வெள்ளி, 25 ஜூலை, 2014

நான் சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறேன்!
சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவேன்!!
-------------------------------------------------------------- 
THE KING IS DEAD! LONG LIVE THE KING!!
என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
இன்று சமஸ்கிருதத்துக்குச் செய்யப்படும்
மாலை மரியாதை விழாக்கள் எல்லாமும்
மேற்கண்ட பழமொழியை நினைவு படுத்துகின்றன.

சம்ஸ்கிருத வாரம் குறித்த்தெல்லாம் யாரும்
பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை.
செத்துப் போனவர்களுக்கு வருஷா வருஷம்
திதி கொடுப்பது போன்று ,செத்துப்போன
சமஸ்கிருதத்துக்கு "வாரம்" நடத்தப் படுகிறது.

சம்ஸ்கிருத வாரம் என்பது ஒரு நீத்தார் நினைவுச்
சடங்கு.ஒரு நினைவாஞ்சலிக் கூட்டம். இதனால்
என்ன கேடு விளைந்து விடப்போகிறது? செத்துப்போன
சமஸ்கிருதம்  உயிர் பெற்று வந்து விடப் போகிறதா?

ஆண்டாண்டு கோடி அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வரோ என்பதைப்  போல
எத்தனை "வாரம்" கொண்டாடி அழுது புரண்டாலும்
சமஸ்கிருதம் உயிர் பெற்று மீண்டு வரப் போவதில்லை.

ஏன் சம்ஸ்கிருத வாரத்துடன் நிறுத்திக் கொள்ள
வேண்டும்? சம்ஸ்கிருத மாதம், சம்ஸ்கிருத வருஷம்,
சம்ஸ்கிருத யுகம் என்று இந்த யுகம் முடியும் வரை
சமஸ்கிருதத்துக்காக மாரடித்து அழுதாலும்
செத்துப்போன சமஸ்கிருதம் மீண்டு வரப் போவதில்லை.

இதுபோன்ற வாரம் கொண்டாடுவதால், சமஸ்கிருதம்
வளர்ந்து விடும் என்று யாரேனும் அஞ்சுகிறீர்களா?
அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் வளர்ச்சிக்கான
முன்நிபந்தனை உயிரோடு இருத்தல் ஆகும்.
உயிருடன் உள்ள எந்த ஒன்றும்தான், தாவரமோ
உயிரினமோ புழு பூச்சிகளோ, வளர முடியும்.
செத்துப்போனது எதுவும் வளர முடியாது.
எனவே சமஸ்கிருதம் ஒருநாளும் வளர முடியாது.

பல்லுலகும் பலவுயிரும் படைத்தழித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும்  துளுவும்
உன்உதரத்தே உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

என்ற புகழ்மிக்க பாடலில் சமஸ்கிருதத்தின் மரணம்
அறிவிக்கப் படுகிறது.புளியமரம் முருங்கைமரம் என்று 
மரங்கள்தோறும் வாசம் செய்து கொண்டு ஆவியாய்த்
திரியும் சமஸ்கிருதம் உயிர் பெற்று வந்து விடுமா என்ன?

சமஸ்கிருதத்தின் வரலாற்றைச் சிறிதே தெரிந்து
கொள்வோம்.ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது 
அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் கூடவே வந்தது.
அப்போது சமஸ்கிருதம் வெறும் பேச்சுமொழி மட்டுமே.
எழுத்து கிடையாது  வரிவடிவம் (லிபி) கிடையாது.
அதனால்தான் நால்வகை வேதங்களும் 
வாய்மொழியாகவே கற்றுத் தரப்பட்டன.

அதே நேரத்தில் இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் 
செழித்தோங்கி இருந்தது.இது திராவிட நாகரிகம் ஆகும்.
அங்கு வழக்கில் இருந்த மொழிகள்  திராவிட மொழிகள்  
ஆகும்.திராவிட மூல மொழி தமிழ் ஆகும். பேச்சு எழுத்து 
வரி வடிவம் ஆகிய அனைத்தும் பெற்று மிகவும் வளர்ச்சி 
அடைந்த நிலையில் திராவிட மொழிகளும் அவற்றின் 
மூல மொழியான தமிழும் செழித்து இருந்த அந்தக் 
காலத்தில், சமஸ்கிருதம் வெறும் பேச்சு வழக்கை 
மட்டுமே கொண்டிருந்த காட்டு மிராண்டி நிலையில் 
இருந்தது. மேற்கூறியவை அனைத்தும் என் சொந்தக் 
கருத்துக்கள் அல்ல. உலக மொழியியல் அறிஞர்கள்
அனைவராலும் அட்டியின்றி ஏற்றுக்கொள்ளப் பட்ட 
உண்மைகள்.

எழுத்து மொழியாக வளர வேண்டும் என்று 
சமஸ்கிருதம் மிகவும் ஏங்கியது. அதற்காக 
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
புத்தரின் போதனைகளை சமஸ்கிருதத்தில் 
எழுத அனுமதிக்க வேண்டும் என்று புத்தரிடம் 
கோரிக்கை விடுத்தனர் சம்ஸ்கிருத பண்டிதர்கள்.
ஆனால் புத்தர் அதை ஏற்கவில்லை; மாறாக 
அக்கால மக்கள் மொழியான பாலி  மொழியில்
தமது போதனைகளை எழுத ஆணையிட்டார்.

புத்தரின் காலம் கிமு 5ஆம் நூற்றாண்டு.
இதற்கு ஆயிரம்  கழித்து காளிதாசரின் காலம் 
(கிபி 5ஆம் நூற்றாண்டு) வருகிறது.இந்த ஆயிரம் 
ஆண்டுகளில் சமஸ்கிருதம் திக்கித் திணறி 
வரி வடிவத்தைப் பெற்றது.ஆனாலும் 
மொழியானது வளரவில்லை. மக்களால் 
பேசப்படவில்லை. 

சமஸ்கிருதம் மிகவும் புகழ் பெற்றிருந்த 
காளிதாசரின் காலத்தில் கூட, மூன்று சதம் 
மக்கள் மட்டுமே அதை அறிந்து இருந்தனர்.
வரலாற்றின்  எந்த ஒரு கட்டத்திலும் சமஸ்கிருதம் 
பரந்துபட்ட மக்களின் பேச்சு மொழியாக 
இருந்ததில்லை.காளிதாசரின் நாடகங்களில் கூட 
ஒருசில பாத்திரங்கள் மட்டுமே சமஸ்கிருதம் 
பேசுபவை.அரசன், மதகுரு, ஒரு சில அமைச்சர்கள் 
என்று வெகுசிலர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவர்.
அரசி உட்பட மீதி அனைவரும் 'மகாராஸ்திரி"
போன்ற மொழிகளையே பேசுவர்.
...பார்க்க: (பாரதி சுகதங்கர்--மிரர் ஆங்கில எடு 1980) 

"SANSKRIT, AT ANY GIVEN PERIOD IN HISTORY, HAD
ALWAYS BEEN THE LANUAGE OF THE PRIVILEGED FEW.
NOT MORE THAN THREE PERCENT OF THE POPULATION 
SPOKE SANSKRIT. IN KALIDASA'S PLAYS, ONLY THE KING, 
THE PRIEST AND A FEW OTHERS SPOKE SANSKRIT.
EVERYONE ELSE, INCLUDING THE QUEEN SPO0KE
ONE FORM OR THE OTHER OF PRAKRITS, GENERALLY
A HIGHLY EVOLVED FORM CALLED MAHARASHTRI." 
 ---- BHARATI SUKHATANKAR-----

பாரதி சுகதங்கர் ஒரு புகழ்பெற்ற பெண் அறிஞர்.     
சுவாமி சின்மயா மிஷன் என்னும் அமைப்பின் 
சார்பாக வெளியிடப்பட்ட ஏடுகளின் ஆசிரியராக 
இருந்தவர்.பிராமண குலத்தவர்.மேற்கூறிய 
கட்டுரையில் அவர் சமஸ்கிருதத்தைத் தோலுரித்துக் 
காட்டுகிறார்.

ஆக என்றுமே மக்கள் மொழியாக இருந்திராத 
சமஸ்கிருதம், யாரோ சிலர் சேர்ந்து கொண்டு 
'வாரம்' கொண்டாடுவதால் உயிர் பெற்று  விடுமா?
ஒன்று கேட்கிறேன்.சம்ஸ்கிருத வாரம் 
கொண்டாடுவதற்குத் தொடை தட்டிக்கொண்டு 
நிற்கும் கூட்டத்தில் எத்தனை பேருக்கு 
சமஸ்கிருதம் தெரியும்? அனேகமாக ஒரு 
பயலுக்கும் தெரியாது.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் 
தமிழ் அறிஞர்கள் மட்டுமே. மறைமலை அடிகளை 
மிஞ்சிய சம்ஸ்கிருத அறிஞர் எவரும் கிடையாது.
காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் 
மொழிபெயர்த்தவர் மறைமலை அடிகள். சமஸ்கிருதப் 
புகழ் பாடும் பலருக்கும் சமஸ்கிருதத்தில் புலமை 
கிடையாது.

எனக்கு சமஸ்கிருதம் தெரியும். ஆதி சங்கரரின் 
பஜகோவிந்தம் முதல் சௌந்தர்யா லஹரி வரை...
காளிதாசனின் மேகதூதம் ...ஐநா பிறவற்றைப் 
படித்துத் தொலைத்திருக்கிறேன்.என்ன பயன்?
யாருடன் பேச முடியும்? எனவே SOLILOQUY தான்.

ஒரு மிக எளிய சம்ஸ்கிருத சுலோகத்துடன் 
இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். அதன்   
பொருள் எத்தனை வாசகர்களுக்குப் புரிகிறது 
என்பது சமூகத்துக்குத் தெரிந்தால் நல்லது.

     புஷ்பேஷு ஜாதி 
     புருஷேஷு விஷ்ணு 
     நகரேஷு காஞ்சி 
     நாரீஷு ரம்பா.

********************************************************************   
                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக