வெள்ளி, 26 டிசம்பர், 2014

தோளர் நல்லகண்ணு நீடூழி வாழ்க!
---------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------- 

இன்று (26.12.2014) 91ஆவது பிறந்த நாளைக் 
கொண்டாடும் தோளர் நல்லகண்ணு அவர்களை 
வாழ்த்துகிறோம். 

பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் 
நல்லகண்ணு போன்ற, மெய்யாகவே 
எளிமையை விரும்பும் நல்ல மனிதர்களைக் கூட 
விட்டு வைப்பதில்லை போலும்.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் நல்லகண்ணு 
அவர்களுக்குப் பலரும் சால்வை அணிவித்து
வாழ்த்துச் சொல்லும் காட்சிகள் இன்று காலையில் 
ஒளிபரப்பப் பட்டன. எளிமையாகத்தானே
பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்று 
"கம்யூனிஸ்ட  கட்சி" அன்பர்கள் கூறலாம்.
ஆனால், பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே 
ஆடம்பரம் தானே! "ஆகுல நீர" என்று வள்ளுவர் 
கூறுவதில் சேர்த்திதானே பிறந்தநாள் விழாக்கள்!    

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தீரத்துடன் எதிர்த்து 
தேச விடுதலைக்காகப் போராடிய இளம் நல்லகண்ணுவை 
நாடறியும். இளைஞன் நல்லகண்ணுவை போலிஸ் 
காடையர்கள் பிடித்து, அடித்து உதைத்துக் கீழே சாய்த்து 
அவரது கால்களின் மீது ஏறி  நின்று  லத்தியால் 
பாதங்களில் வெறிகொண்டு  அடித்தபோதும் 
உறுதி குலையாமல் நின்ற அந்த வீர இளைஞனின் வரலாறு 
போற்றுதலுக்கு உரியது. இதெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு 
முன்பு நடந்தது. 

விக்கிரமசிங்கபுரம் ஊரைச் சுற்றிக் கண்ணி வெடிகளைப் 
புதைத்து வைத்து, போலீஸ் காடையர்களின்  பிடியில் 
சிக்கி விடாமல் இளைஞன் நல்லகண்ணுவைக் கண்ணின் 
இமை போலப் பாதுகாத்த ஊர்  மக்களை நான் அறிவேன். 
இந்த வரலாற்றை எல்லாம் அவர்களிடம் இருந்துதான் 
நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

இன்றைய இளைய தலைமுறை, நல்லகண்ணு அவர்களின் 
வீரமும் தியாகமும் செறிந்த இளம் பருவதது வரலாற்றை
அறிந்து இருக்கவில்லை. நல்லகண்ணு அவர்களே 
அவற்றை எல்லாம் மறக்க முயலும்போது, இளைஞர்களைக்
குறைகூற எதுவும் இல்லை. 

புதிதாக வாக்குரிமை பெறும், பெற இருக்கும் 
இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டி 
விடும் என்று  தேர்தல் ஆணைய அதிகாரிகள் 
கூறுகின்றனர். இந்த ஒரு கோடி இளைஞர்களுக்கு 
நல்லகண்ணுவைப் பற்றித் தெரிந்தது எல்லாம் இதுதான்:
"அம்மா விசுவாசியான ஒரு வயதான பெரியவர்".

இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் 
தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி என்றுஅவரது கட்சி 
கனவு கண்டபோது  நல்லகண்ணு அவர்கள் கூறியதை
நாடு இன்னும் மறக்கவில்லை. "ஜெயலலிதாவைப் பிரதமர் 
ஆக்குவதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்"
என்றாரே நல்லகண்ணு! இதை யாரும் மறந்து விட முடியுமா?

மறக்கக் கூடிய வாசகமா அது! உலகக் கம்யூனிச வரலாற்றிலேயே 
அருவருக்கத் தக்க ஒரு கூற்று ( ASSERTIVE STATEMENT ) இதை விட 
வேறு எதுவும் உண்டா? காரல் மார்க்சின் ஆவி உங்களை 
மன்னிக்குமா நல்லகண்ணு அவர்களே?

     பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் 
     அறம்நாணத் தக்கது உடைத்து 
என்கிறாரே வள்ளுவர்! இழிவினும் இழிவான 
இந்தக் கூற்றுக்குத் தாங்கள் இன்னும் நாணவில்லையே,
நல்லகண்ணு அவர்களே!

"ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் இந்தியப் 
பிரதமர் ஆகும் அருகதை இல்லை" என்று முரசு அறைந்தாரே 
தங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்!
தமது புதல்வருக்கு ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் 
பதவியைப் பெற்றுத் தருவதற்குத் தான் தா.பாண்டியன் 
இவ்வளவு இழிவாகக் காக்காய் பிடிக்கிறார் என்று ஊடகங்களில் 
அப்போது செய்தி வந்ததே! அதைத் தொடர்ந்துதானே தாங்கள் "ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவதற்காக  உடல் பொருள் 
ஆவியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பணயம் வைக்கும் "
என்று மொழிந்தீர்கள்! இழிவின் உச்சத்தைத் தொடுவதில் 
தா பாண்டியனுடன் போட்டி இட்டீர்களே, நல்லகண்ணு 
அவர்களே!

   தோளர் தா பாண்டியன்,
   தோளர்  நல்லகண்ணு 
இவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் 
தவிர்க்க இயலாமல் எனக்கு ஒரு பல்லக்கும் கூடவே 
ஞாபகம் வரும். தோள்கள் காய்ப்பு ஏறிப் போய் மூச்சு இறைக்க 
பல்லக்குத் தூக்கும் பல்லக்குத் தூக்கிகளின் நினைவு வரும்.
கூடவே சரோஜினி நாயுடுவின் "PALANQUIN BEARERS" என்ற 
கவிதையும் நினைவுக்கு வரும். 
   "LIGHTLY,O,LIGHTLY,WE BEAR HER ALONG
   WE BEAR HER ALONG LIKE A PEARL ON A STRING"   .   

நல்லகண்ணு அவர்கள் மீது எனக்கு, எங்களுக்கு (அதாவது
எங்கள் ஊர்க்காரகளுக்கு ) இன்னும் ஒரு வருத்தமும் உண்டு.
இதே வருத்தம் மறைந்த தோளர் நல்லசிவம் (மார்க்சிஸ்ட் கட்சி)
அவர்கள் மீதும் உண்டு. "இடதுசாரி ஒற்றுமை" என்று 
யாராவது ஒருவர் ஒரு கழிப்பறைக்கு அருகில் கூட நின்று பேச 
வழி இல்லாமல் செய்து விட்டார்களே இந்த இருவரும்,  
தோளர்கள்  நல்லகண்ணுவும் நல்லசிவமும்  என்று நாங்கள் 
இன்னும் வருந்துகிறோம்.

1967 முதல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் 
தொகுதியில் இந்த இருவரும் போட்டியிட்டு, எம்.எல்.ஏ பதவி 
இந்த இருவருக்குமே கிடைக்காமல் போய்விட்ட சோகத்தை 
நாங்கள் இன்னமும் நினைவு  கூர்கிறோம். 1967 தேர்தலில் 
நல்லசிவன் தோற்றார்.1977 தேர்தலில் நல்லகண்ணு தோற்றார்.
1984 தேர்தலில் நல்லசிவன் தோற்றார். CPI, CPM ஆகிய இரு 
கட்சிகளும் ஒரே தொகுதியில் போட்டியிட்டு, வாக்குகளைப் 
பிரித்ததன் விளைவு, இந்த இருவருமே வெற்றி பெற 
முடியவில்லை. சங்குமுத்துத் தேவரும், ஆர்வி அனந்த
கிருஷ்ணனும் வெற்றி பெற்றதுதான் நிகழ்ந்தன .   

இதன் காரணமாக, விக்கிரமசிங்கபுரம், பாவநாசம்,
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், 
சேர்மாதேவி, பேட்டை ஆகிய ஊர்களில் CPI, CPM ஆட்கள் 
யாரும் இடதுசாரி ஒற்றுமை என்று வாயைத் திறக்கக் கூட 
முடியாமல் போய் விட்டது.  

நிற்க. ஒரு காலத்தில், ONCE UPON A TIME, LONG LONG AGO,
புரட்சியாளராக இருந்த நல்லகண்ணு அவர்கள் காலப்போக்கில் 
எதிர்ப் புரட்சியாளராக, டாங்கேயிஸ்ட் ஆக, திரிபுவாதியாக 
மாறி, இன்று போலிக் கம்யூனிஸ்டாகச் சீரழிந்து போனதற்கு 
என்ன காரணம்? யார் காரணம்? யாரெல்லாம் எவையெல்லாம் 
காரணம்?  

நிச்சயமாக நல்லகண்ணு அவர்கள் மட்டும் காரணம் இல்லை. 
அவர் சார்ந்திருந்த இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காரணம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு காரணம். இவை மட்டுமா?

     "IDEOLOGICAL CORRUPTION LEADS TO POLITICAL CORRUPTION;
     POLITICAL CORRUPTION LEADS TO ORGANISATIONAL CORRUPTION;
     ORGANISATIONAL CORRUPTION LEADS TO INDIVIDUALS'
     CORRUPTION." --- என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இதுதான் காரணம்! இங்கு "CORRUPTION " என்பது லஞ்ச ஊழலைக் 
குறிக்காது என்று ஆங்கிலம் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

பின்குறிப்பு:
------------------- 
இக்கட்டுரையில் "தோளர்" என்று குறிப்பிட்டதில் 
எழுத்துப் பிழை எதுவும் இல்லை. புரட்சியாளர்களை மட்டுமே 
"தோழர்" என்று அழைக்க வேண்டும்; ( உதாரணம்: தோழர் சாரு  
மஜும்தார்);  போலிக் கம்யூனிஸ்ட்களை "தோளர்" என்றுதான்  
அழைக்க வேண்டும். இது எங்கள் நிலைப்பாடு. 

************************************************************************** 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக