செவ்வாய், 23 அக்டோபர், 2018

1963இல் எனக்கு 10 வயது. எங்கள் ஊரில்
(நெல்லை மாவட்டம், வீரவநல்லூர்) வீட்டுக்கு வேண்டிய
மளிகைப் பொருட்களைக் கடைக்குச் சென்று
வாங்கி வருவேன்.

1) து பருப்பு வ படி
2) சீரகம் லு படி
3) வெந்தயம் ய படி
என்று வீட்டில் எழுதிதி தரும் சீட்டில் உள்ளபடி
கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவேன்.
அப்போது முகத்தல் அளவைதான்; இப்போது போல்
நிறுத்தல் அளவை கிடையாது.

வ என்றால் கால்; லு என்றால் அரைக்கால்;
ய என்றால் மாகாணி. பின்னங்களுக்குத் தமிழ்
எண்களே புழக்கத்தில் இருந்தன. மளிகைக்
கடைக்காரர் தமிழ் எம் ஏ படித்தவர் அல்லர்.
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

ஆக, தமிழ் எண்கள் புழக்கத்தில், நடப்பில்
இருந்தமையை நான் பழந்தமிழ்ச் சுவடிகளைப்
புரட்டி அறிய வேண்டிய தேவை இன்றி, சொந்த
அனுபவத்தில் அறிந்தவன்.

இந்த நிலைமை பின்னாளில் மாறியது. ஏன் மாறியது?
நிலவுடைமைச் சமூக அமைப்பில் தமிழ் எண்கள்
புழக்கத்தில் இருந்தன. சமூக அமைப்பு மாறி,
முதலாளியச் சமூகமும் அறிவியல் வளர்ச்சியும்
ஏற்பட்டபோது, அதற்கு ஈடு கொடுக்க இயலாமல்
தமிழ் பின்தங்கியது. இதுவே உண்மை.

எவராலும்  காலச்சக்கரத்தைப் பின்னோக்கித்
திருப்ப இயலாது. முதலாளிய உற்பத்தி முறை
ஏற்பட்டபிறகு, தொழில் உற்பத்தியில் தமிழ் இல்லை.
காலப்போக்கில் வேளாண்மை உற்பத்தியிலும்
இயந்திரங்கள் புகுந்தன. டிராக்டர் என்றுதான்
இன்றைய உழவர் கூறுகிறார். அவர் ஆங்கிலம்
படித்தவரோ அல்லது ஆங்கில மோகம்
பீடித்தவரோ அல்லர்.

சமூகத்தின் உற்பத்தியில் தமிழ் இல்லை என்ற
உண்மையை  உணர  வேண்டும். உற்பத்தியில்
இல்லாத மொழி பின்தங்குவது இயல்பே.
இதனால்தான் தமிழ் பின்தங்குவதும் ஆங்கிலம்
முன்னேறுவதும் நிகழ்கிறது.

உற்பத்தியில் தமிழைக் கொண்டு வராமல், தமிழ்
எண்களை எழுதுவதால் பயனில்லை.


 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக