வியாழன், 18 அக்டோபர், 2018

மூன்றாம் உலகப்போர் ஏன் இன்னும் நிகழவில்லை?
அணுகுண்டுதான் காரணமா?
---------------------------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
முதல் உலகப்போர் 1914 முதல் 1919 வரை .நடைபெற்றது.
தொடர்ச்சியாக நான்கு ஆண்டுக்கு மேல் நடைபெற்ற
கொடிய போர் இது. இப்போரில் எல்லாத் தரப்பிலும்
சேர்த்து 2 கோடிப்பேர் இறந்தனர். 2 கோடிப்பேர் காயம்
அடைந்தனர்; ஊனமுற்றனர்.

முதல் உலகப்போரின்போது உலகில் எந்த நாடும்
கம்யூனிஸ்ட் நாடாக இல்லை. முதல் உலகப்போர்
நடக்கும்போதுதான் ரஷ்யாவில் புரட்சி நடந்து
லெனின் தலைமையில் சோஷலிச அரசு ஏற்படுகிறது.

அதே போல முதல் உலகப்போரில் அணுகுண்டு
பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அப்போது
அணுகுண்டு கண்டுபிடிக்கப் படவில்லை.

இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை 6 ஆண்டுகள்
நடைபெற்றது. இப்போரில் எல்லாத்  தரப்பிலும்
சேர்த்து மொத்தம் 6 கோடிப்பேர் இறந்தனர்.
இறந்தவர்களில் பெரும்பாலோர் அப்பாவிப்
பொதுமக்கள்.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்டது.
ஜப்பானின் ஹிரோஷிமா,  நாகசாகி ஆகிய இரு
நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டை
வீசியது.
    
முதல் உலகப்போர் 1919ல் முடிந்தது. இரண்டாம்
உலகப்போர் 1939ல் தொடங்கியது. இருபதே
ஆண்டுக்குள் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டு
விட்டது.

இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிந்தது. இன்று
2018ஆம் ஆண்டு நடக்கிறது. இரண்டாம் உலகப்போர்
முடிந்து இன்றுடன் 73 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இருப்பினும் மூன்றாம் உலகப்போர் எதுவும்
வரவில்லை. ஏன்?

உலகச் சந்தையை மறுபங்கீடு செய்வதற்கே
உலகப்போர் நடக்கிறது என்கிறது மார்க்சியம்.
எனினும்  உலகச்சந்தை 1945க்குப் பிறகு 
போரின் மூலம் மறுபங்கீடு செய்யப்படாமல்
இருப்பதற்கு என்ன காரணம்?

ஒரே காரணம்தான். அது அணுகுண்டுதான்!
ஆம், உலக அமைதியானது அணுகுண்டால் மட்டுமே
சாத்தியமாகி உள்ளது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான
பனிப்போர், வெறும் பனிப்போராகவே நீடித்ததே
தவிர, நேரடியான போராகவோ உலகப் போராகவோ
மாறவில்லை. இதற்கு காரணம் ரஷ்யாவிடம்
அணுகுண்டு இருந்தது என்பதுதான்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த உடனேயே ரஷ்யாவை
ஆக்கிரமிக்கும் எண்ணம் அமெரிக்க இங்கிலாந்து
ஏகாதிபத்தியங்களுக்கு இருந்தது. இதை உணர்ந்த
ரஷ்ய அதிபர் ஸ்டாலின், தம் நாட்டு விஞ்ஞானிகளுக்கு
அணுகுண்டு தயாரிக்க உத்தரவிட்டார். சோவியத்
விஞ்ஞானிகளின் ஆற்றலும் அர்ப்பணிப்பும்
ரஷ்யாவை (அன்றைய சோவியத் ஒன்றியத்தை)
அணுஆயுத நாடாக்கின.

1949 ஆகஸ்டில் கஜகஸ்தானில் சோவியத் விஞ்ஞானிகள்
ரஷ்யாவின் முதல் அணுகுண்டை  வெடித்துச் சோதனை
செய்தனர். சோவியத் ஒன்றியம் உலகின் இரண்டாவது
அணுஆயுத நாடாகியது.

1964 அக்டோபரில் மாவோ தலைமையில் சீனா தனது
முதல் அணுகுண்டை வெடித்தது. இதன் மூலம் உலகின்
ஐந்தாவது அணுஆயுத நாடானது சீனா.

மாவோ அணுகுண்டு தயாரிக்காமல் இருந்திருந்தால்
என்ன நடந்திருக்கும்? சீனாவை அமெரிக்கா
ஆக்கிரமித்திருக்கும். முழுமையாக இல்லாவிடினும்
சீனாவின் ஒரு பகுதியை அமெரிக்கா கைப்பற்றி
இருக்கும்.

ஆக சீனாவும் சோவியத் ஒன்றியமும் தங்கள் நாடுகளின்
இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள
முடிந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் அந்நாடுகள்
அணுகுண்டு தயாரித்ததே ஆகும்.

அடுத்து இந்தியாவை எடுத்துக் கொள்ளுவோம். இந்திரா
காந்தி பிரதமராக இருந்தபோது, 1974 மே மாதத்தில்
ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவனத்தில்
இந்தியா தனது முதல் அணுகுண்டை வெடித்துச்
சோதனை செய்தது. இதன் மூலம் உலகின் ஆறாவது
அணுஆயுத நாடாக இந்தியா ஆனது. இந்த அணுகுண்டுத்
திட்டத்திற்கு விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமை
தாங்கினார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 1998 மே மாதத்தில்
அதே  பொக்ரான் பாலைவனப் பகுதியில் இந்தியா
தனது இரண்டாவது அணுவெடிப்புச் சோதனையை
நிகழ்த்தயது. இத்திட்டத்திற்கு டாக்டர் அப்துல் கலாம்
தலைமை தாங்கினார்.

இந்திராவும் வாஜ்பாயும் மேற்கொண்ட அணுவெடிப்புச்
சோதனைகளே இந்தியாவின் இறையாண்மையைப்
பாதுகாத்தன. ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பில்
இருந்து நாட்டைக் காப்பாற்றின.

ஆக, அணுகுண்டு மட்டுமே  மூன்றாவது உலகப்போர்
நிகழாமல் உலகைக் காத்து வரும் சஞ்சீவியாகும்.

மார்க்சிய மூல ஆசான்கள் ஸ்டாலின், மாவோ இருவரும்
அணுஆயுதங்களை உருவாக்கியவர்கள் என்பதை
மறந்து விடக்கூடாது.

அணுஆயுதங்கள் மட்டுமே போரில்லாத உலகை
உருவாக்கி உள்ளன. இதற்கு முழுமுதல் காரணம்
ஸ்டாலின், மாவோ .இருவருமே.

எனவே அணுஆயுத எதிர்ப்பு என்பது சமகால உலக
அரசியல் பற்றியும் நவீன ராணுவப் போர்த்தந்திரம்
(modern military strategy) பற்றியும் எதுவமே அறியாத
தற்குறித்தனத்தின் விளைவே ஆகும்.
********************************************************
பின்குறிப்பு:
அணுஆயுதங்களின் ராணுவ முக்கியத்துவம்
பாரி அறிந்திட, அறிவியல் ஒளி ஏட்டில் இக்கட்டுரை
ஆசிரியர் எழுதிய "வட கொரியாவின் அணுவெடிப்புச்
சோதனை நாஷ் சமநிலையைப் பாதிக்குமா?"
என்ற கட்டுரையைப் படிக்கவும்.
------------------------------------------------------------------------------   

   


            
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக