ஹமாஸ் இஸ்ரேல் போர் என்பது
நவீன கால சிலுவைப் போரே!
மீண்டும் மத்திய காலத்தை நோக்கி
உலகை இழுத்துச் செல்லும் ஆபிரகாமிய மதங்கள்!
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
முன்குறிப்பு:
சிலுவைப் போர்கள் (The crusades), மத்திய காலம்
(Medieval period), தீர்க்கதரிசி ஆபிரகாம், ஆபிரகாமிய
மதங்கள் ஆகியவை பற்றி முதலில் நன்கு தெரிந்து
கொண்டு வந்து, அதன் பிறகு இக்கட்டுரையைப்
படிக்கவும்).
சனிக்கிழமை (07.10.2023) திடீரென்று 5000
ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசியது
ஹமாஸ் என்னும் பாலஸ்தீனிய ஆதரவு
இஸ்லாமிய அமைப்பு.
முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்து விட்ட
இத்தாக்குதலால் நிலைகுலைந்து போனது
இஸ்ரேல். இஸ்ரேல் தரப்பில் 300 பேர் இறந்து
விட்டனர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த
ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள்
மற்றும் சிவிலியன்கள் என்று 100 பேரைப் பணயக்
கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.
இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆயின.
பல தீக்கிரை ஆயின. 2000க்கும் மேற்பட்ட
இஸ்ரேலியர்கள் காயம் அடைந்துள்ளனர்.
திகைப்பில் இருந்து மீண்ட இஸ்ரேல் தனது
பதில் தாக்குதலைத் தொடங்கியது. காசா
பகுதியில் (Gaza strip) ஹமாஸ் படையினர்
இருப்பதால், அங்கு விமானத் தாக்குதலைத்
தொடங்கியது. இதன் விளைவாக ஹமாஸ் தரப்பில்
200 பேர் உயிரிழந்ததாக அறியப் படுகிறது.
இன்றும் ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத்
தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. விமானத்
தாக்குதலின் மூலம் இஸ்ரேலும் பதிலடி கொடுத்து
வருகிறது.
ஒரு இஸ்ரேலியப் பெண்ணை நிர்வாணப் படுத்தி
இஸ்ரேல் நகரத் தெருக்களின் வழியாக அந்தப்
பெண்ணை ஊர்வலமாகக் கொண்டு வந்த ஹமாஸ்
வெறியர்களின் செயல் மனித குலத்துக்கே எதிரானது.
பயங்கரவாதச் செயல்களின் வீடியோ காட்சிகளைப்
பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது.
கட்டுரையின் முதல் பத்தி முதல் முந்தைய பத்தி
வரையிலான செய்திகள் அனைத்தும் பிபிசி
தொலைக்காட்சி வழங்கிய செய்திகளே. தமிழ்
ஊடகங்கள் நம்பகத் தன்மை அற்றவை. மேலும்
தமிழின் காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும்
தற்குறிகளே கோலோச்சுவதால், இவர்களில்
பலருக்கு அல்லது அனைவருக்குமே ஆங்கிலம்
தெரியாது. இவர்களுக்குத் தெரிந்த பட்லர்
இங்கிலீஷை ஆங்கிலமாக ஏற்றுக் கொள்ள இயலாது.
எனவே பிபிசியை நாட வேண்டியதாகி விட்டது.
ஹமாஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாக
கருதப் படுகிறது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும்
போர் புரிகின்றன என்றால் அதற்கான தர்க்க
நியாயம் இரு தரப்பிலும் அவரவருக்கு உண்டு. ஆனால்
பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹமாஸ்
அமைப்பு பாலஸ்தீனத்தின் சார்பாக இஸ்ரேலின் மீது
பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுக்கும்போது
அது பாலஸ்தீனத்தின் தரப்பை பலவீனப் படுத்தி
விடுகிறது.
விளைவு ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதத்
தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள்
சுலபமாக ஒன்று சேர்ந்து விடுகின்றன.பாலஸ்தீனம்
தனிமைப் படுத்தப்பட்டு விடுகிறது. ஹமாஸ் அமைப்பு
உலக நாடுகளின் கூட்டுத் தாக்குதலின் இலக்காக
ஆகி விடுகிறது.
இந்த இடத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட
கதியை நினைத்துப் பார்க்க வேண்டும். இலங்கைத்
தீவின் பூர்வ குடிகள் ஈழத் தமிழர்களே.பின்னர்தான்
சிங்களர்கள் அங்கு வந்து குடியேறினர். எனவே தமிழ்
ஈழத்திற்கு எல்லா விதமான நியாயங்களும் உண்டு.
ஆனால் அந்த நியாயங்கள் அனைத்தும் காயடிக்கப்
பட்டு, புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு
என்பதுதான் உலக நாடுகளின் பார்வையாக இருந்தது.
விளைவு: உலக நாடுகள் அனைத்தும்
ஒன்று சேர்ந்து புலிகளைத் துடைத்தெறிந்து விட்டன.
தடம் தெரியாமல் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்.
சமகால உலகில் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும்
புலிகளுக்கு நேர்ந்த சோக முடிவில் இருந்து பாடம்
கற்றுக் கொள்ள வேண்டும். வரலாறு தந்த இந்தப்
படிப்பினையை ஹமாஸ் அமைப்பு உணர வேண்டும்.
தற்காலிக வெற்றிகள் ஒரு போதையைத் தரும்.
ஆனால் போதைகளுக்கு அப்பாற்பட்டது உண்மை!
ஆபிரகாமிய மதங்கள் அன்று முதல் இன்று வரை
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகவே இருந்து
வருகின்றன. வரலாற்றைப் படித்தவர்கள்
சிலுவைப் போர்களைப் பற்றி அறிவார்கள்.
புனித நிலம் எனப்படும் ஜெருசலேமைக் கைப்பற்ற
நடந்த போர்களே சிலுவைப் போர்கள்.
இப்போர்கள் மத்திய காலத்தில் நடைபெற்றன.
கிறிஸ்துவத் திருச்சபை முன்னின்று நடத்திய
இப்போர்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்களின்
புனித நிலமான ஜெருசலேமைக் கைப்பற்ற
நடந்த போர்கள்.
ஆபிரகாமிய மதங்கள் தங்களுக்குள் ஒரு
இணக்கப்பாட்டுக்கு வராமல் ஆயிரம்
ஆண்டுகளாகப் போரிட்டு வந்தன. இம்மதங்களைப்
பின்பற்றுவோர் தங்களுக்குள் நடத்திய போர்களால்
உலக அமைதி சீர்குலைந்து. கோடிக்கணக்கான
அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.
மதபீடங்கள் அறிவியலுக்கு எதிராக இருந்தன.
கலிலியோவும் கோப்பர் நிக்கசும் மதபீடங்களால்
தண்டிக்கப் பட்டனர். புரூனோ எரித்துக் கொல்லப்
பட்டார். சார்லஸ் டார்வின் இகழப்பட்டார்.
இஸ்லாமின் பெயரால் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்
உலகெங்கும் தோன்றி உள்ளன. தலிபான்கள்
மானுட இனத்தின் எதிரிகளாக எப்படியெல்லாம்
செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாளும்
செய்திகள் அறிவிக்கின்றன.
ஆபிரகாமிய மதங்கள் தங்களுக்குள் உடன்பாட்டுக்கு
வர வேண்டும். பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித்
தீர்த்துக் கொள்ள வேண்டும். போரிலும் பயங்கரவாதச்
செயல்களிலும் இறங்கக் கூடாது.
இந்தப் போர் முற்றிலும் தேவையற்ற போர். எனவே
ஹமாஸ் தரப்பும், இஸ்ரேல் தரப்பும் உடனடியாக
போரை நிறுத்த வேண்டும்.போருக்குச் சம்பந்தம்
இல்லாத அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பை
ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக