சனி, 4 நவம்பர், 2023

தமிழக இந்திய அடிமைச் சமூகம் குறித்து 
இலக்கியச் சான்று எதுவும் இல்லையே, ஏன்?
--------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------- 
இலக்கிய வளம் படைத்த மொழி தமிழ் என்னும் 
உண்மையை எவரும் மறுக்க இயலாது. உலகின் 
வேறெந்த மொழியையும் விட பேரளவிலான 
இலக்கியங்களையும் தொன்மை மிக்கனவற்றையும்    
தமிழ் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயரான நியூட்டன் தமது புகழ்மிக்க 
"பிலாசஃபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா" 
என்ற நூலை 1687ல் பதிப்பித்தார்; அதாவது இன்றைக்கு 
336 ஆண்டுகளுக்கு முன்பு. அந்நூல் ஆங்கிலத்தில் 
எழுதப்படவில்லை; லத்தீனில் எழுதப்பட்டு இருந்தது. 
அக்காலத்தில் நூல்கள் எழுதப்படும் அந்தஸ்தை 
ஆங்கிலம் பெறாமல் இருந்தது.     

ஆங்கிலத்தோடு தமிழை ஒப்பிட்டால், இரண்டாயிரம் 
ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தலைசிறந்த 
நூல்கள் எழுதப் பட்டிருந்தன. தொல்காப்பியம் 
அதற்குச் சிறந்த உதாரணம் ஆகும். ஆனால் ஆங்கிலம் 
இலக்கிய அந்தஸ்து பெற்றது முன்னூறு ஆண்டுகளுக்கு 
முன்புதான். 

1) பத்துப்பாட்டு என்னும் 10 நூல்கள்
2) எட்டுத்தொகை என்னும் தொகுப்பு நூல்கள் 
3) பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நீதி நூல்கள் 
4) சைவத் திருமுறை நூல்கள் பன்னிரண்டு 
5) வைணவ நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் 
6) ராமாயண, மகாபாரத இதிகாச வழிநூல்கள் 
7) ஐம்பெருங் காப்பியங்கள் 
8) ஐங்குறு காப்பியங்கள் 
9) சிற்றிலக்கியங்கள் 
10) தொல்காப்பியம், நன்னூல், காரிகை போன்ற 
இலக்கண நூல்கள் 
என்று இவ்வாறாக தமிழின் இலக்கியங்கள் மிகப்  
பரந்தவை மட்டுமின்றி ஆழமானவையும்கூட.

இவை யாவும் தமிழர் நிலத்தை, மக்களை, அவர்தம் 
வாழ்வியலை முழுமையாகப் படம் பிடித்துக் 
காட்டியுள்ளன. தமிழ்ச் சமூகத்தின் அவ்வக்  
காலக்கட்டத்தின் சித்திரங்கள் இலக்கியங்களில் 
துல்லியமாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளன. சுருங்கக் 
கூறின் தமிழ் இலக்கியப் பரப்பு என்பது தமிழ்ச் 
சமுகத்தின் பிரதிபலிப்பே!

தமிழின் இலக்கியங்களை கவனத்துடன் பரிசீலித்துப் 
பார்க்கையில், தமிழ்ச் சமூகத்தில் ஆண்டான்-அடிமை 
முறை நிலவியதற்கான அணுவளவு தடயமும் தமிழின் 
எந்த ஒரு இலக்கியத்திலும் பதிவாகவில்லை என்பது 
புலப்படுகிறது.

ஆண்டான்-அடிமைச் சமூக அமைப்பு நிலவுடைமைச் 
சமூக அமைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது என்றால், 
அது  ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டத்தின் 
மூலமாகவே நடந்திருக்க வேண்டும். ஆயின் 
அந்த வர்க்கப் போராட்டம் பற்றிய எந்தத் கடயமும்
தமிழின் எந்த இலக்கியத்திலும் இல்லை.

ஆண்டான்-அடிமைச் சமூக அமைப்பும் உற்பத்தி 
முறையும் தமிழ்நாட்டில் நிலவின என்றால்,
குறைந்தது சில நூற்றாண்டு காலமாவது அந்த 
அமைப்பு நீடித்து இருந்திருக்க வேண்டும் அல்லவா! 
அப்படியானால் அந்தக் காலங்களின் மக்களின் 
வாழ்வியல் அவர்தம் இலக்கியங்களில் பதிவு 
பெற்றிருக்க வேண்டும் அல்லவா!

ஆனால் தமிழின் எந்த ஒரு இலக்கியத்திலும் 
ஆண்டான்-அடிமைச் சமூகம் குறித்தோ அந்த உற்பத்தி 
முறை நிலவியது குறித்தோ குறித்தோ ஒரு சிறு 
குறிப்பும்கூட இல்லை. இதிகாசங்களாக அறியப்படும் 
ராமாயணம், மகாபாரதத்திலும் கூட அடிமை உடைமைச் 
சமூகம் குறித்து பேசப்படவில்லை. மகாபாரதப் 
போரில் வெற்றி அடைந்த பாண்டவர்கள் தோற்றுப் 
போன கெளரவர்களை அடிமைகளாக ஆக்கிக் 
கொள்ளவில்லை. அதற்கான தடயங்கள் நமது 
இதிகாசங்களில் இல்லை.

தமிழைப் போன்று சமஸ்கிருதமும் தொன்மை மிக்க 
மொழி ஆகும். சமஸ்கிருதம் அன்றைய சமூகத்தின் 
உற்பத்தி மொழியாக இருந்தது. சம்ஸ்கிருத 
இலக்கியங்களிலும்கூட ஆண்டான்-அடிமைச் சமூகம் 
குறித்து எந்தவொரு சிறு குறிப்பும் இல்லை.

விசாக தத்தரின் முத்ரா ராட்சசம் தொன்மை மிக்க 
சம்ஸ்கிருத நூல்களில் ஒன்று. இந்நூலில் அடிமைச் 
சமூகம் இந்தியாவில் நிலவியதற்கு ஆதாரமாக 
ஒரு சிறு குறிப்பும் இல்லை. சாணக்கியரின் அர்த்த 
சாஸ்திரம், காளிதாசரின் நாடகங்கள் ஆகிய 
சம்ஸ்கிருத இலக்கியங்களில் அடிமைச் சமூகம் 
குறித்து எந்தப் பிரஸ்தாபமும் இல்லை. 

பௌத்த இலக்கியங்களிலோ தொன்மை மிக்க 
பாலி  மொழியின் இலக்கியங்களிலோ இந்தியாவின்  
அடிமைச் சமூகம் குறித்து போகிற போக்கிலான 
ஒரு சிறு குறிப்பு கூட இல்லை.

வெளிநாட்டு யாத்ரிகர்கள் பலர் இந்தியாவுக்கு 
வந்துள்ளனர். ஆண்டுக் கணக்கில் இந்தியாவில் 
தங்கி உள்ளனர்; இந்திய பல்கலைக் கழகங்களில் 
கல்வி கற்றுள்ளனர். தங்களின் அனுபவங்களை,
தாங்கள் கற்று உணர்ந்ததை  நூல்களாக எழுதி 
உள்ளனர். ஆனால் எந்த ஒரு யாத்ரிகரின் எந்த ஒரு 
நூலிலும் அடிமைச் சமூகம் நிலவியதற்கான 
அணுவளவு ஆதாரம்கூட இல்லை.

கிரேக்க அரசர் செல்யூக்கஸ் நிகேடாரின் தூதராக 
மெகஸ்தனிஸ் இந்தியா வந்தார். அவர் வந்த காலம் 
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு; கிமு மூன்றாம் 
நூற்றாண்டு. நான்காண்டு காலம் இந்தியாவில் 
தங்கி இருந்த மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை 
எழுதினார். அக்கால இந்தியாவின் குறுக்கு வெட்டுத் 
தோற்றத்தைக் காட்டும் இண்டிகா என்னும் அவரின் 
அந்த நூலில் அடிமைச் சமூகம் குறித்து எக்குறிப்பும் இல்லை.

கிபி 5ஆம் நூற்றாண்டில், இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் 
பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இந்தியா வந்தார்.
இவரின் பயணக் குறிப்புகளில் இந்தியாவில் அடிமைச் 
சமூக அமைப்பு முறை நிலவியதாக எந்த ஒரு 
தடயமும் குறிப்பிடப் படவில்லை.

தொடர்ந்து கிபி 7ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங் 
என்னும் சீன யாத்திரிகர் இந்தியா வந்தார். அப்போது 
இந்தியாவை ஹர்ஷர் ஆண்டு வந்தார். யுவான் 
சுவாங்கின் பயணக்குறிப்புகள் சி-யு-கி என்னும் 
பெயரில் நூலாக எழுதப்பட்டன. அந்நூலிலும் 
இந்தியாவில் அடிமைச் சமூகம் நிலவியதற்கான 
எந்த ஒரு சிறு தரவும்  குறிப்பிடப் படவில்லை.

அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு, 1960களில்,
1970களில் தமிழ் வாசக உலகில் சரித்திர நாவல்கள் 
மிகவும் பிரசித்தம். கல்கி, சாண்டில்யன், கோவி 
மணிசேகரன், ஜெகசிற்பியன் என்று பலரும்
வரலாற்றைப் புனைவுகளாக எழுதித் தள்ளிக் 
கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்கூட 
தமிழகத்திலோ இந்தியாவிலோ அடிமைச் சமூக 
அமைப்பு நிலவியதாக ஒரு புனைவைக்கூட 
எழுதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  

ரோமாபுரியின் வரலாற்றில் அடிமைகளின் 
கிளர்ச்சி பலமுறை நடைபெற்றுள்ளது. இக்கிளர்ச்சிகள் 
வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. கிமு முதல் 
நூற்றாண்டில், ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமைகளின் 
தலைவர் நடத்திய மாபெரும் கிளர்ச்சி ரோமாபுரி 
வரலாற்றில் குறிப்பிடத் தக்கது. இக்கிளர்ச்சி 
பெருமளவுக்கு அடிமைச் சமூக அமைப்பை 
முடித்து வைத்தது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் அடிமைச் சமூகம் 
நிலவியது என்றால், இந்தியாவின் ஸ்பார்ட்டகஸ் 
யார்? தமிழகத்தின் ஸ்பார்ட்டகஸ் யார்?

வரி வடிவ இலக்கியங்களில் குறிப்பு இல்லாவிடினும், 
நாட்டுப்புற இலக்கியத்தில், வாய்மொழி இலக்கியத்தில்
அடிமைச் சமூகம் பற்றிய குறிப்பு இருக்க வேண்டும் 
அல்லவா! இல்லையே!

மலையூர் மம்பட்டியானைப் பற்றியும், கரிமேடு 
கருவாயனைப் பற்றியும், திருநெல்வேலி 
செம்புலிங்கத்தைப் பற்றியும் வாய்மொழி
இலக்கியம் இருப்பது போல, கர்ண பரம்பரைக்
கதைகள் இருப்பது போல, தமிழகத்தின் ஸ்பார்ட்டகஸ் 
பற்றி ஏன் ஒரு வாயமொழிக் குறிப்பு கூட இல்லை?
இக்கேள்விக்கு பதில் தேடுவோம்!
--------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஸ்பார்ட்டகஸ் பற்றிய ஒரு ஹாலிவுட் படம் 1960ல் 
வெளியானது. ஆங்கிலம் நானறிந்த வாசகர்கள் 
அப்படத்தைப் பார்க்கலாம். ஐரோப்பிய அடிமைச்
சமூகம் குறித்தும், ரோமாபுரியின் வீழ்ச்சி குறித்தும் 
அறிந்து கொள்ளலாம். முதல் பின்னூட்டத்தில் 
ஸ்பார்ட்டகஸ் படத்தில் official trailorஐ கொடுத்துள்ளேன்.
விரும்புவோர் தேடிப்பிடித்து அப்படத்தைப் பார்க்கலாம்.
****************************************************    
  
 
  
 


 
    
  


 

  

    

 

 






 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக