திங்கள், 23 அக்டோபர், 2023

இந்திய வேளாண்மையில் சுவாமிநாதனின் பாத்திரம்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது 
நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 
சிறுவன். ஆண்டு 1965! லால் பகதூர் சாஸ்திரி 
இந்தியப் பிரதமராக இருந்த நேரம்.

அவர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து 
இருந்தார். நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை 
நிலவுவதால், மக்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் 
ஒரு வேளை உணவு உண்ணாமல் பட்டினி இருக்க 
வேண்டும்  என்பதுதான் சாஸ்திரியின் வேண்டுகோள்.

எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் ஊர் மக்களை 
வரவழைத்து, பள்ளியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். 
பிரதமரின் வேண்டுகோளைத் தாம் ஏற்பதாகவும் 
வாரந்தோறும் செவ்வாய் இரவு உணவைக் 
கைவிடுவதாகவும் அறிவித்தார். ஊரில் பலரும் 
தலைமையாசிரியரைப் பின்பற்றி ஒரு வேளை 
உணவைக் கைவிட்டனர். எங்கள் பள்ளித் 
தலைமையாசிரியர் காங்கிரஸ்காரர் அல்லர்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் 
ஒரு கலாச்சாரம் அப்போது நாட்டில் இருந்தது.   
பல உணவகங்கள் அப்போது வாரத்தில் ஒரு 
நாள் இரவு நேரத்தில் மூடப்பட்டிருந்தன.
 

நாட்டு மக்கள் அனைவரும் ஒருவேளை பட்டினி 
கிடக்க வேண்டும் என்று பிரதமர் சாஸ்திரி 
வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவலநிலை 
1965ல் ஏன் ஏற்பட்டது?

அ) 1962ல் நேரு காலத்தில் இந்திய சீனப்போர் 
ஏற்பட்டது. போரில் இந்தியா தோற்றது. இப்போரின் 
விளைவாக தீவிரமான பொருளாதார நெருக்கடியும் 
கடுமையான உணவுப் பற்றாக்குறையம் ஏற்பட்டன.

ஆ) தொடர்ந்து 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் 
ஏற்பட்டது. மூன்றாண்டு இடைவெளியில் இரண்டு போர்கள்!
இப்போர் உணவுப் பஞ்சத்தின் விளிம்புக்கு 
இந்தியாவைக் கொண்டு சென்றது.

இ) அக்காலத்தில் உணவு தானிய உற்பத்தியில் 
இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கவில்லை.
பெரிதும் இறக்குமதியை நம்பியே இருந்தது.
பிஎல் 480 (Public Law 480) என்னும் திட்டத்தின் கீழ் 
மக்காச்சோளம், கோதுமை, பால்பவுடர் ஆகியவை 
அமெரிக்காவின் உதவியாக இந்தியாவுக்கு 
வந்துகொண்டு இருந்தன.

ஈ) இந்திய பாகிஸ்தான் போரின்போது (1965)
லிண்டன் பி ஜான்சன் அமெரிக்க அதிபராக 
இருந்தார். இந்தியா போரை நிறுத்தாவிட்டால் 
உணவு தானியங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா 
வழங்காது என்று மிரட்டினார் லிண்டன் ஜான்சன்.

உ) 1967 தேர்தலில் காங்கிரஸ் ஏன் தமிழ்நாட்டில் 
மோசமாகத் தோற்றது? அரிசிப் பஞ்சம்தானே 
காரணம்! அப்போதெல்லாம் ரேஷன் கடைகளில் 
காணப்படும் மிக நீண்ட கியூவரிசைகளில் மக்கள் 
தங்கள் நேரத்தைத் தொலைப்பார்கள். அரிசித் 
தட்டுப்பாடு தீவிரமாக இருந்த காரணத்தால்தான் 
திமுக தலைவர் அண்ணாத்துரையால் ரூபாய்க்கு 
மூன்று படி அரிசி என்ற வாக்குறுதியைக் 
கொடுத்து பாமர மக்களின் வாக்குகளை அறுவடை
செய்ய முடிந்தது!    

ஊ) சுருங்கக் கூறின் 1960களில் தொடங்கிய உணவு 
தானியப் பற்றாக்குறை நாளும் அதிகரித்துக் கொண்டே 
சென்று பஞ்சத்திற்கும் பட்டினிச்சாவுகளுக்கும்
நாட்டை இட்டுச் செல்லும் என்ற நிலை சுவரில் 
எழுத்தாக வெளிப்பட்டது.    

இந்த அவலநிலையில் இருந்து நாட்டை விடுவிக்க 
பிரதமர் சாஸ்திரி முடிவு செய்தார். அப்போது, 1965ல் 
இந்தியாவின் மக்கள்தொகை 50 கோடியாக இருந்தது.
சாஸ்திரியிடம் தமிழரான சி சுப்பிரமணியம் 
வேளாண்துறை அமைச்சராக இருந்தார். இருவரும் 
சேர்ந்து, நாட்டின் தலைசிறந்த வேளாண் 
விஞ்ஞானியாக இருந்த, தமிழரான எம் எஸ் 
சுவாமிநாதனை அழைத்து வந்து நாட்டில் உணவுப் 
பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் பொறுப்பை 
அவரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில்தான் 
ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கங்களை 
சாஸ்திரி உருவாக்கினார். எல்லையில் போர் புரியும் 
ராணுவ வீரனுக்கும் உள்நாட்டில் வேளாண்மை
செய்யும் உழவனுக்கும் மரியாதை வழங்கும் 
முழக்கங்கள் இவை.    

யார் இந்த எம் எஸ் சுவாமிநாதன்? (Mankombu Sambasivan Swaminathan 1925-2023).  தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தவர் எம் எஸ் சுவாமிநாதன். 
இந்தியப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பின்னர் 
நெதர்லாந்தில் மரபணுவியல் கற்ற இவர் கேம்பிரிட்ஜ்  
பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய 
வேளாண் ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார்.  

இவரின் தந்தையார் ஒரு மருத்துவர். இவரையும் மருத்துவர் 
ஆகுமாறு குடும்பத்தார் கூறினார்கள். ஆனால் சுவாமிநாதன் 
ஆராய்ச்சியாளராக ஆனார். முன்னதாக 1948ல் இவர் 
ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும் அப்பணியில் 
சேரவில்லை.  அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலையில் 
வேலை கிடைத்தும் இவர் அதில் சேராமல், ஒடிஷா மாநிலத்தில் 
வேளாண் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார்.
கணக்கற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் 
இவர் எழுதி உள்ளார்.

2016ல் வெளியான ஒரு புள்ளி விவரப்படி சுவாமிநாதன் 33 தேசிய 
விருதுகளையும் 32 சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் 
ரமான் மக் சே சே விருதையும் (Ramon Magsaysay award) இவர் 
பெற்றுள்ளார். முன்னதாக 1961ல் இவருக்கு இந்தியாவின் 
உயர்ந்த அறிவியல் விருதான பட்நாகர் விருது 
(Shanthi Swarup Bhatnagar award) வழங்கப்பட்டது.  1987ல்  
இவருக்கு உலக உணவுப் பரிசு (World Food prize) வழங்கப் 
பட்டது. உணவு உற்பத்தித்துறையின் நோபெல் பரிசாக
இப்பரிசு கருதப் படுகிறது. இப்பரிசின் மூலம்
கிடைத்த பணத்தைக் கொண்டு தம் பெயரிலான 
ஆய்வு அறக்கட்டளையை (M S Swaminathan Research Foundation)
சுவாமிநாதன் உருவாக்கினார்.  
   

எம் எஸ் சுவாமிநாதன் ஒன்றல்ல இரண்டல்ல, 84 கெளரவ 
டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சீனா, ஜப்பான்,
இஸ்ரேல், பிரான்ஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 
பல்வேறு நாடுகளின் மதிப்புமிக்க விருதுகளும்  
இவருக்கு வழங்கப்பட்டு உள்ளன. இவர் பெற்றுள்ள 
விருதுகளையும் கெளரவத்தையும் பட்டியலிட்டால் பெருகும்.    

பஞ்சம் வந்து விடாமல் தடுத்து உணவு உற்பத்தியைப் 
பெருக்கும் கனத்த பொறுப்பை இவரின் தோள்களில் 
சுமத்திய லால் பகதூர் சாஸ்திரி 1966ல் மறைந்து 
விட்டார். எனினும் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்ற 
இந்திரா காந்தி, எம் எஸ் சுவாமிநாதனுக்குத் 
தமது அரசின் ஆதரவைத் தொடர்ந்து அளித்தார்.

தானிய உற்பத்தி போன்று 1970ல் நாட்டின் பால் உற்பத்தியைப் 
பெருக்கும்பொருட்டு, "பெருகும் வெள்ளம்" (Operation Flood)
என்னும் நடவடிக்கை இந்திரா காந்தி அரசால் 
மேற்கொள்ளப் பட்டது. இதற்குப் பொறுப்பேற்றவர் 
டாக்டர் வர்கிஸ் குரியன் என்பது நமக்கு நினைவிருக்கும்.   

உணவு உற்பத்தியைப் பெருக்கும் சவால் நிறைந்த 
பணியை ஏற்றுக் கொண்ட சுவாமிநாதன், நார்மன் 
போர்லாக் (Norman Borlaug 1914-2009) என்னும் அமெரிக்க 
வேளாண் விஞ்ஞானியின் ஒத்துழைப்பை நாடினார். 
நார்மன் போர்லாக் உலக நாடுகள் பலவற்றிலும் 
உணவு தானிய உற்பத்தியை, குறிப்பாக கோதுமை 
உற்பத்தியைப் பெருக்கியவர். வீரிய ரக வித்துக்களை 
உருவாக்கி விளைச்சலில் இமாலய சாதனை புரிந்தவர். 
பின்னாளில் இவர் 1970ஆம் ஆண்டிற்கான உலக 
அமைதிக்கான நோபெல் பரிசைப்பெற்றவர்.

சுவாமிநாதனின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு 
வந்த நார்மன் போர்லாக் பஞ்சாப், ஹரியானா 
உள்ளிட்ட மாநிலங்களைச் சுற்றிப் பார்த்தார்.அப்போது 
அவர் ஒரு வீரிய ரகக் கோதுமை வித்தை உருவாக்கி 
இருந்தார். மெக்சிகோவில் அதைப் பயிரிட்டதில் பல 
மடங்கு மகசூல் கிடைத்தது. இந்தியாவிலும் அது 
வெற்றி பெறும் என்று நார்மன் போர்லாக் கணித்தார்.  

மெக்சிகோவில் வெற்றி பெற்ற அந்தக் குட்டைரக 
கோதுமையை இந்தியாவில் பயிரிட சுவாமிநாதன் 
விரும்பினார். எனவே அங்கிருந்து 18,000 டன் 
கோதுமை வித்துக்களை இறக்குமதி செய்தார்.
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் அந்த வீரிய 
ரகக் கோதுமை பயிரிடப் பட்டது.அது பல மடங்கு 
மகசூலைத் தந்தது. விவசாயிகளிடம் அந்த 
வீரிய வித்தைப் பயிர் செய்ய பெரும் ஆர்வம் 
நிலவியது. இந்த நேரத்தில் வீரிய வித்துக்களை 
கோணிப்பையில் அடைத்து பல ஊர்களின் 
விவசாயிகளுக்கும் அனுப்ப முயன்றார் 
சுவாமிநாதன். கோணிப்பைகளுக்கான தேவை 
அதிகரித்த நிலையில் சிறைக்கைதிகளை 
கோணிப்பை தயாரிக்கும் வேலையில் அரசு 
ஈடுபடுத்தியது.

இந்த வீரிய ரகக் கோதுமையைப் பயிரிட்டதில் 
பன்மடங்கு  உற்பத்தி அதிகரித்தது. 1965-66ல் 
1.91 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை 
மகசூல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 5.15 மில்லியன் 
டன்னாக உயர்ந்தது. கோதுமையைத் தொடர்ந்து 
நெல், உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் வீரிய 
ரகங்களை உருவாக்கி விளைச்சளைப் பெருக்கினார் அவர். 


மேற்கூறிய உற்பத்திப் பெருக்கச் செயல்பாடுகள் 
பிற்காலத்தில் பசுமைப்புரட்சி என்று பெயர் பெற்றன.
பசுமைப் புரட்சி 1965ல் தொடங்கியதாகக் 
கொண்டால், பத்தே ஆண்டுகளில் இந்தியாவின் 
உணவு தானிய உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து 
இந்தியா தன்னிறைவு அடைந்தது. அமெரிக்காவின் 
இளக்காரத்துடன் கூடிய கருணையை நம்பி 
இருந்த அவலம் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில் 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்பதையும் 
தாண்டி உபரி உற்பத்தி என்ற உச்சத்தை இந்தியா 
அடைந்துள்ளது. இதற்குக் காரணமான எம் எஸ் 
சுவாமிநாதனுக்கு இந்த நாடு கடன் பட்டுள்ளது.


ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் 
வீரிய வித்துக்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்யும் 
முறையை எம் எஸ் சுவாமிநாதன் அறிமுகப்படுத்தியதால் 
சுற்றுச்சூழல் மாசடைகிறது; நிலத்தின் மண்வளம் 
பறிபோகிறது என்றெல்லாம் சுவாமிநாதன் மீது 
விமர்சனங்களும் எழுந்தன.

எனவே ரசாயன விவசாயத்தைக் கைவிட்டு 
இயற்கை விவசாயத்தை (organic farming)
மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் 
சமகாலத்தில் உரத்தே ஒலிக்கின்றன. 1960கள் 
வரை இந்தியாவில் பாரம்பரிய விவசாயம்தான் 
மேற்கொள்ளப் பட்டது. மாட்டுச் சாணம்தான் 
உரமாகப் பயன்பட்டது.

ரசாயன உரங்களுக்குப் பதில் சாணி உரம் என்பது 
வரவேற்கத் தக்கதே. ஆனால் நாடு முழுவதும் உள்ள 
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடிக்கு 
எவ்வளவு சாணி உரம் தேவைப்படும்? வண்டி வண்டியாக 
மலை மலையாகத் தேவைப்படுமே! அதற்கு கோடிக்கணக்கான 
மாடுகள் வேண்டுமே! அவ்வளவு மாடுகள் நாட்டில் 
இருக்கின்றனவா? இல்லையே!

அரசுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில்  சாகுபடிக்கேற்ற 
நிலத்தின் பரப்பு 160 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே. 
இன்றைய இந்திய மக்கள் தொகை 140 கோடி. இன்னும் 
10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரித்து விடும். 
ஆனால் நிலத்தின் பரப்பளவு அதிகரிக்காது. மாறாக 
மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக விளைநிலங்கள் 
குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். 

ஒரு பக்கம் பெருகிக் கொண்டே வரும் மக்கள்தொகை!
இன்னொரு பக்கம் சுருங்கிக் கொண்டே வரும் நிலப்பரப்பு!  
இந்நிலையில் ரசாயன உரங்களையும் வீரிய வித்துக்களையம் 
தவிர்க்க இயலுமா? அப்படித் தவிர்த்தால் தேவையான அளவு 
உணவு தானிய உற்பத்தியை எட்ட முடியுமா?  

1960களின் உணவுப்பஞ்சம் வெறும் கடந்த கால 
வரலாறாக மட்டுமே இன்று அறியப் படுகிறது. இன்று 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்ற 
கட்டத்தையும் கடந்து உபரி உற்பத்தி என்னும் உயர்ந்த 
இடத்தில் இந்தியா உள்ளது. அரிசி ஏற்றுமதியில் 
உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான்! 

எடுத்துக்காட்டாக, 2022-23ல் இந்தியாவின் பாசுமதி அரிசி 
ஏற்றுமதி 45 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதன் மதிப்பு 
38,000 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் வித்துச் சட்டம் 
1966ன்படி (Seeds act 1966) 34 வகையான பாசுமதி அரிசி 
வித்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. காஷ்மீர், 
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மலை  
அடிவாரத்திலும் பஞ்சாப் அரியானா மாநிலங்களிலும்  
பாசுமதி விளைகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே 
விளைந்தபோதிலும் உலக அளவில் பாசுமதி ஏற்றுமதியில் 
நாம் முதலிடத்தில் இருப்பது மெய்யாகவே பிரம்மாண்டமான 
சாதனை ஆகும். 

உற்பத்தியிலும் மகசூலிலும் நமக்கு இருக்கும் இந்த 
அந்தஸ்தைத் தக்கவைக்க வேண்டுமெனில்,  
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேரா(து) இயல்வது நாடு 
என்று வள்ளுவர் வரையறுத்த நாடாக இந்தியா திகழ 
வேண்டுமெனில், சுவாமிநாதன் அறிமுகம் செய்த நவீன 
வேளாண்மையை புறக்கணிக்க இயலுமா?

மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 
முதல் இடத்தை இந்தியா எட்டி விட்டதாகவே முன்கணிப்புப் 
புள்ளி விவரங்கள் (projected figures) தெரிவிக்கின்றன. உணவு 
உற்பத்தி சார்ந்த மாபெரும் எதிர்பார்ப்புகள் இந்தியா மீது 
இருக்கும் நிலையில், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், 
வீரிய வித்துக்கள் ஆகியவற்றைத் தவிர்த்த வேளாண்மையை 
சாத்தியப்படுத்த இயலுமா?   
  
தமது 98ஆம் வயதில், சென்னையில் 28.09.2023 அன்று 
பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் மறைந்தார்.
இந்திய வேளாண்மையின் வரலாற்றில் சுவாமிநாதனின் 
பாத்திரம் ஒரு திசைவழி மாற்றத்தை (paradigm shift) குறிக்கிறது.
அது இந்திய வேளாண்மையின் திசைவழியைத் தீர்மானித்து, வேளாண்மையை நவீனப்படுத்தி, உபரி உற்பத்தியைச் 
சாத்தியமாக்கியது. உலக அரங்கில் இந்தியாவைத் 
தலைநிமிரச் செய்த வேளாண் விஞ்ஞானி மறைந்த 
எம் எஸ் சுவாமிநாதனுக்கு  நமது அஞ்சலியைச் 
செலுத்துவோம்!
********************************************



 

   
  

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக