ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி: தலித் மாணவனை வீடு புகுந்து 
தாக்கிய வெறிச்செயல் சாதியக் கொடூரத்தின் உச்சம்!
ஒரு மூல வினையின் எதிர்வினையே இது!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
நான் திருநெல்வேலிக்காரன்! வீரவநல்லூர்,
சேர்மாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகியவை 
அருகருகே உள்ள ஊர்கள். நெல்லை மாவடடத்தின் 
தென் பகுதியில் அமைந்த ஊர்கள் இவை.
திருநெல்வேலி-நாகர்கோவில் ரயில் தடத்தில் 
உள்ள ஊர் நாங்குநேரி.

நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 
(SEZ) உள்ளது. இது பாடல் பெற்ற வைணவத் தலம்
ஆகும். சிறப்பு மிக்க வானமாமலை பெருமாள் 
கோவில் இங்குள்ளது.  

இரண்டே முக்கால் லட்சம் வாக்காளர்களைக் 
கொண்ட சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி. இது 
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் 
அடங்கியது. நாடார்கள், தேவர்கள், தலித்துகள் 
ஆகியோர் இத்தொகுதியில் பிரதானமான
சாதியினர். தலித்துகள் மட்டுமே சுமார் 50,000
பேர் இத்தொகுதியில் வாழ்கின்றனர்.

தற்போது இத்தொகுதியின் எம் எல் ஏவாக 
காங்கிரசின் ரூபி மனோகரன் உள்ளார். 
சில தேர்தல்களுக்கு முன்பு, காங்கிரசின் 
மறைந்த வசந்தகுமார் இங்கு எம் எல் ஏவாக 
இருந்தார். 

 தேவர்- தேவேந்திரர் சாதிய மோதல்களுக்கு 
நெல்லை மாவட்டம் பெயர் பெற்றது. எனினும் 
அண்மைக் காலமாக இவ்விரு சாதியினருக்கு 
இடையிலான முரண்பாடு கணிசமாக மழுங்கடிக்கப் 
பட்டுள்ளது. 

இதற்குக் காரணம் டாக்டர் கிருஷ்ணசாமியின் 
பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையே ஆகும்.
மொத்த தேவேந்திர சமூகத்தினரும் பட்டியல் 
வெளியேற்றத்தைக் கோருவதால் சாதிய  
முரண்பாடுகளுக்கான சூழல் கூர்மழுங்கி வருகிறது.

அப்படி இருக்கையில் அண்மையில் நாங்குனேரியில் 
12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சின்னத்துரையின் 
வயது 17) வீடு புகுந்து நடந்த தாக்குதல் எப்படி நிகழ்ந்தது?
பறையர் சமூகத்து மாணவன் சின்னத்துரையின் 
வீடு புகுந்து தாக்கியவர்கள் அவனுடன் பயிலும் 
தேவர் சமூக மாணவர்களே. இவர்கள் 18 வயதுக்கு 
உட்பட்ட மைனர் சிறுவர்கள்.

சிறுவர்கள் ஏன் பிஞ்சிலே பழுக்கின்றனர்? 
அதற்கான சமூகச் சூழல் என்ன என்பதை 
அறியாமல் இது போன்ற சாதிய மோதல்களைப்  
புரிந்து கொள்ளவோ முடிவுக்குக் கொண்டு வரவோ 
இயலாது.

எனவே நாங்குநேரி விவகாரத்தில் உண்மையை   
அறியும்பொருட்டு வீரவநல்லூர் சேர்மாதேவி ஊர்களில் 
இருந்து சமூக உணர்வு மிக்க சிலர் நாங்குனேரிக்குச் 
சென்றனர். அங்கே இரண்டு நாட்கள் தங்கி, 
தொடர்புடைய அனைவரையும் சந்தித்து 
உரையாடினர். தொடர்புடைய சாதியினரின் 
முறையீட்டையும் காத்து கொடுத்துக்கேட்டனர். 
அதன் பின், திரண்ட உண்மைகளுடன் 
ஊர் திரும்பினர். அவர்கள் ஆதாரங்களுடன் 
தெரிவித்த உண்மைகளையே இக்கட்டுரையில் நான் 
குறிப்பிடுகிறேன்.
       
நாங்குநேரி மாணவன் சின்னத்துரையின் வீடு புகுந்து 
அவனையும் அவன் தங்கை பத்து வயதுச் சிறுமியையும் 
அரிவாளால் வெட்டிய மாணவர்களின் செய்கை
பெருங்கொடூரமானது. எனினும் இது மூலவினை அல்ல
என்ற உண்மை அதிர்ச்சி தருகிறது. ஏற்கனவே நிகழ்ந்த 
ஒரு வினையின் எதிர்வினையாகவே இக்கொடூரம் 
நிகழ்ந்துள்ளது.

சின்னத்துரை தாக்கப்பட்டதற்கு முந்திய மாதம்,
அதாவது சூலை மாதத்தில், இதே நாங்குனேரியில் 
12ஆம் வகுப்பு படிக்கவும் கார்த்திக் (வயது 17) 
என்னும் தேவர் சாதி மாணவன் தாக்கப் பட்டான்.
இவனை பிளேடால் அறுத்துக் கொல்ல முயன்றவர்கள்
அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் தலித் 
மாணவர்கள்.

பத்திரிகைகளில் செய்தி வந்தும், இக் கொடூர நிகழ்வு
சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழகத்தின் 
போலி முற்போக்குகள், போலி நக்சல்பாரிகள் 
ஆகியோருக்கு இது ஒரு பொருட்டல்ல என்பதால் 
தேவர் சாதி மாணவனை தலித் சாதி மாணவர்கள் 
தாக்கியதும் கொல்ல முயன்றதும் சமூகத்தின் 
கவனத்திற்கு வராமலேயே போய்விட்டன.

சமூகமோ அரசோ தங்களின் உயிரைப் பாதுகாக்க 
எவ்வித உத்தரவாதமும் தராது என்ற நிலையில் 
தங்களின் உயிரைத் தாங்களேதான் பாதுகாத்துக்
கொள்ளவேண்டும் என்ற அவல நிலைக்குத்  
தள்ளப்பட்ட மாணவர்கள் வன்முறையைக் கையில் 
எடுக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட தேவர் சாதி 
மாணவர்களுக்கு திராவிட இயக்கக் கட்சிகள் 
உற்ற துணையாக இருக்கின்றன. அவர்கள் கொடுக்கும் 
தைரியம் தேவர் சாதி மாணவர்களை பின்விளைவுக்கு 
அஞ்சாமல்  துணிச்சலுடன் செயல்படத் தூண்டுகிறது.

நக்சல்பாரி இயக்கம் வலுவிழந்ததும், சீனிவாசராவின் 
வழிவந்த கம்யூனிஸ்டுகள் (CPI, CPM)  போலிகளாகச் 
சீரழிந்ததும் தமிழ்ச் சமூகத்தில் சாதிய முரண்கள் 
கூர்மையடைந்து வருவதற்கான காரணங்கள் ஆகும்.
***********************************************

கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக