைமாற்றி
ஒரு லேசர் கற்றை போல்
பாடு பொருளில்
கவனம் குவிகிறேன்.

என்றாலும்
என் மனவலிமைக்கு
நேர்ந்த பங்கம் குறித்து
நாணவில்லை நான்.

ஒவ்வொரு மார்புக்கும்
ஒரு பிருஷ்டம்
உண்டு என்பதால்.

--------------------------------------------------------------------------------------

சூடாமலர்


நம் சந்திப்புகளின் போது
நேருக்கு நேர்
உன்னிடம்
சொல்ல முயன்று தோற்ற
மனசின் மருகுதல்களை
என் கவிதைகளில்
சொல்லி இருக்கிறேன்.

நீ மட்டும்
என் கவிதைகளை
ஏனோ
இன்னமும்
படிக்காமல் இருக்கிறாய்.

--------------------------------------------------------------------------------------

தொலைந்த வாழ்க்கை

அடுத்த பிறவியில்
நீயும் நானும்
கணவன் மனைவி
இது சத்தியம்.

போன பிறவியிலும்
நீயும் நானும்
கணவன் மனைவியாகவே
வாழ்ந்திருக்கிறோம்
இது சரித்திரம்.

இந்தப் பிறவி மட்டும்
திருவிழாவில் தொலைந்து போன
குழந்தை போல
ஏனோ கைநழுவிப் போனது.


--------------------------------------------------------------------------------------


வாழ்க்கைப் பயணம்

திட்டமிட்ட ஒரு பயணத்துக்கு
ஆறு மாதம் முன்னதாகவே
புகைவண்டி இருக்கைக்கு
முன்பதிவு செய்வது போல

அடுத்த பிறவியில்
நீயும் நானும்
கணவன் மனைவியாக
வாழ்வதற்கு
இப்போதே
முன்பதிவு செய்வோம், வா.


--------------------------------------------------------------------------------------


ஈர்ப்பு விசை

உன்னை
மையமுறுத்தியே
சுழலும் என் உலகம்.

உன்னை
அரண் செய்வதாகவே
அமையும் என் செயல்கள்

உன் அழகின்
மீதூர்ந்த புனைவுகளே கருவாகத்
திரளும் என் கவிதை.

உனக்கும் எனக்குமேயான
ரகசியங்களை அடைகாக்கும்
என் மன மூலைகள்.

யாரினும் கூடுதலாக
உன்மீது பிரியம் வைத்திருப்பவன் என்பதில்
கர்வம் கொள்ளும் என் சிந்தை.

உன்னைச் சந்தித்திராவிட்டால்
வாழ்தலின் பேறு வாய்த்திராது எனக்
கரை மோதும் என் நெஞ்சு.

பிரியமானவளே,
முதலும் முதலுமாக
நாம் சந்தித்த நாளில்
சாட்சியாக இருந்த
புனர்பூச நட்சத்திரம்
உன்னிடம் தூது வரும்.

என் காதலுக்கும்
உன் அங்கீகரிப்புக்கும்
இடையிலான
மெல்லிய தொலைவைக் கடக்க
அது உபாயம் கூறும்.


--------------------------------------------------------------------------------------


தகிப்பு

இயல்பானவைதாம் என்றாலும்
அபூர்வ வானியல் நிகழ்வுகள் போல
கவனிப்புக்கு உரியவை
நம் சந்திப்புகள்.

வாழ்தலின் உந்துதலை
உன்னிடமிருந்து பெறும்
அத் தேவ தருணங்களில்
நான் உயிர்த்தெழுகிறேன்.

ஓரங்குலமே மீந்த நெருக்கத்தில்
கிட்டும் உன் அண்மை
என் வனாந்தரங்களில்
பருவ மழையைப் பொழிவிக்கிறது.
கரடு தட்டிப் போன
என் நிலத்து மண்ணைக் குழைவிக்கிறது.
என் தோட்டத்தின்
கத்தரிப் பூக்கள்
சூல் கொள்கின்றன.

நான் காயகல்பம் அருந்திய
கிறக்கம் கொள்கிறேன்.

என்றாலும்
பேசப்பட வேண்டிய விஷயம்
பேசப்படாமலேயே
நம் சந்திப்பு முடிந்து விடுகிறது.

நீ விடைபெற்றுச் செல்லும் தருணத்தில்
வெறுமையின் பெருவெளியில்
நான் சிறைப்படுகிறேன்.

பிரியமானவளே,
ஒரு ஒற்றை மழைத்துளிக்காய்
உயிர் உருகக் காத்திருக்கும்
சாதகப் பறவையைப் போல
உன் இதழ் உதிர்க்கப்போகும்
அந்த ஒற்றைச் சொல்லுக்காக
நான் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பை நோக்கி.

--------------------------------------------------------------------------------------

காதலின் பௌதிகம்

உன் இள மூங்கில் தோளில்
துப்பட்டா
தொங்கும் அழகில் லயித்து
கச்சிதமான பேரபோலா என்று
உறுத்து உறுத்துப் பார்த்தேன்
வசவு உமிழ்ந்து நீ நகர்ந்தாய்.

உன் தங்கையை
அறிமுகம் செய்கையில்
உன் ஐசோடோப்
உன்னினும் அழகு என்றேன்
கோபத்தில் நீ சிவந்தாய்.

உன் அலுமினிய உண்கலத்தைத்
தங்கமாக்குவேன் என்றேன்
அதன் தனிமத்தில் உள்ள
புரோட்டான் நியூட்ரான்களின்
எண்ணிக்கையை மாற்றியதும்
தங்கம் மின்னும்
அணுக்கரு வினைக்கான
ஃபார்முலாவை உனக்கு உரைத்தேன்
பேரெள்ளலுடன் நீ இடப்பெயர்ச்சி செய்தாய்.

நம் காதல்
அசிம்ப்டோட் ஆகவே நீள்கிறதே
தொடுபுள்ளியில் சங்கமிப்பது
எப்போது என்றேன்.

துருத்திக் கொண்டு
என்னுடன் கூடவே வரும்
பௌதிகத்தைக் கைவிட்டால்
உன் கைத்தலம் பற்றலாம் என்றாய்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று
அப்பாலுக்கப்பாலும்
உச்சம் தரும் பௌதிகத்தைக்
கை விடுதல் எங்ஙனம்?

நியூட்டனும் கலாமும்
வெளிச்சம் பாய்ச்ச
நானோ நொடியில்
நான் தெளிந்தேன்.

--------------------------------------------------------------------------------------

உனக்கான என் வானவில்


வனாந்தரங்களையும்
மனித சஞ்சாரமற்ற பிரதேசங்களையும்
முதிய பாலைவனங்களையும் கடந்து
இந்தப் பிரபஞ்சத்தின் விளிம்பு வரை
பயணம் செய்கிறேன்.

செல்லும் இடமெல்லாம்
பூமியின் சகல ஜீவராசிகளிடத்தும்
உன் மீதான என் காதலின் ஆழத்தை
விரித்துச் சொல்கிறேன்
ஓர் அப்போஸ்தலனைப் போல.

பீடபூமிகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
உன் பெயரைச் செதுக்குகிறேன்.
அருவிகளையும் சுனைகளையும்
உன் மொழியால் நிரப்புகிறேன்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களையும்
இந்து குஷ் மலை முகடுகளையும்
தழுவிச் செல்லும் காற்றின் ஈரப்பதத்தில்
உன் புன்னகையைச் சேமித்து வைக்கிறேன்.

அய்ரோப்பாவின் தானிய வயல்களில்
கியூபாவின் கரும்புக் கொல்லைகளில்
ஸ்டெப்பிப் புல்வெளிகளில்
எஸ்கிமோக்களின் துந்திரப் பிரதேசங்களில்
வழியெங்கும்
உன் அழகின் மகரந்தத்தைச்
சிந்திச் செல்கிறேன்.

நைட்டிங்கேல்களும் கக்கூ பறவைகளும்
உன் குரலின் இனிமையைச் சுவீகரிக்கின்றன.
மலைத் தேனீக்கள் உன் பெயரை
ரீங்கரிக்கின்றன.

பிரியமானவளே,
இந்தப் பிரபஞ்சத்தின் ஆழ அகலங்களில்
நீக்கமற உன்னை நிறைத்தபின்
வேர்ட்ஸ் வொர்த்தின்
அறுவடை நங்கையிடம் பெற்ற
கோதுமைக் கதிர்களுடனும்
தேம்ஸ் நதிக்கரையில் பறித்த
டாஃபடில் பூக்களுடனும்
உன் முற்றம் வந்து காத்திருக்கிறேன்.

உன் அங்கீகரிப்பின்
மெல்லிய தலையசைப்பில்
என்னுள் வசந்தங்கள் பிரவகிக்கும்.


--------------------------------------------------------------------------------------