தேசியஇனச் சிக்கல் குறித்த மார்க்சியக் கருத்தரங்கம்!
கோட்பாட்டுப் பிரச்சினையில் தீர்வு காணும் முயற்சி!
சமகால அரசியலுக்கு முகம் கொடுக்க வேண்டாமா?
--------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
கருத்தரங்கின் பாடுபொருள்:
தேசியஇனக் கோட்பாடு முதலாளித்துவத் தன்மை
உடையதா? பாட்டாளி வர்க்கத் தன்மை உடையதா?
இன்று இக்கோட்பாட்டால் யாருக்கு ஆதாயம்?
முதலாளி வர்க்கத்துக்கா? பாட்டாளி வர்க்கத்துக்கா?
****** ******** ******* **********
சென்னையில் கடந்த வாரம் 14.05.2023 ஞாயிறு அன்று
காலை முதல் மாலை வரை ஒரு முழுநாள்
கருத்தரங்கம் நடைபெற்றது. "மார்க்சியர் மேடை,"
நியூட்டன் அறிவியல் மன்றம் ஆகிய இரு
அமைப்புகளும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.
அணுகுவதற்கு எளிதானதும் மிகவும் மையமானதுமான
இடமாகிய சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள
கரூர் வைஸ்யா வங்கியின் தொழிற்சங்கக் கட்டிடத்தின்
மாநாட்டு அறையில் (conference hall) இக்கருத்தரங்கம்
நடைபெற்றது. கருத்தரங்கை காலை 10.45க்கு
தோழர் பி இளங்கோ தொடக்கி வைத்தார்.
தோழர் நிர்மல் ராஜ் (கரூர்), தோழர்
ஸ்டாலின் (சதுரங்கப் பட்டினம், கல்பாக்கம்) ஆகிய
இருவரின் ஈடுபாட்டுடன் கூடிய சலியாத உழைப்பு
இல்லாமல் இக்கருத்தரங்கை நடத்தி இருக்க இயலாது.
உள்ளடக்கம் கருத்தரங்கமாக இருந்த போதிலும்
வடிவத்தில் இக்கூட்டம் ஒரு கலந்துரையாடல்
போன்றே நடத்தப் பட்டது. வட்ட மேஜை மாநாட்டில்
பங்கேற்கும் அனைவரும் சமமதிப்பு
சம மரியாதையைப் பெறுவது போல, இக்கூட்டத்திலும்
பங்கேற்ற அனைவரும் முழுநிறைவான சமத்துவத்தை
உணர்ந்தனர். இக்கூட்டம் மேடை என்ற அமைப்பு
இல்லாமலும், கூட்டத்தை நடத்தும் தலைவர் என்று
எவரும் இல்லாமலும் மெய்யான வட்டமேஜை
மாநாடு போன்றே ஒவ்வொரு அம்சத்திலும்
சமத்துவத்துடன் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கம் ஒரு சர்வ கட்சிக் கூட்டம் போன்றது.
ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை ஒட்டி அனைத்துக்
கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்துவதைப்
போன்றது இக்கருத்தரங்கம்.
மார்க்சிய முகாமில் உள்ள பல்வேறு
கருத்தோட்டங்களையும் கொண்ட கணிசமான
தோழர்கள் குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் உட்பட
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இருந்து
வந்திருந்து இக்கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பேச விரும்பிய எவர் ஒருவருக்கும், பேசுவதற்காகத்
தங்கள் பெயரைப் பதிந்து கொண்ட அனைவருக்கும்
பேசும் வாய்ப்பு தரப்பட்டது. எவர் ஒருவருக்கும்
வாய்ப்பு மறுக்கப் படவில்லை. கருத்தரங்கின்
பேசுபொருளான தேசிய இனக் கோட்பாடு குறித்து
மார்க்சிய முகாமில் இன்று நிலவும் அனைத்துக்
கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கு
வாய்ப்புத் தந்து அவற்றைத் தொகுத்துக் கொள்ள
வேண்டும் என்பதே கருத்தரங்கின் பிரதான நோக்கம்.
அந்த நோக்கம் நூறு சதம் நிறைவேறி உள்ளது
என்பது நிகழ்வுகளில் இருந்து புலப்படுகிறது.
மார்க்சியம் அல்லாத முகாமில் (Non Marxist camp)
குறிப்பாக பூர்ஷ்வா முகாமில் அல்லது குட்டி
முதலாளிய முகாமில் அல்லது ஆளும் வர்க்கக்
கட்சிகளின் முகாமில் நிலவும் இப்பொருள் பற்றிய
கருத்துக்களில் நாம் பெரிதாக அக்கறை
கொள்ளத் தேவையில்லை. மழைக்காலத்
தவளைகளின் கூச்சல் என்பதற்கு மேல் அவற்றில்
ஒன்றும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமோ
மத்திய அரசோ முறைத்துப் பார்த்தாலே
குட்டி முதலாளியத் தவளைக் கூச்சல்கள்
அடங்கி விடும்.
1962 இந்திய சீனப்போரின்போது பிரிவினைத்
தடைச் சட்டத்தை அன்றைய பிரதமர் ஜவகர்லால்
நேரு கொண்டு வந்ததுமே, அதுவரை "அடைந்தால்
திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்று
கூச்சல் போட்டுக்கொண்டிருந்த அண்ணாத்துரை
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு
விட்டோம் என்று அறிவித்து நேருவின் கால்களில்
விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்
அல்லவா! அன்றைய அண்ணாத்துரைதான்
இன்றைய சீமான்! இன்றைய பெ மணியரசன்!
மற்றும் இவர்களின் வகையறாக்கள் இத்தியாதி!
எனவே மார்க்சிய முகாமில் நிலவும் கருத்துக்களை
மட்டும் கணக்கில் கொண்டாலே போதும்.
ஏனெனில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இனக்
கோட்பாடு குறித்த நிலைபாடு என்ன என்பதை
நாம் அறிவோம்; நாடறியும்.
மார்க்சிய முகாமில் நிலவும் கருத்துக்களைத்
தொகுக்கையில், மார்க்சிய முகாம் ஒற்றைக்
குரலில் பேசவில்லை (not monolithic) என்பதை
அறிய முடிகிறது. அதே நேரத்தில் பல்வேறு
கருத்துக்களின் பறவைக் கூச்சலும் மார்க்சிய
முகாமில் இல்லை என்பது ஆறுதலைத் தருகிறது.
தேசிய இனக்கோட்பாடு பற்றிய கேள்வி
பைனரியாக (binary) இருப்பதால், நமது
கருத்தரங்கம் அதை பைனரியாக
அமைத்திருப்பதால், இரண்டில் ஒன்றை
(say yes or no) விடையாகச் சொல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.. கிடைத்துள்ள விடைகளைத்
தொகுத்தபோது, ஒரு தரப்புக்கு வலுவான ஆதரவு
இருப்பதும் இன்னொரு தரப்புக்கு ஆதரவு
மிகவும் குன்றி இருப்பதும் புலப்பட்டது.
தேசிய இனம் என்னும் கோட்பாடு குறித்து
சமகால இந்திய/தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிற
சர்ச்சைக்குச் சரியான தீர்வு காண்பதும்
அத்தீர்வின்வழி அச்சர்ச்சைக்கு முடிவு கட்டுவதும்
மார்க்சியர்களின் கடமை ஆகும்.
மார்க்சியத்தில் மெய்யான அக்கறை கொண்டுள்ள
மார்க்சியர் எவரும் கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்குத்
தீர்வு காணாமல் வாளாவிருப்பது தகாது. எனவே
தேசிய இன்ச் சிக்கலுக்கு கோட்பாட்டுத் தீர்வு காணும்
நோக்கத்துடன் இக்கருத்தரங்கை நடத்தத்
திட்டமிட்டோம். இணையவழிக் கூட்டங்கள்
தகுந்த அழுத்தமற்று (less serious) இருப்பதால்
உரிய பலனைத் தராமல் இருந்து விடக்கூடும்
என்பதால் நேரடிப் பங்கேற்புடன் கூடிய கருத்தரங்கை
நடத்த முடிவு செய்தோம். அனைவரின்
ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தி முடித்தோம்.
கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டோம்.
இனி தீர்வை நோக்கிய அடுத்த கட்டப் பயணம்
எளிதாகும்..
கூட்டம் முழுவதும் வீடியோ எடுக்கப் பட்டுள்ளது.
சுமார் 6 மணி நேர வீடியோ பதிவு உள்ளது.
அது உரிய விதத்தில் எடிட் செய்யப்பட்டு
அடுத்த வாரம் பொதுவெளியில் முன்வைக்கப்படும்.
இப்பணியில் தோழர் ஸ்டாலின் (சதுரங்கப் பட்டினம்)
மும்முரமாக இருக்கிறார்.
இக்கருத்தரங்கை நடத்தும் பொறுப்பில்
வாக்களித்தபடி என்னால் பங்களிக்க இயலவில்லை.
கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக
இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததைத்
தவிர வேறெந்த வேலையும் நான் செய்யவில்லை;
என்னால் செய்ய இயலவில்லை.
தோழர் நிர்மல் ராஜ் (கரூர்), தோழர் ஸ்டாலின்
(சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம்) ஆகிய இருவரும்
இக்கருத்தரங்கம் நடந்தமைக்கும் அதன்
வெற்றிக்கும் பொறுப்பாளர்கள் ஆவர். அவர்கள்
இருவருக்கும் எனது நன்றி.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும்
புறப்பட்டு சென்னைக்கு வந்து தங்குமிடம் உள்ளிட்ட
செலவுகளை மேற்கொண்டு அக்கறையுடன்
இக்கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை
ஒளிக்காமல் வெளிப்படுத்தி கருத்தரங்கை
வெற்றிகரமாக்கிய மார்க்சிய முகாமைச் சேர்ந்த
தோழர்கள் அனைவருக்கும் நன்றியை
உரித்தாக்குகிறேன்.
-----------------------------------------------------------
பின்குறிப்பு:
கருத்தரங்கில் நியூட்டன் அறிவியல் மன்றம்
முன்வைத்த கருத்துக்களின் சாரம் அல்லது
சுருக்கம் அடுத்த கட்டுரையாக வெளிவரும்.
*******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக