சனி, 4 அக்டோபர், 2014

தமிழக அரசு அலுவலகங்களில் பள்ளிகளில்
முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின்
படத்தை வைக்க வேண்டும்.
பிற்பட்டோர் நலச் சங்கங்களின் கோரிக்கை!
--------------------------------------------------------------------------

முதலமைச்சரின் படத்தை அரசு அலுவலகங்களில்
வைப்பது என்பது தமிழகத்தில் தொன்றுதொட்டு
இருந்து வரும் மரபாகும். காமராசர், பக்தவத்சலம்,
அறிஞர் அண்ணா முதல் தற்போது ஜெயலலிதா
வரை அனைவரின் படங்களும் அரசு அலுவலகங்களிலும்
பள்ளிக்கூடங்களிலும் வைக்கப் பட்டு இருந்தன என்பது
கண்கூடு.

இந்த வரிசையில், இந்த மரபின் தொடர்ச்சியாக
தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர் மாண்புமிகு
ஓ பன்னீர் செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை
அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், அரசுசார்
நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகிய இடங்களில்
உடனடியாக வைக்க வேண்டும் என்பது
தமிழ்நாட்டில் இருக்கும் 85 சதவீத பிற்படுத்தப்பட்ட
சமூக மக்களின் கோரிக்கை ஆகும்.

ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் இதில் அலட்சியம்
காட்டி வருகின்றனர். பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
என்பதற்காக மாண்புமிகு முதல்வர் பன்னீர் அவர்களின்
திருவுருவப் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்காமல்
புறக்கணிப்பது  கோடிக்கணக்கான பிற்பட்ட சமுதாய
மக்களின் இதயங்களில் சூட்டுக்கோலால் சூடு
பொறிப்பதற்குச் சமம்.   

பிற்படுத்தப் பட்ட சமூகம் இந்த அநியாயத்தைப்
பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எனவே
நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்ட முன்னாள்
முதலமிச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை
அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மாண்புமிகு
முதல்வர் பன்னீர் அவர்களின் திருவுருவப் படத்தை
தாமதமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் உரிய
இடங்களில் வைக்குமாறு அகில இந்தியப் பிற்படுத்தப்
பட்டோர் முன்னேற்றக் கழகம் கோருகிறது.

************************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக