செவ்வாய், 2 ஜனவரி, 2024

 தமிழ்ப்புத்தாண்டு எது?

john rubert

புத்தாண்டு என்றால் என்ன? அதன் தேவை என்ன?

கதிரவனைச் சுற்றி நிலக்கோள்(புவி) நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இது ஒருமுறை சுற்றி முடித்துவிட்டது அடுத்தசுற்று தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கும் நாளே புத்தாண்டு. நீள்வட்டப் பாதையில் நிலக்கோளின்(புவி) இடத்தைப் போன்றே பருவகாலங்களும் மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொராண்டிலும் இப்பருவகாலங்கள் சுழற்சியாக வந்துகொண்டிருக்கும். விவசாயத்தை நம்பி வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும். பருவகாலத்தின் மறுசுழற்சி தொடங்கிவிட்டது என்பதை அறியும் தேவை இருந்திருக்கலாம்.

 

நாட்காட்டியில்லாமல் புத்தாண்டை எப்படி அறிவது?

நமது முன்னோர்கள் வீட்டில் நாட்காட்டியைத் தொங்கவிட்டிருக்கவில்லை.  இயற்கையையொட்டிய வாழ்க்கைச்சூழலை அமைத்துக்கொண்டமக்கள் ஆண்டுநிறைவை மிகஎளியமுறையைக்கொண்டே யறிந்திருக்கவேண்டும்.  நிலக்கோள்(புவி) தன்னைத்தானே சாய்ந்த அச்சில் சுற்றுகிறது. இந்த அச்சு தனதுசாய்வுமாறாமல் கதிரவனைச்சுற்றும்போது ஒருநேரம் அச்சின் கீழ்முனை கதிரவனுக்கருகிலும் மற்றொருநேரம் மேல்முனை கதிரவனுக்கருகிலும் வரும். கீழ்முனையை தென்துருவம் என்றும் மேல்முனையை வடதுருவம் என்றும் அழைக்கிறோம்.  நிலக்கோளின் தென்முனை கதிரவனுக்கருகில் வரும்போது கதிரவன் தெற்கில் இருப்பது போலும் நிலக்கோளின் வடமுனை கதிரவனுக்கருகில் வரும்போது கதிரவன் வடமுனையில் இருப்பதுபோலும் தோன்றும்.  ஒவ்வொருமுறை நிலக்கோள்(புவி) கதிரவனைச் சுற்றும்போதும் கதிரவன் வடக்கிலிருந்து தெற்கும் தெற்கிலிருந்தும் வடக்குமென மாற்றிமாற்றி நகர்ந்துகொண்டேயிருக்கும்.  இப்படித்தெற்காக நகரும் கதிரவன் ஒருநாள் வடக்காக நகரத் தொடங்குகிறது. இந்நாளிலேற்படும்நிழல் மற்றயெல்லாநாளிலுமேற்படும்நிழலைவிட நீளமாக இருக்குமென்பதால் இந்நாளுக்கு நெடுநிழல்நாள் என்று பெயர்வைத்துக் வைத்துக் கொள்வோம்.  இதேபோல் வடக்காகநகரும்கதிரவன் மீண்டும் தெற்காகநகரத்தொடங்கும் நாளும் ஒரு நெடுநிழல்நாள்தான்.  இந்த நெடுநிழல்நாளை ஆங்கிலத்தில் Solstice என்றழைப்பர்.  இப்படி தென்வடல் நகர்வின்போது ஒருநாளும் வடதென் நகர்வின்போது ஒருநாளும் கதிரவன் தலையுச்சிக்கு நேராகவந்து நட்டுவைத்தகுச்சியின்நிழல் தரையில்விழாதநிலையை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். நிழல் அமைந்து காணப்படும் இந்தநாளுக்கு அமைநிழல்நாள் என்று பெயரிட்டுக்கொள்வோம்.  

 

ஒவ்வொராண்டும் வடசெலவின் போது ஒர் அமைநிழல்நாளும் நெடுநிழல்நாளும் தென்செலவின் போது ஓர் அமைநிழல்நாளும்  நெடுநிழல்நாளும் இருக்கும் இந்தநான்கு நாட்களைக் கண்டுபிடிக்க எந்த பெருங்கருவியும் தேவையில்லை. அன்றாடவேலையின்போதும் அறிந்துவிடலாம்.  இயற்கையோடு நெருக்கமாக வாழும் மனிதனுடையக் கண்டுபிடிப்பும் மிகஎளிமையான ஒன்றாகவேயிருக்கும்.

 

இந்த நெடுநிழல்நாள் நிலத்தில் வாழும் அனைவருக்கும் பொது ஆனால் கருவிகள் ஏதுமற்றநிலையில் நேற்றையநாள் நெடுநிழல்நாளாக இருந்திருக்கிறது என்பதை அடுத்தநாளில்தான் உணரமுடியும். அமைநிழல்நாளோ அப்படியல்ல கதிரவன் உதயத்தின்போதோ தவறினால் நண்பகலின்போதோ அறிந்துவிடலாம். மிக எளிதாக அறியப் படமுடிந்த ஓருநாள்.

 

அறிந்து கொள்ளவேண்டிய நாள்கள். (கதிரவன் வடக்குநோக்கி நகர்வது வடசெலவு, தெற்குநோக்கி நகர்வது தென்செலவு.)

வடசெலவில் நெடுநிழல்நாள்  ஜூன் 21

தென்செலவில் நெடுநிழல் நாள் டிசம்பர் 21

வடசெலவில் அமைநிழல்நாள் ஏப்ரல் 14 (மானாமதுரையில்)

தென்செலவில் அமைநிழல்நாள் ஆகஸ்ட் 28 (மானாமதுரையில்)

 

எது தமிழ்ப்புத்தாண்டு?

எளிமையாக இரண்டு நாள் நமக்குக் கிடைக்கிறது அவை அமைநிழல் நாளான ஏப்ரல் 14ம் ஆகஸ்ட் 28ம். இந்த இரு நாளிலும் தமிழ்நாட்டின் பெருவாரியான இடங்களில் கதிரவன் தலை உச்சிக்குமேல் இருக்கும்.  குறிப்பாக மானாமதுரை எனும் இடத்தில் தலைக்குமேல் இருக்கும்.  இதில நம்மவர்கள் தெரிந்து கொண்டதோ ஏப்ரல் 14 அதாவது சித்திரை 1(ஆகஸ்ட் 28 ஐ தெரிந்து கொள்ளாமல் விட்டிருப்பதற்கு ஆகஸ்ட் இறுதியில் மழை தொடங்குவது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது ஆடிப்பட்டத்தில் தேடி விதைப்பதில் மும்முரமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.) .  சித்திரை 1ஆம் நாள் சூரியன் தலைக்கு மேல் தான் இருக்குமென்பதை http://www.suncalc.net/#/9.6718,78.4674,8/2014.04.14/22:02 இந்த தொடுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் சித்திரியிலும் ஆகஸ்ட் இறுதியிலும் கதிரவன். தலைக்கு நேராகவும் நிலத்துக்குச் செங்குத்தாகவும் இருக்கும்.  ஆக புத்தாண்டு தை 1ஆம் நாள் அல்ல. சித்திரை 1ஆம் நாளே.

 

இலக்கியத்தில் தை 1.

 

தை முதல்நாள்பற்றி இலக்கியமேற்கோள் பலவற்றைக் காட்டுவர். அவை அனைத்தும் தைத்திருநாளுக்கான சான்றுகளேயன்றி எவையும் தை முதல்நாள் புத்தாண்டெனக் கூறும் ஆதாரங்களல்ல.  அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடிய நாள் அது.  மற்றபடி தை ஒன்றாம் நாளை அறிவதே மிகவும் சிக்கலானது.

 

குறிப்பு: சித்திரை 1 புத்தாண்டு எனச் சொல்வது தமிழர் புத்தாண்டென எதையோ ஒருநாளைக் குறிப்பிடவில்லை. இயல்பான நிகழ்வைக் கொண்டே அமைத்தனர் என்பதற்கு ஓர் ஆதாரம்.

 

எனது தீர்மானம்:

 

சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக