ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மார்கழியும் ஆண்டாளும் 
---------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------  

மார்கழி முழுவதும் ஆண்டாள் செல்வாக்குச் செலுத்துகிறாள்.
ஆண்டாள் இன்றி இலக்கியமும் இல்லை; தமிழும் இல்லை.
முகநூல் பக்கங்களில் ஆண்டாளைக் காண்பது இதம் தருகிறது.

என் சிறுவயது முதலே ஆண்டாள் எனது மர்கழிகளை 
ஆக்கிரமித்து இருந்தாள் . நான் வைணவனும் இல்லை ; 
இறைப் பற்றாளனும் இல்லை . எனினும் தமிழ்ப் பற்றாளன்.
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள். எனவே 
என்னையும் ஆண்டாள். 

தொலைக்காட்சியும்  இல்லாத இணையமும் இல்லாத 
என் குருத்திளமைக் காலத்தில், வானொலி வாயிலாக 
ஆண்டாளை நான் அடைந்தேன். அப்போதெல்லாம் மஹா 
வித்துவான் ஐயம் பெருமாள் கோனார் அவர்கள், 
வானொலியில் திருப்பாவை விளக்கம் அளித்து வந்தார். 
( இவர்தான் கோனார் உரைநூல்களின் தந்தை.)

நெல்லை மாவட்டம்  பாவூர்ச்சத்திரம் என்ற ஊரில் 
உள்ள பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படித்துவந்த 
காலம் அது.தென்காசி, குற்றாலம், இலஞ்சி ஆகிய ஊர்களுக்கு 
அருகில் உள்ள ஊர் பாவூர்ச் சத்திரம். சன்னல் மேடையில் 
கண்ணாடி பாட்டிலில் வைத்த தேங்காய் எண்ணெய்   
உறைந்து விடும் அளவு பனியின் ஆதிக்கம் அங்கு உண்டு.

பனி பெய்யும் ஒரு மார்கழிக் கருக்கலில், என் தந்தையார் 
ஆழ்துயிலில் இருந்த என்னை எழுப்பி, வானொலியில் 
ஒலிபரப்பப் பட்ட திருப்பாவை விளக்கத்தைக் கேட்குமாறு 
பணித்தார்.கேட்கத் தொடங்கினேன், எரிச்சலுடன். முதலில் 
புரியவில்லை; போகப் போகப் புரிந்தது; ஈர்த்தது.  
அன்று தொடங்கி இன்று வரை ஆண்டாளைப் பிரிந்திலேன். 

முந்தைய வாக்கியத்தில் நான் கூறிய கருக்கல்  
என்பது புலர்ந்ததும் புலராத விடிகாலைப் பொழுது.
"விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த 
கலை அன்னமே" என்ற கவியரசரின் வரிகள்  
கருக்கல்  என்பதற்கு விளக்கம் தருபவை.  

இன்றும் "பனித்தலை வீழ நின் வாசல்கடை பற்றி"  என்ற
ஆண்டாளின் வரிகளைக் கேட்கும் போதெல்லாம், 
அன்று, பாவூர்ச் சத்திரத்தில் பனி பெய்யும் கருக்கலில் 
தலையெல்லாம் பனி வீழ நான் வெளியே சென்று வந்த 
பொன் பொழுதுகள் நினைவில் மின்னலாடும். 

ஆண்டாள் காலத்துப் பனிக்காலம் மறைந்து விட்டது.
அதற்கும் முந்தைய சங்க காலத்து நெடுநல்வாடை 
குறிப்பிடும் வாடைக்காலமும் இன்று தமிழ்நாட்டில் இல்லை.
நல்ல வேளையாக, 10 (அல்லது 11,12)  வகுப்புகளுக்கான 
நெடுநல்வாடை    செய்யுள்களுக்கான விளக்கத்தில் 
கோனார் உரைநூலில், "நக்கீரர் குறிப்பிடும் வாடைக்காலம் 
இன்று தமிழ்நாட்டில் எங்கணும் இல்லை என்பதை மாணவர்கள் 
உணர வேண்டும்" என்று குறிப்பிடப் பட்டு உள்ளது.

இதுதான் உண்மை; இன்றைய மெய்நிலை.
நாம் இயற்கையையும் இழந்து விட்டோம். இன்றைய 
மார்கழியில் விடியக் கருக்கலில் சென்னை நகரத் 
தெருக்களை வலம் வருகிறேன். ஒரு துளிப்பனி   கூட 
என் தலையில்  வீழக் காணேன்.    

நீதியரசர் மு. மு. இசுமாயில் அவர்கள் எழுதிய 
திருப்பாவை விளக்க உரையினை புதிய வாசகர்கள் 
படிக்கலாம்.(வானதி வெளியீடு என்று நினைவு)
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 
ஆண்டாள் குறித்த கட்டுரைகளைப் படிக்கலாம். 
வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய திருப்பாவை 
விளக்கத்தையும் படிக்கலாம். இவர்கள் எல்லாம் வேற்று 
மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற போதும், அவர்கள் 
ஆண்டாளைக் காதலித்தார்கள். அதாவது, தமிழைக் 
காதலித்தார்கள். ஆண்டாளைக் காதலிப்பதும் 
தமிழைக் காதலிப்பதும் வேறு வேறு அல்ல.

நிற்க. முகநூலில் திருப்பாவை எழுதும் அன்பர்களை 
நான் மதிக்கிறேன். அவர்கள் அன்றைய பாசுரத்தை 
அன்று காலையிலே, கருக்கல் பொழுதிலேயே எழுதி 
விடுவது நல்லது. தங்களுக்கு நேரம் வாய்க்கிற பொழுதில், 
அதாவது முன்னிரவில் அல்லது பின்னிரவில் அன்றைய 
பாசுரத்தை எழுதுவதால் பின் விளையாது. திருப்பாவைப் 
பாசுரங்கள் இயற்கையோடு இயைந்தவை; கருக்கல்  
பொழுதுகளுக்கு உரியவை. 

மேலும் திருப்பாவைப் பாசுரங்கள் வாய்விட்டுப் 
பாடுவதற்கு ஆனவை. ஆடியோ வீடியோ காசெட்டுகளின் 
மூலம் பாசுரங்களைக் கேட்பது மட்டுமே போதுமானது அன்று. 
வாய்விட்டுப் பாடக் கற்க வேண்டும். காலப் போக்கில் 
மனப்பாடம் ஆகிவிடும்.மேலும் பொருள் உணர்ந்தும் 
படிக்க வேண்டும். அப்போதுதான், தமிழும் வசப்படும்.

இப்போது திருப்பாவை அன்பர்களுக்கு எளிய  ஒரு கேள்வியை 
முன் வைக்கிறேன். "மாயனை மன்னு  வடமதுரை 
மைந்தனை" என்று தொடங்கும் ஐந்தாம் பாசுரத்தில் 
"தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை"
என்ற அடியைக் கருதுங்கள். இங்கு ஆண்டாள் குறிப்பிடும்
தாய் யார்? தேவகியா, யசோதையா? தேவகி கண்ணனைப் 
பெற்ற தாய். யசோதை வளர்த்த தாய்என்பதை வாசகர்கள் 
அறிந்து இருக்கக் கூடும். 

விடையை எதிர்பார்ப்பதற்கில்லை. எனவே யானே 
விடை கூறி விடுகிறேன்.

"தாயைக் குடல் விளக்கம் செய்தல்" என்ற தொடருக்கு,
தாயின் பெருமையை ஊர் அறியச் செய்தல் என்று பொருள்.
"பெற்ற வயிறு விளங்க வைத்தல்" என்ற ஒரு தொடர் 
வழக்கில் இருப்பதை இங்கு நோக்கவும். குடல் விளக்கம் என்ற 
சொல்லுக்கு முன்னுரிமை தருபவர்கள், ஆண்டாள் இத்தொடரில் 
கண்ணனைப் பெற்ற தாயான தேவகியையே குறிப்பிடுகிறாள் 
என்று உரை காண்கின்றனர். 

ஆனால், இங்கு "தாமோதரன்" என்ற சொல்லும் கருதத் தக்கது.
குறும்பு செய்யும் குழந்தை கண்ணனை அடக்க, யசோதை 
அவனை உரலில் கட்டி விடுவாள்.கயிற்றால் கட்டிக்  கட்டி 
கண்ணனின் வயிற்றில் தழும்பு உண்டாகி விடும். எனவேதான் 
தாமோதரன் என்றும் கண்ணனுக்குப் பெயர்.

தாமம்+உதரன் = தாமோதரன். இச்சமன்பாட்டை நன்கு கருதவும்.
உதரம் என்றால் வயிறு. தாமம் என்றால் கயிறு, கயிற்றால் 
விளைந்த தழும்பு. தாமோதரன் என்றால் வயிற்றில் தழும்பு 
உடையவன் என்று பொருள். இடுப்பில்தானே கயிற்றைக் 
கட்டினாள்  யசோதை, இடுப்பு எவ்வாறு வயிறு ஆகும் என்று 
ஐயம் கொள்ளும் வாசகர்கள் "இடுப்பு என்பது வயிற்றின் 
கீழ்ப்பகுதி" என்பதை  உணரவும்.

எனவே, தாமோதரன் என்ற சொல் மூலம் ஆண்டாள் இங்கு 
குறிப்பிடுவது யசோதையைத் தான் என்று கருத இடம் உண்டு.
ஆண்டாள் தன்னை ஒரு இடைச்சியாகவே மாற்றிக் கொண்டாள் 
என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவார். இடைச்சிகளின் 
உடலில் வீசும் பால்-தயிர் வாசனை ஆண்டாளின் உடலிலும் 
வீசும் வண்ணம் ஆண்டாள் தன்னை மாற்றிக் கொண்டாள் 
என்பார் கவிக்கோ.

எனவே, மேற்கூறியவற்றின் மூலம், ஆண்டாள் 
"தாயைக்  குடல்விளக்கம் செய்த தாமோதரன்" என்ற 
தொடரில் யசோதையையே குறிப்பிடுகிறாள் என்பது 
அடியேனின் துணிபு.   

****************************************************************
பின்குறிப்பு: இப்பதிவு தமிழ் இலக்கிய மாணவர்கள் 
ஆர்வலர்களுக்கானது. ஏனையோர்க்கன்று.
-----------------------------------------------------------------------------------------               
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக