செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதி பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது
என்ற அண்ணன் தியாகுவின் கருத்துக்கு மறுப்பு!
-----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
சாதி என்பது பொருள்முதல்வாதமே என்ற
சிறுபிள்ளைத்தனமான  அபத்தத்தை முன்மொழிந்து
அண்மையில் மார்க்சியத்துக்கு பங்கம் ஏற்படுத்தினார்
தீக்கதிர் முருகேசன்.

தீக்கதிர் முருகேசனின் கருத்துக்களில் ஒரு சிலவற்றைத்
தவறு என்று கண்டித்த அண்ணன் தியாகு அவர்கள்
சாரப்பொருளைப் பொறுத்து (essence) குமரேசனின்
அபத்தத்தையே வழிமொழிகிறார்.

முகநூல் பதிவொன்றில் அண்ணன் தியாகு அவர்கள்,
"Now the question of whether caste is matter or idea. Both is the simple answer"
என்று கூறுகிறார். 
"சாதி என்பது பொருளா கருத்தா என்றால். இரண்டுமே என்பதே 
எளிய விடை"  என்கிறார் தியாகு அண்ணன்.

சுமார் பத்து வாக்கியங்கள் கொண்ட அண்ணன் தியாகுவின் 
பதிவு ஆங்கிலத்தில் உள்ளது. அதை ஒரு நிமிடத்தில் 
தமிழில் மொழிபெயர்க்கலாம். அனால் அதைச் செய்ய 
நான் விரும்பவில்லை. காரணம் என்னுடைய தமிழ் 
தொடர்புறுத்தும் தமிழ் (communicative language). அதிகம் 
படிப்பறிவு இல்லாத பாட்டாளி வர்க்கத் தோழர்களுக்கும்  
மார்க்சியக் கருத்துக்களுக்கும் உயிரோட்டமான 
தொடர்பை ஏற்படுத்தும் தமிழ்.

ஆனால் அண்ணன் தியாகுவின் தமிழோ தந்தக் கோபுரத்து
ஆசாமிகளால் மட்டுமே விரும்பப்படும் தமிழ். அண்ணன் 
தியாகு அவர்கள் ஒரு தனித்தமிழ்த் தலிபான் ஆவார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து செயல்படுவதற்குப் பெரிதும் 
தடையாக இருந்தது, இருப்பது அண்ணனின் தனித்தமிழ் 
தலிபானியமே. நிற்க. அண்ணன் தியாகுவின் சாதி பற்றிய 
கருத்துக்கு வருவோம்.

சாதி என்பது பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது 
என்கிறார் அண்ணன்.இக்கருத்து அடிப்படையிலேயே 
தவறு. (fundamentally flawed). ஆதிசங்கரருக்குக்கூட 
வாய்க்காத ஒரு வித அத்வைதப் பார்வை இது.
பொருளே கருத்து; கருத்தே பொருள் என்ற மயக்கம் இது.

கண்ணாடிக்கு முன் நிற்கும் நமது உருவமும் அதன் பிம்பமும் 
இரண்டும் ஒன்றுதான் என்கிறார் அண்ணன்  தியாகு. இது 
உண்மையல்ல. 

சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் ஆகும். இந்திய 
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறை நிலவிய 
காலக் கட்டத்தில், கட்டி எழுப்பப்பட்ட ஒரு கருத்தியல் 
கட்டுமானம்தான் சாதி. அதாவது சாதியம் என்னும் 
முறையமைப்பு (caste system). கடவுள் என்பது ஒரு கருத்தியல் 
கட்டுமானம். அதைப்போன்றே சாதியும் ஒரு 
கருத்தியல் கட்டுமானம் ஆகும்.

சாதி என்பதுதான் என்ன? சாதியின் வரையறை என்ன?
உற்பத்தியில் ஈடுபடும் பெரும் மக்கள் பிரிவினரை 
ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கிறது 
சாதி. இதன் மூலம் மக்களின் ஒற்றுமைக்கும் 
சமத்துவத்துக்கும் முற்றிலும் எதிரான ஒரு தத்துவ 
உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது சாதி. சாதி குறித்த 
ஒரு எளிய வரையறை இது. இவ்வாறு ஒரு சுரண்டல் 
சமுதாய அமைப்பில், சுரண்டப்படும் ஆகப் 
பெரும்பான்மையான மக்களை ஒன்று சேர விடாமல் 
நிரந்தரமாகப் பிரித்து வைத்து, அதன் மூலம் சுரண்டலை 
சுமுகமாக நிகழ்த்திக் கொள்ள சாதி வழிவகுக்கிறது.
இதுவே சாதியின் பயன் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விடை 
காண வேண்டும். இந்தக் கேள்விக்கான விடைதான் 
சாதி என்பது பொருளா கருத்தா என்ற கேள்விக்கும் 
விடை ஆகும்.  .  

 அ) சாதி கூறுகிற உயர்வு தாழ்வுகள் உண்மையிலேயே 
மனிதர்களுக்கு இடையில் நிலவுகின்றனவா? அல்லது 
அவை வெறும் கற்பிதம் மட்டும்தானா?

ஆ) அதாவது உயர்ந்த சாதியினரான பார்ப்பனர்கள் 
அறிவுத்திறன் மிகுந்தவர்களாகவும், தாழ்ந்த சாதியினரான 
சூத்திர பஞ்சமர்கள் அறிவற்ற முட்டாள்களாகவும்
இருக்கிறார்கள் என்று சொல்கிறதே சாதியம், இது
உண்மையா?

இ) சாதி கூறுகிற படிமுறை அமைப்பு (graded system)
அதாவது பறையனை விட சூத்திரன் மேல், சூத்திரனை 
விட பார்ப்பான் மேல் என்கிற சாதியத்தின் வரையறுப்பு 
மெய்யானதா அல்லது வெறும் கற்பிதமா?


மேற்கூறிய கேள்விகள் அனைத்துக்கும் அறிவியல் மிகத் 
தெளிவான, கறாரான விடைகளை அளித்துள்ளது.
மனிதர்களுக்கு இடையில் ரத்தம், மரபணு, ஜீன்கள்,
குரோமோசோம்கள் ஆகியவற்றில் சாதியைப் பொறுத்து 
எவ்விதமான வேறுபாடும் இல்லை என்கிறது அறிவியல்.
இது லட்சக் கணக்கான பரிசோதனைகள் வாயிலாக
நிரூபிக்கப் பட்ட உண்மையாகும்.

மனித ரத்தமானது A வகை, B வகை, AB வகை, O வகை 
என்னு பிரிக்கப்பட்டு உள்ளதே தவிர, பார்ப்பன வகை,
செட்டியார் வகை, ஆசாரி வகை, கோனார் வகை 
என்றெல்லாம் பிரிக்கப் படவில்லை. அவ்வாறு 
பிரிக்கவும் இயலாது.

ஆக சாதியத்தின் அம்சங்களான மனிதர்களுக்கு 
இடையிலான உயர்வு தாழ்வு மற்றும் படிமுறையிலான  
ஏறுவரிசை உயர்வு (அல்லது இறங்குவரிசைத் தாழ்வு)
என்னும் அனைத்தும் கற்பனையே என்று 
அறிவியல் நிரூபித்துள்ளது.  

ஆக சாதியம் என்பது வெறும் கற்பிதங்களையே 
தனது அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. சாதியத்திற்கு 
எவ்விதமான பௌதிக அடிப்படையும் இல்லை. (Caste system
does not have any sort of physical foundations).

The vital features of the caste system like superiority versus inferiority etc
are mere figments of imagination and nothing else. அதாவது சாதியத்தின் 
உயிர்நாடியான உயர்வு தாழ்வுக் கோட்பாடு உண்மையில் 
மனிதர்களிடையே நிலவுகிற விஷயமல்ல.மாறாக 
அது வெற்றுக் கற்பனையே.

இதுவரை பார்த்த அனைத்தும் சாதியம் என்பது எவ்விதமான 
பௌதிக அடிப்படையும் அற்றது என்பதை தெளிவுபடுத்துகிறது.
எனவே சாதி என்பது பொருள் அல்ல. பொருள் அல்ல, பொருள் அல்ல.

பொருளுக்கு ஒரு பௌதிக அடிப்படை உண்டு. வெளிகாலத்தில்
(spacetime) ஒரு இடத்தை அடைக்கும் தன்மை கொண்டது பொருள்,
பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு. ஆனால் சாதியம் 
என்பது எவ்வித பௌதிக இருப்போ அல்லது பௌதிக 
அடிப்படையோ இல்லாதது. எனவே சாதி என்பது 
பொருள் அல்ல. 

எனவே அண்ணன் தியாகு அவர்களின் கருத்தான 
"சாதி என்பது பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது"
என்பது அறிவியல்ரீதியில் முற்றிலும் தவறு என்று 
இக்கட்டுரை நிரூபிக்கிறது. சாதி என்பது ஒருபோதும் 
பொருள் அல்ல; அது வெறும் கருத்து மட்டுமே. QED.
*************************************************************************************8  
பின்குறிப்பு:
ஆரம்ப கால நக்சல்பாரிப் போராளியாக அண்ணன்  
தியாகு அவர்கள் புரிந்த தியாகத்துக்குரிய முழு 
மரியாதையுடன் அவருடன் முரண்படுகின்றேன்.
அவருக்கு வழிகாட்டிய அவரின் போற்றுதலுக்குரிய
அதே தலைவர்தான் எனக்கும் தலைவர் என்பதை 
அண்ணன் தியாகு அறிவார்.
-------------------------------------------------------------------------------------      

இன்றைக்கும் இனி நாளைக்கும் அது 
மேற்கட்டுமானம்தான் தோழர்.  செந்தழல் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லான QED என்பதன் 
பொருள்: Quad Erat Demonstrandum ஆகும். ஜியோமெட்ரி 
கணிதத்தில் தேற்றங்களின் நிரூபணத்தின்போது,
QED என்ற சொல் பயன்படுத்தப்படும்.

எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது நிரூபிக்கப்பட்டு 
விட்டது என்ற பொருளைத் தருவது QED.   


தியாகு அவர்களின் ஆங்கிலப் பதிவு!

தோழர் மருதுபாண்டியன் அவர்களுக்கு,
அண்ணன் தியாகு அவர்களின் கருத்துக்கு 
(பார்க்க: அவரின் ஆங்கிலப் பதிவு) மறுப்பாக 
ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதை ஒரு தனிப்பதிவாக 
எனது டைம்லைனில் வெளியிட்டு உள்ளேன்.

   
      


   
    


    . 
    

திங்கள், 19 நவம்பர், 2018

சதுரங்கத்தைப் போற்றாதோர்
மார்க்சிய விரோதிகளே!
மார்க்சிய விரோதிகள் இந்தக் கட்டுரையைப்
படிக்க மாட்டார்கள்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
இன்று ஞாயிற்றுக் கிழமை. இந்திய நேரப்படி
இரவு 8.30 மணிக்கு லண்டனில் உள்ள  ஹால்போர்ன்
கல்லூரியில் உலக சதுரங்க சாம்பியன் போட்டியின்
ஏழாவது ஆட்டம் நடக்கிறது.

தற்போதைய சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்,
சாலஞ்சர் பிலயானோ கரௌனோ ஆகிய
இருவரும் மோதுகிறனர். இதுவரை நடந்த
ஆறு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.

உலக சதுரங்கப் போட்டி குறித்து, உலக மொழிகளில்
கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும்
இதுவரை ஏறத்தாழ ஆயிரம் கட்டுரைகள்
வெளியாகி உள்ளன.

இந்தியாவில் வெளிவரும் தேசிய ஆங்கிலத் தினசரிகளான
இந்து, எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான்
க்ரோனிக்கில் ஆகிய ஏடுகளில் உலகின் தலைசிறந்த
சதுரங்க விமர்சகர்கள் கட்டுரை எழுதுகிறார்கள்.

ஆங்கிலம் அறிந்தவர்கள் இணையத்திலும்
யூடியூப்பிலும் போட்டியின் நேரடி ஒளிபரப்பைப்
பார்த்து வருகிறார்கள். சூசன் போல்கர் போன்ற
உலகின் தலைசிறந்த கிராண்ட் மாஸ்டர்கள்
போட்டியை வர்ணனை செய்து வருகிறார்கள்.

எல்லாம் ஆங்கிலத்தில்! அல்லது வளர்ச்சி அடைந்த
ஐரோப்பிய மொழிகளில்! தமிழில் ஏதேனும்
உள்ளதா? ஆங்கிலம் தெரியாத, தமிழ் மட்டுமே
அறிந்த தமிழ் வாசகன் ஒருவனால் உலக சதுரங்கப்
போட்டி பற்றி அறிந்து கொள்ள இயலுமா?

இயலாது. ஏனெனில் தமிழ் இந்து, தினமணி ஆகிய
தமிழ் நாளிதழ்கள் உலக சதுரங்கப் போட்டி பற்றிய
செய்திகளைப் பிரசுரிக்கவே இல்லை. இந்த
அவலத்தை நான் மட்டுமே அம்பலப் படுத்துகிறேன்.

சரி போகட்டும். தமிழில் சதுரங்கம் பற்றி தற்போதைய சூழலில் ஏதேனும் கட்டுரை வெளிவந்துள்ளதா?
ஒரு கட்டுரை, ஒரே ஒரு கட்டுரை தமிழில் உண்டா?

உண்டு, உண்டு என்று ராமாநுஜரைப் போல
உயரமான கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு
சொல்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.

அறிவியல் ஒளி நடப்பு இதழில் "சதுரங்கம் கணிதமே"
என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. உலக சதுரங்கப்
போட்டியை முன்னிட்டு, முன்பே திட்டமிட்டு,
நவம்பர் இதழில் பிரசுரமாகும் விதத்தில் கட்டுரை
எழுதி அனுப்பியது நியூட்டன் அறிவியல் மன்றம்.

அதைப் படியுங்கள்!
மானமுள்ள தமிழர்களே,
ஒரு அப்பனுக்குப் பிறந்த தமிழர்களே,
அந்தக் கட்டுரையைப் படியுங்கள்!

எட்டுக்கோடித் தமிழர்களில் ஒருவன், ஒரே ஒருவன்
தமிழை உச்சத்துக்கு உயர்த்தியுள்ளான் என்பதை
நிரூபிக்கும் அந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

ஆங்கிலம் உற்பத்தியில் உள்ள மொழி. எனவே
ஆங்கிலத்தில் சதுரங்கப் போட்டி பற்றி ஆயிரம்
கட்டுரைகள் வெளிவருவது இயற்கை. ஆனால்
தமிழோ உற்பத்தியில் இல்லாத மொழி. சதுரங்கம்
பற்றிய எமது கட்டுரை உற்பத்தியில் இல்லாத
தமிழை உற்பத்தியில் உள்ள ஆங்கிலத்துக்கு நிகராக
உயர்த்தி உள்ளது.

பதின்ம வயதில் சதுரங்கம் கற்றேன். அன்று முதல்
இன்று வரை ஒரு லட்சம் சதுரங்க ஆட்டங்கள்
(one lakh games) ஆடியுள்ளேன். இதைச் சாத்தியம் ஆக்கியது
கணினியே. இன்று ஒரு செல் போனில், உரிய
ChessAppஐ பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால்,
உங்கள் செல்போனிலேய சதுரங்கம் விளையாடலாம்.

Chess is the gymnasium of mind. V I Lenin.
***********************************************************
பின்குறிப்பு:
சதுரங்கத்தின் தாயகம் இந்தியா என்ற
ஒளிவீசும் உண்மையை உலகம் ஏற்று
அங்கீகரித்துள்ளது.

சதுரங்கம் பற்றி இதுவரை நிறையவே எழுதி உள்ளேன்.
இவை போதிய அளவு வாசகரின் ஆதரவைப்
பெறவில்லை.Am I casting pearls before swine?
****************************************


*

சனி, 17 நவம்பர், 2018

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
சாதி என்பது பொருள்முதல்வாதமல்ல என்ற
என் கட்டுரையை தங்களின் மின்னம்பலம்
இதழில் பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன்.
இது தோழர் குமரேசனின் கட்டுரைக்கு மறுப்பு!

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர் மற்றும் தலைவர்
நியூட்டன் அறிவியல் மன்றம்
சுபிக்சா அடுக்ககம்
5/5, ஆறாவது தெரு, சௌராஷ்டிரா நகர்,
சூளைமேடு, சென்னை 600 094.
அலைபேசி: 94442 30176.
----------------------------------------------------------------------
எனது சுயவிவரக் குறிப்பு;
பி இளங்கோ சுப்பிரமணியன் என்னும்
இக்கட்டுரையாளர் மத்திய அரசின்
தொலை தொடர்புத் துறை மற்றும்
BSNL  நிறுவனத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான
NFTE (National Federation of Telecom Employees) சங்கத்தில்
கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளில்
செயல்பட்டு  தற்போது பணி ஒய்வு பெற்றுள்ளார்.

இக்கட்டுரையாளர் அறிவியல் எழுத்தாளரும் ஆவார்.
நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் அமைப்பின்
வாயிலாக கடந்த 20 ஆண்டுகளாக பரந்துபட்ட
மக்களிடம் அறிவியலைப் பரப்பி வருபவர்.

மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்னும் நூலின்
ஆசிரியர்.
*************************************************************
முதற்கோணல் முற்றும் கோணல்!
சாதி என்பது பொருள்முதல்வாதம் அல்ல!
(தீக்கதிர் குமரேசனுக்கு மறுப்பு)!
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
சாதி என்பது கருத்துமுதல்வாதமா அல்லது
பொருள்முதல்வாதமா என்ற கேள்வியே
அடிப்படையில் தவறானது. இந்தக் கேள்விக்கு
சாதி என்பது பொருள்முதல்வாதமே என்று
பதில் கூறி, மார்க்சியத்தை இழிவுபடுத்துகிறார்
தோழர் குமரேசன். (பார்க்க: மின்னம்பலம் என்னும்
இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரை)

ஏற்கனவே தாம் பங்கேற்றுள்ள ஒரு வாட்சப் குழுவில்
சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற அரிய
கண்டுபிடிப்பைச் செய்தார். இது அவருடைய
முதற்கோணல். தற்போது அந்தக் கோணலின் மீது
புதிய கட்டுமானத்தை எழுப்புகிறார். இதன் விளைவு
அவரின் சாதியம் பற்றிய ஒட்டு மொத்தக்
கருத்துக்களும் முற்றும் கோணலாகி உள்ளன.

தத்துவம் வேறு; நிறுவனம் வேறு!
----------------------------------------------------------
பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஆகிய
இரண்டும் மனித குலத்தின் இருபெரும் தத்துவங்கள்.
பிரபஞ்சம், இயற்கை, உலகம், மனித சமூகம் ஆகிய
அனைத்தையும் பற்றிய ஓர் ஒருங்கிணைந்த உலகக்
கண்ணோட்டத்தை வழங்குபவை தத்துவங்கள் ஆகும்.
தத்துவம் என்பதன் வரையறை இதுதான்.

பொருளை முதன்மையாகவும் மையமாகவும் கொண்ட
உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதம் ஆகும்.
இதற்கு மாறாக, கருத்தை முதன்மையாகவும்
மையமாகவும் கொண்ட உலகக் கண்ணோட்டம்
கருத்துமுதல்வாதம் ஆகும். இவ்விரு தத்துவங்களும்
நேற்றோ இன்றோ முளைத்த தத்துவங்கள் அல்ல;
குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை
கொண்ட தத்துவங்கள்.

சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற குமரேசனின்
கருத்தை இப்போது பரிசீலிப்போம். சாதி என்பது
பொருள்முதல்வாதம் ஆதலால், அது ஒரு தத்துவம்
ஆகி விடுகிறது. எனவே ஒரு தத்துவம் என்ற நிலையில்,
சாதியானது இந்த பிரபஞ்சத்தை விளக்க வேண்டும்.
இது சாத்தியமா? இயற்கை, உலகம், மனித சமூகம்
ஆகியவை பற்றி சாதியம் என்னும் தத்துவம் என்ன
விளக்கத்தை அளிக்கப் போகிறது? ஒரு மண்ணும் இல்லை
அல்லவா?

ஆயின் சாதி என்பதுதான் என்ன? சாதி என்பது, அதாவது
சாதியம் என்பது ஒரு சமூகக் கட்டுமானம். அது ஒரு
கருத்தியல் கட்டுமானம். ஒரு கருத்தாக, ஒரு
கோட்பாடாகத் தோன்றிய சாதியம், அதன் வளர்ச்சியின்
போக்கில் ஒரு நிறுவனமாக உருவாகி நிலைபெற்றுள்ளது.
ஆக, சாதியம் என்பது ஒரு நிறுவனமே தவிர, ஒரு
தத்துவம் அல்ல.

மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஒரு நிறுவனம்; அது தத்துவம்
அல்ல. ஆனால் மார்க்சியம் என்பது ஒரு தத்துவம்.
தத்துவத்துக்கும்  நிறுவனத்துக்கும் உள்ள வேறுபாட்டைப்
புரிந்து கொள்ள இயலாமையால், தோழர் குமரேசன்
இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறார்.


எல்லாக் கருத்துக்கும் பொருளே அடிப்படை!
-------------------------------------------------------------------------------
சாதியம் என்னும் கருத்தியல் கட்டுமானத்துக்கு
பொருளாயத அடிப்படை (materialist foundation) உண்டா?
சர்வ நிச்சயமாக உண்டு. பொருளாயத அடிப்படை
இல்லாமல், சாதியம் போன்ற ஆயிரம் ஆண்டுகளாய்
நீடித்து நிற்கும் கருத்தியல் கட்டுமானத்தை எழுப்பி
இருக்க முடியாது. கருத்து என்பதே பொருளின்
பிரதிபலிப்புதான் என்பதே பொருள்முதல்வாத
பால பாடம்.

கருத்துக்கள் அந்தரத்தில் பிறப்பதில்லை. பொருள்
இல்லாமல் கருத்து இல்லை.நாம் வாழும் இந்தப்
பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
தோன்றியது என்கிறது நவீன அறிவியல்.
(1 பில்லியன்= 100 கோடி). ஆக பொருளின் வயது
14 பில்லியன் ஆண்டுகள். ஆனால் கருத்தின் வயது
என்ன?

கருத்து என்பதே வளர்ச்சியடைந்த உயிரினங்கள்
தோன்றிய பிறகுதான் பிறந்தது. இந்த பூமியில்
மனிதன் தோன்றி எட்டு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன
என்கிறது ஒரு அறிவியல் மதிப்பீடு. மனிதன் தோன்றிய
பிறகுதான் சிந்தனை தோன்றுகிறது. அதிலும்
நாகரிகம் அடைந்த மனிதர்கள் தோன்றி, சிந்தித்து,
கருத்துக்களை உருவாக்கியது எப்போது? அதிகம்
போனால் 15,000 ஆண்டுகள் இருக்கும்.

ஆக பொருளின் வயது 14 பில்லியன் ஆண்டுகள்.
சிந்தனையின் வயது  வெறும் 15,000 ஆண்டுகள்.
சிந்தனையே இல்லாமல் பொருளை மட்டிலும்
கொண்டு இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான
ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது.
இந்த அறிவியல் உண்மையை நன்கு மனதில்
இருத்திக் கொண்டால், ஒரு விஷயம்
மிகத்  தெளிவாக விளங்கும். அதாவது, பொருள்
இல்லாமல் கருத்து இல்லை. ஆனால் கருத்து இல்லாமலும்
பொருள் இருக்கும். இருந்திருக்கிறது என்பதற்கு
நிரூபணத்தைப் பார்த்தோம்.

இதன் மூலம் யாப்புறுத்த விரும்புவது என்னவென்றால்,
அதாவது எந்த ஒரு கருத்தியல் கட்டுமானத்திற்கும்
பொருளாயத அடிப்படை உண்டு.
இவ்வாறு கருத்தியல் கட்டுமானமான சாதியம் என்பது
ஒரு பொருளாயத அடிப்படையைக் கொண்டிருப்பதாலேயே,
சாதியம் என்பது பொருள்முதல்வாதம் ஆகி விடாது.
சாதி என்பது ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானமே. 


சாதியை உருவாக்கிய குற்றவாளி இரும்பே!
------------------------------------------------------------------------------
ஆயின் சாதியத்தின் பொருளாயத அடிப்படைதான் என்ன?
இந்திய சமூகத்தின் உற்பத்தி முறையில் இரும்பு
கண்டுபிடிக்கப் பட்டதும் பயன்பாட்டுக்கு வந்ததுமான
ஒரு காலக்கட்டத்தில், உழைப்பு சார்ந்த பல்வேறு
புதிய வேலைப்பிரிவினைகள் ஏற்பட்டன. இந்தப் புதிய
வேலைப்பிரிவினைகளே வளர்ச்சியின் இயக்கப்
போக்கில் சாதிகளாகப் பரிணமித்தது. தொடர்ந்து
சுரண்டும் நிலவுடைமை வர்க்கமானது தமக்குள்
இணக்கம் கொண்டிருந்த சாதிகளை பகைமைச்
சாதிகளாக மாற்றியது. சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளும்  உயர்வுதாழ்வு பேதமும் கற்பிக்கப் பட்டன.
இவ்வாறு சாதியம் ஒரு கொடிய சுரண்டல் முறையாகத்
தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

பார்ப்பனர்கள்தான் சாதியைத் தோற்றுவித்தார்கள்
என்பதும்  உண்மையல்ல.இவ்வாறு பார்ப்பது
கருத்துமுதல்வாதப் பார்வை. சாதி தோன்றியது என்றால்
அது தோன்றுவதற்கு உண்டான சூழல் இல்லாமல்
சாதி தோன்றவில்லை. அத்தகைய சூழலை பார்ப்பனர்களோ
அல்லது வேறு எந்தச் சாதியினரோ செயற்கையாக
உருவாக்க இயலாது. இனக்குழுச் சமூக வாழ்க்கையில்
ரிக் வேத காலத்தில் வாழ்ந்த மக்களிடம் எவ்வித பேத உணர்வும்
இருந்ததில்லை என்கிறார் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்
கோசாம்பி. பின்னர் இனக்குழுக்களிடையே வருணங்கள்
தோன்றின. வருணங்களே பின்னாளில் வேலைப்பிரிவினை சார்ந்து சாதிகளாக மாற்றம் பெற்றன. சாதியைத் தோற்றுவித்தத்தில் இரும்புக்கு உள்ள பாத்திரத்தை
அங்கீகரிக்காமல், சாதியம் பற்றிய தெளிவான புரிதலுக்கு
எவரும் வர இயலாது.

இந்தியாவில் நிலவுடைமைச் சமூக உற்பத்தி உறவுகளை
ஒரள வு மாற்றி அமைத்து, முதலாளித்துவ உற்பத்தி
உறவுகள் கொண்டுவரப்  பட்டன. யார் வேண்டுமானாலும்
பயணம் செய்யும் ரயில்கள், பேருந்துகள் ஆகியவை
வந்த பிறகு அதுவரை இருந்து வந்த சாதியம் எவ்வளவு
மாற்றம் அடைந்தது என்று பார்க்க வேண்டும். காசு
கொடுத்தால் யாருக்கும் உணவு வழங்கும் ஓட்டல்கள்,
காசு கொடுக்கும் யாருக்கும் சினிமா காட்டும்
திரையரங்குகள் ஆகியவை சமூகத்தில் பெருமளவு
வந்ததுமே சாதியக் கெடுபிடிகள் பெரிய அளவுக்கு
நொறுங்கின. ஆக சாதியை ஒழிக்க வேண்டுமெனில்,
நிலவுடைமை உற்பத்தி உறவுகளை வேரோடும் வேரடி
மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும். சோஷலிச
உற்பத்தி உறவுகளை இந்திய சமூகத்தில் நிறுவும்போது
சாதியம் என்பது முற்றிலுமாக அழிந்து விடும். இதைத்தவிர
சாதியை ஒழிக்க வேறு எந்தக் குறுக்கு வழியும் இல்லை.

தோழர் குமரேசன் தமது கட்டுரையில், சாதியைக் காரணம்
காட்டிக் கொண்டு வரப்பட்டதுதான் கடவுள் என்கிறார்.
இது எவ்வளவு பெரிய அபத்தம்! அதிகம் போனால்,
சாதியின் வயது இரண்டாயிரம் ஆண்டு. ஆனால் கடவுளின்
வயது குறைந்தது பத்தாயிரம் இருக்கும். சாதி தோன்றும்
முன்னரே கடவுள் என்னும் கற்பிதம் தோன்றி விட்டது.
இந்தியாவிலும் ஜப்பானிலும் (இலங்கை, பாகிஸ்தான்,
வங்கதேசம் உள்ளடக்கம்) மட்டுமே சாதிகள் இருந்தன;
இருக்கின்றன. ஆனால் கடவுள் மீதான நமிக்கையோ
உலகம் முழுதும் இருக்கிறது. எனவே சாதியால்தான்
கடவுள் கொண்டு வரப்பட்டார் என்பதெல்லாம்
வர்ணனைக்கு அப்பாற்பட்ட அபத்தங்கள்.
  .

கற்பிதங்களும் உண்மையும்!
----------------------------------------------------
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானமாக இல்லாமல்
குமரேசன் கூறுவது போல,  பொருள்முதல்வாதமாக
இருக்குமேயானால் என்ன நடக்கும்? நடக்க வேண்டும்?

சாதியம் கூறுகிற உயர்வு தாழ்வுகள்
உண்மையாக இருக்க வேண்டும். உயர்ந்த சாதியினரின்
மூளை வலிமை மிக்கதாகவும், தாழ்ந்த
சாதியினரின் மூளை மட்டரகமானதாகவும்
இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லை என்பது
அனைவரும் அறிந்ததே..

குமரேசன் கூறுகிறபடி,சாதி பொருள்முதல்வாதம் என்றால், பார்ப்பனர்களின் ரத்தமும்  மரபணுவும் பிற தாழ்ந்த
சாதியினரின் ரத்தம் மரபணுவை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.  ஆனால் மனிதர்களின் மரபணுவில், ரத்தத்தில்
சாதியின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை
அறிவியல் நிரூபித்துள்ளது

எனவே சாதிக்கு எவ்வித பௌதிக அடிப்படையும்
கிடையாது என்பது இங்கு நிரூபிக்கப் பட்டுள்ளது.
சாதியம் என்பது வெறும் கருத்தியல் கட்டுமானமே
தவிர, அது பொருள்முதல்வாதமோ அல்லது சமூகத்தின்
பொருளியல் அடித்தளமோ இல்லை என்பதை
இக்கட்டுரை நிரூபிக்கிறது.
**************************************************************






  


திங்கள், 12 நவம்பர், 2018

பித்துக்குளி மார்க்சிஸ்ட் தீக்கதிர் குமரேசனின்
பிதற்றல் மார்க்சியம் ஆகாது!
---------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் அல்லாதவர்களையம் கட்சியில் சேர்த்து,
பொறுப்பு வழங்கி அழகு பார்ப்பது என்ற கொள்கை
முடிவை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே. அந்த வகையில்
Non Marxist quotaவில் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்க்கப்
பட்டவர் தீக்கதிர் குமரேசன்.

தன்னை எவரும் மார்க்சிஸ்ட் என்று நினைத்து
விடுவார்களோ என்று அஞ்சுபவர் தீக்கதிர் குமரேசன்.
எனவே தான் மார்க்சிஸ்ட் அல்ல என்று சந்தர்ப்பம்
கிடைக்கும் போதெல்லாம் நிருபிப்பவர் குமரேசன்.

தற்போது அப்படி நிரூபித்துள்ளார் அவர். தான்
பங்கேற்றுள்ள ஒரு வாட்சப் குழுவில் குட்டி
முதலாளித்துவத் தன்மை வாய்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளார் குமரேசன்.

சாதி என்பது பொருள்முதல்வாதமா அல்லது
கருத்துமுதல்வாதமா என்று ஒரு விவாதத்தை
எழுப்பி, சாதி என்பது பொருள்முதல்வாதமே
என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் குமரேசன். அவருக்கு
மிகுந்த மனநிறைவைக் கொடுத்த விவாதம் இது.
இனி ஒரு பயலும் தன்னை மார்க்சிஸ்ட் என்று
கருத முடியாது என்று பரம திருப்தியில் இருக்கிறார்
மனுஷன்.

சாதி என்பது பொருள்முதல்வாதமா அல்லது
கருத்துமுதல்வாதமா என்ற கேள்வியே அடிப்படையில்
தவறானது. மிகுந்த அபத்தமானது.

தண்ணீர் என்பது முக்கோண வடிவமா அல்லது
சதுர வடிவமா என்பது போன்ற அபத்தம் இது.
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம். அதாவது
சமூகக் கட்டுமானம் (social structure). சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்பும் கிடையாது (No physical existence).

சென்னை அண்ணாசாலையில் 14 மாடி எல் ஐ சி
கட்டிடம் உள்ளது. இது ஒரு பௌதிகக் கட்டுமானம்.
இதற்கு ஒரு பௌதிக இருப்பு (physical existence)  உண்டு,
இதை போன்றதல்ல சாதி என்னும் கட்டுமானம்.
அது மனித சிந்தனையில் மட்டுமே இருக்கும் ஒன்று.

சாதி என்பது ஒரு பொருள் என்றால், அதாவது
பொருளாயுதத் தன்மை உடைய பொருள் என்றால்,
சாதியை ஒருபோதும் அழிக்க முடியாது. ஏனெனில்
பொருளின் அழியாமை விதி (Law of conservation of mass)
பற்றிக் கூறும் அறிவியல் பொருளை ஒருபோதும்
அழிக்க முடியாது என்று கூறுகிறது.

அப்படியானால், சாதியை ஒருபோதும் ஒழிக்க
முடியாது என்று சொல்ல வருகிறாரா குமரேசன்?
அதை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போகலாமே!
பொருள்முதல்வாதம் என்று சொல்லி சுற்றி
வளைத்து மூக்கைத் தொடுவானேன்?

ஒரு சிந்தனாரீதியான கட்டுமானத்தை, பௌதிக ரீதியான
கட்டுமானம் என்று பிறழ உணர்வது எப்பேர்ப்பட்ட
அபத்தம்? தீக்கதிர்  பத்திரிக்கை ஆசிரியரின்
மார்க்சியப் புரிதல் இப்படித்தான் இருக்குமெனில்
மார்க்சிஸ்ட் கட்சியை யார்தான் காப்பாற்ற முடியும்?

கடவுள் இல்லை என்று ஏன் கூறுகிறோம்? கடவுளுக்கு
ஒரு பௌதிக இருப்பு இல்லை (God does not exist physically)
என்பதால்தானே! அதைப் போன்றதுதானே சாதியும்.
சாதிக்கு ஏது பௌதிக இருப்பு? ஏதேனும் ஒன்றை
பொருள் என்று வரையறுத்தால், அதற்கு ஒரு
நிலையிடம் (position) இருக்க வேண்டும். நிறை (mass)
உள்ளிட்ட பொருளின் பண்புகளில் பலவற்றை அது  
கொண்டிருக்க வேண்டும். மிக நுண்ணிய
எலக்ட்ரானுக்குக் கூட பிரபஞ்ச வெளியில் (space)     
ஒரு நிலையிடம் உண்டு.

கடவுளுக்கு பௌதிக இருப்பு இல்லை என்பதால்
கடவுள் என்பது கருத்தியல் கட்டுமானம் என்று சரியான
முடிவுக்கு வரும் குமரேசன், அதே தர்க்கம் சாதிக்கும் 
பொருந்தும் என்று உணர மறுக்கிறார். கடவுளைப்  போலவே சாதிக்கும் பௌதிக இருப்பு இல்லை என்பதால்,
சாதியும் கருத்தியல் வகைமையில்தானே வரும்!
ஆனால் குமரேசனோ "தலைக்கு ஒரு சீயக்காய்,
தாடிக்கு ஒரு சீயக்காய்" என்பதுபோல் தர்க்கப்
பொருத்தமற்று வாதம் செய்கிறார்.

சாதி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த இடத்தில்  இருக்கிறது?
அதன் நிலையிடம் (position) என்ன? குமரேசன் சொல்வாரா?
ஒரு கருத்தியல் கட்டுமானத்தை பொருள் என்று
நாக்கூசாமல் சொல்வது எப்பேர்ப்பட்ட தற்குறித்தனம்? 
படுகோமாளித்தனமாக ஒரு கருத்தைச்
சொல்லுகிறோமே, ஊரார் கைகொட்டிச் சிரிக்க
மாட்டார்களா என்ற ஓர்மை கூட இல்லாமல்,
சாதி என்பது பொருள்முதல்வாதம்
என்கிறாரே குமரேசன்!             

தீக்கதிரையும் குமரேசனையும் அவர் வணங்கும்
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!
*****************************************************


புதன், 7 நவம்பர், 2018

சிரிக்க வைப்பது எப்படி?
நடிகர் ஜோசப் விஜய் நடித்த ஒரு படம்!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
நேற்று யதேச்சையாக டிவியைப் பார்த்தபோது
நடிகர் ஜோசப் விஜய் நடித்த ஏதோ ஒரு படம்
ஓடிக் கொண்டிருந்தது. நான் பார்த்த நேரத்தில்
அதில் ஒரு காட்சி. சிரிக்க மறுக்கும் ஒருவரை
ஒரு பெண் சிரிக்க வைக்க முயற்சி செய்வாள்.
ஆனால் அவரோ சிரிக்க மாட்டார்.

அந்தப்பெண் ஒரு குறிப்பிட்ட வாயுவை அவரின்
நாசிக்கு அருகில் பிடித்து அந்த வாயுவை அவர்
முகருமாறு செய்வாள். அந்த வாயுவை முகந்ததும்
அவர் சிரிக்க ஆரம்பிப்பார். தொடர்ந்து சிரித்துக்
கொண்டிருப்பார்.

அந்த வாயு "சிரிக்க வைக்கும் வாயு" (laughing gas)
என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு என்று
அந்தப்பெண் கூறுவாள். இதுதான் அந்தக் காட்சி.

படத்தில் இந்தக் காட்சியை வைத்த இயக்குனரை
நியூட்டன் அறிவியல் மன்றம் பாராட்டுகிறது.
நைட்ரஸ் ஆக்ஸைடு என்பது சிரிக்க வைக்கும் வாயு
என்று ப்ளஸ் டூவில் அறிவியல் படிக்கும் மாணவன்
அறிவான்.

இதை அறிவியல் படிக்காத அனைவரையும்
அறியச் செய்த இயக்குனருக்கு நன்றி.

திரைப்படங்களில் முதன் முதலில் ஒரு அறிவியல்
செய்தியை இடம்பெறச் செய்தவர் மறைந்த
இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களே. பாலச்சந்தர்
கணிதம் பயின்று பட்டம் பெற்றவர்.

1970ல் வெளிவந்த அவருடைய "நூற்றுக்கு நூறு"
என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சியில்
1+1 = not 2 என்று நிரூபித்து இருப்பார். நடிகர் ஜெய்சங்கர்
அப்படத்தில் கணிதப்  பேராசிரியராக நடித்திருப்பார்.
குறிப்பிட்ட காட்சியில் 1+1 = not 2 என்று வகுப்பறையில்
கரும்பலகையில் எழுதி நிரூபிப்பார் ஜெய்சங்கர்.
உண்மையில் இது ஒரு fallacy ஆகும்.

Fallacy என்றால் என்ன என்று வாசகர்கள் முயன்று
பொருள் அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
உண்மை போலத் தோற்றம் அளிக்கிற, ஆனால்
உண்மையல்லாத ஒன்றே fallacy ஆகும்.

இரண்டும் இரண்டும் நான்கு அல்லவா?
2+2 = 4 அல்லவா? ஆனால் 2+2 =5 என்று நிரூபிக்கப்
போகிறேன். இதுவும் ஒரு fallacyதான். அதை
அடுத்த பதிவில் பார்க்கலாம்.

எனினும் அதைப்புரிந்து கொள்ள, குறைந்தபட்ச
கணித அறிவு அவசியம். அதாவது ப்ளஸ் டூ
வரையிலான கணித அறிவு பெற்றிருந்தால்
போதுமானது.

இது போன்ற அறிவியல் பதிவுகளுக்கு வாசகர்களின்
ஆதரவு இருந்தால் மட்டுமே சமூகம் அறிவு பெறும்.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நடிகர் கமல ஹாசன் தமது படங்களில்
பெருமளவுக்கு  அறிவியல் செய்திகளை இடம்பெறச்
செய்தவர் ஆவார். இது குறித்து மேலும் அறிய,
அறிவியல் ஒளி ஏட்டில் முன்னர் நான் எழுதிய
திரைப்படங்களில் அறிவியல் என்ற கட்டுரையைப்
படிக்கலாம்.
*********************************************************
          .   

செவ்வாய், 6 நவம்பர், 2018

தமிழில் வினாத்தாள் தயாரிக்க இயலாமை!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(TNPSC) பல்வேறு தேர்வுகளை நடத்த உள்ளது. இவற்றில்
சில குறிப்பிட்ட தேர்வுகளுக்குரிய சில பிரிவுகளுக்கான வினாத்தாட்களைத் தமிழில்
தயாரிக்க இயலவில்லை என்று தேர்வாணையம்
அறிவித்துள்ளது.

இதன் காரணம் என்ன? தமிழில் வினாத்தாள் தயாரிக்குமாறு பல்வேறு பேராசிரியர்களிடம்
தேர்வாணையம் கேட்டுக் கொண்டது. ஆனால்
எவரும் முன்வரவில்லை.

தமிழில் தயாரிக்க இயலாது என்று பேராசிரியர்கள்
பலரும் மறுத்து விட்டனர் என்ற செய்தி
கிடைத்துள்ளது. இது உண்மையே.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கான
தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் பிழைகள்
இருந்தமை குறித்து நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது. 49 வினாக்களில் மொழிபெயர்ப்புப்
பிழைகள் இருந்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் தலைவர்
டி கே ரங்கராஜன் எம் பி வழக்குத் தொடர்ந்தார்.

மதுரை உயர்நீதிமன்றத் கிளையானது
49 வினாக்களுக்கும் 196 மதிப்பெண்கள் (49 x 4 = 196) 
வழங்குமாறும் அதன் அடிப்படையில் புதிய
தகுதிப் பட்டியலைத் தயாரிக்குமாறும் CBSEக்கு
உத்தரவிட்டது. இது மருத்துவ மாணவர் நடுவே
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உச்சநீதி மன்றம்
மதுரைக் கிளையின் தீர்ப்பை ரத்து செய்தது.

இதைப்போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடும்
என்று கருதியே பல பேராசிரியர்கள் மறுத்து
விட்டனர் என்று தெரிய வருகிறது.

நவீன அறிவியலைத் தமிழில் சொல்வதில் பெரும்
இடர்ப்பாடுகளும் சிக்கல்களும் உள்ளன. உரிய
கலைச்சொற்களோ சொல்வங்கியோ தமிழில்
இல்லை. நிலவுடைமைச் சமூகம் நிலவிய காலத்தில்
தமிழ் உற்பத்தியில் இருந்தது. எனவே அக்காலத்தின்
தேவைகளுக்கு தமிழால் ஈடு கொடுக்க முடிந்தது.

முதலாளியச் சமூகம் உருவான பின்னர் தமிழ்
உற்பத்தியில் இல்லை. உற்பத்தியில் இல்லாத
எந்த மொழியும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு
கொடுக்க இயலாமல் பின்தங்குவது இயல்பே.

எனவே பேராசிரியர்களைக் குறைகூறிப் பயனில்லை.
இது  பேராசிரியர்களின் குறை அல்ல. உற்பத்தியில்
தமிழ் இல்லை என்னும்போது பேராசிரியர்கள்
என்ன செய்ய முடியும்?

கடந்த பல ஆண்டுகளாக காத்திரமான அறிவியல்
கட்டுரைகளைத் தமிழில் எழுதி வருபவன் என்ற
முறையில், தமிழ் மொழியின் நெருக்கடிகளை
நான் ஆழமாக உணர்ந்தவன்.

இதுதான் தமிழின் நிலை! இந்நிலை இப்படியேதான்
இருக்கும்.

அறிவியலோ இருமொழிப் மொழிப்புலமையோ
இல்லாத பாமரர்கள் இதை உணராமல்
கூச்சலிடுவதால் எப்பயனும் இல்லை.
****************************************************