வியாழன், 16 மார்ச், 2023

 காலநிலைச் சீர்குலைவின் பேராபத்து! 

தப்பிக்குமா பூமி?
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம். 
-----------------------------------------------
பூமி சூடேறிக் கொண்டே போகிறது. பூமியின் வெப்பம் 
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமை 
எங்கு கொண்டுபோய் விடும்? ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் 
வெப்பத்தால் பனிப்பாளங்களும் கிளேசியர்கள் 
என்னும் பனியாறுகளும் உருகும்; உலகெங்கும் கடல் மட்டம் 
உயர்ந்து கடலோர நகரங்களை விழுங்கும்; பருவங்கள் தப்பும்.
முடிவடைய வேண்டிய காலத்தையும் தாண்டி பருவங்கள் நீடிக்கும்.
மழைக்காலம் இயல்பான அளவை விட சில வாரங்கள் கூடுதலாக 
நீடிக்கும்; அதுபோன்றே வெயில் காலமும். அதீத மழையும் 
அதீத வெப்பமுமாக காலநிலை தாறுமாறாகும்; சுருங்கக் கூறின் 
பூமி வாழத் தகுதியற்றதாக ஆகும். 

புவி வெப்பமடைவதைத் தடுத்தாக வேண்டும். எப்படித் 
தடுப்பது? இது கூட்டு முயற்சி. ஊர்கூடித் தேர் இழுக்கும் 
வேலை. பூமியில் வாழும் 800 கோடி மக்களுக்கும் இந்தப் 
பொறுப்பு உண்டு. கடந்த காலங்களில் புவியை அதிகமாகச்
சூடேற்றிய தவற்றைச் செய்த வளர்ந்த நாடுகளுக்கு கூடுதலான 
பொறுப்பு உண்டு.   

இச்சூழலில் அண்மையில் எகிப்து நாட்டில் உள்ள ஷாம் எல் ஷேக் 
என்னும்  கடற்கரை நகரில், காலநிலை குறித்த உலக நாடுகளின் 
27ஆம் மாநாடு 2022 நவம்பர் 6-18 நாட்களில் நடைபெற்றது. 
ஐநா சபை முன்னின்று நடத்திய இம்மாநாடு சுருக்கமாக 
COP 27 என்று அழைக்கப் படுகிறது.COP என்பது Conference Of Parties
to the United Nations Framework Convention on Climate Change என்பதன் 
சுருக்கம் ஆகும். COP 27 மாநாட்டின் தனிச்சிறப்பு என்னவெனில், 
இதற்கு முந்திய மாநாடுகளில் சாத்தியப்படாத முக்கியமானதொரு 
முடிவை இம்மாநாட்டில் நிறைவேற்ற முடிந்தது என்பதாகும்.
அது பற்றி அறிந்திடும் முன்னர் காலநிலை மாடுகளின் 
சுருக்கமான வரலாற்றைச் சற்றே தெரிந்து கொள்வோம்.    

பெர்லின் முதல் பாரிஸ் வரை!
---------------------------------------------
காலநிலை மாநாடுகள் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் 
மேலாக உலகில் நடந்து வருகின்றன. முதல் காலநிலை மாநாடு 
(COP 1) 1995 மார்ச்சில் பெர்லின் நகரில் நடைபெற்றது. உலக நாடுகளின் 
மாநாட்டை ஆண்டுதோறும் கூட்டுவது என்றும் நச்சு வாயுக்களின் 
வளிமண்டல சேகரத்தைத் குறைப்பதன் மூலம் புவி வெப்பமடைவதைத் 
கட்டுப்படுத்துவது என்றும் பெர்லின் மாநாட்டில் முடிவு செய்யப் 
பட்டது.

இம்முடிவின்படி ஆண்டுதோறும் காலநிலை 
மாநாடுகள் நடைபெற்று வந்தன. இந்த வரலாற்றில் நவம்பர் 2015ல் 
பாரிஸ் நகரில் நடைபெற்ற 21ஆம் காலநிலை மாநாடு 
(COP 21) பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வரலாற்றில் 
நிலைத்து நிற்கத்தக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முடிவு 
பாரிஸ் மாநாட்டில் எடுக்கப் பட்டது. பூமியை வாழத் தகுதி உடையதாகத் 
தொடர்ந்து வைத்திருக்கக் கூடிய உயர்ந்த முடிவு இது.

பாரிஸ் உடன்பாடு!
-----------------------------
இந்த முடிவு என்னவெனில்,  உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து,   
பூமியின் வெப்ப அதிகரிப்பை ஒன்றரை டிகிரி 
செல்சியசுக்குள் (1.5 டிகிரி C) அடக்கி விட வேண்டும். 
அதாவது எதிர்வரும் காலங்களில் பூமியின் சராசரி வெப்பம் 
எவ்வளவுதான் அதிகரித்தாலும், அந்த அதிகரிப்பு 1.5 டிகிரி 
செல்சியசுக்குள் இருக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் 
வெப்ப அதிகரிப்பானது 1.5 டிகிரி செல்சியசைத் தாண்டி விடக் கூடாது. 
இதை உறுதி செய்வது எல்லா உலக நாடுகளின் கடமை ஆகும். 
இதுதான் பாரிஸ் உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. 

தொழிற்புரட்சிக்கு முன்பு (pre industrial period) பூமியின் சராசரி வெப்பம்
எவ்வளவு இருந்ததோ அந்த வெப்பநிலையை குறிப்புச் சட்டகமாக 
(reference point) எடுத்துக்கொண்டு அதிலிருந்து அதிகரிக்கும் 
வெப்பமானது 1.5 டிகிரி செல்சியசுக்குள்  அடங்கி விட வேண்டும் 
என்பதை உறுதி செய்வதே உலக நாடுகளின் கடமை ஆகும்.  
தொழிற்புரட்சி இங்கிலாந்தில் 1760ல் ஏற்பட்டதால் அதற்கு முன்பிருந்த 
காலம் என்பதன் பொருள் 1750ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் என்பதாகும். 
தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தின் சராசரி வெப்பம் என்ன 
என்பதை ஐ நா நியமிக்கும் விஞ்ஞானிகள் முடிவு செய்வார்கள். 

இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டன. மத்திய கிழக்கில்
உள்ள எண்ணெய் வள நாடுகளான ஈரான், ஈராக் உள்ளிட்ட சில நாடுகள் 
கையெழுத்திடவில்லை.பின்னர் ஈராக் கையெழுத்திட்டது. ஈரான் 
இன்று வரை கையெழுத்திடவில்லை. டொனால்டு டிரம்ப் காலத்தில் 
2020ல் விலகிக் கொண்ட அமெரிக்கா ஜோ பைடன் காலத்தில் 
2021ல் மீண்டும் சேர்ந்து கொண்டது. 

மேலும் தங்களால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட 
எதுவும் சேகரம் ஆகாமல், பூஜ்ய உமிழ்வு (zero emission) என்ற இலக்கை 
2050க்குள் எட்டி விடுவதாகவும் கையெழுத்திட்ட நாடுகள் உறுதி அளித்தன. 
பாரிஸ் உடன்பாடு அதில் கையெழுத்திட்ட நாடுகளை சட்டபூர்வமாகக் 
கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்பாடு ஆகும் (A legally binding international treaty 
on climate change). டிசம்பர் 2015ல் இறுதி செய்யப்பட்ட இந்த உடன்பாடு
நவம்பர் 2016ல் செயல்பாட்டுக்கு வந்தது.      

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி!
-----------------------------------------
2015 நவம்பரில் பாரிஸ் உடன்பாடு எட்டப்பட்டது. 2022 நவம்பரில் 
ஷாம் எல் ஷேக் (எகிப்து) மாநாடு நடைபெற்றபோது ஏழு ஆண்டுகள் 
முடிந்திருந்தன. கார்பன் சேகரத்தைக் குறைப்பதில் உலக நாடுகள் 
எவ்வளவு வெற்றி அடைந்துள்ளன என்று அளந்து பார்க்கும் 
கடமை மாநாட்டுக்கு இருந்தது.  

மாநாட்டின் தொடக்கவுரையில்,  ஐநா பொதுச் செயலாளர் 
அன்டோனியோ கட்ரெஸ் கூறிய ஒரு வாசகம் இன்று 
உலகப்புகழ் பெற்று விட்டது.
"காலநிலையை நரகமாக்கும் வழிகளில்  இருந்து விடுபட்டு 
வெளியேற உதவும் சொகுசுப் பாதையே புதுப்பிக்கத் தக்க 
எரிசக்தி" (Renewable energy is the exit ramp from the climate 
hell highway) என்ற  அவரின் வாக்கியம் மெய்யாகவே மந்திர 
வாசகம்தான்.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற 
எரிபொருட்கள் ஹைடிரோ கார்பன்கள் எனப்படும். இவை 
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அல்ல. இவை தீர்ந்து போகக் 
கூடியவை. உலகெங்கும் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் 
இருந்து காலகாலத்திற்கும் நிலக்கரி கிடைத்துக் 
கொண்டிராது. எரிவாயுக் கிணறுகள் அமுதசுரபிகள் அல்ல. 
அவற்றில் இருந்து நிரந்தரமாக மீத்தேன் கிடைத்துக் 
கொண்டிராது. அதிகபட்சம் 2050க்குள் உலகெங்கும் 
சுரங்கங்களின் நிலக்கரி தீர்ந்து விடக்கூடும். காற்றாலை 
மின்சக்தி, சூரிய மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவையே 
புதுப்பிக்கத் தக்கவை. பூமியின் காலநிலை நரகமாகி விடாமல் 
தடுக்கும் வல்லமை இவற்றுக்கு மட்டுமே உண்டு. சூழலை 
மாசாக்காத இவற்றைத் தவிர்த்து விட்டு, நிலக்கரியை 
நாடுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ஆகும்.     

முதல் பத்து நாடுகளின் நச்சு!
----------------------------------------------
ஒவ்வொரு ஆண்டும் 30 கிகா டன் கார்பன் டை ஆக்ஸைடு 
உலக நாடுகளால் வளிமண்டலத்தில் சேகரம் ஆகிறது. 
(1 கிகா = 1 பில்லியன்; 1 பில்லியன் = 100 கோடி; 
1 டன் = 1000 கிலோகிராம்). கார்பனை வளி மண்டலத்துக்கு 
ஏற்றி சூழலை மாசுபடுத்தும் நாடுகளில் பின்வரும் 
நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. 2020ஆம் ஆண்டில் 
இந்நாடுகள் ஏற்றி அனுப்பிய கார்பனின் அளவு வருமாறு:-  

1) சீனா ...11680 மில்லியன் டன்.
2) அமெரிக்கா ... 4535 மி.டன்.
3) இந்தியா ... 2411 மி.டன். 
4) ரஷ்யா ... 1674 மி.டன்.      
5) ஜப்பான் ... 1061 மி.டன்.

அடுத்த ஐந்து இடங்களில் ஈரான், ஜெர்மனி, தென்கொரியா,
சவூதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன.
கார்பன் மாசைக் குறைப்பதில் இப்பத்து நாடுகளும் 
மற்ற நாடுகளை விட அதிக அளவிலும் தீவிரமாகவும் 
பங்காற்ற வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன.      

கடந்த ஆண்டில் (2021) ஐநாவின் காலநிலை மாநாடு இங்கிலாந்தின் 
கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இந்த ஓராண்டில் 
உலக நாடுகள் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் 
குறைத்திருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே 
மிஞ்சுகிறது. ஒரு சதவீதம் அளவு மட்டுமே உலக நாடுகள் 
குறைத்துள்ளன. இதன் விளைவாக, 2030க்குள் 30 முதல் 45 சதவீதம் 
அளவு கடுமையாகக் குறைத்தால் மட்டுமே நம்மால் 1.5 டிகிரி 
செல்ஸியஸ் என்ற இலக்கை எட்ட இயலும். இப்படி 
எச்சரிக்கப்பட்டது எகிப்து மாநாட்டில்.

பெருநிதியம் உருவாக்கம்!
----------------------------------------
எகிப்து மாநாட்டின் சிறப்பம்சம் என்னவெனில் வெறுங்கை முழம் 
போடாது என்று உணர்ந்து கொண்டதுதான். ஆம், கார்பன் 
உமிழ்வுகளைக் குறைப்பது என்பது பெரும் பணத்தைச் 
செலவழித்தால் மட்டுமே சாத்தியப்படும். வளரும் நாடுகள் 
என்று அழைக்கப்படும் ஏழை நாடுகளால் கார்பன் உமிழ்வுகளைக் 
குறைப்பதாள் ஏற்படும் செல்வுகளைத் தாங்க இயலாது.
எனவே வளர்ந்த நாடுகள் அல்லது ஐநா போன்ற அமைப்புகள் 
ஏழை நாடுகளுக்கு நிதி வழங்கினால் மட்டுமே அவற்றால் 
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த முடியும். 

எகிப்து மாநாடு இந்த உண்மையை உணர்ந்து ஏழை நாடுகளுக்கு 
வழங்குவதற்காக ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்துள்ளது
(COP 27 has decided to establish and operationalize a loss and damage fund).
இது இழப்பு மற்றும் சேதாரத்தை ஈடுகட்டும் நிதி ஆகும்.

கடற்கரையை ஒட்டித் தடுப்புச் சுவர்களை எழுப்புவது முதல் 
வறட்சியைத் தடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வது வரையிலான  
செயல்பாடுகளை மேற்கொள்ள ஏழை நாடுகளுக்கு பெரும் நிதி  
தேவைப்படும். இதற்கான நிதியை பாரிஸ் உடன்பாட்டு
நாடுகள் தங்களுக்குள் முடிவெடுத்து வழங்க வேண்டும்.

ஒரு கணக்கீட்டின்படி, இத்தகைய செயல்பாடுகளுக்கு 2030ஆம் 
ஆண்டு வரை, ஆண்டொன்றுக்கு 340 பில்லியன் அமெரிக்க டாலர் 
தேவைப்படும் என்று எகிப்து மாநாடு மதிப்பிடுகிறது. இந்த அளவிலான 
நிதியை உருவாக்குவதும், தேவையை ஒட்டி ஏழை நாடுகளுக்கு 
நிதியை வழங்குவதன் மூலமுமே புவியின் வெப்பநிலை
1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுக்கு அடங்கி இருக்குமாறு 
செய்ய நம்மால் இயலும் என்ற உண்மையை எகிப்து மாநாடு 
நன்கு உணர்ந்துள்ளது. எனவே புவி வெப்பமடைவதைத் 
தடுப்பதில் முதன் முறையாக ஒரு வெளிச்சம் தெரிகிறது; 
நம்பிக்கையும் பிறக்கிறது.  
     
கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளை ரஷ்ய-உக்ரைன் 
போர் வெகுவாகச் சீர்குலைத்து விட்டது. எனவே உலக நாடுகள் 
தங்களுக்கு இடையில் போர் மூளாமல் பார்த்துக் கொள்ள 
வேண்டும்.

வேறுபடும் வெப்பநிலை!
---------------------------------------
கார்பன் டை ஆக்சைடு மட்டுமின்றி மீத்தேன்,  ஓசோன், நைட்ரஸ் 
ஆக்சைடு முதலிய வாயுக்களும் பூமியின் வளிமண்டலத்தில் 
உள்ளன. இவை அனைத்தும் பசுங்குடில் வாயுக்கள் 
(Greenhouse gases) என்று அழைக்கப் படுகின்றன. இவை வளிமண்டலத்தில் 
இருந்து கொண்டு பூமியின் வெப்பத்தைக் கிரகித்துக் கொண்டு 
மீண்டும் பூமிக்கே அனுப்புகின்றன. இதனால் பூமி சூடாகிறது.
(Global warming occurs). இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் இல்லாமல் 
இருந்தால் பூமியின் வெப்பமானது அண்ட வெளிக்குச் சென்று விடும்.
பூமி சூடேறாது. 

பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட அளவில் வெப்பம் 
நிலவுகிறது. சவூதி அரேபியாவில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் 
இந்தியாவின் கார்கில் போன்ற பகுதிகளில் மைனஸ் அளவில் 
வெப்பமும் நிலவுகின்றன. 

பூமியின் அதிகபட்ச வெப்பமானது லிபிய பாலைவனத்தில் 
(Libyan desert) 58 டிகிரி செல்சியஸ் என்று அளக்கப் பட்டுள்ளது. 
குறைந்தபட்ச வெப்பநிலை (coldest temperature) அண்டார்டிகாவில் 
உள்ள வோஸ்டாக் ஸ்டேஷன் (Vostak station) என்ற இடத்தில் 
மைனஸ் 88 டிகிரி செல்சியஸ் என்று அளக்கப் பட்டுள்ளது.   
ஒட்டு மொத்த பூமியையும் பார்த்தால், 
பூமிப்பந்தின் சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியசாக இருக்கிறது.

முதலாம் தொழிற்புரட்சி ஏற்பட்ட 1750ஆம் ஆண்டு முதல் 
இன்று நான்காம் தொழிற்புரட்சிக் காலம் வரையிலான 
இந்த  270 ஆண்டுகளில் முந்திய காலத்தை விட, பூமியின் 
வெப்பம் உயர்ந்து கொண்டே வருகிறது. பசுங்குடில் வாயுக்கள் 
பூமியின் வளிமண்டலத்தில் மிகுதியாகச் சேர்ந்து விட்டதாலேயே 
பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  

தொழிற்புரட்சி 1.0 காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் 
கார்பன் டை  ஆக்ஸைடு 280 ppm என்ற அளவில் இருந்தது.
இன்று 2022ல் 421 ppm என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
(ppm = part per million; பத்து லட்சத்தில் எத்தனை 
பங்கு என்பதே ppm).

நமது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவே அதிகம். இது
78 சதவீதம் உள்ளது. அடுத்து ஆக்சிஜன் 21 சதவீதம்.
இவ்விரண்டும் சேர்ந்து 99 சதவீதம் ஆகி விடுகிறது.
மீதியுள்ள 1 சதவீதத்தில் ஆர்கான் வாயு 0.9 சதவீதமும்
ஏனைய வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து (கார்பன் டை ஆக்சைடு,
மீத்தேன் முதலியன) 0.1 சதவீதமும் உள்ளன. எனவேதான் 
பசுங்குடில் வாயுக்களை ppm என்ற அளவில் அளக்கிறோம்.      

வளிமண்டலத்தில் மாசு!
--------------------------------------
சில ஆண்டுகளுக்கு முன், 350 கிளப் என்ற பெயரில் 
வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடின் அளவை 
350 ppm என்ற அளவில் தக்க வைக்க வேண்டுமென்று 
பரப்புரை செய்யும் விழிப்புணர்வு மன்றங்கள் உலகெங்கும் 
தோன்றின. 350 ppm என்பது பாதுகாப்பான அளவாகும் (safety level).
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இம்மன்றங்களைத் 
தோற்றுவித்தனர். இவை புவி வெப்பமடைதலின் அபாயம் 
குறித்து மக்களுக்கு உணர்த்தின. தற்போது 
2022ல் வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு 421 ppm என்பதாக 
உயர்ந்து விட்டது (71 ppm உயர்வு). இது அபாய அளவாகும் (dangerous level) 

தற்போதைய சூழலில், கார்பன் டை ஆக்ஸைடை மட்டுமின்றி, 
புவியை வெப்பமாக்கும் ஏனைய பசுங்குடில் வாயுக்களையும் 
எதிர்த்துப் போராட வேண்டும். எனவே பூமியின் வெப்பஅதிகரிப்பை 
1.5 டிகிரி செல்சியசுக்குள் அடக்க வேண்டுமென்று மக்களிடையே  
விழிப்புணர்வுப் பரப்புரை செய்யும் "1.5 கிளப்"களை உருவாக்குவோம்.
பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இத்தகைய 
மன்றங்களை உருவாக்க வேண்டும்.

இறுதியாக இந்தியா இது விஷயத்தில் என்ன செய்கிறது 
என்று பார்ப்போம். காலநிலையைச் சீர்குலைக்கும் 
செயல்பாடுகளை இந்தியா தீவிரமாகக் குறைத்து வருகிறது.
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக 2030ல்  
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்பதன் அறிகுறிகள் தெரிகின்றன. 
சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. 
உலகின் மிகப்பெரிய சூரிய மின்னாலை ராஜஸ்தான் ஜோத்புர் 
மாவட்டத்தில் 14000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இன்னும் பல்வேறு 
செயல்பாடுகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு  
பூமியின் வெப்பத்தைக் குறைப்பதில் இந்தியா காத்திரமான 
பங்காற்றி வருகிறது.
*********************************************** 
  
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக