வெள்ளி, 19 ஜனவரி, 2018

முகநூல் நண்பர் ஒருவர் சுஜாதாவின் நூல் ஒன்றில் மணிமேகலையைப் படிக்கவேண்டாம் என்று சொல்வதை மேற்கோள் காட்டி”பிராமண நுண்சூழ்ச்சிக்கு உதாரணம் வேண்டுமா...அது இது தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் குறிப்பிட்டிருந்த பக்கத்தைப் படித்த எனக்கு ஏதும் சூழ்ச்சி தெரியவில்லை. எனவே மறுமொழியாக “அவர் சொன்னதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. மணிமேகலை எளிய காப்பியமல்ல. அதையும் சீவகசிந்தாமணியையும் புரிந்து கொள்ள ஆழமான பயிற்சியும் வரலாற்று அறிவும் தேவை. அவர் புலியூர்க்கேசிகன் உரையோடு பழைய இலக்கியத்தைக் கற்பவர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். மணிமேகலையையே படிக்காதீர்கள் என்று சொல்லவில்லை” என்று எழுதினேன்.
அவர் காட்டமாகவே ”ஆமா... "தமிழர்களான நம் அனைவருக்கும்" என்று தன்னையும் தமிழனாக சொல்லுகிறார் சுஜாதா...பிராமணனுக்கு தான் அவனின் தேவ பாஷை உள்ளதே தந்தை மொழியாக...அவன் தாய் மொழியை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்” என்று விடையளித்தார்.
நான் தொடர்ந்து ”ஆமாம், சுஜாதா பிராமணன் தாம். நம்மாழ்வார், ராமானுஜர் வழிவந்த வைணவர்தாம். அத்தகைய தமிழ் வைணவர்களுக்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றழைக்கப்படும் ஆழ்வார்கள் அருளிய தமிழ் நாலாயிரம் சமஸ்கிருத வேதங்களுக்கு நிகரானது. தமிழ்ப்பற்றில் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இல்லை. சுஜாதா தன் வாழ்வில் இறுதியில்தான் பழைய இலக்கியங்களை ஆழக்கற்க வேண்டும் என்று திரும்பி வந்தார். தன் கற்றலைத் தன் பல்லாயிரக்கணக்கான வாசகர்களோடு பகிர்ந்து கொண்டார். அவர் பார்ப்பனர்தாமே, அவர் சொல்லை ஏன் நம்ப வேண்டும், என்பவர்களுக்காக அல்ல. அவரைத் தற்காலத்திய பொறியியலாளர், இலக்கியவாதி, வருங்காலத்திற்குத் தேவையானதைப் பற்றித் தம் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்பவர் என்று நம்புபவர்களிடம் சொன்னார். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உகப்பு. ஆனால், அவர் நோக்கத்தையோ அவரது பிறப்பையோ பழிப்பதற்கு முன்னால் குறைந்தது அவர் அளவுக்குத் தமிழுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். மெய்ப்பொருள் காண்பதறிவு” என்றேன்.
அவரோ சற்றும் தயங்காமல் “தமிழர்கள் பிராமணர்களை நம்புவதில்லை...சரித்திர எதிரி அவன்தான்...அவன் இங்கு திருடி சிதைத்தது ஏராளம்..உதாரணத்திற்கு இசை தமிழை கூறலாம்...wholesale ஆக சுட்டு கர்நாடக இசையென்று திரித்ததை போல...பிராமணன் இனத்தால்,மரப்பினத்தால் குலத்தால்,மொழியால் தமிழனில்லை...நாங்கள் ஏற்க போவதும் இல்லை.தமிழ் கற்றவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல...இங்கு பிறப்பை பழிக்கவில்லை... தமிழனென்று ஏமாற்றுவதை சுட்டினேன்” என்றார்.
யார் தமிழர்கள் என்பதில் “தெலுங்குத் திராவிடர்கள்” தமிழர்களல்ல என்று ஒரு இனவெறிக்கும்பல் அலைகிறது என்றால், அதே போல் இது இன்னொரு இனவெறிப்பார்வை.
என் பார்வை வேறு. “வள்ளல் பாரியைக் கொன்ற மூவேந்தர் தமிழர்கள். பாரி மகளிரைப் பாதுகாக்க ஊர் ஊராய் அலைந்த சங்கப்புலவர் கபிலர் பார்ப்பனர், பாரி மகளிரை மணந்தால் மூவேந்தரின் பகை வருமோ என்று அஞ்சியவர்கள் தமிழர்கள். சங்கப்புலவர்களில் பலர் பார்ப்பனர்கள். இன்று தம்மைத் தமிழர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருடைய முன்னோர்கள் தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்வதற்கு முன்னரே இங்கு வந்து, தமிழ் கற்று, தமிழ் பாடி, தமிழின் ஒப்பற்ற இலக்கியத்திலும் இடம் பெற்ற பாடல்களை இயற்றியவர்கள் அவர்கள். அவர்களுடைய வழித்தோன்றல்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள். எனவே யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அவர்கள் தமிழர்கள்தாம்” என்று சொன்னேன்.
அவரோ உடனே கிரந்த எழுத்துக்கும் மணிப்பிரவாள நடைக்கும் தாவினார். “கிரந்த எழுத்துக்களை கொண்டும்,மணிப்பிரவள நடை கொண்டும் பிராமணன் தமிழை அழிக்க முயற்சித்ததே அதிகம்...அவன் தமிழை அழித்தால் தான் தமிழ் இனம் அழியும் என்ற கோட்பாடுடையவன்...மரபிணமே வேறு எப்படி அவனை என் பங்காளி தமிழனாக ஏற்க முடியும்...பிராமணன் தமிழனின் ஜென்ம பகை...நான் உன் வீட்டினுள் ஒண்டுகிறேன் என்று வந்தால் ஏற்க முடியாது” என்று சொன்னார் திட்டவட்டமாக.
தமிழோடு வடமொழி எழுத்துகளைக் கலந்து எழுதும் பழக்கத்தைத் தமிழி அல்லது தமிழ்ப்பிராமியில் கல்வெட்டு பொறிக்கும் காலத்திலிருந்தே தொடங்கியதை அவர் அறியவில்லை போலிருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி, கிரந்தம், மணிப்பிரவாள நடை பற்றி அவர் அறிந்திராத செய்திகளை விளக்க முயன்றேன்.
“கிரந்த எழுத்துகளை உருவாக்கியவர்கள் பல்லவர்கள். மணிப்பிரவாள நடையை உருவாக்கியவர்கள் சமணர்கள். அதில் நிறைய எழுதியவர்கள் பௌத்தர்கள். பின்னர்தாம் அந்த நடையை வைணவ உரையாசிரியர்களும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், கிரந்த எழுத்துகள் உருவாவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்ப் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் பொறிக்கும்போதே, அசோகப் பிராமியில் வர்க்க எழுத்துகளை இரவல் வாங்கி தம்மம் என்று பொறித்தவர்கள் குறைந்தது பௌத்தம் தெரிந்தவர்கள். அவர்கள் ஆரிய பௌத்தர்களாக இருந்திருக்கலாம். ஆனால், பார்ப்பனராக இருந்திருக்கும் வாய்ப்பு குறைவு. தமிழ் வைணவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டைத் தம்மைத் திராவிடர் என்று பறைசாற்றியவர்கள் நெருங்கியது கூட இல்லை. இப்படிப்பட்ட இனவெறியையும் வெறுப்பையும் பாசிசத்தையும் தமிழ் மண்ணில் விதைத்ததால் என்ன விளைந்தது? பகுத்தறிவதற்கு முதலில் அறிய வேண்டும் என்ற வேட்கை தேவை. அறியாமல் வெறுப்பை மட்டும் கக்குவதற்குத்தான் வெறுப்பரசியல் துணை புரிந்திருக்கிறது.” என்று விடையளித்தேன்.
அவரோ, நான் சொன்னதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர் எழுதினார் “பல்லவன் பிரம்ம சத்ரியன்.... பிராமணனுக்கும் சத்ரியனுக்கும் பிறந்த கலப்பு வித்து... நான் சொன்னது தமிழில் உள்ள பிராமணர்கள் உருவாக்கிய சிறப்பெழுத்துகளை தான்...bramhi script யை அல்ல.”
தொடர்ந்து “ தமிழனுக்கு இப்போது மிக முக்கியம் இன ரீதியாக தன் எதிரிகளை இனம் காணுவது..பிராமணீயம் மனுவாத ஆயுதம் தரித்து இந்துத்துவ முகமூடியணிந்து உள்ளே வர முயற்சிக்கும் இக்காலத்தில் வெறுபரசியல் பரவாயில்லை...அவன் எங்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பிற்கு கம்மி தான்...h. ராஜா உதாரணம்.” என்றார்.
மேலும் “மணிப்பிரவள நடையை உருவாக்கியது பிராமணன் தான்...வேறு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்..இன்னமும் பேசி கொண்டிருப்பதும் அவன் தான். பிராமணனின் படுக்கையறை தந்திர அரசியலை பேசினால் வாந்தி தான் வரும்...ராமசாமி நாயக்கர் இதனை விரிவாக எழுதியும் உள்ளார்...குடியரசுவில் வந்துள்ளது.ஏற்கனவே பதிவிட்டுளேன். சங்க புலவர்களில் சிலர் தான் அந்தணர்..பலர் அல்ல..பார்ப்பனர் வேறு ஆரிய வேதியர் வேறு...எனக்கு சற்றும் குழப்பமில்லை.” என்று அடித்துச் சொன்னார்.
பெரியார் என்று எழுதாமல், “ராமசாமி நாயக்கர்” என்று எழுதியதால் இவர் பார்ப்பனர்களை வெறுக்கும் திராவிடக்கட்சி ஆளில்லை என்பது புலப்படுகிறது. பார்ப்பனர்களைத் தமிழர்களாக ஏற்கும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராகவும் தெரியவில்லை. ஆக மொத்தம், தமிழ்த்தேசியம் என்ற பெயரில் யாரையாவது வெறுத்தே தீர வேண்டும் என்ற நிலையில் இருப்பவர் போலிருக்கிறது.
வரலாற்று அறிவோ, இலக்கிய அறிவோ இல்லாமல், பிறரை வெறுப்பதற்கு மட்டும் காரணங்கள் தேடும் பலர் இவரைப் போலவே மெத்தப் படித்தவர்கள். இவர் இப்படி எழுதுவதை அருமை அருமை என்று கொண்டாடுபவர்கள் இருக்கும்வரை இப்படித்தான் எண்ணுவார். இப்படித்தான் எழுதுவார். நல்ல வேளையாக அவரது இடுகையை விரும்பியவர்கள் பட்டியலில் ஒரே ஒருத்தர் மட்டுமே என் நட்பு வட்டத்தில் இருந்தார். அவரையும் அந்தக் கட்டுரையாளரையும் என் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கி விட்டுக் “கொம்....... .ழம்” என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே இதை எழுதி முடித்தேன்.
தமிழனாக வாழ்வதற்குத் தமிழனாகப் பிறந்தால் மட்டும் போதாது. தமிழ் இலக்கியத்தைப் படித்து மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது. தமிழ் இலக்கியத்தால் நம்மைப் பண்படுத்த வேண்டும். நம் முன்னோர் நமக்குக் கொடுத்து வைத்திருக்கும் செல்வங்களைப் பயன்படுத்தத் தெரியாமல் நாம் வளர்ந்திருக்கிறோமோ!
//
Bow with Respect Mani!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக