ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

அகச்சான்றும் இல்லை!
புறச்சான்றும் இல்லை! 
தமிழகத்தில் அடிமை முறை நிலவவில்லை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------  
உலகின் வேறெந்த மொழியையும் விட அதிகமான 
இலக்கியங்களைக் கொண்ட மொழி தமிழ்.
தமிழின் இலக்கியங்கள் அளவிடற்கு அரியவை.

சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டும் எட்டுத் 
தொகையும் சேர்த்து மொத்தம் 18 நூல்கள். இவை 
பதினெண் மேல்கணக்கு என வழங்கப் படுகின்றன.
இவற்றில் எட்டுத் தொகை நூல்கள் யாவும் 
தொகுக்கப்பெற்ற நூல்கள். சான்றாக புறநானூறு
என்பது ஒற்றை நூலாகக் கருதப் படினும், அது 
400 பாடல்களைக் மொண்ட நூலாகும். அது போன்றதே 
அகநானூறும்.

அதற்கடுத்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.
திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூலாகும்.
ஆக மேல் கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் 
இரண்டிலும்  சேர்த்து மொத்தம் 36 நூல்கள்.

இவை 1500 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் 
வரையிலான  தொன்மை வாய்ந்தவை. இவற்றில் 
தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான 
எச்சான்றும் இல்லை.

சரி, 2000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் 
என்னும் இலக்கண நூலில் அடிமை முறை பற்றி 
ஏதேனும் குறிப்பு உண்டா? இல்லை.

ஐம்பெருங்காப்பியங்களில் உண்டா/ இல்லை.
பக்தி இலக்கியங்களில் உண்டா? இல்லை.
சைவ இலக்கியமான பன்னிரு திருமுறையிலோ 
வைணவ இலக்கியமான நாலாயிரம் திவ்விய 
பிரபந்தத்திலோ அடிமைமுறை நிலவியதற்கான 
ஒரு அணுவளவு சான்றெனும் உண்டா?  இல்லை!

கல்வெட்டுகளில் உண்டா? செப்பேடுகளில் உண்டா?
இல்லை  இல்லை!! இல்லவே இல்லை!!!

ஆக தமிழகத்தில் அடிமை முறை நிலவியது 
என்பதற்கான அகச்சான்றும் இல்லை; புறச்
சான்றும் இல்லை. ஏனெனில் தமிழகத்தில் 
அடிமை முறை நிலவவில்லை.
----------------------------------------------   
    

தமிழகத்தில் அடிமைமுறை இல்லை!
தொல்காப்பியம் கூறுவது என்ன?
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்.
(தொல்காப்பியம்; அகத்திணையியல்-25)

மேற்கூறிய இரண்டு அடிகளைச் சுட்டிக்காட்டி
அடிமைமுறை தமிழகத்தில் இருந்ததாகக் 
கூறுகின்றனர் சிலர். இது நகைப்புக்கு உரியது.

மேற்கூறிய அடிகள் அகத்திணை இயலில் வருபவை.
அகம் என்பது காதல் வாழ்க்கை பற்றியது.
இது அடிமைமுறை பற்றியதே அல்ல.

அன்பின் ஐந்திணை பற்றித் தெரிந்திருக்கும் 
அன்பர்கள் மேற்கொண்டு படிக்கவும்.
ஐந்திணைக்குப் புறம்பாக, அதாவது ஐந்திணைக்கு 
வெளியே கைக்கிளை என்றும் பெருந்திணை 
என்றும் இரண்டு திணைகள் உண்டு. இவை 
பெருந்தாக் காமம் பற்றியவை.

மேற்கூறிய இரண்டு அடிகளும் கைக்கிளை 
பெருந்திணைக்கு உரிய மக்களைக் குறிப்பவை.
அடியவர் என்போர் கைக்கிளைக்கு உரியோர்.
ஒருதலைக்காதல் புரிவோர்.

பெருந்திணை என்பது பொருந்தாக்காமம்.
வயது முதிர்ந்த கிழவன் வயதில் இளைய 
பெண்ணை மணப்பது பெருந்திணை.
வினைவலர் என்போர் பெருந்திணைக்கு 
உரியோர். இவ்விரு சாராரும் அடிமைகள் அல்லர்.

எனவே தொல்காப்பியம் தமிழகத்தில் அடிமைமுறை 
இல்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
************************************************   

நமது பேசுபொருளைப் பொறுத்து, நாலடியார் 
காலத்தால் பிந்திய இலக்கியம். நாலடியாரில் 
உள்ள 400 பாக்களில் சொல்லப்பட்ட விஷயம் 
ஏன் திருக்குறளின் 1330 பாக்களில் இல்லை? 

திரு பாமரன் அவர்கள் கவனத்திற்கு!
அடிமை முறை ஒரு உற்பத்தி முறையாக 
தமிழ்நாட்டில் இருக்கவில்லை!
-------------------------------------------------------
நாலடியாரும் திருக்குறளும் பதினெண் 
கீழ்க்கணக்கு நூல்களே. நாலடியாரில் 
அடிமைமுறை பற்றி எதுவும் இல்லை. 
திருக்குறளிலும் இல்லை.  

அடிமை முறை இல்லை என்று சொல்வதன் 
பொருள்  அது ஒரு உற்பத்தி முறையாக 
(mode of production)  இருக்கவில்லை என்பதுதான்.

இந்த நவீன காலத்தில்கூட, கொத்தடிமைகளை
மாவட்ட கலெக்டர் மீட்டு வந்தார் என்ற செய்திகளை 
நாம் அறிவோம். இதை வைத்துக் கொண்டு 
தற்காலத்தில் அடிமை முறை உள்ளதாக 
அதாவது அடிமை முறை என்பது ஓர் உற்பத்தி 
முறையாக இருந்ததாகக் கூற இயலாது.

பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்ட காலம் 
நிலவுடைமைச் சமூக காலம் ஆகும். 
அக்காலத்தில் சிலர் அடிமைகளாக 
இருந்திருக்கக் கூடும். ஆனால் அடிமை முறை 
ஓர் உற்பத்திமுறையாக இருந்ததா என்றால் 
இல்லை என்பதே விடை. நிலவுடைமைச் சமூக 
அமைப்பு நிலவும்போது, நிலவுடைமை 
உற்பத்திமுறை நிலவும்போது அடிமை முறை 
எப்படி இருக்க இயலும்?

காலந்தோறும் அங்கும் இங்குமாக அடிமைகள் 
இருந்துள்ளனர். இதற்கு இன்றைய நவீன 
காலமும் விதிவிலக்கல்ல. கொத்தடிமை மீட்பு 
என்பது அவ்வப்போது நாம் கேள்விப்படும் 
செய்திதான். அதற்காக இன்றைய 
முதலாளித்துவ உற்பத்தி முறையை 
அடிமைமுறை  என்று கூற இயலாது.

தமிழகத்தில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவிலும் 
அடிமை முறை ஒரு உற்பத்திமுறையாக 
இருக்கவில்லை. இந்தியாவில் வருணங்கள் 
உருவாகின. அதைத் தொடர்ந்து சாதிகள் 
உருவாகின. அனால் இங்கு ஐரோப்பிய பாணி 
அடிமை முறை உருவாகவில்லை. வருணமோ 
சாதியோ ஐரோப்பிய அடிமை முறை அல்ல.

வருணமும் சாதியும் உருவான ஒரு சமூகத்தில்,
அடிமைமுறை ஒரு உற்பத்தி முறையாக எப்படி 
இருக்க இயலும்?

தமிழ்நாட்டில் அடிமைகளின் எஜமானர்கள்
யார் யார்? அவர்களின் பெயர்கள் என்ன? 
ஒவ்வொருவரும் எத்தனை அடிமைகளை 
வைத்திருந்தனர்? இது பற்றியெல்லாம் ஏதாவது 
ஒரு அணு அளவேனும் சான்று உண்டா?

அடிமைகளின் கிளர்ச்சி பற்றியோ அவர்கள் 
நடத்திய வர்க்கப் போராட்டம் பற்றியோ 
ஏதேனும் ஒரு குறிப்பு உண்டா? சமுதாய மாற்றம் 
என்பது போராட்டத்தின் மூலமோ அல்லது புரட்சியின்
மூலமாகத்தான் ஏற்பட இயலும் என்கிறது 
மார்க்சியம். அடிமைகள் நடத்திய வர்க்கப் 
போராட்டம் குறித்து ஏதேனும் சான்று உண்டா?
இல்லை. ஏனெனில் தமிழகத்தில் அடிமை முறை 
ஒரு உற்பத்தி முறையாக (mode of production) இல்லை.   
  


 


 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக