வெள்ளி, 16 ஜனவரி, 2015

மலடியாக இருந்து விடாதே!
சோரம் போயாவது பிள்ளை பெற்றுக்கொள்!
------------------------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------- 
முன்குறிப்பு:
--------------------
( தலித்தியம் பெண்ணியம் ஆகிய தளங்களில் 
செயல்படும் திருமதி சிவகாமி ஐ.ஏ.எஸ் அவர்கள் 
மாதொருபாகன் நாவல் குறித்துக் கூறிய கருத்தை 
ஒட்டி இக்கட்டுரை எழுதப் பட்டு உள்ளது.)

ஒருவழியாக பெருமாள் முருகன் விவகாரம் முடிவுக்கு 
வந்து இருக்கிறது. கோட்டாட்சியர் முன்னிலையில் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இருதரப்பினரும் 
உடன்பாடு கண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரி, பெருமாள் முருகன் 
எழுதிக் கொடுத்து உள்ளார். இனி அவரை எதிர்த்துப் 
போராட்டம் நடத்த மாட்டோம் என்று இந்து அமைப்புகள் 
எழுதிக் கொடுத்துள்ளன. இதை அடுத்து விவகாரம் 
முடிவுக்கு வந்து இருக்கிறது.

என்றாலும், இந்த விவகாரம் எழுப்பிய கேள்விகள் 
அப்படியே நீடிக்கின்றன. இக்கேள்விகளுள் சில, 
தத்துவார்த்தச் சிக்கல் குறித்தன ஆகும். அவற்றை 
ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம். ஆனால், ஒரே 
கட்டுரையில் அல்ல. 

குழந்தைப்பேறு இல்லாத ஒரு பெண்ணின் துயரத்தைக் 
கதைப்பின்னலாக ( PLOT ) கொண்டது பெருமாள் 
முருகனின் மாதொருபாகன் நாவல்.  

"மலடியாக மட்டும் இருந்து விடாதே,
  எவனிடமாவது சோரம் போய்க் குழந்தையைப் 
பெற்றுக்கொள்" என்பதுதான் இந்த நாவலின் 
மையக் கருத்து. அதாவது, இந்த நாவல் மூலம் 
பெருமாள் முருகன் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி.
( THE MESSAGE OF THE NOVEL ).

திருமதி சிவகாமி ஐ.ஏ.எஸ் இந்த நாவலை வன்மையாகக் 
கண்டிக்கிறார்.பெண்களைப் பழிக்கும் பிற்போக்கான 
நாவல் இது என்று சாடுகிறார். 

"சமூகத்தில் நிலவும் பிரச்சினையைப் பிற்போக்குடன் 
விளக்குவது சரியல்ல. பெண்கள் குழந்தை பெறாவிடில்,
அவர்களின் குடும்ப வாழ்வே முற்றுப் பெறாதது போல,
நாவலில் விளக்கி இருப்பது எந்த விதத்திலும் பெண்ணைப் 
பழிப்பது போலத்தான். ஆகவே, நாம் எதைக் கூறுகிறோமோ,
அதற்கு நாமே பொறுப்பாக வேண்டும்".

இவ்வாறு கூறியுள்ளார் சிவகாமி அம்மையார்.
( தகவல் ஆதாரம்: தினமணி, சென்னைப் பதிப்பு, 
  பக்கம்: 4 )
அம்மையாரின் கருத்து முற்றிலும் சரியானதே.

1) பெண் என்பவள், கேவலம், ஒரு பிள்ளை பெறும்
     எந்திரம் மட்டுமே.
2) பிள்ளை பெறாத ஒரு பெண்ணின் வாழ்க்கை 
    முழுமை அடைவதில்லை.
3) வீட்டு விசேசங்களிலும், மங்களமான காரியங்களிலும் 
   மலடியை ஒதுக்கி வைக்க வேண்டும். அவள்மீது, ஒரு 
  சமூகப் பகிஷ்கரிப்பு அல்லது சமூகத் தீண்டாமை 
  மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவை யாவும் பிற்போக்கான நிலப் பிரபுத்துவப் 
பண்பாடுகள். இவற்றைத் தூக்கிப் பிடிக்கும் 
பெருமாள் முருகன்   எவ்வாறு ஒரு முற்போக்கு 
எழுத்தாளர் ஆவார்?

பெருமாள் முருகனின் நாவலை எதிர்க்கும் இந்துமத
அமைப்புகள், நாவலின் மேற்குறித்த பிற்போக்கு 
அம்சங்களுக்காக எதிர்க்கவில்லை. நாவலில் 
வர்ணிக்கப்பட்ட சம்பவங்கள் பொய்யானவை 
என்பதற்காகவே எதிர்க்கிறார்கள் என்பது நம் 
கவனத்துக்கு உரியது.

ஆக, பெருமாள் முருகன் தம் நாவலில் முன்வைக்கும் 
கருத்தியல், பிற்போக்கான ஆளும் வர்க்கக் கருத்தியலே.
அவரை எதிர்க்கும் சாதிய, இந்துமத சக்திகளின் 
கருத்தியலும் ஆளும் வர்க்கக் கருத்தியலே. இந்த 
இரண்டு அம்சங்களையும் போராட்டத்தில் ஈடுபட்ட 
கொங்குப் பகுதி உழைக்கும் மக்களுக்குப் புரிய வைக்க 
வேண்டியது நம் கடமை ஆகும்.

ஒட்டு மொத்தத்தில், இந்த விவகாரம், ஆளும் வர்க்கத்தின் 
இரண்டு பிரிவினருக்கு இடையிலான போராட்டம். இது 
தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சிறிது காலம் கழித்து,
இவர்கள் இருவரும் வேறு ஒரு புள்ளியில், கருத்து ஒருமித்துச் 
சங்கமிக்கலாம். 

அணுவைச் சுற்றி வரும் எலக்ட்ரான்களில், சில அணுக்கருவுடன் 
நெருக்கமாகக் கட்டுண்டு இருக்கும்.( CLOSELY BOUND ELECTRONS ).
சில தளர்வாகக் கட்டுண்டு இருக்கும் ( LOOSELY BOUND ELECTRONS).
இது போல, ஆளும் வர்க்கக் கருத்தியலுடன் நெருக்கமாகக் 
கட்டுண்டு இருப்பவை இந்துமத, சாதிய அமைப்புகள்.
தளர்வாகக் கட்டுண்டு இருப்போர் பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்கள். அவ்வளவுதான். இருவருக்கும் இடையில் 
பாரதூரமான வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

எல்லோருக்கும் புரியும் விதத்தில், எளிய ஒரு 
உதாரணத்தைப் பார்ப்போம். அண்மையில், 
மகாராஷ்டிரத்தில், சிவசேனைக்கும் பாஜகவுக்கும் 
இடையில் பூசலும் போராட்டமும் வெடித்தன.
இது போன்றதுதான், பெருமாள் முருகனுக்கும் 
இந்து அமைப்புகளுக்கும் இடையிலான பூசல்.


இதில், நாம் யார் பக்கம் நிற்பது? குட்டி முதலாளித்துவ 
அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.

******************************************************        


  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக