செவ்வாய், 8 நவம்பர், 2011

சபிக்கப்பட்டவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும்!


நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை – 600 094
கட்டுரையின் தலைப்பு :
சபிக்கப்பட்டவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும்!
ஆசிரியர் : பி. இளங்கோ
பாடு பொருள் : கூடங்குளம் அணு உலைகள் குறித்த ஆய்வு
வாசகர் தளம் : இடதுசாரி அறிவாளிகள் மற்றும் அறிவியல்
அறிந்த வாசகர்களுக்காக
வெளியீடு : நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை – 600 094.
வெளியீட்டாளர் குறிப்பு
யுரேனியத்தின் செறிவும்,
கனநீரின் அடர்த்தியும் கொண்டு
கருத்துக்களால் கனம் பெற்றதும்
மொழிநடையால் வளம் பெற்றதுமான
இக்கட்டுரை அறிவார்ந்த வாசகர்களுக்காக.
இது கட்டுரை அன்று, கருத்தாயுதம்!
கொழுந்து விட்டெரியும் கூடங்குளம் அணு உலைச் சிக்கலை மார்க்சிய – லெனினிய வெளிச்சத்தில் ஆராயும் இக்கட்டுரை சமகால மார்க்சிய லெனினியத்துக்கு ஓர் எளிய பங்களிப்பாகும்.
எதிர்வினைகள் வரவேற்கப்படுக்கின்றன.
மின்னஞ்சல்: ilangophysics@gmail.com

சபிக்கப்பட்டவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும்!
-
பி. இளங்கோ
கூடங்குளத்தில் நிகழ்ந்து வரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழர்களை நாண வைப்பவை. அறிவியலுக்கு எதிரானதும் பழைய கற்காலத்துக்குப் பாதை சமைப்பதுமான இந்தக் கூத்துகள் தற்குறித்தனத்தின் சிகரம் தொட்டு நிற்பவை.
அணு உலை எதிர்ப்பு என்று சாதாரணமாகத் தொடங்கிய இந்நிகழ்வு அணு உலையை மூடவேண்டும் என்று மூர்க்கம் கொண்டுள்ளது.
எதிர்ப்பாளர்களைச் சந்தித்து அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் தர முன்வந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்களை கூடங்குளத்துக்கு வரக்கூடாது என்று தடை விதித்ததன் மூலம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆணவத்தில் தலிபான்களையும் விஞ்சி விட்டனர்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் மக்களின் இயல்பான தன்னெழுச்சியான போராட்டம் அல்ல. அறிவியலுக்கு எதிரான சிந்தனைக் குள்ளர்களின் இருட்டு மனங்களில் உருவானதே இந்தப் போராட்டம். அரசியல் கட்சிகளோ மக்கள் இயக்கங்களோ முன்னெடுக்காத இந்தப் போராட்டத்தை கிறித்துவப் பாதிரியார்களும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இயக்கி வருகின்றனர்.
வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிற கூடங்குளம் மக்களை கர்த்தருக்குள் ஆற்றுப்படுத்த வேண்டிய பாதிரியார்கள் முச்சந்தியில் அவர்களை இழுத்துப் பறித்து விட்டிருக்கிறார்கள்.
1988 நவம்பரில் ரஷ்ய அதிபர் மிகையில் கோர்ப்பச்சேவ், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டு போனதால் இத்திட்டம் சில ஆண்டுகள் தாமதமானது. 1991-96 காலக்கட்டத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்துக்கு ஆதரவளித்தார். அணு உலைக்கும் ஊழியர் குடியிருப்புக்குமான இடம் என்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்ட போது கூடங்குளம் பகுதி மக்கள் முழு ஆதரவையும் நல்கினர். தொடர்ந்து கட்டம் கட்டமாக மக்களின் ஒத்துழைப்புடன் திட்டப் பணிகள் நடந்தேறி தற்போது அணு உலை முழுமை அடைந்து நிற்கிறது.
உலை இயங்குவதற்கும் மின் உற்பத்தி தொடங்குவதற்குமான நாள் குறிக்கப்பட்டு விட்ட நிலையில் திடீரென எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. 1988 முதல் 2011 வரையிலான கால் நூற்றாண்டு காலமாக இந்த உலைக்கு ஆதரவு அளித்தவர்கள் இப்போது திடீரென எதிர்ப்பது ஏன்? வெண்ணெய் திரளும் போது தாழியை உடைத்தே தீருவேன் என்று முரண்டு பிடிப்பது ஏன்? நேற்று வரை இனித்த அணு உலை இன்று கசப்பது ஏன்? அணு உலை தீயது என்றால் இளைதாக முள்மரம் கொன்று இருக்கலாமே! அதை விடுத்து தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது ஏன்?
காலம் கடந்த போராட்டம் கரை சேருமா? குழந்தை வேண்டாம் என்றால் முதலிரவன்றே ஆணுறையை அணிந்து கொண்டிருக்க வேண்டுமே அல்லாமல் பனிக்குடம் உடையும் நேரத்திலா குழந்தை வேண்டாம் என்று கூச்சலிடுவது? இது பேதைமை மட்டுமின்றி கயமையும் ஆகும் அல்லவா!
மழைக்காலத்துக் காளான்கள் போல திடீரென முளைத்த இந்த ஆரவாரமான அணு உலை எதிர்ப்பின் பின்னணியை ஆராய்ந்ததில் அறிவியலின் வறுமையும் சுயநலத்தின் முழுமையும் மட்டுமே தென்படுகின்றன. போராளிகள் போல் மாறுவேடம் அணிந்த சுயநலமிகள் சிலரால் அணு உலை எதிர்ப்பு என்ற நஞ்சு கூடங்குளம் மக்களின் மூளையில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்பதும் புலனாகிறது.
அணு உலை விபத்துகள்
அணு உலைகள் தீண்டத் தகாதவை அல்ல. பாதுகாப்பு அற்றவையோ உயிருக்கு ஊறு விளைவிப்பவையோ அல்ல. உலகம் முழுவதும் 440 அணு உலைகள் முப்பது நாடுகளில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் 104 அணு உலைகள் செயல்படுகின்றன.
ஜப்பான் நாடு இந்தியாவைப் போல் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டதல்ல. அது பல்வேறு தீவுகளின் கூட்டம். மொத்தப் பிராந்தியமும் பூகம்ப அபாயத்தால் சூழப்பட்டுள்ள ஜப்பானில் மட்டும் 51 அணு உலைகள் இயங்கி வருகின்றன.
அமெரிக்கா ஜப்பானோடு ஒப்பிடுகையில் அணுமின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. இந்தியாவில் மொத்தமுள்ள ஆறு அணுமின் நிலையங்களில் இருபது அணு உலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
சிறிய மற்றும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விட்ட விபத்துகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், உலகளாவிய அணுமின் உற்பத்தியின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் இதுவரை மூன்று விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன.
அ) அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதிக்கு அருகில் உள்ள ‘மூன்று மைல் தீவு’ (1979 மார்ச்)
ஆ) ரஷ்யாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபைல் (1986 ஏப்ரல்)
இ) அண்மையில் ஜப்பானில் ஃபுகுஷிமா (2011 மார்ச்)
ஆகிய மூன்று இடங்களில் நிகழ்ந்த விபத்துகளே உலகின் கவனத்தை ஈர்த்தவை.
இவற்றில் ‘மூன்று மைல் தீவு’ விபத்தானது அணுமின் உற்பத்தியின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது. அணுமின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் போக்கில் இத்தகைய குறைகள் சுலபத்தில் களைப்பட்டு விட்டன. செர்னோபைல் விபத்தின் படிப்பினைகளால் புடம் போடப்பட்ட புதிய தொழில்நுட்பம் விபத்துகள் நேரா வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபுகுஷிமாவில் அணு உலை எதுவும் வெடிக்கவில்லை என்பதும் பூகம்பம் மற்றும் சுனாமியின் இரட்டைத் தாக்குதலின் விளைவாக அணு உலை வெள்ளத்தில் மூழ்கியதால்தான் விபத்து நிகழ்ந்தது என்பதும் கருதத்தக்கது.
அணு உலைத் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறி வருகிறது; புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் தலைமுறையில் தொடங்கி இன்று மூன்றாம் தலைமுறையை எட்டி, நான்காம் தலைமுறையை நோக்கிப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் திருத்தங்களின் விளைவாக மென்மேலும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கூறுகளுடன் அணு உலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
அணு உலைகளில் நிகழும் சிறிய விபத்துகள் கூட ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்படுகின்றன. அனல்மின் உற்பத்தி சார்ந்த நிலக்கரிச் சுரங்கங்களில் விபத்தும் உயிரிழப்பும் இன்றுவரை தொடர்கதையாக் இருப்பினும் ஊடகங்கள் இவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.
ஒன்றே முக்கால் லட்சம் பேர் உயிரிழந்த ஒரு ராட்சத விபத்து பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மின் உற்பத்தி வரலாற்றில் ஒரு தீராத் களங்கமாக நிலைத்துள்ள இந்த விபத்து எந்த ஒரு அணு உலையும் வெடித்ததால் ஏற்பட்டதல்ல. 1975-இல் சீனாவில் ரு என்ற ஆற்றில் கட்டப்பட்ட ஷிமண்டன் அணை (SHIMANTAN RESERVOIR DAM) உடைந்து விட்டது. புனல்மின் உற்பத்திக்காக நிறுவப்பட்ட இந்த அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒரு லட்சத்து எழுபத்து ஓராயிரம் பேர் (1,71,000) உயிரிழந்தனர். ஒரு கோடிப் பேர் வீடிழந்தனர். மனிதகுல வரலாற்றின் துயரம் மிக்க இந்தப் பேரழிவுக்குப் பின்னரும், இனி புனல் மின்சாரமே வேண்டாம் என்று யாரும் முடிவு செய்து விடவில்லை.
பிரமிக்கத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.13,171 கோடி செலவிலான, ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு உலைகள் இயங்குவதற்கு ஆயத்தமாய் உள்ளன.
கூடங்குளம் உலைகள் VVER எனப்படும் ரஷ்யத் தொழில்நுட்பத்தால் ஆனவை. VVER என்ற ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் WATER WATER ENERGY REACTOR என்று பொருள்படும். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் VVER உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவிய அணு உலைத் தொழில் நுட்பத்தில் இதுதான் ஆக உயர்ந்தது; உச்சகட்டப் பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணு உலைகள், கனடாவின் காண்டு உலைகள், ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட ரஷ்யாவின் உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை என்பது உலகறிந்த உண்மை.
கூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் PWR (PRESSURISED WATER REACTOR) எனப்படும் அழுத்தமுறு இயல்நீர் உலைகள் ஆகும். இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். தணிவிப்பான் ஆகவும் (MODERATOR), குளிர்விப்பான் ஆகவும் (COOLANT) சாதாரணத் தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் (HEAVY WATER) பயன்படுத்தப் படவில்லை.
ஏதேனும் விபத்து நேரும் பட்சத்தில் அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும். இதற்காக,
(அ) எதிர்மறை வெற்றிட குணகம் (Negative Void Coefficient)
(ஆ) எதிர்மறை ஆற்றல் குணகம் (Negative Power Coefficient)
ஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பட்டு காற்று மண்டலத்தில் கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
எரிபொருள் உள்ள அணு உலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் (ENCASEMENT) இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல, பலாப்பழத்துள் கனத்த முள் தோலுக்கு அடியில் சுளைகள் இருப்பது போல யுரேனிய எரிபொருள் உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மேலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டு மொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டு உள்ளது. இருபது டன் எடையுடன் ஒரு ஜெட் விமானம் அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் சிராய்ப்பு கூட ஏற்படாது.
ஒருவேளை ஹைடிரஜன் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக தண்ணீராக மாற்றப்பட்டு விடும். இதற்காக ‘ஹைடிரஜன் சேர்ப்பான்கள்’ (Hydrogen Recombiners) அணு உலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது, யாரும் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தானாகவே இயங்கும் ‘மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு’ (PASSIVE HEAT REMOVAL SYSTEM) என்ற அமைப்பு உலையைக் குளிர்வித்து வெப்பத்தைத் தணித்து விடும்.
அணு உலையும் அதைச் சார்ந்த கட்டுமானங்களும் கடல்மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால் அலைகள் தொட முடியாத உயரத்தில் தான் உலை அமைக்கப்பட்டுள்ளது.
அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே. விரிவு கருதி எஞ்சியவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, கடவுளே கட்டளையிட்டால் கூட, கூடங்குளம் உலையில் இருந்து கதிரிவீச்சு வெளியேறாது. இதற்குப் பின்னரும் அஞ்சுபவர்கள் வாழத் தகுதி அற்றவர்கள்.
எதிர்ப்பாளர்களின் சாரமற்ற வாதம்
விபத்துக்குள்ளான செர்னோபைல் ரக அணு உலைதான் கூடங்குளத்திலும் உள்ளது என்ற அணு உலை எதிர்ப்பாளர்களின் கூற்று அப்பட்டமான பொய். செர்னோபைல் உலைகள் RBMK வகை. கூடங்குளம் உலைகள் VVER வகை. தொழில்நுட்ப ரீதியாக இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
RBMK உலைகளில் தணிவிப்பானாக கிராஃபைட் இருந்தது. VVER உலைகளில் சாதாரணத் தண்ணீர் தான் தணிவிப்பான் ஆகும். மேலும் செர்னோபைல் உலைகளைச் சுற்றிலும் கான்கிரீட் அரண் அமைக்கப்படாததால் கதிரியக்கம் வெளியேறியது. செர்னோபைலின் படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கூடங்குளம் உலைகளில் கதிரியக்கம் வெளியேறாது.
உலகெங்கிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட அணு உலைகளுக்கு மிக அருகில் 20 லட்சம் பொறியாளர்களும் டெக்னீசியன்களும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அணு உலைகளால் எத்தகைய் கதீர்வீச்சு அபாயமும் இல்லை என்பதற்கு நிரூபணமாக இவர்கள் இருந்து வருகிறார்கள்.
அணு உலை ஆபத்தானது என்றால் எந்த இஞ்சீனியராவது அதில் வேலை செய்ய முன் வருவாரா? அவர்களது படிப்புக்கு ஆபத்தில்லாத பிற துறைகளில் வேலை கிடைக்காதா? அணு உலையால் ஆபத்து என்பது நாம் வலிந்து கற்பிதம் செய்து கொள்வது தானே தவிர வேறல்ல என்பதற்கு இதற்கு மேலும் என்ன நிரூபணம் வேண்டும்.?
மாற்று வழி இல்லை
அணு உலை வேண்டாம் என்று கூறுவது மின்சாரமே வேண்டாம் என்று கூறுவதற்குச் சமம். இன்றைய நிலையில் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய அணுமின் உற்பத்தி தவிர வேறு வழி இல்லை.
சுரங்கங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து கொண்டே வருவதால் அனல் மின்சாரத்துக்கு எதிர்காலம் இல்லை. நிலக்கரியை எரிக்க எரிக்க பசுங்குடில் வாயுக்கள் வெளியேறி ‘கரித்தடம்’ (Carbon Foot Print) பூமியின் மீது அழுத்தும். இது பூமியைச் சூடுபடுத்தி விடும். எனவே அனல் மின் உற்பத்தி மிகவும் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.
இந்தியாவில் இனி எந்த ஆற்றின் குறுக்கேயும் அணை கட்ட முடியாது. மேத்தா பட்கர் விடமாட்டார் என்பதால் மட்டுமல்ல. பல்லாயிரக் கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தைக் கையகப்படுத்தி அங்கு வாழும் லட்சக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தால் மட்டுமே ஒரு அணையைக் கட்ட இயலும். இன்றைய சூழலில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.
காற்றாலை மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சாரம், உயிரிக் கழிவு மின்சாரம் ஆகியவை யானைப் பசிக்குச் சோளப்பொரியாய் அமையுமே தவிர, நாளும் வளர்ந்து வரும் மின் தேவையை நிறைவு செய்ய இயலாதவை.
உலகளாவிய அளவில் அணுமின் உற்பத்திக்கு மாற்றாக வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அணுமின் உற்பத்தி என்பது குறைகளே அற்ற முழுநிறைவான தொழில்நுட்பம் அல்ல என்றாலும், இன்று இருப்பதில் சிறந்தது இதுதான் என்பதே யதார்த்தம்.
மின் தேவை நிறைவுக்கான சிறந்த வழியைக் கண்டறிவது என்பது உலகளாவிய பிரச்சினை. இதற்கான தீர்வும் உலகளாவியதே. உலையை மூடு என்னும் உள்ளூர்த் தீர்வுகள் சரிப்படாதவை.
உலகெங்கிலும் உள்ள மக்கள் அணு உலைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடங்குளம் மக்கள் மட்டும் சபிக்கப்பட்டுவிட மாட்டார்கள்.
நிறைவாக, ‘கம்யூனிஸ்ட்’ அன்பர்களுக்கு ஒரு சொல் அணுமின் தொழில்நுட்பம் என்பது உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி. கருவிகளின் வளர்ச்சியை எதிர்க்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கவில்லை. மக்களை நேசிப்பது தான் மார்க்சியமே தவிர மக்களின் அறியாமையையும் சேர்த்து நேசிப்பது அல்ல. கூடங்குளம் மக்களின் பின் தங்கிய உணர்வு நிலைக்கு வால் பிடிப்பது, வாக்கு வங்கி அரசியலே தவிர மார்க்சியத்தின் பிரயோகம் அல்ல. கூடங்குளம் அணு உலைச் சிக்கலுக்கு மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் தீர்வு காண்பதைத் தவிர்த்து, அறியாமையின் இருண்ட தாழ்வாரங்களில் பாதிரியார்களுடன் படுத்து உறங்குவது கம்யூனிசம் ஆகாது.
அணு உலைகளில் தீர்வு காண வேண்டிய சிக்கல்கள் இன்னமும் நிறைய உள்ளன. இன்றில்லாவிடினும் நாளைய மானுடம் அவற்றுக்குத் தீர்வு காணும். மானுடத்தின் ஒளி சிந்தும் வரலாறு இதை மெய்ப்பிக்கிறது. மானுடம் வெல்லும் என்று முழங்குவோம்! மானுட வீறு பாடுவோம்! வாருங்கள் நண்பர்களே, கூடங்குளத்தைக் கொண்டாடுவோம்!
வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்ற தம்மா
- கம்பர்

1 கருத்து: