செவ்வாய், 29 ஜூலை, 2014

முகநூல் நட்பு பகையானது!
வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன!!
---------------------------------------------------------------- 
அவன் ஒரு சிறுவன்! 17 வயது!! டீன் ஏஜ் சிறுவன்!!!
அவன் முகநூலில் ஒரு படத்தைப் பதிவு செய்தான்.
( posted a picture ). வந்தது வினை!

எப்படி? அவனுடைய நண்பன் ஒருவன்! 
அவன் வயது ஒத்தவன்!!அந்தச் சிறுவன் 
பதிவு செய்த படத்தை இந்தச் சிறுவன்
பார்த்தான்.இவனுக்கு அந்தப்படம் பிடிக்கவில்லை.
ஆத்திரம் கொண்டான். பெரியவர்களிடம் சொன்னான்.
அவர்கள் ஆவேசம்  அடைந்தனர்.
படத்தைப் பதிவு செய்த சிறுவன் வாழும் வீடு, 
அவன் தெருவில் உள்ள வீடுகள் என  எல்லா 
வீடுகளுக்கும் தீ வைத்தனர்.   

இந்தச் சம்பவம் நடந்தது பாக்கிஸ்தானில், லாகூரில்.
ஜூலை 27, 2014 ஞாயிறு அன்று.
(பார்க்க:  the hindu 29 july 2014 page:1)
முகநூலில்  படத்தைப் பதிவு செய்த சிறுவன் 
ஆகிப் சலீம் (AQIB SALIM ) என்னும் 17 வயதுச் சிறுவன்.
இவன் பதிவு செய்த படம் பாலியல்  சார்ந்ததோ 
போர்நோகிராபி  சார்ந்ததோ அல்ல. ஆனால் மத நிந்தனை 
( BLASPHEMY ) செய்யும் படம் என்று வன்முறையாளர்கள் 
கூறுகின்றனர். இச்சிறுவன் "அகமதியா" என்னும் 
இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்தவன். பாக்கிஸ்தானில் 
அகமதியா பிரிவினர் மனிதர்களாகவே 
நடத்தப் படுவதில்லை.

முதல் சிறுவன் பதிவு செய்த படத்தைப் பார்த்து ஆததிரம் 
அடைந்தானே  அந்த இரண்டாவது சிறுவன், அவனின் 
நண்பன் (!!), அதாவது முகநூல் நண்பன், அவன் பெயர் 
சதாம் ஹுசேன்.

ஆகிப் சலீம், சதாம் ஹுசேன் என்கிற இரண்டு 
சிறுவர்களுக்கு இடையிலான தகராறு ஐந்து வீடுகள் 
தீ வைத்துக் கொளுத்தப் படுவதில் போய்  முடிந்தது.

மற்ற நாடுகளில் பெரியவர்கள் (adults) நினைத்தால்தான் 
கலவரமும் வன்முறையும் வெடிக்கும். பாக்கிஸ்தானில் 
சிறுவர்களால் கூட வன்முறையை உண்டாக்கி 
விட முடியும்  என்கிற நிலை இருப்பது 
ஆரோக்கியமானது அல்ல.  

ஒரு டீன் ஏஜ் சிறுவன் தவறு செய்திருக்கலாம்; 
தான் வெளியிட்ட படம் மதநிந்தனை என்று 
குற்றம் சாட்டப் படலாம் என்பதைப் பற்றி 
அறியாமலோ ( அல்லது அறிந்தோ) 
அப்படத்தை வெளியிட்டு இருக்கலாம். 
அச்சிறுவன் செய்தது தவறு என்றால், அவனைக் 
கண்டித்துத் திருத்தி இருக்க வேண்டும். சிறுவன் செய்த 
"தவறு"க்காக அவன் வீட்டையும் மற்ற வீடுகளையும் 
தீ வைத்துக் கொளுத்துவது என்ன நியாயம்?          

மத நிந்தனை ( blasphemy)  என்பதற்கான வரையறை 
கறாரும்  கண்டிப்புமானதும் அல்ல பாக்கிஸ்தானில்.
எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மதநிந்தனை 
என்ற சட்டத்துக்குள் அடைக்க முடியும் அங்கு.
கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்வதற்கான 
உரிமை பாக்கிஸ்தானில் கிடையாது. பாக்கிஸ்தான் 
மதச் சார்பற்ற நாடு அல்ல.

முகநூல் பக்கங்களில் மெலிதான மேம்போக்கான 
ஆழமற்ற நாத்திகக் கருத்துக்களை அவ்வப்போது 
பார்க்கிறேன்; படிக்கிறேன். இதே கருத்துக்கள் 
பாக்கிஸ்தானில் சொல்லப் படுமே ஆனால்,
சொன்னவர்கள் இருண்ட சிறையில் களி  தின்பது உறுதி.

அகமதியா பிரிவு  என்பது முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் 
பின்பற்றும் மதம். முஹம்மது நபி அவர்களே கடைசி 
இறைத்தூதர் என்பதை இப்பிரிவினர் ஏற்றுக்கொள்வது 
இல்லை. எனவே சன்னி பிரிவு முஸ்லிம்கள் இவர்களைப் 
பகைவர்களாகக் கருதுகின்றனர். மேலும், ஷியா பிரிவு 
முஸ்லிம்கள்கூட பாக்கிஸ்தானில் சம உரிமையுடன் 
நடத்தப் படுவதில்லை.

'சுல்பிகர் அலி புட்டோ' வை உங்களுக்கு நினைவு வருகிறதா?
பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர். அவர் தூக்கில் இடப்பட்டார்.
புட்டோ ஷியா பிரிவு முஸ்லிம். 
(அதனால்தான் அவர் தூக்கில் இடப்பட்டார்). 
அவரைத் தூக்கில் இட்ட ஜியா உல் ஹக் சன்னி முஸ்லிம்.

மதம் மனிதர்களை ஒன்று படுத்துவது இல்லை.
மாறாக பிளவு படுத்துகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.
எல்லா மதங்களும் அப்படித்தான்.

மதம், கடவுள் என்ற இரண்டு நுகத்தடிகளும் 
மானுட குலத்தை  அடிமைப் படுத்துகின்றன.
இந்த விலங்குகளை உடைத்து எறியும்போதுதான்
மானுடம் விடுதலை பெறும்.

இந்து கிறித்துவ இசுலாமிய சீக்கிய பௌத்த இன்ன பிற 
மதங்களின் இரும்புப் பிடியில் இருந்து பரந்துபட்ட 
மக்களை விடுவிப்போம். கடவுள் இல்லை என்ற 
உண்மையை மக்களிடம் பரப்புவோம்.

மானுட குலத்தின் இனிமையான மகிழ்ச்சியான 
அமைதியான வாழ்க்கைக்கு மதமும் தேவை இல்லை.
கடவுளும் தேவை இல்லை. 
ஒரு ரோமமும் தேவை இல்லை.

*********************************************************************************               
     
      

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக