செவ்வாய், 6 நவம்பர், 2018

தமிழில் வினாத்தாள் தயாரிக்க இயலாமை!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(TNPSC) பல்வேறு தேர்வுகளை நடத்த உள்ளது. இவற்றில்
சில குறிப்பிட்ட தேர்வுகளுக்குரிய சில பிரிவுகளுக்கான வினாத்தாட்களைத் தமிழில்
தயாரிக்க இயலவில்லை என்று தேர்வாணையம்
அறிவித்துள்ளது.

இதன் காரணம் என்ன? தமிழில் வினாத்தாள் தயாரிக்குமாறு பல்வேறு பேராசிரியர்களிடம்
தேர்வாணையம் கேட்டுக் கொண்டது. ஆனால்
எவரும் முன்வரவில்லை.

தமிழில் தயாரிக்க இயலாது என்று பேராசிரியர்கள்
பலரும் மறுத்து விட்டனர் என்ற செய்தி
கிடைத்துள்ளது. இது உண்மையே.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கான
தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் பிழைகள்
இருந்தமை குறித்து நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது. 49 வினாக்களில் மொழிபெயர்ப்புப்
பிழைகள் இருந்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் தலைவர்
டி கே ரங்கராஜன் எம் பி வழக்குத் தொடர்ந்தார்.

மதுரை உயர்நீதிமன்றத் கிளையானது
49 வினாக்களுக்கும் 196 மதிப்பெண்கள் (49 x 4 = 196) 
வழங்குமாறும் அதன் அடிப்படையில் புதிய
தகுதிப் பட்டியலைத் தயாரிக்குமாறும் CBSEக்கு
உத்தரவிட்டது. இது மருத்துவ மாணவர் நடுவே
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உச்சநீதி மன்றம்
மதுரைக் கிளையின் தீர்ப்பை ரத்து செய்தது.

இதைப்போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடும்
என்று கருதியே பல பேராசிரியர்கள் மறுத்து
விட்டனர் என்று தெரிய வருகிறது.

நவீன அறிவியலைத் தமிழில் சொல்வதில் பெரும்
இடர்ப்பாடுகளும் சிக்கல்களும் உள்ளன. உரிய
கலைச்சொற்களோ சொல்வங்கியோ தமிழில்
இல்லை. நிலவுடைமைச் சமூகம் நிலவிய காலத்தில்
தமிழ் உற்பத்தியில் இருந்தது. எனவே அக்காலத்தின்
தேவைகளுக்கு தமிழால் ஈடு கொடுக்க முடிந்தது.

முதலாளியச் சமூகம் உருவான பின்னர் தமிழ்
உற்பத்தியில் இல்லை. உற்பத்தியில் இல்லாத
எந்த மொழியும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு
கொடுக்க இயலாமல் பின்தங்குவது இயல்பே.

எனவே பேராசிரியர்களைக் குறைகூறிப் பயனில்லை.
இது  பேராசிரியர்களின் குறை அல்ல. உற்பத்தியில்
தமிழ் இல்லை என்னும்போது பேராசிரியர்கள்
என்ன செய்ய முடியும்?

கடந்த பல ஆண்டுகளாக காத்திரமான அறிவியல்
கட்டுரைகளைத் தமிழில் எழுதி வருபவன் என்ற
முறையில், தமிழ் மொழியின் நெருக்கடிகளை
நான் ஆழமாக உணர்ந்தவன்.

இதுதான் தமிழின் நிலை! இந்நிலை இப்படியேதான்
இருக்கும்.

அறிவியலோ இருமொழிப் மொழிப்புலமையோ
இல்லாத பாமரர்கள் இதை உணராமல்
கூச்சலிடுவதால் எப்பயனும் இல்லை.
****************************************************
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக