வெள்ளி, 16 ஜனவரி, 2015

காணவில்லை!
கண்டு பிடித்துக் கொடுக்கவும்!
------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மேலும் ஐந்து 
ஆண்டுகளுக்குத் தடையை நீட்டித்து உள்ளது 
மத்திய அரசு. எனவே 2019 வரை தடை நீடிக்கும்.
இது எல்லா விதத்திலும் நியாயமற்றது.

கடந்த மே 2009இல் நடந்த, நான்காம் ஈழப்போரின் 
இறுதியில், விடுதலைப் புலிகள் முற்றிலுமாகத் 
துடைத்து எறியப்பட்டு விட்டனர் ( WIPED OUT )
என்று பிரகடனம் செய்தது சிங்கள அரசு. இந்திய 
அரசும் அதை ஏற்றுக் கொண்டது.

    
ஆக, சிங்கள இந்திய அரசுகளின் பார்வையில், 
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு செத்த பாம்பு.
நமது கேள்வி: செத்த பாம்பை ஏன் அடிக்க வேண்டும் 
மோடி அவர்களே, அதுவும் 2019 வரை?

விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட திட்டப்படி, 
இந்தியத் தமிழர்கள் யாரும் அதில் சேர முடியாது.
ஈழத் தமிழர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் 
படுவார்கள். (ஆனால், EPRLF அமைப்பு, இந்தியத் 
தமிழர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளும்).

எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் 
துளிர்க்கும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
ஆகவே, தடைக்கு எவ்வித அவசியமும் இல்லை.
( இக்கருத்துக்களை எல்லாம் இக்கட்டுரை ஆசிரியர் 
  பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார்).

தடை அவசியமற்றது என்று இந்திய அரசுக்கு 
நன்றாகவே தெரியும். பின் ஏன் தடை?

தடை புலிகளுக்கு இல்லை. தமிழ் தேசிய இன 
உணர்வாளர்கள் மீதுதான் இந்தத் தடை.
தமிழ் தேசிய இன உணர்வு செல்வாக்குப் பெறுவது 
தனது சித்தாந்தத்துக்கு  ஆபத்தானது என்ற தெளிவான 
புரிதல் ஆர்.எஸ்.எஸ்.க்கு இருக்கிறது.எனவே, புலிகள் 
மீதான தடை என்ற சாக்கில், தமிழ் தேசிய இன நலன்கள், 
கருத்துக்கள் மீது தடை விதித்து உள்ளது மத்திய அரசு.
இதுதான் உண்மை.இதை முறியடிப்பது நமது 
பிறழ முடியாத கடமை.

ஆக புலிகள் மீதான தடை என்பது சாராம்சத்தில்,
கருத்துரிமை மீதான தடை. இந்திய வல்லாதிக்கச் சிறையில் 
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் 
நலன்கள், விடுதலை குறித்த கருத்துக்களைப் பேசும் 
எழுதும் கருத்துரிமையின் மீதான தடை.

என்றாலும், "கருத்துரிமைப் போராளிகள்"(!!) பலரும் 
இந்தத் தடை குறித்து மூச்சுக் கூட விடவில்லை.
திடீரென ஒருநாள் காலையில், கனத்த கருத்துரிமைப் 
போராளிகளாக மாறி, எவனோ ஒரு ஆபாச எழுத்தாளனின் 
கருத்துரிமைக்காகத் தொண்டை வறளக் கூச்சல் போடும் 
இவர்களைக் காணவில்லை. தயவு செய்து, கண்டு பிடித்துக் 
கொடுங்களேன்.

*************************************************************      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக