திங்கள், 29 ஜனவரி, 2018

வன்முறை அறம் ஆகுமா?
----------------------------------------------
அறம் என்பது இதமான உபதேசத்துக்கு உரிய
எளிய கோட்பாடுகளின் தொகுப்பு மட்டுமே
என்று கருதுவது பிழைபட்ட புரிதல்.
திருடாதே என்று அறத்தை உபதேசிப்பதால்
மட்டும் திருட்டு ஒழிந்து விடாது என்று மார்க்சியம்
கருதுகிறது. திருட்டு என்றால் என்ன என்று
எங்கல்ஸ் விளக்குகிறார்:

"சுரண்டல் சமூக அமைப்பை எதிர்த்து,
இல்லாதவர்கள் தெரிவிக்கும் கண்டனத்தின்
முதல் அடையாளம்தான் திருட்டு"  என்கிறார் எங்கல்ஸ்.
(Theft is the first sign of protest of the have nots against the exploitative
society).

எனவே திருட்டுக்குக் காரணமான சொத்துடைமை
சமூக அமைப்பை மாற்றாமல் திருட்டை ஒழிக்க
முடியாது என்று மார்க்சியம் கருதுகிறது. எனவே
சொத்துடைமை ஒழிப்பு என்னும் நோக்கத்தைச்
செயல்படுத்தவல்ல அறமாக பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை அது முன்வைக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வன்முறை
அல்லவா? வன்முறையானது எப்படி அறமாகும்
என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முற்றிலும்
வன்முறையை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு
முறைமை என்று கருதுவது பேதைமை ஆகும்.

ஒரு முதலாளிய சமூக அமைப்பானது
முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைக்
கொண்டிருக்கிறது. அதே போல, பாட்டாளி வர்க்கம்
ஆளும் வர்க்கமாக மாறும்போது,அது முதலாளிய
வர்க்கம் இதுவரை அனுபவித்து வந்த அனைத்து
அதிகாரங்களையும் ரத்து செய்து விடுகிறது.
சகல அதிகாரமும் பாட்டாளி வர்க்கத்துக்கே  என்பதுதான்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும். எல்லார் மீதும்
வன்முறை என்று இதற்குப் பொருளல்ல.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வன்முறையை
ஆராதிக்கும் முறைமை அல்ல. எனினும் முற்றிலும்
வன்முறையைச் சாராதது என்றும் கூறி விட முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் 1950களில், வட
இந்தியாவில் மத்திய அரசு அலுவலகங்களில்
தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதற்காக
தனியான பானைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மேல்சாதி ஊழியர்களுக்கான பானையில் இருந்து
தாழ்த்தப்பட்ட ஊழியர் தண்ணீர் அருந்த முடியாது.
இவ்வளவுக்கும் எல்லாமே மண்பானைகள்தான்.

உயர்சாதி ஊழியர்கள் அறத்தொடு நின்றுதான்
தாழ்த்தப் பட்டோருக்குத் தனிப்பானை வைத்தனர்.
தனிப்பானைக்கு சாஸ்திர சம்மதம் உண்டு.
தீண்டாமையைப் பேண வேண்டும் என்பதே
உயர்சாதியினரின் அறம். இந்த அறம் தாழ்த்தப்
பட்டோருக்கு நியாயம் வழங்குமா?

அன்றைய மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராமின்
கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
தாழ்த்தப் பட்டோருக்கான தனிப்பானைகளை
உடைத்தெறியுங்கள் என்று அவர் உத்தரவிட்டார்.
பானை என்பது அரசின் சொத்து. அரசின் சொத்தை
உடைத்தெறிவது வன்முறைதான். ஆயினும் இந்த
எளிய வன்முறைக்குப் பிறகுதான், ஒரே பானையில்
இருந்து அனைவரும் தண்ணீர் அருந்தும்
சமத்துவம் பிறந்தது.

கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு
வரியில் பதில் சொல்வதானால், தனிச் சொத்துடைமையை
ஒழிப்பது (abolition of private property) என்று கூறலாம்.
சோவியத் ஒன்றியத்தில் (ரஷ்யாவில்), சீனாவில்,
கியூபாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைந்ததும்
எல்லா விதமான தனிச் சொத்துடைமையையும்
ஒழித்து உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது
மார்க்சியம்..

தனிச்சொத்துடைமையை ஒழிப்பதுதான்
மார்க்சியத்தின் பிரதான இலக்கு என்று ஆகும்போது
அதற்கேற்ற அறத்தைத்தான் மார்க்சியம் கொண்டிருக்க
முடியும்.  அந்த அறம்தான் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம்.

இதற்கு மாறாக, வர்க்க சமரசத்தை இலக்காகக்
கொண்டுள்ள அனைத்து மதங்களும் தங்களின்
இலட்சியத்துக்கு ஏற்ற அறத்தையே கொண்டுள்ளன.
பெளத்தம், சமணம், கிறிஸ்துவம் உள்ளிட்ட
எந்தவொரு மதமும் தனிச் சொத்துடைமையை
ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல.
எனவே அவர்கள் போதிக்கும் அறம் வன்முறையற்ற
அறமாகும். பகைமை  கொண்ட வர்க்கங்களை
சமரசப் படுத்துவதன் மூலமாக, சமூகக்
கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் நோக்கம்
கொண்டதே மதங்களின் அறம் ஆகும். இத்தகைய
பொருந்தா அறத்தை உச்சிமேல் சுமந்து கொண்டு,
மார்க்சியத்தின் அறம் இதுபோல மென்மையாக
இல்லையே என்று புலம்புவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை அல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்லாயிரக் கணக்கான
முழுநேர ஊழியர்களைப் பாருங்கள். எளிய
வாழ்க்கைக்கும் கண்ணியமான நடத்தைக்கும்
அவர்கள் எடுத்துக் காட்டுகளாகத் திகழவில்லையா?
மகாத்மா காந்தி மட்டும்தான் எளிமைக்கு உதாரணமா?

கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்
மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்

என்று பாடினாரே சுப்பாராவ் பாணி கிரஹி!
காந்தியை விஞ்சிய எளிமையுடன் கம்யூனிஸ்டுகள்
வாழவில்லையா?

கீழ்த்தஞ்சையில் எளிய விவசாயக் கூலிகளுடன்
இணைந்து, அவர்களின் குடிசையிலேயே தங்கி,
அவர்கள் தரும் உணவையே உண்டு, சவுக்கடி
சாணிப்பால் கொடுமைகளை ஒழித்தாரே மகத்தான
கம்யூனிஸ்ட் தோழர் சீனிவாச ராவ்!
சீனிவாச ராவை முன்மாதிரியாகக் கொண்டு
வாழ்ந்து மடிந்த எத்தனையோ கம்யூனிஸ்ட்கள்
இன்றும் அப்பகுதி மக்களின் இதயங்களில்
வாழ்கின்றனரே!

1948 தெலுங்கானா ஆயுத எழுச்சியிலும், வசந்தத்தின்
இடிமுழக்கமாக இந்திய வானில் உதித்த நக்சல்பாரிப்
புரட்சியிலும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள்
இன்னுயிரைத் துறந்து தியாகிகள் ஆயினரே!  

அறமே இல்லாத வறட்டுத் தத்துவமாக மார்க்சியம்
இருக்குமேயானால், இவ்வளவு தியாக சீலர்களை
தனது அணியில் மார்க்சியம் கொண்டிருக்க முடியுமா?
"ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக இருப்பது எப்படி?"
(How to be a good communist?) என்று புத்தகம் எழுதினாரே
சீனத்தின் லியோ சாச்சி! அந்தப் புத்தகம் மார்க்சியத்தின்
அறநூல் இல்லையா?    

மக்கள் கூடி வாழ்ந்து, பொதுவான ஒரே உணவுக்
கூடத்தில் சமைத்து உண்டு, ஓரிடத்தில் கூடி வாழும்
கம்யூன்கள் சீனா முழுவதும் மாவோவின்
காலத்தில் அமைக்கப்பட்டனவே! இது மார்க்சிய
அறத்தின் வெளிப்பாடு இல்லையா? தனிச்
சொத்துடைமை  ஒழிந்த பின், எத்தகைய நீதி
போதனைகளாலும் அறன் வலியுறுத்தல்களாலும்
ஒழிக்க முடியாத குற்றங்கள் சோஷலிச நாடுகளில்
வெகுவாகக் குறைந்தனவே, அது எதனால்
சாத்தியமானது?

எனவே மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது
வெற்றுக் கூச்சலே தவிர உண்மையல்ல. மார்க்சிய
அறம் செவிப்பறைகளில் தங்கிக்கொண்டு
மூளைக்குச் செல்லாமல் மடிந்து விடும் அறமல்ல.
மாறாக அது மானுடத்தைச் செயலுறுத்தும் அறம்.
அது உலகை மேன்மையுறுத்தும் அறம். அது
சமத்துவத்தின் அறம்; சமரசத்தின் அறமல்ல.
--------------------------------------------------------------------------------------

கம்யூனிச சமூகத்தின் உன்னத அறம்!
-------------------------------------------------------------------
தனிச் சொத்துடைமையை ஒழிப்பது என்ற நோக்கத்துக்கு
ஏற்ற அறத்தை ஒரு முதலாளிய சமூகத்தில்
மார்க்சியம் கொண்டிருக்கிறது. எனினும் இந்த
அறம் எல்லாக்காலத்துக்கும் பொருந்துகிற அறமல்ல
என்பதை மார்க்சியம் தெளிவுறுத்துகிறது.

சோஷலிச சமூகத்திலும் வர்க்கங்கள் இருக்கும்.
எனவே அரசு எந்திரமும் சோஷலிச சமூகத்தில்
இருந்தே தீரும். மானுடம் பக்குவம் அடைந்து
சோஷலிசக் கட்டத்தைக் கடந்து கம்யூனிச சமூக
அமைப்புக்குள் செல்லும்போது அங்கு வர்க்கங்கள்
இருக்காது. அரசும் இருக்காது. எனவே அங்கு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் இருக்காது.

கம்யூனிச சமூகத்தின் அறமே வேறு. அது மானுடத்தின்
உன்னதங்களை வசப்படுத்திக் கொண்டிருக்கும்.
கம்யூனிச சமூகத்தில் இனிய வாழ்க்கையானது
சமூகத்தின் சகல பகுதி மக்களுக்கும் உறுதி
செய்யப்பட்டு இருக்கும். கம்யூனிஸ்ட் அறிக்கையில்
மார்க்சும் எங்கல்சும் கூறிய பொன்னுலகம் அது.
அதற்கான அறத்தை அச்சமூகமே உருவாக்கும்.
****************************************************************
முற்றும்
-------------------------------------------------------------------------







  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக