செவ்வாய், 2 மே, 2023

அஞ்சல் துறையில் இரண்டு தொழிற்சங்கங்களின் 
அங்கீகாரத்தை ரத்து செய்தது மத்திய அரசு!
தொழிற்சங்கங்களின் குட்டி முதலாளித்துவத் 
தலைவர்களின் தற்குறித்தனமே காரணம்!
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------
அஞ்சல் துறையில் செயல்பட்டு வரும் இரண்டு 
தொழிற்சங்கங்களின் (AIPEU, NFPE) சங்க அங்கீகாரத்தை 
அண்மையில் (ஏப்ரல் 26, 2023) மத்திய அரசு ரத்து 
செய்துள்ளது. 
(AIPEU = All India Postal Employees Union.
NFPE = National Federation of Postal Employees).

அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான காரணங்களாக 
மத்திய அரசு கூறியிருக்கும் காரணங்கள் legally valid 
என்றபோதிலும் அவை அற்பக் காரணங்களே. 
மேற்கூறிய இரு சங்கங்களின் அங்கீகாரத்தை 
நிரந்தரமாக ரத்து செய்வதற்குரிய வலுவான 
காரணங்கள் அல்ல அவை.    

இன்றோடு (மே 02, 2023) அங்கீகாரம் ரத்தாகி ஒரு வாரம் 
முடிகிறது. ஒரு வார காலத்திற்கு அங்கீகாரம் ரத்து 
என்பதே போதுமான நடவடிக்கை என்று கருதி 
மத்திய அரசு மேற்குறித்த இரண்டு சங்கங்களின் 
அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு வார 
காலத்திற்கும் மேலாக அங்கீகாரப் பறிப்பை 
நீட்டித்துக் கொண்டே செல்வது the punishment does not 
commensurate with the gravity of the offence என்பதையே சுட்டும். 

மொத்தமுள்ள சுமார் ஐந்து லட்சம் அஞ்சல் ஊழியர்களில் 
இச்சங்கங்களுக்கு மூன்று லட்சம் ஊழியர்களுக்கு 
மேல் ஆதரவு இருக்கிறது என்ற யதார்த்தத்தையும் 
கணக்கில் கொள்ள வேண்டும். 

அரசு ஊழியர்களுக்கு அரசியல் உரிமை எதுவும் கிடையாது.
இதுவே பிரிட்டிஷ் ஆட்சி முதற்கொண்டு இன்று வரை 
காலங்காலமாக நீடித்து வரும் நிலைமை ஆகும். எனவே 
மத்திய அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் 
(CCS Conduct Rules 1964) எந்த ஒரு அரசியல் கட்சியின் 
நடவடிக்கைகளிலும் அரசு ஊழியர்கள் பங்கேற்பதை 
கடுமையாகத் தடுக்கின்றன. அரசியல் கட்சிகளில் 
உறுப்பினராக இருப்பது முதல்  அக்கட்சிக்கு நன்கொடை 
கொடுப்பது வரை அனைத்தையும்  அரசு ஊழியர்கள்  
மேற்கொள்ள இயலாது. நடத்தை விதிகள் அவற்றை 
அனுமதிப்பதில்லை.

என்றாலும் நடத்தை விதிகளைக் காலின் கீழ் போட்டு 
மிதித்துக்கொண்டு லட்சக் கணக்கான மத்திய மாநில 
அரசு ஊழியர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் 
கட்சிகளில் இணைந்து அன்றும் இன்றும் செயல்பட்டுக் 
கொண்டுதான் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் 
கட்சிகளுக்கு நன்கொடை வசூலித்துக் கொடுத்துக் 
கொண்டுதான் இருக்கிறார்கள், பகிரங்கமாக அல்ல, 
ரகசியமாக.

பல ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது சிறையில் இருந்த 
மறைந்த நக்சல்பாரித் தலைவர் தோழர் கொண்டபள்ளி 
சீதாராமையா (மக்கள் யுத்தக் குழு)  அவர்களை, சிறையில்  
இருந்து தப்பிக்க வைத்து வெளியே கொண்டு வரும் ஒரு 
முயற்சி நடைபெற்றது; இது வெற்றியும் பெற்றது. 

இந்நிகழ்வின்போது மருத்துவமனையில் நக்சல்பாரிகள் 
நடத்திய ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்து போக 
நேர்ந்தது. இந்த நடவடிக்கைக்கு அன்று தேவைப்பட்ட 
சுமார் ஒரு லட்ச ரூபாய் பணத்தில் பெரும்பகுதியை 
கட்சிக்கு (மக்கள் யுத்தக் குழுவிற்கு) ரகசியமாக 
வழங்கியவர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்களே 
என்பதை நான் நன்கறிவேன்; அதை இங்கு பதிவு செய்ய 
விரும்புகிறேன். கருணாநிதியின் போலீசால் போலி 
என்கவுண்டரில் கொல்லப்பட்ட மறைந்த நக்சல்பாரிப் 
புரட்சியாளர் தோழர் ரவீந்திரன் நிதி திரட்டியதை  
நான் நன்கறிவேன். (தோழர் ரவீந்திரன் இளநிலைப் 
பொறியாளராக எங்களுடன் (Govt Telecom) அன்று 
பணியாற்றியவர்). 

நமது அஞ்சல் துறையின் குட்டி முதலாளித்துவத் 
தலைவர்கள் யாரும் நக்சல்பாரிகள் அல்ல. அவர்கள் 
போலி கம்யூனிஸ்டுகள். ஜோதிபாசு, புத்ததேவ் 
பட்டாச்சாரியா, பினராயி விஜயன் ஆகியோரைப் 
பார்த்து வளர்ந்தவர்கள். எனவே அவர்களிடம் புரட்சிகர
விழிப்புணர்வு என்பது மருந்துக்கும் கிடையாது. 
எனவே அவர்கள் என்ன செய்தார்கள்?

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் CITU சங்கத்திற்கும் நன்கொடை 
கொடுத்தார்கள். மிகவும் பகிரங்கமாகக் கொடுத்தார்கள்.
காசோலை மூலம் கொடுத்தார்கள். அவ்வளவுதான்!
மாட்டிக் கொண்டார்கள். 

மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களை 
அங்கீகரிக்கும் சட்டப்படி, எந்த ஒரு தொழிற்சங்கமும் 
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை வழங்கக் 
கூடாது. இச்சட்டத்தை மீறி, எந்தச் சங்கமாவது எந்தக் 
கட்சிக்கேனும் நன்கொடை வழங்கி இருந்தால், 
அச்சங்கத்தின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்யும்.

AIPEU, NFPE சங்கங்களின் குட்டி முதலாளித்துவத் 
தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ 30,000 நன்கொடை 
வழங்கி இருக்கிறார்கள்; காசோலை மூலமாக! 
Utter foolishness! 

தடை செய்யப்பட்ட கட்சியின் தலைவரை
சிறை உடைப்பு (jail break) செய்து விடுதலை செய்ய 
நிதி திரட்டிய தோழர் ரவீந்திரனின் மயிரைக்கூட 
போலீசாலும், கியூ பிராஞ்சாலும், உளவுத்துறையாலும் 
பிடுங்க முடியவில்லை. ஆனால் கேவலம் ஒரு அற்பத் 
தொகையான ரூ 30,000ஐ மார்க்சிஸ்ட் கட்சிக்கு 
காசோலை மூலம் கொடுத்து விட்டு மாட்டிக் 
கொண்டார்கள் குட்டி முதலாளித்துவப் பிழைப்புவாதத் 
தலைவர்கள்!

இறுதியாக அங்கீகாரத்தை ரத்து செய்த தொலைதொடர்பு-
ரயில்வேத் துறைகளின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ 
அவர்களுக்கு எங்களின் வேண்டுகோள்!

பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்றார் லெனின்
மார்க்சிஸ்ட்  கட்சி பன்றித் தொழுவச் சீமான்களின் கட்சி!
பன்றித் தொழுவச் சீமான் ஸ்ரீமான் சோம்நாத் சட்டர்ஜி (CPM) 
பன்றித் தொழுவத்தில் சபாநாயகராக இருந்தவர். ஸ்ரீமான் 
இந்திரஜித் குப்தா (CPI)  உள்துறை அமைச்சராகவே 
இருந்தவர். CPI, CPM கட்சிகள் புரட்சிகரக் கட்சிகள்
அல்ல. அவை எதிர்ப்புரட்சிகர அமைப்புகள். குறிப்பாக 
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று
இந்திய மக்களிடையே நன்கு அம்பலப் பட்டுச் 
சீரழிந்த கட்சி.

அங்கீகார ரத்து என்னும் நடவடிக்கையானது, 
செல்வாக்கிழந்து போன CPM கட்சி தனது 
கிழிந்துபோன புரட்சிகர முகமூடியைத் 
தைத்து அணிவதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பே ஆகும்.  
இத்தகைய ஒரு வாய்ப்பை பிழைப்புவாத CPM கட்சிக்கு
வழங்குவது அறிவுடைமை ஆகாது. 

எனவே போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான CPMன் 
தலைமையில் உள்ள AIPEU, NFPE என்னும் அஞ்சல் 
துறையின் இரண்டு தொழிற்சங்கங்களின் 
அங்கீகாரத்தை ரத்து செய்ததை உடனடியாக 
முடிவுக்குக்  கொண்டு வந்து அச்சங்கங்களின் 
அங்கீகாரத்தை மீண்டும் வழங்குமாறு கேட்டுக் 
கொள்கிறோம்.

தோழமையுள்ள, 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் மாவட்டச் செயலாளர் 
NFTE BSNL, தமிழ்நாடு, சென்னை.
நாள்: 02.05.2023, 2020 hours.
************************************************  
       



  
                 
   







         

      

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக