சனி, 6 அக்டோபர், 2018

பெறுநர்:
ஆசிரியர்
வெற்றிக் கொடி கட்டு
தமிழ் இந்து இணைப்பிதழ்
சென்னை.

மதிப்புக்குரிய அம்மா,
வேதியியல் நோபல் பரிசு பற்றிய கட்டுரையை இணைத்துள்ளேன்.
அதை தங்களின் இணைப்பிதழில் பிரசுரிக்க வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
5/5, ஆறாவது தெரு, சுபிக்சா அடுக்ககம்,
சௌராஷ்டிரா நகர், சூளைமேடு, சென்னை 600 094.
மொபைல்: 94442 30176.
--------------------------------------------------------------------------------------------------

டார்வினின் பரிணாமத்தை செயற்கையாக
நடத்திக்காட்டிய பெண்மணிக்கு நோபல் பரிசு!
(வேதியியல் நோபல் பரிசு 2018)
-----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்.
-----------------------------------------------------------------------------
நடப்பாண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு 2018ஐப்
பெற்ற மூவரில் ஒருவர் பெண்மணி. கலிபோர்னியா
பல்கலைப் பேராசிரியையான டாக்டர் பிரான்செஸ்
ஆர்னால்டு (62) என்பவரே இச்சாதனைப் பெண்மணி.

நோபல் பரிசு இவருக்கு உரிய அங்கீகாரமே. எனினும்
டாக்டர் ஆர்னால்டின் மகத்துவம் அவர் நோபல் பரிசு
பெற்றவர் என்பதில் மட்டும் அடங்கி விடவில்லை. செயற்கைப்
பரிணாமத்தை சோதனைக்குழாயில் நிகழ்த்திக் காட்டியவர்
என்பதே முன்னுதாரணமற்ற அவரின் பங்களிப்பின் மகிமை
ஆகும். திசைகாட்டப்பட்ட பரிணாமம் (directed evolution) என்று
அவரின் சாதனையை வர்ணிக்கிறது நோபல் பரிசுக்குழு.

நமது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன.
(1 பில்லியன் = 100 கோடி). உயிர்கள் தோன்றி  3.7 பில்லியன்
ஆண்டுகள் ஆகின்றன. ஆதி முதல் உயிருக்கு லூகா என்று பெயரிட்டுள்ளனர் உயிரியல் விஞ்ஞானிகள்.
(LUCA = Last Universal Common Ancestor).
மனிதன் உள்ளிட்ட ஒட்டு மொத்த உயிரினங்களின் ஆதி
முதல் மூதாதை இந்த லூகாதான். மனிதனில் இருந்து
தொடங்கி பின்னே பின்னே சென்று கொண்டிருந்தால்
கடைசியாக லூகாவை வந்தடையலாம்.லூகா மிகவும்
எளிமையான ஒரு ஆர்என்ஏ இழைதான்.
(RNA =  Ribo Nucleic Acid). உயிரின் அதிமுக்கியத் தன்மை
பிரதியெடுத்தல் (replication). லூக்கா தன்னைத்தானே
பிரதி எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டிருந்தது.

ஆக ஒரு எளிய இழையில் தொடங்கி மிகச் சிக்கலான
ஆறறிவு மனிதன் வரையிலான உயிரின்  பயணம்
முற்றிலுமாக பரிணாமத்தால் வழிநடத்தப் பட்டது.
எனினும் பரிணாமம் என்பது மிக மெதுவாக நடந்தேறும்
ஒரு நிகழ்ச்சிப் போக்கு. லட்சக் கணக்கான ஆண்டுகள்
தேவைப்படும் ஒன்று.

உலகிலேயே அதிக நேரம் பிடிக்கும் நிகழ்ச்சிப்போக்கான
பரிணாமத்தை செயற்கையாக தமது ஆய்வுக்கூடத்தின்
குறுகிய காலத்தில் சோதனைக் குழாய்களில் நடத்திக் காட்டி உலகையே வியக்க வைத்துள்ளார் டாக்டர் பிரான்செஸ் ஆர்னால்டு
என்னும் பெண் பொறியாளர். திசைகாட்டப்பட்ட பரிணாமம்
(directed evolution) வாயிலாக, அதாவது செயற்கைப் பரிணாமம் மூலமாக என்சைம்களை (enzymes) உருவாக்கினார் டாக்டர் ஆர்னால்டு.

என்சைம்கள் என்பவை பிரதானமாக புரதங்கள் ஆகும்.
இவை உயிரி வேதியியல் செயல்பாடுகளின் வினையூக்கிகள்
(catalysts).ஆகும். மனித உடலில் நிகழும் அநேகமாக எல்லா
வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளுக்கும் என்சைம்களின்
வினையூக்கித்தன்மை அவசியமான ஒன்று. 5000க்கும் மேற்பட்ட
உயிரி வேதியியல் வினைகளில் என்சைம்கள் செயல்படுகின்றன.

ஒரு என்சைமை எடுத்துக்கொண்டு அதில் தேவையான மாற்றங்களைச்  செய்யும் பொருட்டு, அதன் ஜீனில் முற்றிலும் தற்போக்கான விகாரங்கள் (random mutations) ஏற்படுத்தப்
படுகின்றன. இவ்வாறு விகாரமடைந்த ஜீன்கள்  ஒரு பாக்டீரியாவின் உள்ளே செலுத்தப் படுகின்றன. அது இந்த ஜீன்களை கூடுகள் (templates) போலப் பாவித்து, அவற்றைக் கொண்டு,  விகாரமடைந்த
என்ஸைம்களை உருவாக்குகிறது. இவ்விதமாக விகாரமுற்ற
என்சைம்கள் சோதிக்கப்பட்டு, அவற்றுள் அதிகரித்த
வினையூக்கித் திறனைக் கொண்ட என்சைம்கள் தேர்வு
செய்யப் படுகின்றன. இதுவே "தேர்வு" (selection) எனப்படுகிறது.
இயற்கையான பரிணாமத்திலும் தேர்வு உண்டு. அது இயற்கைத்
தேர்வு  (natural selection) எனப்படும்.இங்கு டாக்டர் ஆர்னால்டு
மேற்கொண்ட தேர்வு செயற்கைத் தேர்வு என்று அழைக்கப்
படுவதற்குப் பதிலாக, வெறுமனே "தேர்வு" எனப்படுகிறது.

டார்வினின் பரிணாமத்தில் தற்போக்கான விகாரம் (random mutation) என்பதும் இயற்கைத் தேர்வு என்பதும் முக்கிய அம்சங்கள். அதுபோலவே டாக்டர் ஆர்னால்டின் பரிணாமத்திலும் விகாரமும்
தேர்வும் உள்ளன. எனவேதான் இந்தச்  செயல்முறையை
திசைகாட்டப்பட்ட பரிணாமம் (directed evolution) என்று
வர்ணிக்கிறது நோபல் பரிசுக் குழு. டாக்டர் ஆர்னால்டின்
பரிணாமம் மனித முயற்சியால் செயற்கையாக நிகழ்த்திக்
காட்டப்பட்ட  பரிணாமம் ஆகும்.

இத்தகைய என்சைம்களை உருவாக்கியதன் மூலம்
மொத்த மனிதகுலமும் பயனடைகிறது.உயிரி எரிபொருள்
(bio fuels) உருவாக்கத்திலும், தீராத நோய்களைத் தீர்க்கவல்ல
மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் வினையூக்கித் திறன்
மிக்க என்சைம்கள் பயன்பட்டு வருகின்றன. நச்சுத்தன்மை மிக்க வேதிப்பொருட்கள் (toxic chemicals) வேதியியல் துறையில் இருந்து
படிப்படியாக அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் சூழலை
மாசுபடுத்தாத என்சைம்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

நோபல் பரிசு பெற்ற மூவரும் இக் கண்டுபிடிப்புகளை பல பத்தாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
1990களில் இருந்து இவ்விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஏற்கனவே பயன்படத் தொடங்கி விட்டன.அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதே தற்போதைய
நோபல் பரிசு அறிவிப்பு.

பரிசு பெற்ற மற்ற இரு விஞ்ஞானிகளான ஜார்ஜ் ஸ்மித்,
கிரெகோரி வின்டர் ஆகிய இருவரும் எதிர் உயிரிகள்
(antibodies) எனப்படும் புதிய புரதங்களைக் கண்டுபிடித்தனர்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், சொரியாசிஸ், சில வாத
நோய்கள், வயிறு வீக்கம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்  ஆற்றல் வாய்ந்த மருந்துகள் உருவாக்கப்பட்டன.

உயிரி வேதியியல் துறை நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்து வரும் துறையாகும். இவ்வாண்டு
மட்டுமின்றி, அண்மைக்கால வேதியியல் நோபல் பரிசுகள்
உயிரிவேதியியல் துறைக்கே தொடர்ந்து கிடைத்து
வருகின்றன. உயிரிப்பொறியியல், உயிரி வேதியியல்
ஆகிய துறைகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை
இவ்வாண்டின் நோபல் பரிசு .கட்டியம் கூறுகிறது.

வேதியியலில் மட்டுமின்றி  இயற்பியலிலும் ஒரு பெண்மணி
இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார். டொன்னா ஸ்ட்ரிக்லாண்ட்  (Donna Strickland) என்னும் கனடா நாட்டுப்
பேராசிரியர் அவர். இவ்வாண்டு அறிவியல் துறைகளில்
நோபல் பரிசு பெற்ற எட்டுப்பேரில் இருவர் பெண்கள்.
வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை மென்மேலும் உயரும்
என்று நம்புவோம்.
***************************************************************
          

 




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக