செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதி பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது
என்ற அண்ணன் தியாகுவின் கருத்துக்கு மறுப்பு!
-----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
சாதி என்பது பொருள்முதல்வாதமே என்ற
சிறுபிள்ளைத்தனமான  அபத்தத்தை முன்மொழிந்து
அண்மையில் மார்க்சியத்துக்கு பங்கம் ஏற்படுத்தினார்
தீக்கதிர் முருகேசன்.

தீக்கதிர் முருகேசனின் கருத்துக்களில் ஒரு சிலவற்றைத்
தவறு என்று கண்டித்த அண்ணன் தியாகு அவர்கள்
சாரப்பொருளைப் பொறுத்து (essence) குமரேசனின்
அபத்தத்தையே வழிமொழிகிறார்.

முகநூல் பதிவொன்றில் அண்ணன் தியாகு அவர்கள்,
"Now the question of whether caste is matter or idea. Both is the simple answer"
என்று கூறுகிறார். 
"சாதி என்பது பொருளா கருத்தா என்றால். இரண்டுமே என்பதே 
எளிய விடை"  என்கிறார் தியாகு அண்ணன்.

சுமார் பத்து வாக்கியங்கள் கொண்ட அண்ணன் தியாகுவின் 
பதிவு ஆங்கிலத்தில் உள்ளது. அதை ஒரு நிமிடத்தில் 
தமிழில் மொழிபெயர்க்கலாம். அனால் அதைச் செய்ய 
நான் விரும்பவில்லை. காரணம் என்னுடைய தமிழ் 
தொடர்புறுத்தும் தமிழ் (communicative language). அதிகம் 
படிப்பறிவு இல்லாத பாட்டாளி வர்க்கத் தோழர்களுக்கும்  
மார்க்சியக் கருத்துக்களுக்கும் உயிரோட்டமான 
தொடர்பை ஏற்படுத்தும் தமிழ்.

ஆனால் அண்ணன் தியாகுவின் தமிழோ தந்தக் கோபுரத்து
ஆசாமிகளால் மட்டுமே விரும்பப்படும் தமிழ். அண்ணன் 
தியாகு அவர்கள் ஒரு தனித்தமிழ்த் தலிபான் ஆவார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து செயல்படுவதற்குப் பெரிதும் 
தடையாக இருந்தது, இருப்பது அண்ணனின் தனித்தமிழ் 
தலிபானியமே. நிற்க. அண்ணன் தியாகுவின் சாதி பற்றிய 
கருத்துக்கு வருவோம்.

சாதி என்பது பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது 
என்கிறார் அண்ணன்.இக்கருத்து அடிப்படையிலேயே 
தவறு. (fundamentally flawed). ஆதிசங்கரருக்குக்கூட 
வாய்க்காத ஒரு வித அத்வைதப் பார்வை இது.
பொருளே கருத்து; கருத்தே பொருள் என்ற மயக்கம் இது.

கண்ணாடிக்கு முன் நிற்கும் நமது உருவமும் அதன் பிம்பமும் 
இரண்டும் ஒன்றுதான் என்கிறார் அண்ணன்  தியாகு. இது 
உண்மையல்ல. 

சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் ஆகும். இந்திய 
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறை நிலவிய 
காலக் கட்டத்தில், கட்டி எழுப்பப்பட்ட ஒரு கருத்தியல் 
கட்டுமானம்தான் சாதி. அதாவது சாதியம் என்னும் 
முறையமைப்பு (caste system). கடவுள் என்பது ஒரு கருத்தியல் 
கட்டுமானம். அதைப்போன்றே சாதியும் ஒரு 
கருத்தியல் கட்டுமானம் ஆகும்.

சாதி என்பதுதான் என்ன? சாதியின் வரையறை என்ன?
உற்பத்தியில் ஈடுபடும் பெரும் மக்கள் பிரிவினரை 
ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கிறது 
சாதி. இதன் மூலம் மக்களின் ஒற்றுமைக்கும் 
சமத்துவத்துக்கும் முற்றிலும் எதிரான ஒரு தத்துவ 
உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது சாதி. சாதி குறித்த 
ஒரு எளிய வரையறை இது. இவ்வாறு ஒரு சுரண்டல் 
சமுதாய அமைப்பில், சுரண்டப்படும் ஆகப் 
பெரும்பான்மையான மக்களை ஒன்று சேர விடாமல் 
நிரந்தரமாகப் பிரித்து வைத்து, அதன் மூலம் சுரண்டலை 
சுமுகமாக நிகழ்த்திக் கொள்ள சாதி வழிவகுக்கிறது.
இதுவே சாதியின் பயன் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விடை 
காண வேண்டும். இந்தக் கேள்விக்கான விடைதான் 
சாதி என்பது பொருளா கருத்தா என்ற கேள்விக்கும் 
விடை ஆகும்.  .  

 அ) சாதி கூறுகிற உயர்வு தாழ்வுகள் உண்மையிலேயே 
மனிதர்களுக்கு இடையில் நிலவுகின்றனவா? அல்லது 
அவை வெறும் கற்பிதம் மட்டும்தானா?

ஆ) அதாவது உயர்ந்த சாதியினரான பார்ப்பனர்கள் 
அறிவுத்திறன் மிகுந்தவர்களாகவும், தாழ்ந்த சாதியினரான 
சூத்திர பஞ்சமர்கள் அறிவற்ற முட்டாள்களாகவும்
இருக்கிறார்கள் என்று சொல்கிறதே சாதியம், இது
உண்மையா?

இ) சாதி கூறுகிற படிமுறை அமைப்பு (graded system)
அதாவது பறையனை விட சூத்திரன் மேல், சூத்திரனை 
விட பார்ப்பான் மேல் என்கிற சாதியத்தின் வரையறுப்பு 
மெய்யானதா அல்லது வெறும் கற்பிதமா?


மேற்கூறிய கேள்விகள் அனைத்துக்கும் அறிவியல் மிகத் 
தெளிவான, கறாரான விடைகளை அளித்துள்ளது.
மனிதர்களுக்கு இடையில் ரத்தம், மரபணு, ஜீன்கள்,
குரோமோசோம்கள் ஆகியவற்றில் சாதியைப் பொறுத்து 
எவ்விதமான வேறுபாடும் இல்லை என்கிறது அறிவியல்.
இது லட்சக் கணக்கான பரிசோதனைகள் வாயிலாக
நிரூபிக்கப் பட்ட உண்மையாகும்.

மனித ரத்தமானது A வகை, B வகை, AB வகை, O வகை 
என்னு பிரிக்கப்பட்டு உள்ளதே தவிர, பார்ப்பன வகை,
செட்டியார் வகை, ஆசாரி வகை, கோனார் வகை 
என்றெல்லாம் பிரிக்கப் படவில்லை. அவ்வாறு 
பிரிக்கவும் இயலாது.

ஆக சாதியத்தின் அம்சங்களான மனிதர்களுக்கு 
இடையிலான உயர்வு தாழ்வு மற்றும் படிமுறையிலான  
ஏறுவரிசை உயர்வு (அல்லது இறங்குவரிசைத் தாழ்வு)
என்னும் அனைத்தும் கற்பனையே என்று 
அறிவியல் நிரூபித்துள்ளது.  

ஆக சாதியம் என்பது வெறும் கற்பிதங்களையே 
தனது அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. சாதியத்திற்கு 
எவ்விதமான பௌதிக அடிப்படையும் இல்லை. (Caste system
does not have any sort of physical foundations).

The vital features of the caste system like superiority versus inferiority etc
are mere figments of imagination and nothing else. அதாவது சாதியத்தின் 
உயிர்நாடியான உயர்வு தாழ்வுக் கோட்பாடு உண்மையில் 
மனிதர்களிடையே நிலவுகிற விஷயமல்ல.மாறாக 
அது வெற்றுக் கற்பனையே.

இதுவரை பார்த்த அனைத்தும் சாதியம் என்பது எவ்விதமான 
பௌதிக அடிப்படையும் அற்றது என்பதை தெளிவுபடுத்துகிறது.
எனவே சாதி என்பது பொருள் அல்ல. பொருள் அல்ல, பொருள் அல்ல.

பொருளுக்கு ஒரு பௌதிக அடிப்படை உண்டு. வெளிகாலத்தில்
(spacetime) ஒரு இடத்தை அடைக்கும் தன்மை கொண்டது பொருள்,
பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு. ஆனால் சாதியம் 
என்பது எவ்வித பௌதிக இருப்போ அல்லது பௌதிக 
அடிப்படையோ இல்லாதது. எனவே சாதி என்பது 
பொருள் அல்ல. 

எனவே அண்ணன் தியாகு அவர்களின் கருத்தான 
"சாதி என்பது பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது"
என்பது அறிவியல்ரீதியில் முற்றிலும் தவறு என்று 
இக்கட்டுரை நிரூபிக்கிறது. சாதி என்பது ஒருபோதும் 
பொருள் அல்ல; அது வெறும் கருத்து மட்டுமே. QED.
*************************************************************************************8  
பின்குறிப்பு:
ஆரம்ப கால நக்சல்பாரிப் போராளியாக அண்ணன்  
தியாகு அவர்கள் புரிந்த தியாகத்துக்குரிய முழு 
மரியாதையுடன் அவருடன் முரண்படுகின்றேன்.
அவருக்கு வழிகாட்டிய அவரின் போற்றுதலுக்குரிய
அதே தலைவர்தான் எனக்கும் தலைவர் என்பதை 
அண்ணன் தியாகு அறிவார்.
-------------------------------------------------------------------------------------      

இன்றைக்கும் இனி நாளைக்கும் அது 
மேற்கட்டுமானம்தான் தோழர்.  செந்தழல் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லான QED என்பதன் 
பொருள்: Quad Erat Demonstrandum ஆகும். ஜியோமெட்ரி 
கணிதத்தில் தேற்றங்களின் நிரூபணத்தின்போது,
QED என்ற சொல் பயன்படுத்தப்படும்.

எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது நிரூபிக்கப்பட்டு 
விட்டது என்ற பொருளைத் தருவது QED.   


தியாகு அவர்களின் ஆங்கிலப் பதிவு!

தோழர் மருதுபாண்டியன் அவர்களுக்கு,
அண்ணன் தியாகு அவர்களின் கருத்துக்கு 
(பார்க்க: அவரின் ஆங்கிலப் பதிவு) மறுப்பாக 
ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதை ஒரு தனிப்பதிவாக 
எனது டைம்லைனில் வெளியிட்டு உள்ளேன்.

   
      


   
    


    . 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக