செவ்வாய், 31 அக்டோபர், 2023

வெளியே போ!
---------------------
பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானியர்கள்
அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் 
அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற 
வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு 
உத்தரவிட்டு உள்ளது. இதற்கான கடைசி 
தேதி நவம்பர் 1, 2023.

எனவே ஆபிகானியர்கள் பாகிஸ்தானை விட்டு 
வெளியேறி வருகின்றனர்.
*******************************************  

மனிஷ் சிசோடியாவுக்கு 10 ஆண்டு   பு 
கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும்!
சட்ட நிபுணர்கள் கருத்து!




கேஜ்ரிவாலின் சீடன் மனீஷ் சிசோடியா பிரிந்த 
ரூ 338 கோடி ஊழல் நிரூபிக்கப்பட்டது.
எங்கே போனான் திருட்டுப் பயல் அண்ணா ஹசாரே?


 

திங்கள், 30 அக்டோபர், 2023

பசும்பொன் தேவர் குறித்த மதிப்பீடு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
பசும்பொன் தேவர் அவர்கள் (1908-1963) 55 ஆண்டு 
காலமே இவ்வுலகில் வாழ்ந்தார். அவரின் காலம் 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நம் நாடு அடிமைப் 
பட்டுக் கிடந்த காலம்.

மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகத் 
தம் அரசியல் வாழ்வைத் தொடங்கிய தேவர் அவர்கள் 
இறுதி வரை சமரசமின்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை 
எதிர்த்து நின்றவர் ஆவார்.

தேச விடுதலைப்போரின் காலக்கட்டத்தில், ஒரு நபரின் 
பாத்திரத்தை மதிப்பீடு செய்யத் தகுந்த காரணி என்ன?
அவர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியா 
இல்லையா என்பதுதான் அக்காரணி ஆகும்; இதுவே 
தீர்மானகரமான காரணிஆகும். இதுவே மார்க்சிய 
அளவுகோலும் ஆகும்.

இதன்படி பார்த்தால் பசும்பொன் தேவர் அவர்கள் 
சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகத் 
திகழ்ந்த வரலாற்று உண்மை புலப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சமகாலத்து தலைவர்களுள் 
ஒருவரான ஈ வெ ராமசாமி தீவிர பிரிட்டிஷ் 
விசுவாசியாக இருந்து வரலாற்றுக் களங்கம் ஆனார்.

பிரிட்டிஷ் விசுவாசியான ஈ வெ ராமசாமி பசும்பொன் 
தேவர் மீது தீராத வன்மம் கொண்டவராக இருந்தார்.
தேவர் குறித்த அவதூறுகளை மட்டுமின்றி, தேச 
விடுதலைப் போரில் பங்களித்த அனைவரையும் பற்றிய 
அவதூறுகளை உருவாக்கிப் பரப்பினார்  ஈ வெ ராமசாமி.
அவற்றை முறியடித்து போற்றுதலுக்குரிய பசும்பொன் 
தேவரின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவது 
முற்போக்காளர்களின் கடமை ஆகும்.
*******************************************************.



     


ஞாயிறு, 29 அக்டோபர், 2023

பினராயி விஜயனிடம் தோற்றுப்போன
இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் 
12 மணி நேர வேலைநேரமும்! 
-----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
ஒரு தொழிலாளியின் வேலைநேரம் எவ்வளவு இருக்க 
வேண்டும் என்பது பற்றி காரல் மார்க்ஸ் மிகப்பெரிதும் 
அக்கறை கொண்டிருந்தார். என்றாலும் மார்க்சின் 
காலத்தில் எட்டு மணி நேர வேலை என்பது 
சட்டமாக்கப் படவில்லை. அப்போதெல்லாம் 
தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் 
வேலை செய்வது வழக்கமான நடைமுறையாக 
இருந்தது.  

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மே தினத்தில்,
அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தின் 
தொழிலாளர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்து
எட்டுமணி நேர வேலையைச் சட்டமாக்கினர்.  

இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் இந்தியத் 
தொழிலாளர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது 
தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் 
வேலை செய்து வருகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்கள் வாரத்துக்கு 70 மணி 
நேரம் வேலை என்பதன் மூலம் நாளொன்றுக்கு 
12 மணி நேரம் வேலை செய்வதைக் குறிப்பிடுகிறார்.
அதாவது நாளொன்றுக்கு 11 மணி 40 நிமிடம் 
(11-2/3 மணி) வீதம் ஆறு நாட்கள் வேலை செய்தால்,
வாரத்துக்கு 70 மணி நேர வேலை என்ற கணக்கு
வருவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.

நாராயணமூர்த்தி அவர்கள் ஐ ஐ டி கான்பூரில் 
எம் டெக் படித்தவர். இன்போசிஸ் நிறுவனத்தைத் 
தோற்றுவித்து வளர்த்தவர்களில் ஒருவர். நிறுவன 
மேலாண்மை, தொழிற்சாலை மேலாண்மை 
ஆகியவற்றில் நிறைந்த அனுபவம் பெற்றவர்.

என்றாலும், வாரத்துக்கு 70 மணி நேர வேலை என்ற 
கருத்து அவரின் சுயசிந்தனையின் வெளிப்பாடு அல்ல.
It is NOT his brain child! நாளொன்றுக்கு 12 மணி நேர 
வேலை என்ற கருத்தை அவர் கேரள மார்க்சிஸ்ட் 
முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்தே பெற்றார்.

கேரளத்தில் 12 மணி நேர வேலையைச் சட்டம் 
ஆக்கியவர் பினராயி விஜயன். ஏதோ ஒரு 
சிறிய தனியார் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை 
சட்டமாக்கப் பட்டுள்ளது என்றால் ஒழிந்து 
போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் 
மாநில அரசுத் துறையில், KSRTC எனப்படும் 
அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனத்தில் 
பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் 
பணிபுரியும் இடத்தில், எட்டு மணி நேர வேலையை 
ஒழித்துக் கட்டி விட்டு 12 மணி நேர வேலையைச் 
சட்டமாக்கி உள்ளார் பினராயி விஜயன்.

கொடிய சுரண்டலுக்குப் பேர்போன தனியார் நிறுவன 
முதலாளிகளே வேலைநேரத்தை அதிகரிப்பதற்கு  
அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் போலி 
மார்க்சிஸ்ட்டான பினராயி விஜயன் மிகவும் 
துணிச்சலுடன் பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் 
செய்து 12 மணி நேர வேலையைஅச் சட்டமாக்கி 
உள்ளார்.

பினராயி விஜயன் 12 மணி நேர வேலையைச் சட்டமாக்கிய 
பின்னரே, இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு 12 மணி 
நேர வேளை பற்றிப் பேசுவதற்கான தைரியம் 
வந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட தங்கம் தென்னரசுவும் மு க 
ஸ்டாலீனும் சேர்ந்து 12 மணி நேர வேலையை
நடைமுறைப் படுத்த முயன்றனர் என்பதை 
நினைத்துப் பாருங்கள்.

இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பவர் 
போலி கம்யூனிஸ்ட் பினராயி விஜயனே!

போலி நக்ஸல்பாரித் தற்குறிகளின் பேதைமை!
--------------------------------------------------------------------------
12 மணி நேர வேலை என்னும் பிற்போக்குச் சட்டம் 
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத நிலையில் 
கேரளத்தில் போலி மார்க்சிஸ்ட் விஜயனால் கொண்டு 
வரபட்டது. என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள போலி 
நக்சல்பாரித் தற்குறிகள் யாரும் இதைக் 
கண்டிக்கவில்லை. இந்தத் தற்குறிகளுக்கு 
கேரளத்தில் 12 மணி நேர வேலை சட்டமாகி விட்டது 
என்ற உண்மைகூடத் தெரியாது.

இந்த அநியாயத்தை முதன் முதலில் அம்பலப் படுத்தியது
நியூட்டன் அறிவியல் மன்றமே. ஆனால் போலி 
மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும் வாயில் 
கொழுக்கட்டையை  அடைத்துக் கொண்டு
பினராயி விஜயனை அம்பலப் படுத்த மறுத்து 
தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்தனர்.

இன்று நாராயண மூர்த்தி 12 மணி நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என்றால், 
கேரளத்திலே எந்த எதிர்ப்பும் இல்லாமல் 12 மணி நேர 
வேலை சட்டமாகி விட்டது என்ற தைரியம்தான்!
பினராயி விஜயனும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இருக்கும் வரை இந்தியாவில் புரட்சி ஒருபோதும் 
வராது என்ற நம்பிக்கைதான்!
************************************************ 


            

 

 
  

   
       

திங்கள், 23 அக்டோபர், 2023

இந்திய வேளாண்மையில் சுவாமிநாதனின் பாத்திரம்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது 
நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 
சிறுவன். ஆண்டு 1965! லால் பகதூர் சாஸ்திரி 
இந்தியப் பிரதமராக இருந்த நேரம்.

அவர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து 
இருந்தார். நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை 
நிலவுவதால், மக்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் 
ஒரு வேளை உணவு உண்ணாமல் பட்டினி இருக்க 
வேண்டும்  என்பதுதான் சாஸ்திரியின் வேண்டுகோள்.

எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் ஊர் மக்களை 
வரவழைத்து, பள்ளியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். 
பிரதமரின் வேண்டுகோளைத் தாம் ஏற்பதாகவும் 
வாரந்தோறும் செவ்வாய் இரவு உணவைக் 
கைவிடுவதாகவும் அறிவித்தார். ஊரில் பலரும் 
தலைமையாசிரியரைப் பின்பற்றி ஒரு வேளை 
உணவைக் கைவிட்டனர். எங்கள் பள்ளித் 
தலைமையாசிரியர் காங்கிரஸ்காரர் அல்லர்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் 
ஒரு கலாச்சாரம் அப்போது நாட்டில் இருந்தது.   
பல உணவகங்கள் அப்போது வாரத்தில் ஒரு 
நாள் இரவு நேரத்தில் மூடப்பட்டிருந்தன.
 

நாட்டு மக்கள் அனைவரும் ஒருவேளை பட்டினி 
கிடக்க வேண்டும் என்று பிரதமர் சாஸ்திரி 
வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவலநிலை 
1965ல் ஏன் ஏற்பட்டது?

அ) 1962ல் நேரு காலத்தில் இந்திய சீனப்போர் 
ஏற்பட்டது. போரில் இந்தியா தோற்றது. இப்போரின் 
விளைவாக தீவிரமான பொருளாதார நெருக்கடியும் 
கடுமையான உணவுப் பற்றாக்குறையம் ஏற்பட்டன.

ஆ) தொடர்ந்து 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் 
ஏற்பட்டது. மூன்றாண்டு இடைவெளியில் இரண்டு போர்கள்!
இப்போர் உணவுப் பஞ்சத்தின் விளிம்புக்கு 
இந்தியாவைக் கொண்டு சென்றது.

இ) அக்காலத்தில் உணவு தானிய உற்பத்தியில் 
இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கவில்லை.
பெரிதும் இறக்குமதியை நம்பியே இருந்தது.
பிஎல் 480 (Public Law 480) என்னும் திட்டத்தின் கீழ் 
மக்காச்சோளம், கோதுமை, பால்பவுடர் ஆகியவை 
அமெரிக்காவின் உதவியாக இந்தியாவுக்கு 
வந்துகொண்டு இருந்தன.

ஈ) இந்திய பாகிஸ்தான் போரின்போது (1965)
லிண்டன் பி ஜான்சன் அமெரிக்க அதிபராக 
இருந்தார். இந்தியா போரை நிறுத்தாவிட்டால் 
உணவு தானியங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா 
வழங்காது என்று மிரட்டினார் லிண்டன் ஜான்சன்.

உ) 1967 தேர்தலில் காங்கிரஸ் ஏன் தமிழ்நாட்டில் 
மோசமாகத் தோற்றது? அரிசிப் பஞ்சம்தானே 
காரணம்! அப்போதெல்லாம் ரேஷன் கடைகளில் 
காணப்படும் மிக நீண்ட கியூவரிசைகளில் மக்கள் 
தங்கள் நேரத்தைத் தொலைப்பார்கள். அரிசித் 
தட்டுப்பாடு தீவிரமாக இருந்த காரணத்தால்தான் 
திமுக தலைவர் அண்ணாத்துரையால் ரூபாய்க்கு 
மூன்று படி அரிசி என்ற வாக்குறுதியைக் 
கொடுத்து பாமர மக்களின் வாக்குகளை அறுவடை
செய்ய முடிந்தது!    

ஊ) சுருங்கக் கூறின் 1960களில் தொடங்கிய உணவு 
தானியப் பற்றாக்குறை நாளும் அதிகரித்துக் கொண்டே 
சென்று பஞ்சத்திற்கும் பட்டினிச்சாவுகளுக்கும்
நாட்டை இட்டுச் செல்லும் என்ற நிலை சுவரில் 
எழுத்தாக வெளிப்பட்டது.    

இந்த அவலநிலையில் இருந்து நாட்டை விடுவிக்க 
பிரதமர் சாஸ்திரி முடிவு செய்தார். அப்போது, 1965ல் 
இந்தியாவின் மக்கள்தொகை 50 கோடியாக இருந்தது.
சாஸ்திரியிடம் தமிழரான சி சுப்பிரமணியம் 
வேளாண்துறை அமைச்சராக இருந்தார். இருவரும் 
சேர்ந்து, நாட்டின் தலைசிறந்த வேளாண் 
விஞ்ஞானியாக இருந்த, தமிழரான எம் எஸ் 
சுவாமிநாதனை அழைத்து வந்து நாட்டில் உணவுப் 
பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் பொறுப்பை 
அவரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில்தான் 
ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கங்களை 
சாஸ்திரி உருவாக்கினார். எல்லையில் போர் புரியும் 
ராணுவ வீரனுக்கும் உள்நாட்டில் வேளாண்மை
செய்யும் உழவனுக்கும் மரியாதை வழங்கும் 
முழக்கங்கள் இவை.    

யார் இந்த எம் எஸ் சுவாமிநாதன்? (Mankombu Sambasivan Swaminathan 1925-2023).  தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தவர் எம் எஸ் சுவாமிநாதன். 
இந்தியப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பின்னர் 
நெதர்லாந்தில் மரபணுவியல் கற்ற இவர் கேம்பிரிட்ஜ்  
பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய 
வேளாண் ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார்.  

இவரின் தந்தையார் ஒரு மருத்துவர். இவரையும் மருத்துவர் 
ஆகுமாறு குடும்பத்தார் கூறினார்கள். ஆனால் சுவாமிநாதன் 
ஆராய்ச்சியாளராக ஆனார். முன்னதாக 1948ல் இவர் 
ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும் அப்பணியில் 
சேரவில்லை.  அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலையில் 
வேலை கிடைத்தும் இவர் அதில் சேராமல், ஒடிஷா மாநிலத்தில் 
வேளாண் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார்.
கணக்கற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் 
இவர் எழுதி உள்ளார்.

2016ல் வெளியான ஒரு புள்ளி விவரப்படி சுவாமிநாதன் 33 தேசிய 
விருதுகளையும் 32 சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் 
ரமான் மக் சே சே விருதையும் (Ramon Magsaysay award) இவர் 
பெற்றுள்ளார். முன்னதாக 1961ல் இவருக்கு இந்தியாவின் 
உயர்ந்த அறிவியல் விருதான பட்நாகர் விருது 
(Shanthi Swarup Bhatnagar award) வழங்கப்பட்டது.  1987ல்  
இவருக்கு உலக உணவுப் பரிசு (World Food prize) வழங்கப் 
பட்டது. உணவு உற்பத்தித்துறையின் நோபெல் பரிசாக
இப்பரிசு கருதப் படுகிறது. இப்பரிசின் மூலம்
கிடைத்த பணத்தைக் கொண்டு தம் பெயரிலான 
ஆய்வு அறக்கட்டளையை (M S Swaminathan Research Foundation)
சுவாமிநாதன் உருவாக்கினார்.  
   

எம் எஸ் சுவாமிநாதன் ஒன்றல்ல இரண்டல்ல, 84 கெளரவ 
டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சீனா, ஜப்பான்,
இஸ்ரேல், பிரான்ஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 
பல்வேறு நாடுகளின் மதிப்புமிக்க விருதுகளும்  
இவருக்கு வழங்கப்பட்டு உள்ளன. இவர் பெற்றுள்ள 
விருதுகளையும் கெளரவத்தையும் பட்டியலிட்டால் பெருகும்.    

பஞ்சம் வந்து விடாமல் தடுத்து உணவு உற்பத்தியைப் 
பெருக்கும் கனத்த பொறுப்பை இவரின் தோள்களில் 
சுமத்திய லால் பகதூர் சாஸ்திரி 1966ல் மறைந்து 
விட்டார். எனினும் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்ற 
இந்திரா காந்தி, எம் எஸ் சுவாமிநாதனுக்குத் 
தமது அரசின் ஆதரவைத் தொடர்ந்து அளித்தார்.

தானிய உற்பத்தி போன்று 1970ல் நாட்டின் பால் உற்பத்தியைப் 
பெருக்கும்பொருட்டு, "பெருகும் வெள்ளம்" (Operation Flood)
என்னும் நடவடிக்கை இந்திரா காந்தி அரசால் 
மேற்கொள்ளப் பட்டது. இதற்குப் பொறுப்பேற்றவர் 
டாக்டர் வர்கிஸ் குரியன் என்பது நமக்கு நினைவிருக்கும்.   

உணவு உற்பத்தியைப் பெருக்கும் சவால் நிறைந்த 
பணியை ஏற்றுக் கொண்ட சுவாமிநாதன், நார்மன் 
போர்லாக் (Norman Borlaug 1914-2009) என்னும் அமெரிக்க 
வேளாண் விஞ்ஞானியின் ஒத்துழைப்பை நாடினார். 
நார்மன் போர்லாக் உலக நாடுகள் பலவற்றிலும் 
உணவு தானிய உற்பத்தியை, குறிப்பாக கோதுமை 
உற்பத்தியைப் பெருக்கியவர். வீரிய ரக வித்துக்களை 
உருவாக்கி விளைச்சலில் இமாலய சாதனை புரிந்தவர். 
பின்னாளில் இவர் 1970ஆம் ஆண்டிற்கான உலக 
அமைதிக்கான நோபெல் பரிசைப்பெற்றவர்.

சுவாமிநாதனின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு 
வந்த நார்மன் போர்லாக் பஞ்சாப், ஹரியானா 
உள்ளிட்ட மாநிலங்களைச் சுற்றிப் பார்த்தார்.அப்போது 
அவர் ஒரு வீரிய ரகக் கோதுமை வித்தை உருவாக்கி 
இருந்தார். மெக்சிகோவில் அதைப் பயிரிட்டதில் பல 
மடங்கு மகசூல் கிடைத்தது. இந்தியாவிலும் அது 
வெற்றி பெறும் என்று நார்மன் போர்லாக் கணித்தார்.  

மெக்சிகோவில் வெற்றி பெற்ற அந்தக் குட்டைரக 
கோதுமையை இந்தியாவில் பயிரிட சுவாமிநாதன் 
விரும்பினார். எனவே அங்கிருந்து 18,000 டன் 
கோதுமை வித்துக்களை இறக்குமதி செய்தார்.
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் அந்த வீரிய 
ரகக் கோதுமை பயிரிடப் பட்டது.அது பல மடங்கு 
மகசூலைத் தந்தது. விவசாயிகளிடம் அந்த 
வீரிய வித்தைப் பயிர் செய்ய பெரும் ஆர்வம் 
நிலவியது. இந்த நேரத்தில் வீரிய வித்துக்களை 
கோணிப்பையில் அடைத்து பல ஊர்களின் 
விவசாயிகளுக்கும் அனுப்ப முயன்றார் 
சுவாமிநாதன். கோணிப்பைகளுக்கான தேவை 
அதிகரித்த நிலையில் சிறைக்கைதிகளை 
கோணிப்பை தயாரிக்கும் வேலையில் அரசு 
ஈடுபடுத்தியது.

இந்த வீரிய ரகக் கோதுமையைப் பயிரிட்டதில் 
பன்மடங்கு  உற்பத்தி அதிகரித்தது. 1965-66ல் 
1.91 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை 
மகசூல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 5.15 மில்லியன் 
டன்னாக உயர்ந்தது. கோதுமையைத் தொடர்ந்து 
நெல், உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் வீரிய 
ரகங்களை உருவாக்கி விளைச்சளைப் பெருக்கினார் அவர். 


மேற்கூறிய உற்பத்திப் பெருக்கச் செயல்பாடுகள் 
பிற்காலத்தில் பசுமைப்புரட்சி என்று பெயர் பெற்றன.
பசுமைப் புரட்சி 1965ல் தொடங்கியதாகக் 
கொண்டால், பத்தே ஆண்டுகளில் இந்தியாவின் 
உணவு தானிய உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து 
இந்தியா தன்னிறைவு அடைந்தது. அமெரிக்காவின் 
இளக்காரத்துடன் கூடிய கருணையை நம்பி 
இருந்த அவலம் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில் 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்பதையும் 
தாண்டி உபரி உற்பத்தி என்ற உச்சத்தை இந்தியா 
அடைந்துள்ளது. இதற்குக் காரணமான எம் எஸ் 
சுவாமிநாதனுக்கு இந்த நாடு கடன் பட்டுள்ளது.


ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் 
வீரிய வித்துக்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்யும் 
முறையை எம் எஸ் சுவாமிநாதன் அறிமுகப்படுத்தியதால் 
சுற்றுச்சூழல் மாசடைகிறது; நிலத்தின் மண்வளம் 
பறிபோகிறது என்றெல்லாம் சுவாமிநாதன் மீது 
விமர்சனங்களும் எழுந்தன.

எனவே ரசாயன விவசாயத்தைக் கைவிட்டு 
இயற்கை விவசாயத்தை (organic farming)
மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் 
சமகாலத்தில் உரத்தே ஒலிக்கின்றன. 1960கள் 
வரை இந்தியாவில் பாரம்பரிய விவசாயம்தான் 
மேற்கொள்ளப் பட்டது. மாட்டுச் சாணம்தான் 
உரமாகப் பயன்பட்டது.

ரசாயன உரங்களுக்குப் பதில் சாணி உரம் என்பது 
வரவேற்கத் தக்கதே. ஆனால் நாடு முழுவதும் உள்ள 
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடிக்கு 
எவ்வளவு சாணி உரம் தேவைப்படும்? வண்டி வண்டியாக 
மலை மலையாகத் தேவைப்படுமே! அதற்கு கோடிக்கணக்கான 
மாடுகள் வேண்டுமே! அவ்வளவு மாடுகள் நாட்டில் 
இருக்கின்றனவா? இல்லையே!

அரசுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில்  சாகுபடிக்கேற்ற 
நிலத்தின் பரப்பு 160 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே. 
இன்றைய இந்திய மக்கள் தொகை 140 கோடி. இன்னும் 
10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரித்து விடும். 
ஆனால் நிலத்தின் பரப்பளவு அதிகரிக்காது. மாறாக 
மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக விளைநிலங்கள் 
குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். 

ஒரு பக்கம் பெருகிக் கொண்டே வரும் மக்கள்தொகை!
இன்னொரு பக்கம் சுருங்கிக் கொண்டே வரும் நிலப்பரப்பு!  
இந்நிலையில் ரசாயன உரங்களையும் வீரிய வித்துக்களையம் 
தவிர்க்க இயலுமா? அப்படித் தவிர்த்தால் தேவையான அளவு 
உணவு தானிய உற்பத்தியை எட்ட முடியுமா?  

1960களின் உணவுப்பஞ்சம் வெறும் கடந்த கால 
வரலாறாக மட்டுமே இன்று அறியப் படுகிறது. இன்று 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்ற 
கட்டத்தையும் கடந்து உபரி உற்பத்தி என்னும் உயர்ந்த 
இடத்தில் இந்தியா உள்ளது. அரிசி ஏற்றுமதியில் 
உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான்! 

எடுத்துக்காட்டாக, 2022-23ல் இந்தியாவின் பாசுமதி அரிசி 
ஏற்றுமதி 45 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதன் மதிப்பு 
38,000 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் வித்துச் சட்டம் 
1966ன்படி (Seeds act 1966) 34 வகையான பாசுமதி அரிசி 
வித்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. காஷ்மீர், 
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மலை  
அடிவாரத்திலும் பஞ்சாப் அரியானா மாநிலங்களிலும்  
பாசுமதி விளைகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே 
விளைந்தபோதிலும் உலக அளவில் பாசுமதி ஏற்றுமதியில் 
நாம் முதலிடத்தில் இருப்பது மெய்யாகவே பிரம்மாண்டமான 
சாதனை ஆகும். 

உற்பத்தியிலும் மகசூலிலும் நமக்கு இருக்கும் இந்த 
அந்தஸ்தைத் தக்கவைக்க வேண்டுமெனில்,  
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேரா(து) இயல்வது நாடு 
என்று வள்ளுவர் வரையறுத்த நாடாக இந்தியா திகழ 
வேண்டுமெனில், சுவாமிநாதன் அறிமுகம் செய்த நவீன 
வேளாண்மையை புறக்கணிக்க இயலுமா?

மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 
முதல் இடத்தை இந்தியா எட்டி விட்டதாகவே முன்கணிப்புப் 
புள்ளி விவரங்கள் (projected figures) தெரிவிக்கின்றன. உணவு 
உற்பத்தி சார்ந்த மாபெரும் எதிர்பார்ப்புகள் இந்தியா மீது 
இருக்கும் நிலையில், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், 
வீரிய வித்துக்கள் ஆகியவற்றைத் தவிர்த்த வேளாண்மையை 
சாத்தியப்படுத்த இயலுமா?   
  
தமது 98ஆம் வயதில், சென்னையில் 28.09.2023 அன்று 
பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் மறைந்தார்.
இந்திய வேளாண்மையின் வரலாற்றில் சுவாமிநாதனின் 
பாத்திரம் ஒரு திசைவழி மாற்றத்தை (paradigm shift) குறிக்கிறது.
அது இந்திய வேளாண்மையின் திசைவழியைத் தீர்மானித்து, வேளாண்மையை நவீனப்படுத்தி, உபரி உற்பத்தியைச் 
சாத்தியமாக்கியது. உலக அரங்கில் இந்தியாவைத் 
தலைநிமிரச் செய்த வேளாண் விஞ்ஞானி மறைந்த 
எம் எஸ் சுவாமிநாதனுக்கு  நமது அஞ்சலியைச் 
செலுத்துவோம்!
********************************************



 

   
  

    

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்!
சுரேஷ் கல்மாதி மீது வழக்கு! 
சிறையில் கம்பி எண்ணிய கல்மாதி! 

சனி, 21 அக்டோபர், 2023

காந்தியம் என்றால் என்ன?
------------------------------------------
பெரியாரியம் அம்பேத்காரியம் போன்று 
காந்தியமும் தனியுடைமையைப் பாதுகாக்கும் 
பிற்போக்கு சித்தாந்தமே. வர்க்க சமரசத்
தத்துவமே காந்தியம். 

மார்க்சியம் மட்டுமே வர்க்கப் போருக்கான 
ஒரே தத்துவம். மீதி அனைத்துத் தத்துவங்களும் 
வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான தத்துவங்களே.  
---------------------------------------------------------------------
பங்காரு அடிகளார் மறைவு!
குவாண்டம் சூப்பர் பொசிஷனும் 
இந்து சூப்பர் பொசிஷனும்! 
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
கடவுள் இல்லை என்பதே முழுமுதல் உண்மை!
ஆனால் மதம் இருக்கிறது! ஒரு மதம் அல்ல, 
ஒரு நூறு என்ற அளவில் மதங்கள் இருக்கின்றன.

இல்லாத கடவுளுக்கு கணக்கற்ற மதங்கள்! இதுதான் 
உலகம்! இல்லாத கடவுளை இருப்பவர் போல 
வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன மதங்கள்.

இந்து மதம் உலகின் ஏனைய மதங்களில் இருந்து
மிகப்பெரிதும் வேறுபட்டது. Of all the religions Hinduism is 
the most irreligious religion.

இந்து மதம் கணக்கற்ற கடவுள்களைக் கொண்டது.
மேலும் கணக்கற்ற cultகளையும் கொண்டது.
இங்கு cult என்பதன் சரியான பொருளை அறிந்திட 
வேண்டும்.   

இதில் பங்காரு அடிகளார் தமது முயற்சியில் தனித்த 
ஒரு cultஐ உருவாக்கினார்.

இன்றும் கூட உலகின் சில மதங்களில் பெண்களுக்கு 
வழிபாட்டு உரிமை வழங்கப் படுவதில்லை.
ஆனால் பங்காரு அடிகளார் மாதவிலக்கு 
நேரங்களிலும்கூட பெண்கள் கோவிலுக்கு வரலாம்; 
வழிபடலாம் என்று புதியதொரு நடைமுறையை 
ஏற்படுத்தினார். வேறு எந்த மதத்திலும் இப்படி 
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.

புட்டபர்த்தி சாய்பாபா மோதிரம் வரவழைப்பது,
விபூதி வரவழைப்பது போன்ற மந்திர தந்திரச்
செயல்களை செய்து தம்மை கடவுளின் 
அவதாரமாகக் கற்பிக்க முயன்றார். ஆனால் 
பங்காரு அடிகளாரோ இத்தகைய மாய மந்திரங்களை 
மேற்கொள்ளாமல் இந்து மதத்தில் நிலவும் 
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அதை நடைமுறைப் 
படுத்தினார்.

மாதவிலக்கு நேரத்தில், அந்த மூன்று நாட்களில் 
பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் வைத்துக் 
கொண்டு அலுவலகம் செல்வது போல, கோவிலுக்குச் 
செல்லலாம்; வழிபாடு செய்யலாம் என்ற 
ஒரு புதிய நடைமுறையை பங்காரு அடிகளார் 
அறிமுகப் படுத்தினார். அந்தரங்க சுத்தியுடன் 
அதை அவர் நடைமுறைப் படுத்தியதால் 
அப்பழக்கம் இன்று நிலைபேறு உடையதாக ஆகி விட்டது.

இந்து மதம் காலந்தோறும் நிகழும் மாற்றங்களுக்கு 
ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. 
வள்ளலார், பங்காரு அடிகளார் போன்றோர் இந்து  
சமய சீர்திருத்தவாதிகள். 

சமூகத்தின் மேல்தட்டுப் பெருமக்கள் முதல் அடித்தட்டு 
மக்கள் வரை  புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு பக்தர்கள் 
இருந்தனர். ஆனால் பங்காரு அடிகளாரோ ஒடுக்கப்பட்ட 
வர்க்கத்து மக்களையே தமது பக்தர்களாகக் 
கொண்டிருந்தார்.

தமது முதிர்ந்த வயதில் நேற்று (19.10.2023) பங்காரு 
அடிகளார் மறைந்தார் என்று அறிகிறோம். இந்து 
சமய சீர்திருத்தவாதியாக வரலாற்றில் அவர் இடம்
பெறுகிறார். இக்கட்டுரை அவர் ஈடுபட்ட பல்வேறு 
துறைகளில் அவரின் பங்களிப்பு பற்றிய 
முழுமையான மதிப்பீடு அல்ல.அப்படி ஒரு 
மதிப்பீட்டைச் செய்ய வேண்டிய தேவை எதுவும் 
எமக்கு இல்லை. இந்து மதம் vis-a-vis பங்காரு அடிகளார் 
என்ற பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே எமது
மதிப்பீடு அமைகிறது.

உலகின் மக்கள்தொகை இன்று 800 கோடியை எட்டி 
உள்ளது. இந்த 800 கோடியில் கிறித்துவ மதத்தைப் 
பின்பற்றும் மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
என்றாலும் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக
மேற்கில் கடவுள் நம்பிக்கை ஆட்டம் கண்டு கொண்டே 
வருகிறது. கிறித்துவத்தின் மீது நம்பிக்கை இழக்கும்
மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் பல்கிப் 
பெருகுவதால், போப்பாண்டவர்கள் நடுக்கத்துக்கு 
ஆளாகி நிற்கின்றனர்.  

இஸ்லாமிய சீக்கிய மதங்கள் மிகவும் கறார்த் 
தன்மையுடன் மாற்றங்களுக்கு இடம் கொடாமல் 
பழமையைப் பேணி நிற்கும் மதங்களாகத் 
திகழ்கின்றன. எனவே இவ்விரு மதங்களை விட்டு 
வெளியேறுவோர் மிக மிகக்குறைவு.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் லிபரலிசம் 
செல்வாக்குப் பெற்றுள்ளதால் கிறித்துவ மதத்திலும் 
அதே லிபரலிசத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாதபோது   
மக்கள் கிறித்துவத்தை விட்டு வெளியேறி 
விடுகின்றனர்.

அப்படியானால் இந்து மதம்? அதன் நிலைமை என்ன?
ஒரு மதம் என்ற வரையறைக்குள் இந்து மதத்தை 
அடக்க முடியாது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் 
Of all the religions Hinduism is the most irreligious religion என்று 
கூறி இருக்கிறேன். எனவே ஒரு மதத்திற்கு ஏற்படும் 
பாதிப்புகள் மதமற்ற மதமான (irreligious religion) இந்து 
மதத்திற்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் There is NO difference 
between  "to be a Hindu" and "NOT to be a Hindu".

குவாண்டம் தியரியில் வருகிற ஷ்ராடிங்கரின் பூனை 
ஒரே நேரத்தில் உயிருடன் இருக்கும்; செத்தும் இருக்கும்.
இது குவாண்டம் சூப்பர் பொசிஷன் எனப்படும். 
இந்து மதமும் குவாண்டம் தியரி போன்று ஒரு 
சூப்பர் பொசிஷியனுக்கு இடம் அளிக்கிறது.
இதற்கு "Hindu superposition" என்று பெயரிடுகிறேன் நான்.
இந்த சூப்பர் பொசிஷன்படி, ஒருவர் ஒரே நேரத்தில் 
இந்துவாகவும் இருக்கலாம்; இந்து அற்றவராகவும் 
இருக்கலாம் (Hindu and Non Hindu at the same time).
புரிகிறதா?
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அகல்விரிவானதும் ஆழமானதுமான (comprehensive and deep) 
வாசிப்பும் சிந்தனை வளமும் அறிவியல் பின்னணியும் 
இல்லாதவர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு 
இக்கட்டுரையை வாசிக்காமல் இருந்து ஒத்துழைக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
*********************************************************** 
1) கறார்த் தன்மை 
2) கட்டுப்பாடுகள் 
3) பழமையை மாற்றத்துக்கு உட்படுத்தாமல் 
பேணிப் பாதுகாப்பது 
இம்மூன்றும் ஒரு மதத்தின் அடிப்படையான 
கூறுகள். இவை ஜனநாயக மறுப்புக்குச் 
சிறந்த உதாரணங்கள். மதம் என்றாலே 
ஜனநாயக மறுப்புத்தான்!

ஆனால் இந்து மதமானது ஒரு மதம் அல்ல.
எனவே மதத்தின் பண்புகள் அதற்கு
இருப்பதில்லை. அதாவது ஜனநாயக 
மறுப்பு அங்கு இல்லை.

பைபிள் அல்லது குரான் கிருத்துவ இஸ்லாமிய 
மதங்களின் புனித நூல் ஆகும். ஆனால் இந்து 
மதத்திற்கு அப்படி எந்தப் புனிதநூலும் கிடையாது.
புனிதநூல்கள் சர்வாதிகாரத்தின் அடையாளங்கள்.
புனித நூல் இல்லாதபோது சர்வாதிகாரத்திற்கான 
தேவை அங்கு இல்லை.

    
 

.