சனி, 24 ஜனவரி, 2015

தருண் விஜய்  ஒரு இடதுசாரியே!
தத்துவார்த்த ஆய்வில் முடிவு!
------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------  .
தருண் விஜய் ஒரு தீவிர இடதுசாரி என்றார் தோளர்.
எனக்கு லேசாக மயக்கம் வருவது போல இருந்தது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் பேசும்
வள்ளுவரை ஏற்றுக் கொள்கிற  தருண் விஜய்யை
வலதுசாரி என்று கணிப்பது தத்துவார்த்தப் பிழை
ஆகிவிடும் என்று பதறினார்  தோளர்.
-------------------------------------------------------------------------------------------------
அவர் ஆர்.எஸ்.எஸ்காரர் ஆயிற்றே .... என்று நான் இழுத்தேன்.
அப்படி அல்ல,  கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் 
பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற தோளர்  
"MISTRUST THE OBVIOUS" என்பதுதானே அறிவியல் என்றார்.
உடனே, உயிரோடுதான்  இருக்கிறேனா நான்  என்று எனக்கு ஓர்
சந்தேகம் வர, நான் என் தொடையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------
அது உங்கள் கருத்து, அவ்வளவுதானே என்று உரையாடலைத்
கத்தரிக்க முயன்றேன் நான்.
இது கருத்தே அல்ல,  கருத்து என்றால்  வெறும் OPINION;
ஆனால் நான் சொல்வது ஆய்வுமுடிவு, FINDINGS  என்றார் தோளர்.
கள  ஆய்வு, புல ஆய்வு, தத்துவார்த்த ஆய்வு,
சான்றாதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு,
என்று பல்வேறு ஆய்வுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போய்  என்னை பிரமிப்பில் ஆழ்த்தினார் தோளர். இவ்வாறு 
பல ஆய்வுகளின் இறுதியில் நாங்கள் வந்தடைந்த முடிவுதான் 
தருண் விஜய் இடதுசாரி என்பது என்று விளக்கினார் தோளர்.
----------------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் சாதாரண ஜனங்களுக்குப் புரியாது; 
INTELECTUALSக்குத் தான் புரியும், அதனால்தான் உங்களிடம் 
சொல்கிறேன் என்ற தோளர் போகிற போக்கில் எனக்கு ஒரு 
அறிவுஜீவிப் பட்டத்தையும் வழங்கினார்.
ஒப்புக் கொள்வதைத் தவிர எனாக்கு வேறு வழி இல்லாமல்
போய்விட்டது.யோசித்துப் பார்க்கிறபோது, சிவப்பு நிறத்தில் 
தருண் விஜய் குல்லாயும் ஸ்வெட்டரும் அணிந்திருப்பதாக 
லேசாக ஒரு தோற்றம் தெரிந்தது.
-------------------------------------------------------------------------------------------------------
நான் பலவீனம் அடைந்து விட்டதைத் உணர்ந்து  கொண்ட
தோளர் கைவசம் உள்ள மிச்சம் மீதி  அஸ்திரங்களையும்
பிரயோகிக்கத் தொடங்கினார்.
பக்கத்தில் உள்ள ஒரு இளைஞரை, மன்னிக்கவும், வாலிபரை
சுட்டிக்காட்டி இவரைப் போன்ற வாலிபர்கள்தான் கள ஆய்வுக்கு
முழுப்பொறுப்பு எடுத்துக் கொண்டவர்கள் என்று சிலாகித்தார்.
சே குவேரா படம் போட்ட பனியன் அணிந்திருந்த அந்த
வாலிபர் பரவசம் அடையத் தொடங்கினார்.அவர் சாதாரண 
வாலிபர் அல்ல என்றும்  வாலிபர் சங்கத்தில் இன்ன பொறுப்பு 
வகிப்பவர் என்றும் தோளர் தெளிவுபடுத்தினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
வாலிபம் என்ற சொல் எனக்கு உவப்பானதாக இல்லை.
வாலிப விருந்து போன்ற தலைப்பிலான பாலியல் ஏடுகள்,
வாலிப வயோதிக அன்பர்களே என்ற  லேகிய  வைத்தியர்களின்
கூக்குரல்கள் ஆகியவை  நினைவில் ஓடின.  எனவே, 
"வாலிபர் என்ற சொல்லுக்கு ஒரு நீல நிறம் இருக்கிறதே, தோளர், 
அதனால் இளைஞர்   சங்கம் என்று பெயர் வைக்கலாமே" என்று 
கூறினேன். "கண்மூடித் தனமான சமஸ்கிருத எதிர்ப்பு நமக்குக் 
கிடையாது என்று  என் வாயை  அடைத்தார்  தோளர்.
----------------------------------------------------------------------------------------------------------
(குறிப்பு; இங்கு நீல நிறம் என்பது இயற்பியலில் வரும், 
450-500 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட நிறத்தைக் குறிக்காது )
இப்போது தன்  முறை என்று உணர்ந்த, உடனிருந்த
ஜிப்பா ஜோல்னாப்பை சகிதம் காட்சி அளித்த அடுத்த தோளர்
பேச ஆரம்பித்தார். அவர் த.மு.சி.ப.ச அமைப்பில் முக்கியப்
பொறுப்பு வகிப்பவர் என்று அறிமுகம் செய்தார் தோளர்.
----------------------------------------------------------------------------------------------------
த.மு.சி.ப.ச ............. என்று நான் தயங்குவதை உணர்ந்த தோளர்
தமிழ்நாடு முற்போக்குச் சிந்தனாவாதிகள் மற்றும் படைப்பாளிகள் 
சங்கம் என்று விளக்கினார்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் யார் யார் இடதுசாரிகள்  என்று
பட்டியல் போட்டிருக்கிறோம் என்றார் த மு.சி.ப.ச தோளர்.
சொல்லிக் கொண்டே தன ஜோல்னாப்பையில் இருந்து ஒரு
சிவப்பு அட்டை போட்ட நோட்டுப் புத்தகத்தை  மிகுந்த
பவ்யத்துடன் எடுக்க ஆரம்பித்தார். சீனத்தில் கலாச்சாரப்
புரட்சியின்போது, மாவோவின் RED BOOK ஐ செங்காவலர்கள்
இப்படிதானே பவ்யத்துடன் எடுத்தார்கள் என்று நான்
நினைத்துக் கொண்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் படிக்கலாம், புதிதாக ஆரம்பிக்கப் பட்ட எங்கள்
இணைய தளத்திலும் இதை வெளியிடப் போகிறோம் என்று
கூறிக்கொண்டே நோட்டை என்னிடம் நீட்டினார்.
அதில் பெருமாள் முருகன் பெயர் தடித்த எழுத்தில்
இருப்பதைக் கண்டேன்.
மாதொருபாகன் நாவல் எழுதிய பெருமாள் முருகனா என்று
நிச்சயப் படுத்திக் கொள்ள விரும்பினேன் நான். ஆம், அவரேதான், 
ஒரு பெருமாள் முருகன்தானே இருக்கிறார் என்றார் தோளர்,           .
-----------------------------------------------------------------------------------------------------------
"அவர் பின்நவீனத்துவவாதி ஆயிற்றே" என்றேன் நான்.
அப்படியெல்லாம்  SECTARIAN ஆகப் பார்க்கக் கூடாது என்று
கண்டித்தார் தோளர்.
இதைத் தொடர்ந்ந்து கருத்துரிமை பற்றியும், அதைப் பாதுகாக்க
வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் சுருக்கமாக ஒரு
லெக்ச்சர் கொடுத்தார் தோளர். ஆர்.எஸ்.எஸ்காரனை
விட்டு வைக்கக் கூடாது என்றும் முத்தாய்ப்பு வைத்தார்.
-------------------------------------------------------------------------------------------------
மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் அரசுதானே, தோளர் என்று 
வினவினேன். ஆமோதித்தார் தோளர்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள்
நீட்டித்து இருக்கிறதே மோடி அரசு, இதவும் கருத்துரிமை
மீதான தாக்குதல்தானே தோளர், அதை ஏன் நீங்கள்  
எதிர்க்கவில்லை என்றேன் நான்.
----------------------------------------------------------------------------------------------------
கமிட்டிக் கூட்டம் இருக்குது, அவசரமாப் போணும்,
இன்னொரு முறை டீட்டெயிலாப் பேசலாம் என்று
சொல்லிக்கொண்டே வேகமாக இடத்தைக் காலி செய்தனர் 
தோளர்கள்
உரையாடலில் கலந்துகொள்ளாமல், மொத்த உரையாடலையும்
கேட்டுக் கொண்டிருந்த அந்த உணவகத்து அன்பர் காறித்
துப்பினார்.
--------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: 
-------------------- 
பார்ப்பனீய விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதையே 
தம் எழுத்துப் பணியாகக் கொண்டிருந்த ஜெயகாந்தனை 
கம்யூனிஸ்ட் என்று மகுடம் சூடினர் போலிகள்.
இன்று, பின்நவீனத்துவ மற்றும் பாலியல் வக்கிர எழுத்தாளர் 
பெருமாள் முருகனை இடதுசாரி என்று போற்றுகின்றனர் 
போலிகள். நாளை இப்போலிகள் தருண் விஜயையும் 
இடதுசாரி என்று கூறக்கூடும். இதில் கற்பனை எதுவும் இல்லை.
IF THE DATA WERE EXTRAPOLATED, ONE WILL ARRIVE AT THIS
CONCLUSION!
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-2:
-------------------- 
 இங்கு "தோளர்" என்று எழுதியதில் எழுத்துப் பிழை 
எதுவும் இல்லை. போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு "தோழர்"  
என்ற அடைமொழி பொருத்தமற்றது என்பது எங்கள் 
நிலைப்பாடு.
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-3;
--------------------- 
"MISTRUST THE OBVIOUS" என்பது குற்றவியல் மற்றும் குற்றப்
புலனாய்வுப் புலத்தில் புழங்கும் ஒரு தொழில்நுட்பச் சொல்.
(TECHNICAL TERM ). பிரத்தியட்சமாகப் பார்க்கும் எதையும் 
நம்பாதே என்று இதற்குப் பொருள்.   

**************************************************************** .







    .

 .





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக